செப் 11, 2011 இந்திய வரலாற்றில் ஒரு மறக்க முடியாத நாள். அணு உலைக்கு எதிரான பரப்புரையைக் கூடங்குளம் - இடிந்தகரை மக்கள் தொடங்கிய நாள். கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாக எந்தவித அரசியல் கட்சிகளோ, தலைவர்களோ, இயங்கங்களோ இல்லாமல் போராட்டம் தொடங்கி ஓர் ஆண்டு நிறைவுறப் போகிறது. ஆகஸ்ட் 16, 2011 அன்று போராட்டத்தை தொடங்கியிருந்தாலும் செப்.11 முதல் சுமார் 127 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த போதுதான், உலகம் இந்தப் போராட்டத்தைக் கண்டுகொண்டது. ஊடகங்கள், அரசியல் கட்சிகள் அனைத்தும் இடிந்தகரையைத் திரும்பிப் பார்க்க வைத்தது இந்த செப். 11, 2012 தொடங்கிய 127 பேரின் சாகும் வரையிலான உண்ணாவிரதம் தான். உண்ணாவிரதம், கடையடைப்பு, மீனவர்கள் கடலுக்குச் செல்லாமை, மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமை, 144 தடை உத்தரவு, மக்களின் அத்தியாவசிய தேவைகள் தடைசெய்யப்பட்டது. சுமார் 198 பேர் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது. தமிழக முதலமைச்சரை இரண்டு முறை போராட்டக் குழு உறுப்பினர்கள் சந்தித்தது என்று ஓராண்டு காலப் போராட்டத்தின் நாட்குறிப்பை நாம் நீட்டிக் கொண்டே போகலாம். இந்தப் போராட்டம் ஒரு மென்முறையிலான அகிம்சைப் போராட்டம். மக்கள் போராட்டம், மக்களே இதன் தலைவர்கள்.

மனவுறுதியுடன் ஓராண்டு காலமாகப் போராடிவரும் இடிந்தகரை மக்களின் போராட்டம் வெற்றி பெற்றுள்ளதா அல்லது தோல்வியடைந்துள்ளதா? எத்தனையோ வகையான போராட்டங்களை சந்தித்த இந்தியா அரசு. இடிந்தகரை மக்களின் அகிம்சைப் போராட்டத்தைக் கண்டு செய்வதறியாது திகைத்து ஏன்? ஓராண்டு காலம் போராடி வரும் மக்களிடம், ஏற்பட்டுள்ள பண்பாட்டு மாற்றம் என்ன? என்பதை நாம் ஆய்வு செய்தோமென்றால், இது அடுத்த தலைமுறையினருக்கான ஓர் வரலாற்று நிகழ்வாக மாறும் என்பது திண்ணம்.

இடிந்தகரையிலும் அதன் சுற்றப்புறமெங்கும் ஒரு சில பண்பாட்டு மாற்றத்தை இந்த கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான மக்களின் போராட்டம் ஏற்படுத்தியுள்ளது என்பதே இப்போராட்டத்தின் இப்போராட்டத்தின் முதல் வெற்றி. முள்முனையளவேனும் வன்முறையில்லாமல் ஓராண்டு காலம் கடற்கரையோரச் சமூக மக்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தின் மிகப் பெரிய பண்பாட்டு மாற்றமாகும். கடல் தொழில் செய்யும் ஆண்கள். வீட்டிற்கு வரும் போது அவர்களின் பசியாற்ற பெண்கள் வீட்டிலிருக்க வேண்டும், இது எழுதப்படாத அடிமை விதி. கட்டுமரம் கரை ஒதுங்கியதும் குடும்பத்தலைவிகள் தங்கள் கணவன்மார்களுக்கு தேநீர் சுமந்து கொண்டு நீண்ட வரிசையில் இருப்பார்கள். ஆண்கள் அவர்களாகவே உணவை பரிமாறி சாப்பிடுவதில்லை, பெண்கள்தான் பரிமாற வேண்டும், இன்று இத்தகைய ஆணாதிக்க பண்பாடு ஓரளவு குறைந்துள்ளதை நான் நேரில் கண்டுள்ளேன். பெரும்பாலான பெண்கள் தினமும் போராட்டக் களத்தில் போராடுகிற போது ஆண்களே தங்கள் குடும்ப பொறுப்பை உணர்ந்து அன்றாடப் பணிகளை (சமையல், துணிவைத்தல், வீடுபராமரிப்பு) செய்ததை நாம் ஆணாதிக்கத்தின் ஆணவ ஒழிப்பாக பதிவு செய்ய வேண்டும்.

“குடி குடியைக் கெடுக்கும்” அந்தக்குடி மீனவ சமூகத்தின் வளர்ச்சியைத் தடுத்ததை அனைவரும் நன்கு அறிவர். ஆனால் பலநாட்கள் கடலுக்கு செல்லாத காரணத்தாலும் 144 தடைஉத்தரவு அரசு அறிவித்திருப்பதாலும், மதுபானக் கடைகள் மூடப்பட்டிருப்பதாலும் மீனவர்களின் குடி பழக்கம் குறைந்துள்ளது. மீனவர்கள் தங்களுடைய வருமானத்தில் ஒரு பகுதியைஃவிழுக்காட்டை போராட்டத்திற்காக ஒதுக்குகின்றார்கள். இதனால் குடிக்கு செலவிட முடியாமல் போகிறது. இடிந்தகரை மக்கள் ஒரு மனதாக ஒரு முடிவு எடுத்திருக்கின்றார்கள், “மதுப்பழக்கம் உடையவர்கள், மது அருந்திவிட்டு போராட்ட பந்தலுக்குள் வரக்கூடாது, மீறி வருபவர்கள் ஊர் கமிட்டியரால் விரட்டப்படுவார்கள்” என்று ஊர் கட்டுப்பாடு உள்ளது. ஓராண்டு காலத்தில் அப்படியாரும் விரட்டப்படவில்லை, அதாவது குடிப்பழக்கம் குறைந்துவிட்டது, மீறி குடிப்பவர்கள் போராட்ட களத்திற்கு வருவதில்லை. மிகப்பெரிய மது ஒழிப்பு பண்பாடு அங்கு உருவாகியுள்ளதை காணமுடிகிறது. 26-12-2011 அன்று கூடங்குளம் ஊரைச் சுற்றி மிகப்பெரிய ஆர்ப்பாட்டமும் ஊர்வலமும் அணு உலைக்கு எதிராக நடைபெற்றது. சுமார் 8,000 பேர் கலந்து கொண்ட நிகழ்வு ஒரு நபர், அணு உலைக்கு எதிராக தீவிரமாக பேசக்கூடியவர், போராடக்கூடியவர் அதில் கலந்து கொள்ளவில்லை. அவரிடம் சென்று விசாரித்த போது அவர் கூறியது, “நான் நேற்று குடிச்சிட்டேன், போராட்ட ஒழுங்குப்படி நான் கலந்து கொள்ளக் கூடாது, எனவே எனது மனைவி, மகன், மகள்களை அனுப்பிவைத்து விட்டேன். நாளையிலிருந்து நான் போராட்டத்தில் கலந்துக் கொள்வேன்” என்றார். அந்த நபரை யாரும் வற்புறுத்தவில்லை, குடிக்ககூடாது என்று தனிப்பட்ட முறையில் வலியுறுத்தவில்லை, ஆனால் உரிமைக்காகப் போராடும் போது பொது ஒழுங்கை கடைபிடிக்க வேண்டும் என்ற பண்பாட்டை இந்த போராட்டம் வளர்த்துள்ளது.

ஒரு முறை மது அருந்திவிட்டு ஒரு நபர் அரசு போருந்து மீது கல்லை எறிந்து விட்டார், அரசுப் பேருந்தின் கண்ணாடி நொருங்கியது, இதனைக் கண்ட பொது அந்த நபரை பிடித்து அதே பேருந்தில் ஏற்றி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்பொழுது அவர்கள் காவல் துறையிடம் கூறியது நாங்கள் குடியிலிருந்து மீண்டு வருகிறோம். தவறு நடந்தால் நாங்களே காவல்துறையிடம் செய்தி கொடுத்துவிடுகிறோம் என்று நேர்மைத்தன்மையைக் கடைபிடிக்கிறார்கள்.

பெண்களிடையே பண்பாட்டு மாற்றம்:

பெண்கள் என்றவுடன் நம்மிடையே பல முன்சார்பு எண்ணங்கள் தோன்றும். புரணி பேசுபவர்கள், தொலைக்காட்சிக்கு அடிமை, சுயநலவாதிகள், பின்புத்தியுடையவர்கள், உலக அறிவு இல்லாதவர்கள், பலகீனமானவர்கள் இன்னும் அதிகமான முன்சார்பு எண்ணங்களை நமது சமூகம் நமக்கு கற்றுத் தந்து உள்ளது. இந்தப் போராட்டம் இவ்வளவு காலம் நீடித்த, நிலைத்த தன்மை பெற்றதற்கு அடிப்படைக் காரணம் பெண்களின் எழுச்சியே. பெண்கள் இன்று அரசியல் பேசுகின்றார்கள், பீடிசுற்றிக் கொண்டிருக்கும் பெண்களும், தலைசுமட்டு மீனவ பெண்களும் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று நிபுணர் குழுவையே கேள்வி கேட்கும் அளவுக்கு அறிவுப் பூர்வமாக வளர்ந்துள்ளார்கள். காலையிலிருந்து மாலைவரை போராட்ட பந்தலில் அமர்ந்திருக்கும் பெண்கள் அரசியல் பேசுகிறார்கள், இயக்கத் தலைவர்கள், சமூக ஆர்வவலர்கள், பேராசிரியர்கள், இயக்கத் தலைவர்கள், பேராசிரியர்கள் என்று யார் பேசினாலும் அதற்கு செவிமடுக்கிறார்கள். புரளி பேசிய பெண்கள் அணு உலைக்கு எதிரான புரட்சியை நடத்துகிறார்கள் என்பது மிகப்பெரிய பண்பாட்டு மாற்றம்தானே!.

ஊடகங்கள் மக்களை மழுங்கடித்துவரும் இந்தச் சூழலில் பெண்கள் ஊடகங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் போராட்ட பந்தலிலேயே அமர்ந்திருக்கிறார்கள். போராட்ட குழு உறுப்பினர்களாக படிப்பறிவில்லாத (அனுபவ அறிவு உண்டு) பெண்கள் இருக்கிறார்கள். அவர்களும் முடிவெடுக்கும் மையக் குழுவில் முக்கிய இடம் வகிக்கிறார்கள். 31.01.2012 அன்று திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக்திற்கு தமிழக அரசின் நிபுணர் குழுவுடன் பேச்சு வார்த்தைக்காக சென்ற போது, இந்துத்துவாதிகள் கொலை வெறித் தாக்குதலை போராட்டக் குழு மீது கொடுத்தார்கள். அதனை தடுத்து முறியடித்தவர்கள் பெண்களே. ஏழு பெண்கள் மட்டுமே அன்று பேச்சுவார்த்தைக்குச் சென்றிருந்தார்கள், ஆனால் துணிச்சலோடு இந்துத்துவ பாசிச கும்பலை விரட்டியடித்தார்கள். இதில் திருமதி. இனிதா என்ற பெண்ணின் கை எலும்பு முறிக்கப்பட்டது. இடிந்தகரை பெண்கள் செருப்பால் இந்து பாசிசவாதிகளை விரட்டிய நிகழ்வு முறத்தால் புலி விரட்டிய வீரத் தமிழ் பெண்டீரின் வீரப் பண்பாட்டை நம் நினைவுக்கு கொண்டு வருகிறது.

மே.4, 2012 அன்று சுமார் 302 பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார்கள். 15 நாட்கள் கடந்த பின்பும் மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளாமையாலும், எந்தவித மருத்துவ உதவியும் அரசு பெண்களுக்கு வழங்காத காரணத்தாலும் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள சில தலைவர்கள் அறிவுறுத்தினர். அப்பொழுது உண்ணாவிரதத்தில் பங்கேற்ற நி~h என்ற இளம்பெண் இப்படி கூறினார். “நான் சாகவும் தயார், என் மக்கள் வாழ வேண்டும், அதற்கு இந்த அணுஉலை மூடப்பட வேண்டும் அது வரை நான் உண்ணாவிரதத்தை தொடருவேன்” என்றார். அவருக்கு வயது 20 மட்டுமே. 20 வயது இளம்பெண் போராட்டத்தில் இறுதி வரை உறுதியோடு இருந்தது இன்றைய இளையோர்கள் உரிமைக்கானப் போராட்டத்தில் தன்னை இழக்கத் துணிந்த தியாகப் பண்பாடு அவர்களிடம் வளர்ந்துள்ளதைக் காட்டுகிறது.

இளையோர்களிடம் பண்பாட்டு மாற்றம்:

செப் 20,2011 அன்று இந்திய பிரதமரின் ஆலோசகராக மத்திய அமைச்சர் நாராயணசாமி இடிந்தகரை வந்தார். முதலில் பாதுகாப்பு காரணங்களை கூறி இராதாபுரம் தாசில்தார் அலுவலகத்திற்கு போராட்டக்காரர்களை பேச்சவார்த்தைக்கு அழைத்தார்கள். ஆனால் நாங்கள் பாதுகாப்புத் தருகிறோம் என்று கூறி இளையோர்கள் சாலையின் இருமருங்கிலும் அரண் அமைத்தார் போல் சங்கிலிபோல் நின்று பாதுகாப்பு கொடுத்தார்கள். காவல்துறையின் பாதுகாப்பு இல்லாமல் ஒரு மத்திய அமைச்சர் சுமார் 50,000 மக்கள் கூடியிருந்த கூட்டத்தினர்கள் தனியாக வந்து சென்றது, அண்மைக் காலத்தில் வேறு எங்கும் நடந்தேறியதில்லை. இதற்கு காரணம் இளையோர்கள், தலைவர்கள் வரும் பொழுதும், மற்ற ஊர் மக்கள் வரும் பொழுதும் அவர்களுக்கு போதிய பாதுகாப்பை இவர்கள் வழங்குகிறார்கள். சுமார் 30,000 முதல் 50,000 மக்கள் செப்11,2011 முதல் செப்22,2011 வரை போராட்ட பந்தலில் கூடியிருந்தார்கள், அவர்களுடைய அத்தியாவசியத் தேவைகள் அனைத்தையும் பொறுப்போடு கவனித்துக் கொண்டது இடிந்தகரை இளையோர்கள். சுமார் ஆறுமாத காலம் தொடர்ந்து 144 தடை உத்தரவு கூடங்குளம் அணுஉலையைச் சுற்றி அமுலில் உள்ளது. குடிநீர், பால், உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காக இளைஞர்கள் குழுக்களாக செயல்பட்டது, நாம் வாழும் மண்ணை நாம் காப்பாற்ற வேண்டும் என்ற பண்பாட்டின் வெளிப்பாடே.

பல்வேறு இயக்கத் தலைவர்களையும், அரசியல் தலைவர்களையும், அணுஉலைக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் கல்வியாளர்கள், அறிவியலாளர்கள், பிறமாநிலங்கள், அனைவருக்கும் போதிய பாதுகாப்பு கொடுப்பதோடு, அவர்களோடு உரையாடவும், பண்போடு பேசவும், அறிவுப்பூர்வமாக விவாதம் செய்யவும் இளைஞர்கள் பயிற்சிப் பெற்றுள்ளார்கள். நூற்றுக்கணக்கான இளைஞர்களும், இளம்பெண்களும் கூடி ஒரே பந்தலில் அமர்ந்திருந்து போராடுகிறார்கள், எந்தவித பாலியல் தொந்தரவுகளோ, பாலியல் ரீதியான கேலி பேச்சுக்களோ, பெண்களிடம் தகாத வார்த்தைகளை இளையோர் பயன்படுத்தியதாகவோ வழக்கு பதிவு செய்யப்படவில்லை, அங்கு நடக்கவில்லை என்பதைக் கேட்கும் போது இளையோர்களிடம் ஏற்பட்டுள்ள இந்த மென்முறை அகிம்சை பண்பாட்டு மாற்றம், அவர்களை அறிவுரீதியாக இந்தப் போராட்டத்தில் செயல்படத் தூண்டியுள்ளது.

சிறுவர்களிடையே மாற்றம்:

அண்மையில் பெருமணல் என்ற மீனவ கிராமத்திற்கு சென்றிருந்தேன், மாலைப் பொழுதினிலே சிறுவர் மட்டைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் விளையாட்டில் ‘ஸ்டெம்புக்கு’ பதிலாக அணுஉலை என்ற வாசகத்தை எழுதிவைத்து விளையாடினார்கள். சிறுவர்களிடம் அதற்கான விளக்கம் கேட்ட போது, “இந்த அணுஉலையை எங்களுடைய பந்தைக் கொண்டு சுக்குநூறாக துகள்களாக உடைத்தெறிவோம், அணுஉலையைப் பார்க்கும் போது எங்களுடைய பவுலிங் வேகமும் கூடும்” என்று கூறினார்கள். ஒரு போராட்டம் எப்படி மக்களின் வாழ்வோடு இணைந்துள்ளது. அதிலும் குறிப்பாக சிறுவர்களை இப்போராட்ட உரிமைக்காக போராடுகிறவர்களாக மாற்றியிருக்கிறது.

பள்ளி விடுமுறைநாட்களில் விளையாட்டுக்கு பதிலாக போராட்ட பந்தலில் அமர்ந்து போராட்டத்தைத் தொடர்வது, அணுஉலைத் தொடர்பான போதிய தெளிவை அங்குள்ள சிறுவர்கள் பெற்றுள்ளார்கள். இந்த போராட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது சிறுவர்கள்தான். தாய்-தந்தை போராட்டத்திற்கு சென்றுவிடுவதால் சிறுவர்கள் அவர்களுக்கு தேவையான உணவை அவர்களே சமைத்து பள்ளிக்கு எடுத்துச் செல்வது. இரவு நேரங்களில் மின்விளக்குகள் தடைப்பட்ட போதும், பெற்றோர்கள் ஊரைக் காக்க காவல் புரிந்த போதும் வீட்டில் சிறுவர்கள் பட்ட வேதனை கொஞ்ச நஞ்சமல்ல. அணுஉலைக்கு எதிரான போராட்டத்ததை அடுத்த தலைமுறையான நாம் தான் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற போராட்டப் பண்பாடு சிறுவர்களிடையே ஏற்பட்டுள்ளதை நாம் பாராட்டியாக வேண்டும். சிறுவர்கள் பெரும்பாலும் போராட்ட பந்தலிலேயே தங்களுடைய வீட்டுப் பாடங்களை செய்து முடிக்கிறார்கள். போராட்டமே அவர்களின் வாழ்வாகிவிட்டது.

சமூக ரீதியான மாற்றம்:

25-12-2011 அன்று கிறித்துப் பிறப்பு விழாவை இடிந்தகரை கிறித்தவ மக்கள் கொண்டாடவில்லை. அவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்த நேரம், அருகிலுள்ள விஜயபதி முஸ்லீம் சகோதரர்கள் இடிந்தகரைக்கு வந்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, லூர்து மாதா கோயில் முன்பு சிறப்புத் தொழுகை நடத்தினார்கள். கூடங்குளத்தை சேர்ந்த இந்து நாடார் மக்கள் நேரில் வந்து இடிந்தகரை மக்களை வாழ்த்தினார்கள். இது இதற்கு முன் அங்கு நிகழ்ந்ததில்லை, ஆனால் இன்று அனைத்து மதத்தினரும் இணைந்திருப்பது ஒரு பண்பாட்டு மாற்றமே. போராட்டமும் நடைபெறும் இடம் மாதாகோயில், போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஓர் இந்து மத நம்பிக்கையாளர், ஒவ்வொரு நாளும் போராட்டம் தொடங்கும் போது அனைத்துமதப் பாடல்களும் பந்தலில் ஒலிக்கப்படுகிறது. பழமையான கிறித்தவ நம்பிக்கையில் ஊறிப்போன கிறித்தவ மக்கள் தங்கள் ஆலயத்தில் பிற சமயப் பாடல்கள் ஒலிப்பதை ஏற்றுக் கொண்டதும், விஜயாபதி விசுவாமித்திரர் ஆலயத்திற்கு (இந்தியாவிலே இங்கு மட்டும் தான் விசுவாமித்திரர் ஆலயம் உள்ளது) கிறித்தவர்கள், இந்துக்கள் அனைவரும் அணுஉலைக்கு எதிராக பால் குடம் ஏத்தி வழிபாடு நடத்தியதைக் காணும் போதும் சமயம் கடந்த பரந்துபட்ட பார்வையை அம்மக்களிடம் இப்போராட்டம் வளர்ந்துள்ளது.

சாதி, மதம், மொழி என்று எந்த வேறுபாடுகளும் இந்த போராட்டத்திற்கு தடையாக இருக்கவில்லை. மக்கள் அணுஉலைக்கு எதிரான அனைவரையும் மிகப்பெரிய பண்பாட்டு மாற்றம்தான்.

பொருளாதாரப் பண்பாட்டு மாற்றம்:

வெளிநாட்டு நிதியுதவியுடன் தான் போராட்டம் நடத்தப்படுகிறது என்று கூறிய மத்திய மாநில அரசுகளால் அதை நிரூபிக்கத் முடியவில்லை. காரணம் அதில் உண்மையல்ல. அப்படியானால் நிதி எங்கிருந்து வந்தது? இது இயல்பான கேள்விதான். மீனவர்கள் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை போராட்ட நிதியாகக் கொடுக்கிறார்கள். ஏறத்தாழ ஆறு மீனவக் கிராமங்கள் மீனவர்களிடமிருந்து வருமானத்தில் ஒரு பங்கை வசூலிக்கின்றன. மற்ற ஊர்களில் தொழில் புரிபவர்கள் போராட்டக் குழு சார்பாக உண்டியல் ஏந்தி நிதி வசூலிக்கின்றனர்.

அணுஉலை எதிர்பாளர்கள் தமிழகமெங்குமிருந்து வரும் போது நன்கொடை வழங்குகிறார்கள். இதுதான் நிதி ஆதாரம்; போராட்டத்திற்கு செலவு குறைவு. நிரந்தர பந்தல், மக்கள் மதிய உணவை உண்ணுவதில்லை, தண்ணீர் மட்டும் தான், அதுவும் பஞ்சாயத்து வழங்கிவிடுகிறது. ஒலி-ஒளி அமைப்பது, துண்டு பிரசுரங்கள் அச்சடிப்பது போன்றவற்றை தனித்தனி நபர்கள் பொறுப்பேற்கிறார்கள். எந்த தனிநபர் பெயரும் இப்போராட்டத்தில் முன்னிருத்தபப் படுவதில்லை, மக்களே முன்னிறுத்தப்படுகிறார்கள். இதனால் தனிநபர் வழிபாடு இந்தப் போராட்டத்தில் இல்லை. தமிழகத்தில் தன் நபர் எவரையும் முன்னிலைப் படுத்தாமல் நடத்த மிகப் பெரிய போராட்டங்களில் இதுவே முதன்மை எனலாம். நிதியைக் கையாள வெளிப்படையான ஒரு நிதிக்குழு செயல்படுகிறது. அவர்கள் வாரம,; மாதம், ஒரு முறை கணக்கை மக்களிடம் தெரிவித்தார்கள்.

ஆடம்பரத் திருவிழாக்களை மக்கள் தவிர்த்துவிட்டு அத்திருவிழாக்களையே போராட்ட வடிவமாக மாற்றியிருக்கிறார்கள். திருவிழாக்களுக்கு அதிகம் செலவிடுவதை தவிர்த்துவிட்டு அப்பணத்தையும் போராட்டத்திற்கு ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். மக்கள் கடந்த ஓராண்டு காலமாக எந்த திருவிழாவும் கொண்டாடவில்லை, அம்மக்களிடம் கேட்டால் அவர்கள் கூறுவது நாங்கள் இனி மிகப்பெரிய திருவிழா ஒன்று கொண்டாடுவோம் அது அணுஉலை மூடுவிழாதான்” என்கிறார்கள்.

அரசியல் மாற்றமும் தெளிவும்:

தமிழகத்தின் பெரிய கட்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் எவரும் இப்போராட்டத்தை ஆதரிக்கவில்லை. தி.மு.க. தொடக்கத்திலிருந்தே அணுஉலையை திறப்பதை கட்சியின் இலட்சியங்களில் ஒன்றாக வைத்துள்ளது. “உங்களில் ஒருத்தியாக இருப்பேன்” என்று இடிந்தகரையில் போராடுகின்ற மக்களை பார்த்து அறிவித்த அ.தி.முக பொதுச் செயலாளர், அவரது அரசியல் ஆதாயம் மாறிய உடன் அணுஉலை ஆதரவாளராக மாறிவிட்டார், மக்களையும் நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார். தே.மு.திக தலைவர் இடிந்தகரை வந்து போராடுகிற மக்களை சந்தித்து மக்களோடு இருப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தார், அவரது வாக்கும் ‘தண்ணீரில’; எழுதப்பட்ட வாக்குதான். (குடிகாரன் பேச்சு  விடிஞ்சா போச்சு) கொன்றொழிப்பதற்காக நேரம் பார்த்துக் கொண்டிருக்கிற கட்சி காங்கிரஸ் கட்சி. யாரும் அக்கட்சியை எதிர்பார்க்கவே இல்லை. பா.ஜ.க மற்றும் பிற கட்சிகள் அனைத்தும் அணுஉலை ஆதரவாக நிலைப்பாடு எடுத்துள்ளன. இடிந்த கரையில் போராடும் சாதாரண மீனவ மக்கள், தாழ்த்தப்பட்டவர்கள், அரசியல் கட்சிகளை நிலைப்பாடு எடுக்கத் தூண்டியுள்ளார்கள்.

அணுஉலை என்பது அழிவுக்குறியது இதை யாரெல்லாம் ஆதரிக்கிறார்கள், எதிர்க்கிறார் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. மக்களை அழிக்கும், கொன்றொழிக்கும் திட்டங்களை இக்காட்சிகள் ஆதரிப்பதால், அவைகள் மக்களுக்கு எதிரானவை என்பதை மக்கள் அறிவித்துவிட்டார். அனைத்து சுயநல அரசியல்வாதிகளின் முகத்திரையையும் கிழித்துவிட்டார்கள். மக்கள் எந்த சமரசத்திற்கும் பணியாதது இப்போராட்டத்தின் நீடித்த தன்மைக்கு மிக மிக முக்கிமான காரணியாகும்.

அரசியல் கட்சிகளின் தலைமையோ நிர்வாகத்துறையோ மக்களை சமாதானப்படுத்த முடியாமல் தோற்றுபோய் விட்டன. எல்லா அரசியல்வாதிகளும் தோற்றுப் போனப் பின்பு, முன்னால் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்கள் வந்தார். வளர்த்திட்டம் என்றார், புறா(PURA) என்றார். 500 கோடி திட்டம் இலவச மருத்துவமனை, வேலைவாய்ப்பு, நாட்டின் வளர்ச்சி, வல்லரசுக் கனவு என்றெல்லாம் பசப்பு வார்த்தைகளைக் காட்டி பாட்டாளி மக்களை ஏமாற்ற முற்பட்டார். ஆனால் இன்று அப்துல்கலாம் தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுள்ளார். இவருடைய வளர்ச்சி அல்லது வல்லரசு சித்தாந்தத்தை கேள்விக்குட்படுத்தியவர்கள் இந்த மக்கள். அப்துல் கலாமின் ஏகாதிபத்திய எண்ணத்தை வெளிச்சம் போட்டுக் காண்பித்தவர்கள் இம்மக்கள்.

சமவெளி மக்கள் பொதுவாக நெய்தல் மக்களைக் கண்டு கொள்வதில்லை. அதுபோலவே நெய்தல் நில மக்களும். ஆனால் இன்று கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் குறிப்பாக இடிந்தகரை மக்கள் அனைத்து தமிழர் பிரச்சனைகளையும் ஆய்வுக் கண்கொண்டு பார்க்கிறார்கள். மூவர் தூக்குத் தண்டனையாக இருந்தாலும் சரி, முல்லைப் பெரியாறு பிரச்சனையாக இருந்தாலும் சரி மக்கள் போராட்டங்களில் அவர்களும் இணைந்து கொள்கிறார்கள்.

போராட்டத்தின் நிலைத்த தன்மை:

கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம் உறுதியோடு நடைபெறுவதற்கு முதல் காரணம், தலைமை. இது மக்கள் தலைமை, மக்களால் நேரடியாக உருவாக்கப்பட்ட தலைமை. இங்கு தலைவர்கள் கிடையாது ஒருங்கிணைப்பாளர்கள் உண்டு. கடுகளவும் கொள்கை மாறாத உறுதியான தலைமைதான். இப்போராட்டத்தின் முதல் வெற்றி. போராட்டக் குழு முடிவெடுக்கும் முன் மூன்று வகையான மக்களைச் சந்திக்கிறார்கள். முதலில் ஊர் கமிட்டியார்.  இதில் பெரும்பாலும் திருமணமான ஆண்கள் மட்டுமே இருப்பார்கள். இது பாரம்பரிய முறையிலான தமிழர்களின் நிர்வாக முறைக்குச் சான்று. மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்படுகிறார்கள். இக்கமிட்டியாரை போராட்டக் குழுவினர் சந்திக்கிறார்கள். இரண்டாவதாக பெண்கள், இப்போராட்டத்தின் முதுகெலும்பு யாரென்றால் பெண்களே. அவர்களைச் சந்தித்து அவர்களுடைய கருத்துகளைப் பதிவு செய்கின்றார்கள். பெண்களை யாருமே முடிவெடுக்கும் தளத்தில் அனுமதிப்பதில்லை. ஆனால் இப்போராட்டத்தில் பெண்களும் முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றுள்ளார்கள். மூன்றாவதாக இளைஞர்கள், இவர்கள் தான் இப்போராட்டத்தின் செயல் ஊக்கம், செயல் வடிவம். இளையோர்களின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களுடைய கருத்துகளை கேட்டறிந்த பின்புதான் போராட்டக்குழு எந்தவொரு முடிவையும் எடுக்கிறது. இளையோரிடம் அதிகமான பொறுப்புணர்வு வளரக் காரணம் அவர்கள் மதிக்கப்படுகிறார்கள்: முடிவெடுக்கும் போது அவர்களிடம் கருத்துக் கேட்பது, அவர்களை செயல்படத் தூண்டியுள்ளது.

இங்கு கவனிக்க வேண்டியது அனைத்து தரப்பு மக்களுக்கும் முடிவெடுப்பதிலும், நிர்வாகத்தில் பங்கேற்பதிலும், வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. இதையே இன்னொரு கோணத்தில் பார்த்தால் மக்களே தங்களுடைய வாழ்வுரிமைக்கான முடிவை எடுக்க பயிற்சிப் படுத்தப் படுகிறார்கள். மீனவர்களையும், தலித்துக்களையும் பாட்டாளி வர்க்கத்தையும் எவரும் மதிப்பதில்லை, ஆனால் கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தில் அவர்கள் தான் மையம், அவர்களே முடிவெடுக்கிறார். முடிவெடுப்பதற்கு முன்பு மக்களுக்கு அறிவியல் ரீதியாக பிரச்சனையை அனுகவும் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

இறுதியாக......

சாதியரீதியான போராட்டம், மதரீதியான போராட்டம், தீவிரவாதிகள், மாவேஸ்ட்டுகள், நக்ஸலைட்டுகள் என்றெல்லாம் ஆதிக்க வர்க்கத்தால் சுமத்தப்பட்ட கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டம் இன்று தூய்மையான, அப்பழுக்கற்ற, மக்கள் போராட்டமாக, புரட்சியாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போராட்டம் மக்களிடையே மிகப்பெரிய பண்பாட்டுத் தாக்கத்தை அல்லது மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் தான் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் இன்று உலக அணுஉலைக்கு எதிரான போராட்டமாக மாறியுள்ளது. ஓராண்டுகாலப் போராட்டம் வெற்றியா? தோல்வியா? என்றால் பண்பாட்டு ரீதியில் இப்போராட்டம் மிகப்பெரிய வெற்றியே. போராட்டங்கள் தோற்பதில்லை காரணம் அதன் வடுக்கள் அடுத்த தலைமுறையைப் போராடத்தூண்டும். “மக்கள் வீதிகளில் திரண்டால் விமானங்களை கல் எறிந்து வீழ்த்துவார்கள் டாங்கிகளை கைகளால் புரட்டுவார்கள்” என்று கூறுவார் கியுபாப் புரட்சியாளர் பிடல் கர்ஸ்ட்ரோ. கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக மட்டுமல்ல, அணுஉலைக்கு எதிராக மட்டுமல்ல, ஒட்டு மொத்த ஏகாதிபத்தியத்திற்கும் எதிர்க்  குரல் கொடுத்துள்ளார்கள்.

Pin It