தினமணி நாளிதழில் கடந்த செப்டம்பர் 26 ம் தேதி "இதுவல்ல சமூக நீதி!" என்ற தலையங்கம் வந்தது (http://dinamani.com/editorial/article1276514.ece). ஒரு நாளேடு சமூகத்தின் அனைத்து தரப்பினரின் நலனையும் கருத்தில் கொண்டு நடுநிலையான கருத்துக்களை முன் வைக்க வேண்டும். ஆனால் தினமணியோ ஆதிக்க சாதியின் குரலாக பேசி இருக்கிறது.
 
67% இட பங்கீட்டுக்கு எதிராக ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களால் தொடரப்பட்ட வழக்கைப் பற்றி தினமணி கருத்து கூறுகையில், வேலை வாய்ப்புகளில் தங்களுக்கான வாய்ப்பு பறிபோவதை கேள்வி கேட்டு வழக்கு தொடுக்காமல், வெறுமனே பொறியியல், மருத்துவ படிப்புகள் தொடர்பாக மட்டுமே வழக்குகள் தொடுக்கப்படுவதாக கவலைப்பட்டு கொள்கிறது.

இந்தியா விடுதலை அடைந்ததில் இருந்து பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்களது உரிமைகளுக்காக போராட 1953ல் காகா காலேல்கர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை நேருவின் தயவினால் குப்பைத் தொட்டிக்கு செல்ல, மீண்டும் தொடர்ந்த போராட்டங்களின் விளைவாக 1978 திசம்பரில் பிரதமர் மொரார்ஜி தேசாய்  காலத்தில் மண்டல் கமிசன் உருவாக்கப்பட்டது. 1980 திசம்பரில் கொடுத்த அறிக்கையை வழக்கம் போலவே தொடர்ந்து வந்த அரசுகள் கிடப்பில் போட்டன. நல்வாய்ப்பாக திடீர் கூட்டணி மூலம் பிரதமராக அமர்ந்த வி.பி.சிங்கின் சமூக நீதீப்பார்வை மூலம் பரணில் போடப்பட்டிருந்த மண்டல் கமிசன் அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக்கப்பட்டது. விளைவு மதவாத பா.ச.க, கூட்டணியிலிருந்து விலக வி.பி.சிங்கின் ஆட்சி கலைக்கப்பட்டது. அந்த நிலையிலும் வி.பி.சிங் "எனது ஆட்சி கலைக்கப்பட்டாலும் நான் மண்டல் கமிசன் அறிக்கையை அமல்படுத்திய நிம்மதியோடு செல்கின்றேன்" என்றார். 2008ல் வி.பி.சிங் மறைந்த நிகழ்வை கூட "Times of India" உள்ளிட்ட நாளேடுகள் மிக மகிழ்ச்சியோடு வெளியிட்டதில் இருந்து நமக்குத் தெரிய வருகின்றது அவரது மக்கள் நேயப் பணியும், இந்த பத்திரிக்கைகளின் காழ்ப்புணர்ச்சியும்.

ஆனால் 1980 திசம்பரில் சட்டமாக்கப்பட்ட மண்டல் கமிசனின் அறிக்கைகள் இத்தனை ஆண்டுகள் கடந்த பின்பும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா? அனைத்து துறைகளிலும் அனைத்து சாதியினரும் தத்தமது மக்கள் தொகை விகிதாச்சாரத்திற்கு ஏற்ப கல்வி, வேலை வாய்ப்பு பெற்று விட்டனரா? IIT, AIIMS போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்கள் இன்னமும் ஏன் இடப் பங்கீட்டை ஏற்க மறுக்கின்றன? சமூகங்களுக்கு இடையேயான இடப்பங்கீடு சட்டமாக்கப்பட்ட பின்னும், எவ்வாறெல்லாம் ஆதிக்க சாதியினாரால் அது தடுக்கப்பட்டு, முறையாக செயல்படுத்த முடியாமல் போகின்றது? இப்பொழுதும் மத்திய அரசின் உயர் பதவிகளில் எத்தனை விழுக்காடு தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தபட்டவர்களும் உள்ளனர்? நீதி துறையில் எத்தனை விழுக்காடு இட ஒதுக்கீடு உள்ளது? பத்திரிக்கை துறை இன்னமும் ஏன் ஆதிக்க சாதியினரின் கைப்பாவையாகவே உள்ளது? தனியார் துறைகளில் இடப்பங்கீட்டின் நிலை என்ன? எல்லா தேசிய கட்சிகளிலும் எந்த சாதியினர் தலைமைப் பதவிகளை கைப்பற்றுகின்றனர்? என கேட்க வேண்டிய கேள்விகள் ஆயிரம் இருக்க, தினமணியோ கொடுக்கப்பட்டிருக்கும் அரைகுறை இடப் பங்கீட்டையும் குழப்பும் கேள்விகளை முன்வைக்கின்றது.
 
இடப்பங்கீட்டை(Representaion) இட ஒதுக்கீடு (reservation) என்ற வார்த்தையாக மாற்றியதே ஆதிக்க சாதியினரின் கைப்பாவையாக உள்ள பத்திரிக்கைகள் செய்த சதியாகும். இடப்பங்கீடு (Representaion) என்பதற்கான பொருள் சமுகத்தில் உள்ள அனைத்து சாதியினரும், தமது எண்ணிக்கைக்கு ஏற்ப அனைத்துத் துறைகளிலும் தமக்கான உரிமையைக் கோருவது. இங்குள்ள அனைத்து வேலை வாய்ப்புகளையும் பங்கிட்டு எல்லா சாதியினரும் அவர்களின் விகிதத்திற்கு ஏற்ற அளவு உள்ளனரா என கண்காணிக்க வேண்டும். சாதியால் மனிதர்களை, தொழில்களைப் பிரித்து வைத்திருக்கும் சமூகத்தில், சட்டத்தின் இது போன்ற கண்காணிப்புகளால்தான் சரியான சமூக நீதியை வழங்க முடியும். இல்லையெனில் அதிகாரத்தில் இருப்பவர்களின் சுய விருப்பத்தின் பேரில் நிகழும் தவறுகளால், திரும்பவும் குறிப்பிட்ட தொழில்கள், குறிப்பிட்ட சாதியினருக்கு என பழைய குலத்தொழில் வழிமுறைக்கே சென்று விடும் வாய்ப்பு உள்ளது.

உண்மையில் சமூகத்தின் 90 விழுக்காடு உள்ள மக்களுக்கு தற்பொழுது வழங்கப்படும் இந்த 69% இட பங்கீடே குறைவான ஒன்று. ஆனால் 100 விழுக்காடு ஆதிக்கம் செலுத்தியவர்களால் இதை தாங்கிக் கொள்ள முடியமால் உடனே நீதிமன்றத்திற்கு இடப்பங்கீட்டை எடுத்துச் சென்று 69% ஐ , 50% இடப்பங்கீடாக குறைத்தனர்.

இந்தியாவின் சமூக நிலை, அதற்கான காரணம் பற்றிய தெளிவான அரசியல் புரிதல் தமிழகத்தில் இந்திய விடுதலைக்கு முன்பிருந்தே நிலவியதாலும், தொடர்ச்சியான போராட்டங்களினாலும் இங்கு(தமிழகத்தில்) ஒரளவு சமூக மாற்றங்கள் நடந்துள்ளன. மருத்துவ, பொறியியல் மாணவர் சேர்க்கையிலும் வேலை வாய்ப்புகளைப் பெறுவதிலும், இடப்பங்கீடு பின்பற்றபடுவதால், அனைத்து சாதிகளில் இருத்தும் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர். மேலும் இடப்பங்கீடு பெறும் மாணவர்களுக்கும், பொதுப் பிரிவில் வரும் மாணவர்களுக்குமான மதிப்பெண் வேறுபாடுகள் இங்கு மிகவும் குறைந்துள்ளது (அட்டவணை பார்க்க).

medical_cut_off_630

(Ref-facebook: Extend Reservations to Private and Religious Sectors)

ஆனால் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இந்திய சமூகத்தைப் பற்றிய சரியான வரலாற்றுப் புரிதலற்ற அரசியல் இயக்கங்களினால் இடப்பங்கீட்டுக்கு எதிரான மன நிலை சமூகத்தில் காணப்படுகிறது. மேலும் இந்த மாநிலங்களில் நிர்வாகமும், அரசியல் அதிகாரமும் ஒரு குறிப்பிட்ட சமூகத்திடம் மட்டுமே உள்ளது. எனவேதான் மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இடப்பங்கீட்டை கொண்டு வர நாம் கடுமையாக போராட வேண்டியுள்ளது. 'கல்வியின் தரம் குறைந்து விடும்' என வருணாசிரமம் கட்டி காக்கப்படுகிறது.
 
இங்கு இடப்பங்கீட்டை பெறும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பொதுப்பிரிவிலும் போட்டியிட்டு இடங்களை கைப்பற்றி விடுகின்றனர் என ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சமூகத்தினருக்காக தினமணி புலம்புகிறது. இந்திய வரலாற்றில் பெரும்பான்மை சமூகம் கல்வி கற்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டும், சில குறிப்பிட்ட சமூகங்கள் மட்டுமே இவ்வாய்ப்பு வழங்கப்பட்டதாலும் சமூகத்தின் வளர்ச்சி இயல்பாகவே தேக்கநிலையையடைந்தது. வாய்ப்பு மறுக்கப்பட்டதுதான் இடைவெளியை உண்டாக்கியது. அறிவு, சாதி சார்ந்ததல்ல. எனவே சமூக நல்லிண‌க்கத்திற்கு இடப்பங்கீட்டை அனுமதிக்க வேண்டும். இடப்பங்கீடு மூலம் வாய்ப்பு வழங்கப்பட்டு  அதன் மூலம் பெரும்பான்மையான சமூகமும் கல்வியறிவு பெற்றால் சமூகத்தின் வளர்ச்சி அதிகரிக்கும். எனவே பெரும்பான்மை சமூகத்திற்கு வாய்ப்பை மறுத்து வரும் உயர் கல்வி நிறுவனங்களிலும், தனியார் நிறுவன வேலையிலும் இடப்பங்கீட்டை நாம் அனுமதிப்பதன் மூலம் சமூக வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு செல்லும் என தினமணியால் தலையங்கம் எழுத முடியவில்லை

மத்திய அரசு 69% இட ஒதுக்கீடு அளித்து 22 ஆண்டுகள் கடந்தும் இன்னும் 5% இடங்களை கூட உயர்பதவிகளில் பெற முடியவில்லை என புள்ளி விவரங்கள் சொல்கின்றன. மத்திய அரசின் உயர்பதவிகளில் பொதுப்பிரிவிற்கான தேர்வுகள் மட்டுமே திரும்ப திரும்ப நடத்தப்பட்டு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. தொடர்ந்து மற்ற பிரிவினருக்கான இடங்களுக்கு தேர்வுகள் பதவியிலுள்ள முன்னேறியசாதியினரின் சூழ்ச்சிகளால் தடுக்கப்படுகின்றன என்பதைப் பற்றி தினமணி எழுதவில்லை.. 
 
ஆதிக்க சாதியினரின் பிடியில் பத்திரிக்கைத் துறையும், தொலைக்காட்சியின் செய்தித் துறையும் உள்ளது. ஆதிக்க சாதி இந்துக்கள் அரசியல், அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு எப்படியெல்லாம் அவர்கள் சூழ்ச்சியாக வேலை பார்க்கின்றனர் என்பது பற்றி இங்குள்ள ஊடகங்கள் பேசப் போவதில்லை.
 
தனியார் துறையில் அனைத்து சாதியினருக்குமான இடப்பங்கீட்டு வழிகளை தினமணி முன்மொழியவில்லை. தனியார் துறையில் ஆதிக்க சாதியினர் எவ்வாறு உயர் பதவிகளைக் கைப்பற்றுகின்றனர், அங்கு எவ்வாறு பதவி உயர்வு, சம்பள உயர்வு, வெளிநாடு செல்லும் வாய்ப்புகளுக்கு சாதி பார்க்கப்படுகின்றது என்பதைப் பற்றி தினமணி உள்ளிட்ட நாளேடுகள் எழுதப்போவதில்லை. (தனியார் துறையில் உயர் பதவியில் உள்ளவர்களைப் பற்றிய அட்டவணை பார்க்க) 

corporate_board_members_caste_400

(Ref :- http://www.epw.in/insight/corporate-boards-india.html)

இன்று யாரும் சாதி பார்ப்பதில்லை என்ற ஒரு வார்த்தை மட்டும் இத்தனை ஆண்டுகளாக பாதிக்கப்பட்டவர்களுக்கான தீர்வாகாது. நாளை இடப்பங்கீட்டில் பொருளாதாரத்தை ஒரு காரணியாகக் கொண்டால், குறிப்பிட்ட சாதிக்கு ஒதுக்கப்படும் இடத்துக்கு போதிய மாணவர்கள் தேர்வாகவில்லை எனில், அது அந்தச் சாதியை சேர்ந்த பொருளாதாரத்தில் முன்னேறிய மாணவர்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும். அவ்வாறில்லாமல் அந்த இடங்களை பொதுப்பிரிவில் சேர்ப்பது, சுற்றிவளைத்து இடப்பங்கீட்டை இல்லாமல் செய்யும் சூழ்ச்சியே ஆகும். ஏனெனில் வியாபாரம் ஆக்கப்பட்ட இந்திய கல்வி நிறுவனங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மருத்துவ, பொறியியல் படிப்புகளில் லட்சங்களில் செலவு செய்து படிக்க முடியாது. இதனால் இவர்களால் நிரப்பப்படாத இடங்களை பொதுப்பிரிவுக்கு மாற்றுவது என்பது மீண்டும் கல்வி வாய்ப்புகள் மொத்தத்தையும் ஆதிக்க சாதிகளிடம் அடகு வைப்பதில் தான் சென்று முடியும்.
 
இன்னமும் முழுமையாக மக்களை சென்றடையாத இடப்பங்கீட்டை ஏதாவது ஒரு காரணம் சொல்லி ஆதிக்க சாதிகள் முடக்கப் பார்க்கின்றன. பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட இடஒதுக்கீட்டை பயன்படுத்தலாம் என குறுக்கு வழியில் இடப்பங்கீட்டுக்கான எண்ணிக்கையை குறைக்கப் பார்க்கின்றன. இந்திய சமூகத்தில் ஆயிரம் ஆண்டுகளாக பெரும்பான்மை மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது பொருளாதரத்தை காரணம் காட்டி அல்ல, சாதியை காரணம் காட்டி. எனவே இந்த சமூகம் சாதியை மறந்து போகும் வரை, அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கும் வரை, சாதியை அடிப்படையாக வைத்துதான் கல்வி, வேலை வாய்ப்ப்புகளில் இடப்பங்கீடு வழங்க‌ப்பட வேண்டும்.
 
- வெ.தனஞ்செயன்

Pin It