ரூ. 4 கோடி என்ன செய்யலாம்?
 3,200 கிராமப்புற ஏழைகளுக்கு வீடு கட்டித் தரலாம்.
நாம் என்ன செய்கிறோம்?
 ஓர் அணுகுண்டு தயாரிக்கிறோம்.
ரூ. 60 கோடி........... என்ன செய்யலாம்?
 15,000 சுகாதார நிலையங்களைப் பராமரிக்கலாம்.
நாம் என் செய்கிறோம்?
 ஒரு அக்னி ஏவுகணை தயாரிக்கிறோம்.
ரூ. 500 கோடி.......... என்ன செய்யலாம்?
 1,50,000 கெக்டேர் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றலாம்.
நாம் என்ன செய்கிறோம்?
 அணுகுண்டுகளைப் பாதுகாக்கும் அரண் கட்டுகிறோம்.
ரூ.4000 கோடி.......... என்ன செய்யலாம்?
 கிராமப்புற குழந்தைகளுக்கு 40,000 ஆரம்பப் பள்ளிகள் கட்டலாம்.
நாம் என்ன செய்கிறோம்?
 அணுகுண்டுகளை தாங்கிச் செல்லும் நீர் மூழ்கிக் கப்பல்களுக்கு செலவு செய்கிறோம்.

- அருந்ததிராய்

 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஏகாதிபத்தியமாக உருவெடுத்த முதலாளித்துவம் 1990களில் உலகமயமாக்கலாக உருவெடுத்தது. 1991ல் 'புதிய பொருளாதாரக் கொள்கை' எனும் பெயரில் இந்தியாவிற்குள் நுழைந்தது.

அனைத்தும் அனைவருக்கும்:-

 globalization_292சந்தைப் பொருளாதாரம் என்ற பெயரில் 'அனைத்துப் பொருட்களும் அனைவருக்கும்' என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானதே உலகமயமாக்கல். நல்லெண்ண நோக்குடன் உலகமயமாக்கல் வருகிறதென கூறப்படுகிறது. யாருடைய நல்லெண்ணத்தை நோக்கமாகக் கொண்டு? என்று உற்று நோக்குதல் இங்கே அவசியமானதாகும்.

 பண முதலாளிகள், பெரும் நிலச்சுவான்தார்கள், பெரும் பண்ணைகள், பெரும் வியாபாரிகள், தொழிலதிபர்கள் போன்றவர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்கள் மட்டும் வாழ்வில் மென்மேலும் உயர்ந்திட வேண்டும் எனும் நல்லெண்ண நோக்கே உலகமயமாக்கலின் அடிப்படையாகும்.

உலகமயமாக்கலின் தாக்கம் :-

 இன்று நாட்டில் சிறு, குறு தொழில்கள் பெருமளவில் நசிந்து வருதல், இலவச மின்சாரம் ரத்து, வேலையில்லாத் திண்டாட்டம், வேலைமறுப்பு, மிகுதியாகி வரும் வறுமை, கல்விக் கட்டண உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம். தனியார்மயம், தாராளமயம், பட்டினிச் சாவுகள், கஞ்சித் தொட்டிகள் இது போன்ற கொடூரங்கள் அனைத்தும் உலகமயமாக்கலின் கோரத்தாண்டவத்தின் வாயிலாக உருவானதே.

 முதலாளித்துவ நாடுகள் ‘மான்சாண்டோ’ எனும் விதையை அறிமுகப்படுத்தி ஏற்கனவே நம்மை அடிமைப்படுத்திட முயன்றதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. கடந்த 15 ஆண்டுகளில் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சொந்த தயாரிப்புகள், தொழில்கள் அனைத்தும் நசுக்கப்பட்டு, இல்லாமல் ஆக்கப்பட்டுவிட்டன.

 நாட்டில் பன்னாட்டைச் சேர்ந்த பெரும் நிறுவனங்களின் தோற்றங்களினால் நீர், நிலம், காற்று யாவும் மாசுபடுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் இன்று பண முதலைகளுக்கு மட்டுமே சொந்தம் என்ற நிலைக்கு ஏழைகள், நடுத்தர குடும்பத்தினர்கள் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். பணம் இருந்தால் மட்டுமே அடிப்படைத் தேவைகளை, வசதிகளைப் பெற முடியும் எனும் நிலை தான் இன்று இங்கே காணப்படுகிறது.

மீண்டும் காலனியாதிக்கம்:-

 உலகமயமாக்கலின் மூலமாய் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக மிகத் துல்லியமாக காலனியாதிக்கத்தை மறுபடியும் புகுத்திட முயன்று வருகின்றனர். இதனை எதிர்த்து குரல் கொடுத்தால், பொருளாதாரத் தடைகள், போர் அறிவிப்புகள் போன்ற வழிகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் நிர்பந்தங்கள் உருவாக்கப்படுகின்றன.

 உலகமயமாக்கலின் கோரத் தாண்டவத்தின் ஒரு வடிவமாக 1998இல் மதுரையில் ஒரு திரையரங்கம் ‘டைட்டானிக்’ படம் வேண்டி தனது சொந்த தயாரிப்பு சோடா நிறுவனத்தை மூட வேண்டிய நிர்பந்த சூழல் ஏற்பட்டது. உலகமயமாக்கலின் கோரத்திற்கு இதுவே மிகச் சிறந்த சான்றாகும்.

 உலக வங்கி, உலக வர்த்தக நிறுவனம், உலக நிதி நிறுவனம் இவைகளின் வாயிலாக நம்மை துல்லியமாக அடிமைப்படுத்திட உலகமயமாக்கல் தன் ஆக்டோபசு கரங்களை அகல விரித்து செயல்படுகிறது. உலகின் மொத்த வர்த்தகத்தில் மூன்றில் இரண்டு பங்கினை பன்னாட்டு நிறுவனங்களே ஆக்கிரமித்துள்ளன. இந்தியாவில் கடந்த ஆண்டில் மொத்த குளிர்பான விற்பனையில் 96 விழுக்காடு கோக், பெப்சி நிறுவனத்தின் பானங்களே விற்கப்பட்டுள்ளன.

 கல்வி மற்றும் கலாச்சாரத்தின் மீது 'யுனெஸ்கோ'வை விடவும், விவசாயத்தின் மீது 'சர்வதேச உணவுக் கழகத்தை' விடவும், சுகாதாரத்தின் மீது 'உலக சுகாதார நிறுவனத்தை' விடவும் அதிகமான அளவிலான அதிகாரத்தை உலக வங்கியே செலுத்துகிறது, என ஆசிய சமூக மாமன்றம் தன் அறிக்கையில் குறிப்பிடுகிறது.

காப்புரிமைச் சட்டம் :-

 இந்தியாவின் கண்டுபிடிப்பான பாசுமதி அரிசியை தங்கள் கண்டுபிடிப்பு என 'ரைஸ் டெக்' எனும் அமெரிக்க நிறுவனம் கூறி அதற்கான பதிப்புரிமை எண்ணாக 566484 என்றும் கூறுகிறது. இவ்வாறு காப்புரிமை என்ற பெயரிலும் உலகமயமாக்கல் கோரத் தாண்டவமாடுகிறது.

 1990 களில் உலகின் மிகப்பெரிய கோடீசுவரர்கள் 150 பேர் காணப்பட்டனர். தற்போது அந்த எண்ணிக்கை 450 பேராக உயர்ந்துள்ளது. இவர்களின் மொத்த வருமானம் உலகின் பாதி மக்களின் (300 கோடி பேர்) மொத்த வருமானத்தை விட அதிகமானதாகும். இதுதான் உலகமயமாக்கலின் நல்ல நோக்கு.

உறிஞ்சப்படும் உரிமைகள் :-

 நிலத்தடி நீர் இன்று நாள்தோறும் இலட்சக்கணக்கான லிட்டர்களில் கொள்ளையிடப்படுகின்றன. இதன் காரணமாய் நிலத்தடி நீர் பெருமளவில் குறைந்துவிட்டது. நல்ல சுத்தமான காற்று கிடைக்காமல் 'ஆக்சிசன் பார்லர்' கள் உருவாக்கப்பட வேண்டிய நிர்பந்த சூழல் ஏற்பட்டுவிட்டன. மதுரை போன்ற சிறு நகரங்களில் கூட ஆக்சிசன் பார்லர்கள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. கண்மாய், குளம், குட்டைகள் அனைத்தும் நிலங்களாக மாற்றம் செய்யப்பட்டு அதில் கட்டிடங்கள், பன்னாட்டு தொழிற்சாலைகள் கட்டப்பட்டு வருகின்றன.

தனியார் மயமாக்கல் :-

 முதலாளித்துவ நாடுகளின் பல்வேறு கூறுகளின் மூலமான நிர்பந்தங்கள் மற்றும் பலமுனைத் தாக்குதல்களின் காரணமாக இந்தியா போன்ற சனநாயக நாடுகளில் கூட இலாபம் ஈட்டித் தந்து கொண்டிருக்கக்கூடிய தொலைத்தொடர்புத் துறை, போக்குவரத்துத் துறை போன்ற எண்ணற்ற துறைகள் நம் கண் முன்பாகவே எந்தவித எதிர்ப்புகளோ, சிறு சலசலப்புகளோ ஏதுமின்றி தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்படுகின்றன.

  1998ல் இப்போதைய சட்டீசுகர் மாநிலத்தில் ‘சியோநாத்’ நதி 23.6 கி.மீ தனியாருக்கு 20 வருட குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. திருப்பூர், டெல்லி, கல்கத்தா போன்ற நகரங்களில் தண்ணீர் தனியாரின் கட்டுபாட்டின் கீழ் வந்துவிட்டது. இவையாவும் உலகமயமாக்கலின் கோரத் தாண்டவ வடிவமே.

 இன்று இந்திய கிராமங்களில் தேசியக்கொடியை அறியாத இடங்களில் கூட கோக், பெப்சி, போன்ற குளிர்பானங்கள் குறித்து அறியப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வரும் நிலைக்கு உலகமயமாக்கல் விசுவரூபம் எடுத்துள்ளது.

 ஏழை, எளிய, நொறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் இன்று தங்களுடைய சொந்த மண்ணிலேயே நிலம் உள்ளிட்ட அனைத்தையும் இழந்து அகதியாகி எதுமற்ற ஏதிலிகளாக நிற்கக் கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது. பல இலட்சம் மைல்களுக்கு அப்பாலிருந்தே நம்மைத் தீர்மானிக்கும் சக்தியாக முதலாளித்துவ நாடுகள் காணப்படுகின்றன. வளரும் நாடுகள், மூன்றாம் தர நாடுகளில் கல்வி, வாழ்வு போன்ற அடிப்படைத் தேவைகளை நிர்ணயிக்க கூடிய அளவுக்கு ஆதிக்கம் பெற்றுள்ளனர் முதலாளித்துவ நாடுகள்.

விளைவுகள் :-

  கடந்த பத்து ஆண்டுகளில் வறுமை அதிரித்துக் கொண்டே இருப்பதாகவும், தினமும் 130 கோடி மக்கள் 1 டாலருக்கும் குறைவான ஊதியத்திலும், 160 கோடி மக்கள் 2 டாலருக்கும் குறைவான ஊதியத்திலும் வாழ்வதாக 'உலக ஆரோக்கிய மையம்' கூறுகிறது. உலகமயமாக்கலின் கொடூரத்தால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 5000க்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்து போகும் வாய்ப்புகள் உள்ளதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

 உலகமயமாக்கலின் வாயிலாக பணக்காரன் மேலும் மேலும் பணக்காரனாகிறான். ஏழை மேலும் மேலும் ஏழையாக்கப்படுகிறான். சாமான்யர்களின் உழைப்பும், உயிரும் உறிஞ்சப்படுகிறது. சமூகத்தின் ஒருபுறத்தில் நுரை கொப்பளிக்கும் பானங்களைப் பருகி வர, மறுபுறத்திலோ குடிக்க சேற்று நீர் மட்டுமே எஞ்சியுள்ளன. மனித உணர்வுகளுக்கும், மாண்புக்கும் மதிப்பில்லாமல் ஆக்கப்படுவதுடன் கேளிக்குறியதாகவும் உள்ளாக்கப்படுகிறது.

 உலகனைத்தையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வர வேண்டும் எனும் நோக்கில் படைகலன்களுடன் போரிட்டு தோல்வியைத் தழுவியவர்கள் நெப்போலியன் போனபார்ட், அலெக்சாண்டர் போன்றோர்கள். அவர்களுடைய நோக்கத்தையே தங்கள் நோக்கமாகக் கொண்டு ஆனால் வழிமுறைகளை மட்டும் மாற்றி செயல்படுகின்றன முதலாளித்துவ நாடுகள். ஆதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடே உலகமயமாக்கல். மனித உடலிலிருந்து இரத்தத்தை உறிஞ்சிக் குடித்து உயிர் வாழும் அட்டை பூச்சியைப் போல, மூன்றாம்தர நாடுகளிலுள்ள ஏழை மக்களின் உழைப்பை, உயிரை உறிஞ்சி குடித்து பெருத்து வருகின்றது முதலாளித்துவ நாடுகள். தமிழ்நாட்டின் அடிப்படை வசதியேயில்லாத ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த குடியானவன் கூட தான் எதை நுகர வேண்டும் என்று அவனால் தீர்மானிக்க முடியவதில்லை.

மாற்று உலகம் சாத்தியமே :-

 ஆங்கிலேயரின் நேரடி காலணியாதிக்க 200 ஆண்டு கால கொடுமையிலிருந்து பெயரளவில் சுதந்திரம் அடைந்து விட்டோம். ஆனால் தற்போது பல இலட்சம் மைல்களுக்கு அப்பாலிருந்தே நம்மை அடிமைப்படுத்திட நன்கு திட்டமிட்டு மிகத் துல்லியமாக தன் ஆக்டோபசு கரங்களை உலகமயமாக்கல் எனும் வடிவத்தில் அகல விரிக்கின்றனர். நம் நாட்டிலுள்ள சிறு, குறு விவசாயிகள், தொழில்கள் ஊக்குவிப்பு செய்யப்பட வேண்டும். இருக்கும் பொதுத்துறைகளை அப்படியே நீட்டிப்பு செய்வதோடு, தனியார் மயமாக்கப்பட்ட நிறுவனங்களையும் பொதுநிறுவனமாக்கப்பட வேண்டும். நம் நாட்டில் பொது மக்களின் பணத்தை மிகுதியாக பெற்று உபயோகித்துக் கொண்டும், வரி ஏய்ப்பு செய்து கொண்டும் வாழும் சமூக பெரிய மனிதர்களிடம் கணக்கு வழக்குகள் சரிபார்க்கப்பட்டு அதன் மூலமான பணத்தைக் கொண்டு அந்நிய நாட்டுக் கடன்களை அடைத்து வீண் செலவீனங்களையும் அழுத்தங்களையும் குறைக்கலாம். இது போன்ற யுத்திகளைக் கையாண்டு ' உலகமயமாக்கல் இல்லாத மாற்று உலகத்தை சாத்தியபடுத்திட ' சமுதாயத்தின் அங்கமான நாம் உடனே முன் வர வேண்டியது காலத்தின் கட்டாயம்.

- இ.இ.இராபர்ட் சந்திரகுமார்

Pin It