சாமியார் நித்யானந்தாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆன்மீகம், மடம் போன்றவற்றின் மீதெல்லாம் மக்களுக்கு இருக்கிற கொஞ்சநஞ்ச மரியாதையையும் தனது நடவடிக்கைகளினால் காற்றில் பறக்கும்படி செய்து கொண்டிருக்கும் அவர் போன்ற சாமியார்களுக்கு சமுதாய அக்கறையுள்ள முற்போக்காளர்கள் கடமைப்பட்டுள்ளார்கள் என்றே படுகிறது. மேலும் மேலும் அவர் தனது லீலா விநோதங்களைத் தொடர்ந்து திறம்படச் செய்து அத்துடன் அம்பலப்பட்டுக்கொண்டேயிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

nithiyanandha_380சுவாமி நித்தியானந்தாவின் இயற்பெயர் ராஜசேகரன். அவருக்கு வயது 34. திருவண்ணாமலையில் 1978 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் பிறந்த ராஜசேகரன் சின்னஞ்சிறிய வயதிலேயே ஒரு ஆன்மீகவாதி என்று மக்களிடையே தோற்றங்காட்டி, இன்று உலகம் முழுதும் பல கோடிக்கணக்கான சொத்துக்களைக் குவித்துள்ளார். தனது 12 வது வயதில் உடல் தாண்டிய (?) பேரானந்த அனுபவத்தை அடைந்ததாகச் சொல்லிக்கொள்ளும் அவர்  கடந்த 2000 ஆம் ஆண்டு தனது ஆசிரமத்தைத் தொடங்கினார். இன்று அது உலகின் 21 நாடுகளில் 800 கிளைகளைக் கொண்டு இயங்கி வருகிறது. நடிகை ரஞ்சிதாவுடன் பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளான நித்யானந்தா மீது பல வழக்குகள் உள்ளன. நித்தியானந்தா முக்காலமும் உணர்ந்த ஞானி என்று வர்ணிக்கப்படுபவர். ஆனால், கர்நாடகத்திலுள்ள  தனது பிடதி ஆசிரமத்தில் தனது படுக்கையறையில் அவர் நடத்திவந்த காம லீலைகளைப் படம்பிடிக்க ரகசியக் காமிரா வைக்கப்பட்டுள்ளதென்று மட்டும் அவரின் ஞானதிருஷ்டி அவருக்குச் சொல்லாமல் போனதுதான் பக்தர்களுக்கு வியப்பான செய்தி.

அவரது பெயர் இந்தப் பாடுபட்டுக்கொண்டிருக்கும் இந்த நிலையில்தான் நித்யானந்தாவுக்கு மதுரை ஆதீனத்தின் 293வது குருமகா சன்னிதானப் பதவியைத் தூக்கித் தந்துவிட்டார் ஏற்கனவே உள்ள  292வது மடாதிபதி. இதற்காக சில பல கோடிகள் கை மாறியதாகவும் தகவல்கள் உண்டு.  “பாலியல் வழக்கில் சிக்கியுள்ள நித்யானந்தாவை மதுரை ஆதீன கர்த்தாவாக நியமிக்கலாமா?” என்ற விவாதங்களும், சர்ச்சைகளும், மதுரை ஆதீன மடத்தின் நலம் விரும்பிகளின் போராட்டங்களுமாக இப்போது நாளும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதில் பலரும் மதுரை ஆதீன மடம் என்பது எத்துணை பழம்பெருமை வாய்ந்த மடம், அதன் தலைமைப் பொறுப்பை நித்யானந்தாவிடம் தந்தது மாபெரும் பிழையன்றோ என்று நா தழுதழுக்க வெம்பி வெடிப்பதைப் பார்க்க முடிகிறது.

கேடுகள் நிரம்பிய சாதியத்துக்கும் வர்ணாசிரமக் கொடுங்கோன்மைக்கும் அரணாக நின்ற நிலவுடைமைச் சமுதாயத்தில் கொழுத்தவைதான் இந்த மடங்களும் பெருங்கோயில்களும். அந்த நிலவுடைமையின் கசடுகளை இன்றும் சுமந்துகொண்டு எந்தவிதமான சிதைவுகளும் சேதாரமுமின்றி அப்படியே கோலோச்சிவருகின்றன தமிழ்நாட்டு சைவ - வைணவ -ஸ்மார்த்த - இத்யாதி இத்யாதி மடங்கள். நித்யானந்தா இப்படிப்பட்ட ஒரு மடத்தின் தலைமைக்கு வந்துவிட்டார் என்று பலரும் கூச்சலிடும் இந்த வேளையில் நாம் இந்த மடங்களின் லட்சணங்களைப் பற்றியும் சிந்தித்துப் பார்ப்பது அவசியம்தானே?

வைதீக இந்து மதத்தைக் கட்டியெழுப்பிக் கட்டிக்காகவென்றே உருவாக்கப்பட்ட இந்த மடங்கள் கைக் கொண்டிருக்கும் அதிகாரங்களுக்கெல்லாம் அச்சாணியாக இருப்பது இவை குவித்து வைத்திருக்கும் பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் என்றால் மிகையில்லை. இந்த நிலங்கள் அத்தனையும் தமிழகத்தை ஆண்ட மன்னர் பெருமக்களால் இந்த மடங்கள் கொழுப்பதற்கென்றே அள்ளிக் கொடுக்கப்பட்டவை. அதாவது பெரும்பாலும் ஆயிரக்கணக்கான ஏழைத் தமிழ் விவசாயிகளிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக் கொடுக்கப்பட்டவை. சுதந்திர இந்தியாவில் ஜனநாயகச் சூழலில் எந்தத் தன்மானத் தமிழன் ஆட்சியாலும் இன்றளவும் இந்த நிலக் குவியலுக்கு இம்மியளவு ஆபத்துகூட ஏற்பட்டுவிடவில்லை. அதாவது நிலமற்ற விவசாயக் கூலிகள் கோடிக் கணக்கில் வாழும் ஒரு நாட்டில் இந்த நிலக்குவியல் யாருக்குமே ஒரு சமுதாயத் தீங்கு என்று தோன்றாமலேயே இருப்பதுதான் வியப்பு. இந்த லட்சணத்தில்தான் தன் பங்கிற்குப் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களைக் குவித்து வைத்திருக்கும் மதுரை மடத்தின் பழம் பெருமை குறித்த அங்கலாய்ப்புகள் வேறு.

அப்படி என்னதான் பழம் பெருமை இந்த மதுரை மடத்திற்கு இருக்கிறதாம்? சீர்காழியைச் சேர்ந்த ஞான சம்பந்தன் மதுரை அரசியர் மங்கையர்க்கரசி, குலச்சிறைநாச்சியார் வேண்டுகோளுக்கிணங்க சமணத்தைப் பின்பற்றிவந்த பாண்டிய மன்னனின் நோய் தீர்த்து அவனை சமணத்திலிருந்து சைவத்திற்கு மதம் மாற்றினாராம்.  இது நடந்தது ஏழாம் நூற்றாண்டில். அதாவது சமண - பௌத்த சமயங்கள் வெகுமக்கள் மதங்களாக இருந்த தமிழகச் சூழலில் தங்களின் இழந்த செல்வாக்கினைத் திரும்பப் பெறும் பொருட்டு சைவ - வைணவ மதங்கள் அரசர்களின் உதவியோடு பெரும் ஊழித்தாண்டவத்தை அரங்கேற்றின. பாண்டிய மன்னனின் அன்பைப் பெற்றுக்கொண்ட ஞானசம்பந்தன் மதுரையில் எண்ணாயிரம் சமணர்களைக் கழுமரத்திற்குப் பலிகொடுத்த கொடுமையை அரங்கேற்றினான். மதுரையில் சைவ மடத்தையும் நிறுவினான். சமணர்களின் ரத்தச் சேற்றில் எழுந்த மதுரை ஆதீனமடம் எப்படிப்பட்ட பாரம்பரியமிக்க மடமாக இருக்கமுடியும் என்பது  விளங்குமல்லவா? இதுபோன்ற ரத்த வரலாறுகள் இல்லாத மடத்தைத் தமிழகத்தில் காண்பதரிது. இது ஒருபக்கம் இருக்கட்டும், இன்றைய நமது சமூகப் பொருளாதார, பண்பாட்டு நிலையிலிருந்து பேசுவோம்...

ஒரு பக்கத்தில் எதிர் மதங்களை ஒழித்துக்கட்டியும், மறுபக்கத்தில் ஏழைகளின் நிலங்களைக் கபளீகரம் செய்தும்தான் இன்றும் இந்த மடங்கள் ஜீவித்திருக்கின்றன. எனில், இந்தச் சந்தர்ப்பத்தில் நமது விவாதத்தின் திசையை நாம் எவ்வழியில் தீர்மானித்துக்கொள்வது? இந்த மடங்களின் நிலங்கள் குறித்து நாம் என்றைக்காவது பேசியிருக்கிறோமா? நவீன தொழில் வளர்ச்சியில் நிலச்சீர்திருத்தத்தின் முக்கியத்துவம் குறித்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென் வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார். மேற்குவங்கத்தில் இடது முன்னணி அரசு மேற்கொண்ட நிலச்சீர்திருத்தத்தின் பயனாக அங்கே கிராமப்புற மக்களிடம் வாங்கும் சக்தி மேம்பட்டிருக்கிறது என்று உலக வங்கிகூட குறிப்பிட்டதுண்டு. நிலக்குவியல் என்பது நவீனத் தொழில் வளர்ச்சிக்குப் பெரிய முட்டுக்கட்டையாகும் என்பதையறிந்தே இடதுசாரிகள் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பு களையெல்லாம் அச் சீரிய பணிக்குப் பயன்படுத்திக்கொண்டதை இந்த நாடு கண்டது.

இதோ பாருங்களேன்... தமிழகத்தின் பெருங்கோவில்களும், மடங்களும் எத்தகையதொரு நிலக்குவியலை வைத்திருக்கின்றன என்பதை நான் சொல்லவில்லை, தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை தனது இணையத்தில் தரும் தகவலையே இங்கே தருகிறேன்.  தமிழகத்தின் விளைநிலங்களில் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 859 ஏக்கர், 58 சென்ட் நிலம் தமிழகக் கோவில்களுக்குச் சொந்தமானவை . 21 ஆயிரத்து 282 ஏக்கர், 5 சென்ட் நிலம் மடங்களுக்குச் சொந்தமானவை. தரிசு நிலங்களில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 517 ஏக்கர், 86 சென்ட் நிலம் கோவில்களுக்கும், 34 ஆயிரத்து 543 ஏக்கர், 15 சென்ட் மடங்களுக்கும் சொந்தமானவை. இதேபோல மானாவாரி நிலத்தில்  20 ஆயிரத்து 754 ஏக்கர், 34 சென்ட் கோவில்களுக்குச் சொந்தமானவை. ஆக, தமிழகத்துப் பெருங்கோவில்களும், மடங்களும் சுருட்டிக் குவித்து வைத்திருக்கும் மொத்த நிலப்பரப்பு 4 லட்சத்து 78 ஆயிரத்து 957 ஏக்கர், 54 சென்ட் ஆகும்.

கிட்டத்தட்ட 5 லட்சம் ஏக்கர் நிலத்தை இந்த வகையிலேயே இழந்து நிற்கிறது தமிழகம். இதுபற்றி நாம் இப்போது வாய் திறக்கவில்லையெனில் எப்போது வாய் திறக்கப்போகிறோம்? இந்த நிலங்களில் பரவலாக இதையே நம்பி விவசாயம் செய்துவரும் சுமார் ஒரு லட்சம் குத்தகைதாரர்களுக்கு என்னவிதமான பாதுகாப்பு?  இதுமட்டுமா? அறநிலையத்துறை இணையத்தில் இன்னொரு தகவலும் உள்ளது. 33 ஆயிரத்து 627 கிரவுண்ட் மனையடி நிலமும், 20 ஆயிரத்து 46 கட்டிடங்களும் கோவில்களுக்குச் சொந்தமாக உள்ளதாம். இதையும் வாடகைக்கு விட்டிருக்கிறார்களாம்.

நில உச்சவரம்புச் சட்டம் 1962ல் காமராசர் ஆட்சிக் காலத்திலேயே தமிழகத்தில் அமலுக்கு வந்துவிட்டது. ஆனால் 2005 ஆம் ஆண்டு முடிய இங்கே ஒரு லட்சத்து 88 ஆயிரம் ஏக்கர் நிலம் மட்டுமே நில உச்சவரம்புச் சட்டத்தின் அடிப்படையில் மறுவிநியோகம் ஆகியிருக்கிறது. அப்படியென்றால் தமிழகத்தில் இந்த நிலச் சீர்திருத்தம் பெரிய தோல்வியையே சந்தித்திருக்கிறதென்று பொருள். அதாவது, விவசாயக் கூலிகளாக வாழ்க்கை நடத்தும் ஏழைத் தமிழர்களின் கைகளில் சொந்த நிலமில்லாத நிலைமையை, அவர்களின் கைகளில் கொஞ்சமேனும் உபரிப் பணமில்லாத சூழலை நம்மை மாறிமாறி ஆட்சிசெய்த கழக ஆட்சியாளர்களே பரிசளித்திருக்கிறார்கள். இதைச் செய்துவிட்டுத்தான் இலவசங்களுக்குக் கையேந்துபவர்களாகவும் நம்மை ஆக்கியிருக்கிறார்கள். வறுமைக் கோலம் நீடிக்கிற தமிழகத்தில்தான் மடங்களும், கோவில்களும் 5 லட்சம் ஏக்கர் நிலத்தைத் தங்கள் வசம் வைத்திருக்கின்றன. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் வாடிய வள்ளலார் பிறந்த மண்ணில்தான் இந்த நிலை. வர்ணாசிரமத்தை வைரியாக எண்ணிச் சமர்புரிந்த பெரியாரின் பூமியில்தான்  மடங்களின் ராஜியம் தகராத நிலை. 

தமிழகத்தின் முகத்தோற்றத்தை மாற்ற விரும்பும் எல்லோரின் கவனமும் இந்த நிலக்குவியலின் மீது விழட்டும். முறையான நிலச்சீர்திருத்தத்தை இங்கே அமலாக்க மன்னர் மானிய ஒழிப்பைப்போல மடங்களின் சொத்துக்களை அரசு கையகப்படுத்தவேண்டியது காலத்தின் கட்டாயமென்று கருத்தொருமித்துக் குரல் கொடுப்போம்! வாருங்கள் தமிழகத்தின் முற்போக்காளர்களே... ஜனநாயக சிந்தனையாளர்களே... மடமெனும் மடமை நீக்கி தமிழ் நிலத்தைத் தமிழக விவசாயிகளின் வசமாக்குவோம்! இக் கருத்தை முதலில் இன்றே பொது விவாதமாக்குவோம்!

- சோழ.நாகராஜன்

Pin It