சர்வபலமிக்க மத்திய அரசையும், தாயுள்ளம் கொண்டவர் என்று சிலரால் போற்றப்படும்  தாயா? அல்லாத எம் மக்களை கொள்ளும் தீயா? என்று கூட வர்ணிக்க முடியாதவரால் நடத்தப்படும்  பாசிச தமிழக அரசையும் எதிர்த்து சாதாரண அன்றாடங்காய்ச்சி மக்களால் நடத்தப்படும் கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான மக்கள் போராட்டம் ஒரு வருடத்தையும் கடந்து, இன்னமும் ஓயவில்லை . இப்படி ஒரு மக்கள் போராட்டத்தை நான் இதுவரை பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை. ஆரம்ப கட்டங்களில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தி அவர்களின் அச்சத்தைப் போக்கி மக்கள் ஆதரவுடன் அணு உலையை திறப்போம் என்றவர்கள், இன்று குழைந்தைகள், சிறுவர்கள் என்றுகூட பாராமல்  கொலவெறித்தனமாக அடக்கி ஒடுக்கி வருகிறார்கள். முதலில் போராட்டத்தை வழிநடத்தி வரும் தோழர் சுப.உதயக்குமார் அவர்களுக்கு எம் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்..

பெரிதாக எந்த ஒரு அரசியல் கட்சியின் செல்வாக்கும் இன்றி, பொருளாதார பின்புலமுமின்றி இப்படி ஒருப் போராட்டத்தை இவ்வளவு தூரம் நடத்தி வருகிறார் என்றால் அவர் எந்த அளவுக்கு கொள்கை வெறிப் பிடித்தவராக இருப்பார் என்று என்னால் யூகிக்க முடிகிறது. ஆனாலும் அவர் ஒரு தவறை செய்திருக்கிறார் என்பதையும் சொல்ல விரும்புகிறேன். பாசிச ஜெ. வை நம்பியதுதான் அது. கருணாநிதி கூடங்குளம் அணு உலையை ஆதரிக்கிறார். ஆக ஜெயலலிதா எதிர்ப்பார் என்று தவறாக எண்ணிவிட்டார். தோழரே மக்களை ஒடுக்குவதில் அவர்கள் இருவருமே ஒரே கட்சிதான்.

கூடங்குளம் அணு உலை பாதுக்காப்பானது என்று அணு விஞ்ஞானி அப்துல் கலாம் சொல்லிவிட்டார். அதைப் பற்றி எல்லாம் எமக்கு கவலை இல்லை, அங்கே வாழும் மக்கள் இத்தனை வலிமையாக எதிர்க்கிறார்கள் என்றால், மக்கள் அந்த திட்டத்தையே வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்றால் யாருக்காக அந்த திட்டம்? ரஷ்யாவுக்கா? பெரும் பண முதலாளிகளுக்கா? மக்களுக்காக நிறைவேற்றப்படும் திட்டம் எதுவாக இருந்தாலும் மக்கள் ஆதரவு இல்லை என்றால் இழுத்து மூடுவதுதானே ஒரு மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசின் செயலாக இருக்க முடியும். ஆனால் இங்கே அதுவா நடக்கிறது. உலகம் கைகொட்டி சிரிக்கிறது.  அய்யா அப்துல் கலாம் அவர்களே உங்களை ஒரே ஒருக் கேள்வி கேட்கிறேன். உங்களை கேள்விக் கேட்கும் தகுதி எமக்கு இல்லாமல் கூட இருக்கலாம்,ஆனாலும் அடித்தட்டு மக்களோடு வாழக்கூடியவன் என்ற ரீதியில் கேட்கிறேன். பெரும் வல்லரசான அமெரிக்காவே அணு உலைக் கழிவுகளில் உள்ள நச்சுத் தன்மையை செயல் இழக்க வைக்க திணறிக் கொண்டு, பசுபிக் பெருங்கடலிலும், குட்டி நாடுகளும் கொட்டி வருகிறது. ஆனால் பெரும் ஊழல் பெருச்சாளிகள் கையில் இருக்கும் இந்தியா எப்படி அணுக்கழிவுகளை பாதுகாப்பாக வெளியேறுவார்கள் என்று நம்புகிறீர்கள்? மனித இதயத்தில் இருந்து மின்சாரம் எடுக்கலாம் என்று வாய்ப்பு இருந்தால் பல்லாயிரக் கணக்கான மக்களின் இதயத்தையும் எடுத்து மின்சாரம் தயாரிப்பீர்களோ? அப்படி தயாரிக்கும் மின்சாரத்தை யாருக்கு வழங்கப் போகிறீர்கள்? மக்களுக்கு பயனுள்ள திட்டம்தான் அணு உலை திட்டம் என்றால் கேரளாவில் வாழும் மக்கள் முட்டாள்களா? ஆந்திராவில் வாழும் மக்கள் எல்லாம் கேனையர்களா? ஏன் அவர்கள் எதிர்த்தார்கள் என்பதை கொஞ்சம் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்திவிட்டு அணு உலையைத் திறந்து கொள்ளுங்கள். இவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றமும் தீர்ப்பு அளித்திருப்பது ஆச்சரியத்தையும் வியப்பையும் உண்டாக்குகிறது.

மக்களை ஒடுக்கி நிறைவேற்றப்படும் இந்த திட்டத்தின் சூத்திரதாரியே ஜெயலலிதா தான். இரண்டு மணிநேரம் இருந்த மின்வெட்டை பத்து மணிநேரமாக்கி போலியான மின் தட்டுப்பாட்டை உண்டாக்கி மக்களுக்கு எதிராக மக்களை தூண்டி விட்டவரே இந்த புண்ணியவதி தானே. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வாக்குப் பதிவுக்கு முதல் நாள் வரை மக்களோடு நானும் களத்தில் நிற்ப்பேன் என்று வாய் அடித்த அம்மையார் வாக்குப் பதிவுக்கு மறுநாளே கூடங்குளம் அணுஉலையை திறக்க தமிழக அரசு உரிய ஒத்துழைப்பு அளிக்கும் என்று அறிக்கை விட்டு நாராயண சாமி வயிற்றி பாலை வார்த்து இடிந்தகரை மக்களின் வயிற்றில் தீயை கொட்டி விட்டார்.  பரமக்குடியில் எழுப் பேர் கொல்லப்பட்டார்கள், அடித்தட்டு மக்களை நசுக்கும் விதமாக பால் விலையை உயர்த்தினார்கள், மின்சாரக் கட்டணத்தை உயர்த்தப் போகிறேன் என்றார்கள், போதாக்குறைக்கு பேருந்து கட்டணத்தையும் உயர்த்தி மக்களை கொதிநிலையின் உச்சிக்கே கொண்டு சென்றார். அனாலும் எம் மக்கள், அம்மா இனி வரும் சந்ததியை காப்பார்கள் என்று அம்மையார் சொன்ன ஒற்றை வார்த்தையை நம்பி இடைத்தேர்தலில் வாரி வாரி இறைத்தார்களே வாக்குகளை. என்ன  பிரயோஜனம்? நானும் கருணாநிதியும் ஒண்ணு தான். அது தெரியாத உங்கள் வாயில் இனி மண்ணுதான் என்று சொல்லிவிட்டாரே...

சர்வபலமிக்கவர்கள் எப்படி திட்டத்தை நிறைவேற்றுகிறார்கள்? கூடங்குளத்தை சுற்றி 7 கி.மீ. தொலைவுக்கு 144 தடை உத்தரவு. கூடங்குளம் அணு உலைக்கு நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மூன்று மாவட்ட போலீசார், தமிழ்நாட்டு சிறப்பு காவல்ப்படை 26 கம்பெனி, அதிவேக அதிரடிப் படை 4 கம்பெனி, சிறப்பு அதிரடிப் படை 1 கம்பெனி, மத்திய அதிரடிப் படை 6 கம்பெனி, கேரளா,  கர்நாடகா, புதுவை, தமிழகம் ஆகிய நான்கு மாநில மத்திய ரிசர்வ் போலிஸ் படை ஆகிய 7000  போலிஸ் வீரர்களை கொண்டுதான் நிறைவேற்றுகிறது. தூ.... வெட்கமாக இல்லையா மக்களுக்காக என்று சொல்லும் திட்டத்திற்கு இவ்வளவு பாதுகாப்பா? அறவழியில் போராடும் மக்கள் மீது பொய் வழக்குகள், வழி நடத்துபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு, 144 தடை உத்தரவு. அறவழியில் போராடியவர்களை நக்சலைட்டுகள் என்று கைது செய்தார்கள். வன்னி அரசு, சதீஷ், முகிலன் போன்ற தோழர்களை குண்டு வைத்து தாக்க திட்டம் தீட்டினார்கள் என்று கைது செய்தவர்கள், இதற்க்கு முன்பு என்ன சொன்னார்கள், ராக்கெட்டே மோதினாலும் அணு உலை ஒன்றும் ஆகாது என்றவர்கள், இவர்களை ஏன் கைது செய்தார்கள்? இப்படி மக்களை ஓடிக்கித்தான் ஒரு திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன? சொந்த நாட்டு மக்களையே ஒடுக்கி இந்த நிறைவேற்றும் அளவுக்கு என்ன அவசியம் வந்தது? இந்த நாட்டின் தேசப்பிதா காந்தியாம் ! இந்த பூமிக்கு பெயர் காந்திப் பூமியாம் !! இந்த நாட்டில் உண்ணாவிரதத்துக்கு  காந்தியப் போராட்டம் என்றும் ஒரு  பெயர் இருக்கிறதாம் - ஆனால் இங்கே மக்கள்  அவர் வழியில் தன்  உரிமைக்காக போராடினால் கூட கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள் என்றால் காந்திக்கு இங்கே என்ன மதிப்பு? பின் எதற்கு அவரை தேசப்பிதா என்று  சொல்லவேண்டும்?  எதற்கு காந்தி தேசம் என்று சொல்லவேண்டும்? என்று தான் கேள்விக் கேட்க தோன்றுகிறது.

மத்திய அரசு தொடர்ந்து தமிழர்களை வஞ்சித்து வருவது அப்பட்டமாக தெரிந்த உண்மை, அதையே கூறி அரசியல் செய்யும் ஜெயலலிதாவும் வஞ்சிப்பது எந்த விதத்தில் நியாயம்? தமிழர்களுக்கு நான் என்றைக்கும் ஆதரவாக நிற்ப்பேன் என்று சொன்னவர் தம் ஆதரவை வெளிப்படுத்தி இருப்பது எம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. இந்தியாவின் மான்செஸ்டர் கொயம்போத்தூர் நகரத்தையே இருளில் மூழ்கடித்து, மக்களை வாட்டி வதைத்து, முதலில் கூடங்குளம் வேண்டாம் என்று சொன்ன மக்களில் சிலரை கூடங்குளத்தை உடனே திறக்க வேண்டும் என்று கூச்சல் போட வைத்து வெற்றியும் அடைந்துள்ள ஜெயலலிதா அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் தமிழக முதல்வர் தானே ஒழிய ரஷ்ய முதல்வர் அல்ல. எப்படியோ கூடங்குளத்தில் மக்களை ஒடுக்கி வெற்றி பெரும் தருவாயில் உள்ளவர்களுக்கு ஒன்றை உணர்த்தி உள்ளார்கள் இனி தமிழகத்தில் எந்த மூலையிலும் அணு உலை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் கூட தோன்றாது. அந்த அளவுக்கு திருப்பி அடித்து உள்ளார்கள் மக்கள். ராஜபக்ஷே நடத்தியது நிகழ்கால முள்ளிவாய்க்கால் பேரவலம்... மத்திய அரசுடன் இணைத்து ஜெயலலிதா நடத்துவது வரும்கால கூடன்குள பேரவலம் என்பதை யாராலும் மறுக்க முடியாது....

மக்களை ஒடுக்கி பின்னாளில் மக்களிடம் மண்டியிட்டு தோற்றுப்போனவர்கள் அதிகம்....
அந்த வரிசையில் இன்று இவர்களும், நாளை மண்டியிடுவார்கள்.....

Pin It