மகாராஷ்டிரத்தில் ஒரு அரசியல்வாதி பீகார் மாநிலத்தவர்களை ஊடுருவல்காரர்கள் என்றும் மகாராஷ்டிரத்திலிருந்து அவர்களை விரட்டப் போவதாகவும் கூறியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி மும்பாய் ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தின்போது தியாகிகள் நினைவிடம் சேதப்படுத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் ஒருவரை பீகாரில் மகாராஷ்டிரிய காவல் துறை கைது செய்கிறது. ஆனால் அது குறித்து பீகார் அரசுக்கு தெரியப்படுத்தவில்லை. பீகார் அரசு அதற்காக மகாரஷ்டிரிய காவல்துறை மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து விசாரணைக்கு முட்டுக்கட்டையிட்டதால் அதற்கு பதிலடியாக தனது கட்சியின் சார்பில் பீகாரிகளை வெளியேற்றப்போவதாக அறிவித்துள்ளார்.

markandey_katju_380கடந்த காலங்களில் இது போன்ற குரல்கள் மகாராஷ்டிரத்தில் ஒலித்துள்ளன‌. மண்ணின் மைந்தர்கள் என்ற பெயரில் தென்னிந்தியர்களை வெளியேற்றவேண்டும் எனப்பட்டது. தற்போது பீகாரிகள், உத்திரப் பிரதேசத்தவர் போன்றோரை வெளியேற்ற வேண்டும் என்கின்றனர்.

இந்த பிரச்சணையினை எச்சரிக்கையுடன் பார்க்க வேண்டும். நமது அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 19(1) (e) குடிமக்கள் இந்தியாவின் எந்த பகுதியில் குடியேறுவதையும், வாழ்வதையும் அங்கீகரிக்கின்றது. குடிமக்களின் அடிப்படை உரிமையாக இடம் பெயர்தல் உள்ளது. அதைத் தடுப்பது அரசியலமைப்புக்கு எதிரானது. இதனை உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது.(vide 1997 (3) Gij I R 1998 (2012 ) SC ) இதற்கு வரலாற்றுக் காரணிகளால் விதிவிலக்காக காஷ்மீரும், வடகிழக்கு மாநிலங்களும் மட்டுமே உள்ளன‌.

இந்தியா ஒரே நாடு; ஒரே தேசியம். அதன் பெயர் இந்திய தேசியம். ஆனால் மகாராஷ்டிரம் தனித் தேசியம் என்பது தண்டனைக்குரியது. அரசியலமைப்புப்படி மகாராஷ்டிரத்தில் யாவரும் குடியேறலாம். அது போலவே மகாராஷ்டிரத்தினைச் சார்ந்தோரும் எங்கு வேண்டுமானாலும் குடியேறலாம். மகராஷ்டிரத்தைச் சாராதவர் அங்கு சட்ட விரோத செயலில் ஈடுபட்டால் சட்டப்பூர்வமாக நடவடிக்கை மேற்கொள்ளலாம். ஆனால் அதற்காக ஏதோ ஒரு பீகாரி தவறு செய்து விட்டதற்காக ஒட்டு மொத்த பீகாரிகளையும் ஊடுருவல்காரர்கள் என கூறக்கூடாது. மண்ணின் மைந்தர்கள் என்ற கோட்பாடு நாட்டை குறுங்குழு வாதத்திற்கு இட்டுச் செல்லும். இது கண்டிக்கத்தக்கது. உண்மையில் இந்தப் பிரச்சனையினை கிளப்புவர்கள் மகாராஷ்டிரத்தின் நலனில் அக்கறை கொண்டவர்கள் அல்ல. அவர்கள் வாக்கு வங்கிகளை குறிவைத்துள்ளவர்கள்.

இந்தியா என்பது அமெரிக்கா போன்று குடியேற்றக்காரர்களால் உருவான நாடு. இந்நாட்டில் வாழும் 93.93% மக்கள் உண்மையில் மண்ணுக்குச் சொந்தக்காரர்கள் இல்லை. உண்மையான மண்ணின் குடிகள் என்போர் திராவிட சமூகத்திற்கு முற்பட்ட பழங்குடி மக்களான பில்ஸ், கோண்டு, சந்தால், தோடா ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்கள் நாட்டின் மக்கள் தொகையில் வெறும் 7.8% மட்டுமே. இந்த அடிப்படையில் மகாராஷ்டிரத்தில் அளவிட்டால் 93% மக்கள் அம் மாநிலத்திலிருந்து வெளியேற வேண்டியிருக்கும். ஏனெனில் அங்கு பூர்வ குடிகள் பில்ஸ் உள்ளிட்ட பழங்குடிகள் மட்டுமே. ஆக மண்ணின் மைந்தர்கள் என்ற முழக்கம் வாக்கு வங்கிக்கான முழக்கம்.

மேலும், இந் நாட்டின் ஒற்றுமை பொருளாதார அனுசரனையில் உள்ளது. பிரிவு 301 அரசியலமைப்புச் சட்டம் தொழில் மற்றும் வியாபாரம் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் சுதந்திரமாக நடைபெற‌ வேண்டும் என்கிறது. இது நாட்டின் பொருளாதார ஒற்றுமையினை உறுதிப்படுத்துகின்றது. பொருளாதார ஒற்றுமையினைச் சார்ந்தே அரசியல் ஒற்றுமை உள்ளது. தமிழகத்தின் தொழிற்சாலையில் உற்பத்தியாகும் பொருளை உ.பி., மகாராஷ்டிரா, பஞ்சாப் என விற்க உரிமையுள்ளது. நவீன தொழிற்சாலைகளுக்கு விரிந்த சந்தை தேவைப்படுகின்றது. இந்த நவீன தொழிற்சாலைகள் இல்லையென்றால் ஒரு நாடு சிறந்த நாடாக மாற முடியாது. வெறும் விவசாயத்தினை மட்டும் நம்பி ஒரு நாடு இருக்க முடியாது. நமக்கு செல்வம் தேவை. மக்களின் கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு இதற்கு நாட்டின் ஒற்றுமை மட்டுமே விரிந்த சந்தையை பாதுகாக்கும். இந்த ஒற்றுமையைக் குலைக்கும் எந்த முயற்சியும் நம்மை வறுமையில் தள்ளிவிடும்.

மண்ணின் மைந்தர்கள் கோட்பாடு நாட்டின் கெளரவ அவமரியாதை தடுப்புச் சட்டம் 1971ன் பிரிவு 2ன் கீழ் தண்டனைக்குரியது. ஏனெனில் இந்தக் குரல் அரசியலமைப்பினை அவமதிக்கின்றது. மேலும் இந்திய தண்டனைச் சட்டம் 153 A படி பகைமையினை உருவாக்கும் செயலாகும்.

ஒருக்கால் பீகார் அரசே தவறு செய்கின்றது என்று வைத்துக்கொண்டாலும் அதற்காக ஒட்டு மொத்த பீகாரிகளையும் ஊடுருவல்காரகள் என்று கூறுவதை எப்படி ஏற்பது? ஒரு தவறை மற்றொரு தவறு நியாயப்படுத்தி விடுமா? மகாராஷ்டிராவில் உள்ள பீகாரிகள் பெரும்பாலானோர் ஏழைகள். பீகார் அரசு பாட்னா உயர் நீதிமன்றத்திலோ அல்லது உச்ச நீதி மன்றத்திலோ உரிய வழக்கு தாக்கல் செய்து பீகார் மக்களை பாதுகாக்க முயல வேண்டும். ஒருவேளை மகாராஷ்டிரத்திலிருந்து பீகாரிகள் வெளியேற்றப்படும்போது அது போலவே பிற பகுதிகளிலிருந்து மகாராஷ்டிரியர்களும் வெளியேற்றப்படக்கூடும். இது எங்கே போய் முடியும்? சமீபத்தில் வதந்திகள் பரப்பப்பட்டதால் வடகிழக்கு மாநில மக்கள் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் பீதியடைந்து வெளியேறிய அவலத்தினை நாம் கண்டோம். இது நாடு துண்டுபட்டாலும் பரவாயில்லை என தங்களது வாக்கு வங்கி அரசியலை முன்னெடுக்கும் சில சுயநல அரசியல்வாதிகளின் திட்டம். இதனை நாம் அம்பலப்படுத்துவோம்.

(நீதிபதி மார்க்கண்டேய கட்சு தற்போது பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவராக உள்ளார். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி. இது டைம்ஸ் ஆப் இந்தியா 16.10.2012ல் வெளியான கட்டுரை. தமிழில் ச.பாலமுருகன்)

Pin It