புரட்சிகளும் எழுச்சிகளும் சொந்தமாகிவிட்ட இந்த யுகத்தில் ஆய்வுகள் என்பது முக்கிய கருவிகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாழ்வின் ஒவ்வொரு நிமிடங்களையும் நுணுக்கி நோக்கும் தன்மையானது மனிதப் பண்பாட்டின் பல்வேறு வியாக்கியானங்களை முன்வைத்துள்ளன. அந்த வகையில் மொழியமைப்பில் பால்நிலை எனும் எண்ணக்கருவானது சமகாலத்தில் முக்கியம் பெறுகின்றது.

மொழி என்பது சிந்தனைகளின் வெளிப்பாட்டினையும் தொடர்பாடலின் சிறப்பினையும் சிந்தித்து வெளிப்படுத்தும் வகையிலமைந்த திறன்களின் தொகுப்புருவாக்கம் எனலாம். அனுபவம், எண்ணங்கள், உணர்வுகள், சிந்தனைகள், அறிவு, திறன் என்பன பகிரப்ப‌ட மொழி அவசியமாகிறது. மானுடவியலாளர்களான Edward Safir, Benjamin wharf ஆகியோரது நோக்கில் மொழி பேச்சாளரின் யதார்த்தத்தை வடிவமைக்கிறது. இவர்கள் மொழி கருத்துக்களில் செல்வாக்குச் செலுத்தும் விதம் தொடர்பாக அதிக அழுத்தம் கொடுக்கின்றனர்.

பண்பாட்டில் அதிக நெருக்கத்தினை மொழி கொண்டுள்ளது. சமூகவியல் நோக்காளர்களின் ஆய்வில் Eskimos பனியைக் குறிப்பிட சுமார் 20 வகையான சொற்பிரயோகங்களைப் பயன்படுத்துகின்றனர் எனத் தெரியவந்துள்ளது. இவ்வாறே மொழியானது எமது நடத்தையில் செல்வாக்கு செலுத்துகின்றது; சமுக யதார்த்தத்தை தெளிவுபடுத்துகின்றது; ஆனால் அவற்றை நிர்ணயிப்பதில்லை என்கின்றனர். இவ்வாறு பண்பாட்டின் பிரதிபலிப்பை தெளிவுபடுத்தும் மொழியானது பால்நிலை வகிபங்கிலும் தனது அழுத்தத்தைப் பிரயோகித்துள்ளது. மொழிக்கும் பால்நிலைக்கும் இடையிலான உறவு என்பது ஆண்-பெண் பற்றிய பண்பாட்டு நிலைகளினை பிரதிபலிக்கும் கருவியாக தொழிற்படுகிறது. இதனடிப்படையில் சமூகவியலாளர்கள் மொழியினையும் பால்நிலையினையும் இணைபிரியாத அம்சமாக இனங்காண்கின்றனர்.

பொதுவாக பால்நிலை என்பது பண்பாட்டினூடே ஏற்படுத்தப்பட்ட ஆண்-பெண் வைப்பு எனலாம். இது சமுகத்திற்கு சமுகம் வேறுபட்ட வகிபங்குகளை கொண்டுள்ளன. ஏனெனில் பண்பாடு என்பது சமுகங்களின் தனித்துவத்தை விளக்குகின்றன. மொழி, பால்நிலை அடையாளத்தில் மேற்கொள்ளும் செல்வாக்கை நோக்கும்போது, பொதுவான மனிதத்தை வெளிப்படுத்துவதில் ஆண் தன்மைகளே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனூடாக மொழியில் பெண் அலட்சியப்படுத்தப்படுகின்றாள் என ஆங்கில அறிஞர் Basow (1992) குறிப்பிடுகின்றார்.

தொழில் முறைமைகளுக்கான மொழிப்பயன்பாட்டினை நோக்கும்போது Nurces, Secretaries, teachers போன்ற தொழில்முறைச்சொற்கள் ‘she’ பெண் சிந்தனையையும் Engineer,doctor, Electrician,merchant போன்ற பதங்கள் ‘he’ ஆண் சிந்தனைகளினையும் உணரச் செய்கின்றது. (Baron-1986) இங்கு உயர்நிலைத் தன்மைகளின் தொழில்முறை ஆண்களுக்கென்ற தனித்துவத்தை விளக்குவதாகவும் சாதாரணமான தொழில்முறைகள் பெண்களின் உணர்வை விளக்குவதாகவும் குறிப்பிடுகிறார். இங்கு மொழியின் பயன்பாடு தன்மையினைக் கொண்டு நோக்கப்படுகின்றது.

ஆண்களின் வர்ணிப்புச்சொற்கள்; prestige-அந்தஸ்து, power-அதிகாரம், leadership – தலைமைத்துவம் எனும் வகையிலும் பெண்களின் வர்ணிப்பு பாலியல் ரீதியிலான சொற்பிரயோகங்களான Fox, broad, bitch, doll எனும் வகையிலும் அமைந்திருப்பதனை (Barker-1993) சுட்டிக்காட்டுகிறார். இது அந்தஸ்து தகுதிநிலைகளில் ஆண்களின் பங்கே முக்கியப்படுத்துவதை மொழி கற்பிக்கின்றது.

மொழியில் பால்நிலை என்பது இன்றுவரை வாதப்பிரதிவாதங்களுக்கு உட்படுத்தப்ப‌டடு வருகின்றது. தற்போது அவை தனித்துறையாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகின்றது; இத்தன்மையானது பால்நிலையில் மொழிப் பிரதிநிதித்துவத்தை மாற்றியமைக்கக் கூடிய சந்தர்ப்பங்களையும் உருவாக்கியுள்ளன.

இன்று பல நிறுவனங்களும் பொது நிலையங்களும் பால்நிலை வித்தியாசங்களைப் பேண முடியாதவகையில் தொழில் முறைச்சொற்கள் பேணப்பட வேண்டும் என்பதில் நிபந்தனைகளை நிறுவியுள்ளன. அந்த வகையில் chairman எனும் சொல் chair, chairperson எனவும் man working என்பது people working எனவும் police man என்பது police officer எனவும் மாற்றப்பட்டுள்ளது Epstain-1988. சில தொழில் நிலைகள் பால்நிலை வித்தியாசப்படுத்தல் எனும் நிலையில் இருந்து விலகிய மொழிப்பிரயோகங்களினைப் பயன்படுத்துகின்றன. உதாரணமாக fire fighter, Flight attendant என இவற்றின் பட்டியல்கள் நீள்வதாக maggio (1988) குறிப்பிடுகிறார்.

இருந்த போதிலும் சில அறிஞர்கள் இந்த மொழியியல் மாற்றங்களை ஏற்க மறுக்கின்றனர் ஏனெனில் மொழியின் சிறப்பு இழக்கப்படுவதாக வாதிடுகின்றனர் Epstain (1988). ஆயினும் மேற்கத்தேயத்தின் புலமை பெற்ற அறிஞர்கள் பாரியளவிலான நேர்மைத்திறனான சமுதாயம் உருவாக்கப்பட மொழிப்பண்பாட்டில் பால்நிலை எனும் கருத்தேற்றம் நுணுக்கமாக ஆராயப்பட்டு மொழியியல் ரீதியான மாற்றங்கள் அவசியம் ஏற்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிடுகிறார்கள்.

பொதுவான வகையில் நோக்கும்போது பால்நிலை என்பது பண்பாட்டின் மூலம் உருவாக்கப்படும் கருத்தேற்றமாகையால் அது பண்பாட்டின் மூலமே மாற்றப்பட வேண்டும் எனபது புலனாகின்றது. பால்நிலை என்பது ஆண்-பெண் இயல்புகளினை வித்தியாசப்படுத்தி நோக்குவதால் அதன் பாரபட்சமின்றிய தகுதிகளைத் தெளிவுறுத்த வேண்டிய தேவை பாரியளவில் உணரப்பட்டுள்ளதாலும் மொழி விமர்சிக்கப்பட்டு வருவது தடுக்கமுடியாத யதார்த்தமாக அமைந்துவிடுகிறது.

- மு.யா.மின்னதுல் முனவ்வறா, சமூகவியல் விசேடதுறை, தென்கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
 
உசாத்துணை: 

Diana, Kendall (2001),Sociology in our Times, 3rd edition.
‘அகவிழி’ சஞ்சிகை, பங்குனி (2008) ரெக்னோ பிரின்டகொழும்பு

Pin It