(சென்னையில் சனவரி 4, 2012 அன்று நடந்த கவிஞர் தமிழச்சியின் நூல் வெளியீட்டு விழாவில் கேரள எழுத்தாளர் பால் சக்காரியா ஆற்றிய உரை)

தனது புதிய நூலை வெளியிடும் இந்த நல்ல நிகழ்வில் பங்கேற்க என்னை அழைத்த தமிழச்சிக்கு முதலில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு மலையாளியாக நான், அரசியலும் ஊடகங்களும் இணைந்து தமிழர்களையும் கேரளர்களையும் பிரிக்க நினைக்கும் இந்த நேரத்தில், தமிழ்நாட்டில் சென்னையில் இருப்பது குறித்து மகிழ்கிறேன்.

அமைதியாக அறிவியல் முறையில் தொலைநோக்கோடு விவாதிக்கப்பட வேண்டிய ஒரு விசயத்தில் போர் போன்ற ஒரு சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழின் அறிவுஜீவிகள் நிறைந்த இந்த அரங்கில் இருப்பது குறித்து பெருமைப்படுகிறேன்.

கெடு வாய்ப்பாக, அறிவுப்பூர்வமான தீர்வுகளைக் காண வேண்டியவர்கள் முழக்கங்கள் எழுப்புவதில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஒரு குடிமகனாக, ஒரு பொறியியல் கட்டமைப்பான அணையைச் சுற்றிக் கற்பனைக் கதைகளை உருவாக்க முடியாது. இராம் சேது விசயத்தில் கற்பனைக் கதையின் மீது பொறியியலை ஏற்ற சிலர் முயன்றதை விட மோசமானது இது.

இராம் சேது என்பது வெற்றுப் பொய்களை கொண்ட கற்பனைக் கதை என்றால், முல்லைப் பெரியாறு விசயத்தில், அரைகுறை உண்மைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட அச்சமூட்டும் கற்பனைக் கதைகளை ஊடக-அரசியல் கூட்டு மக்களிடம் திணித்துள்ளது.

தனிப்பட்ட முறையில், நாம் அனைத்துப் பெரிய அணைகளுக்கு எதிராகவும் இருக்க வேண்டுமென நான் கருதுகிறேன். அழகான ஆறுகளையும் அவற்றின் இயல்பையும் அவை சிதைக்கின்றன. அதை விட மோசமாக, நிலநடுக்கம் போன்ற சூழல்களில், எந்த ஓர் அணையும் ஒரு வெடிகுண்டுதான். இன்றைய நிலையில், நிலநடுக்கங்களைக் கணிக்கும் எந்தத் தொழில்நுட்பமும் இல்லை.

ஆனால் வரலாற்றுப் பூர்வமாக ஏற்கெனவே ஒரு அணை இருக்குமாயின், அது தனது வேலையைத் திறம்படவும் பாதுகாப்பாகவும் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். ஏனெனில் ஒரு முழு மனித நாகரிகமும் அது அளிக்கும் நீரை மய்யமாக வைத்து உருவாகியிருக்கிறது. ஆனால் அதே நேரத்தில், அனைத்து உயிர்ப்பான இயக்கங்களும் அணையின் கீழ்ப் பக்கமாகவே இருப்பதால் அவற்றின் பாதுகாப்பும் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.

அரசியல், ஊடகங்கள் ஆகியவற்றின் உள்நோக்கம் கொண்ட தன் நலன்களுக்கு இடையே, அடிப்படையான வெளிப்படையான உண்மைகளும், அறிவியல்பூர்வமான தீர்வுகளும் குழப்பப்பட்டுள்ளன. இதுதான் நம் காலத்திய சோகம்.

கடந்த வாரம் நானும் எனது நண்பரும் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள அச்சன்கோயிலில் சென்று கொண்டிருந்தோம். அங்கு செல்ல நாங்கள் தமிழ்நாட்டைக் கடந்து பின்னர் மீண்டும் கேரளத்திற்கு செல்ல வேண்டும்.

கேரள பதிவு எண்களுடன் தமிழ்நாட்டிற்குள் நுழைவது ஆபத்து என பல இடங்களில் எங்களுக்கு எச்சரிக்கப்பட்டது. இந்தப் பகுதிகளில் அடிக்கடி பயணம் செய்யும் என்னுடைய நண்பர், அவர்கள் அவ்வாறு சொல்வதைத் தம்மால் நம்பவே முடியவில்லை எனக் கண்ணீருடன் கூறினார்.

தமிழர்களும் மலையாளிகளும் உடன்பிறப்புகள், நண்பர்கள் - எதிரிகள் அல்ல - என தனது வாழ்நாள் முழுவதும் தான் மிக இயல்பாக நம்பிய ஒன்றிற்கு நேர் எதிரான கொடூரத்தை முதல் முறையாக அவர் எதிர்கொண்டார்.

நாங்கள் தொடர்ந்து சென்றோம். எங்களுக்கு எதுவும் நடக்கவில்லை. ஆனால் உருவாக்கப்பட்டிருந்த உளவியல் மிகவும் சோர்வளிப்பதாகவும் அதிர்ச்சியூட்டுவதாகவும் இருந்தது. இது போன்ற இக்கட்டான தருணத்தில் தான் கேரளத்திற்கும் சென்னை மாநகருக்கும் இடையே நிலவிய கலாச்சார இணைப்புகளை எண்ணிப்பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

எங்களுடைய மிகச் சிறந்த படங்கள் இங்குத்தான் எடுக்கப்பட்டன; எங்களுடைய திரை இசையும் இங்குதான் பிறந்தது. கேரளத் திரைப் படைப்பாளிகள் சென்னையைத் தங்களுடைய சொந்த ஊராக நினைத்தார்கள்; இப்போதும் நினைக்கிறார்கள். கோடம்பாக்கம் என்பது எங்களுக்குத் தாரவாட்டைப் போன்றது (தாரவாடு – மலையாள நாயர்களின் கூட்டுக் குடும்ப வாழ்வைக் குறிக்கிறது). தீய உள்ளம் படைத்த சிலர் நம்மிடையே உருவாக்கியிருக்கும் பகைமை உணர்ச்சியால் இவையெல்லாம் காணாமல் போய்விடுமோ என்னும் நிலையிலேயே நான் இவற்றையெல்லாம் குறிப்பிடுகிறேன்.

ஓர் எழுத்தாளனாக என்னைப் பொருத்தவரை சென்னை என்பது மலையாளத்தின் மிகச் சிறந்த இலக்கியத் தளம் ஆகும்.

சென்னையில் இருந்து 1950களில் தொடங்கப்பட்ட ‘ஜெய கேரளம்’ என்னும் இலக்கிய இதழ் - எம்டி வாசுதேவன் நாயர், வைக்கம் முகம்மது பஷீர் போன்ற பெரிய எழுத்தாளர்களை நவீன தலைமுறைக்கு உருவாக்கித் தந்தது என்று சொல்லலாம். தொடக்கக் கால முற்போக்கு இதழ்களுள் ஒன்றான ‘ஜெய கேரளத்திற்கு’ச் சென்னை தான் இடம் அளித்தது.

இதே சென்னையில் தான் மலையாளத்தின் சிறந்த முற்போக்கு ஆர்வலர் எம்.கோவிந்தன் பல்லாண்டுகள் வாழ்ந்து வந்தார். அவர் வெளியிட்ட ‘சமீக்சா’ என்னும் இலக்கிய இதழுக்கு இணையாக இன்னோர் இதழை என்னால் கூற முடியாது. அக்காலத்தில் வெளிவந்த செல்வாக்கு மிகுந்த அறிவுசார் இதழாக அது திகழ்ந்தது. இன்னும் சொல்லப் போனால் கோவிந்தன், தமிழ் இலக்கியத்திற்கும் மலையாள இலக்கியத்திற்கும் இணைப்பை ஏற்படுத்தும் பாலத்தை உருவாக்க முயன்று பணியாற்றினார். ‘77 பி, ஹாரிஸ் சாலை, சென்னை’ என்னும் அவருடைய முகவரி மலையாள இலக்கியத்தின் முற்போக்குச் சிந்தனையில் இணைந்து கொண்ட எவருக்கும் மனப்பாடமாகத் தெரியும்.

சுந்தர ராமசாமியின் ‘ஜேஜே சில குறிப்புகள்’ புத்தகத்தின் மலையாள மொழிபெயர்ப்பைத் தூக்கிக் கொண்டு மலையாள வெளியீட்டாளர்களை அவர் தேடித் திரிந்ததை எல்லாம் என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது. பின்னர் கோவிந்தன் அவர்கள் கேரளத்திற்குத் திரும்பிப் பொதுவுடைமைவாதிகளைத் துகில் உரித்துக் காட்டியதால் ஓரங்கட்டப்பட்டு ஒழிக்கப்பட்டார். அவர் இருந்த சென்னை, என்னைப் போன்றவர்களுக்கு ஓர் இலக்கியத் “தரவா”டாகவே இருந்தது.

நிறைவாக நான் குறிப்பிட விரும்பும் இன்னொரு பெயர் டிவி குன்னிகிருஷ்ணன். இவரை மலையாள இலக்கிய உலகமே ஏறத்தாழ மறந்து விட்டது என்றே சொல்லலாம். 1960களில் இவர் தென்னக மொழிகள் புத்தக அறக்கட்டளை (‘Southeren Languages Book Trust’)யின் ஆசிரியராக இருந்தார். தேடல் என்னும் பொருள் தரும் ‘அன்வேசனம்’ என்னும் பெயரில் மிகச் சிறந்த மலையாள இலக்கிய இதழ் ஒன்றைக் குன்னிகிருஷ்ணன் நடத்தி வந்தார்.

‘அன்வேசனம்’ தான் மலையாள எழுத்துலகில் புதுமைப் போக்கைக் கொண்டுவந்தது. இப்படிப் பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருந்த அன்வேசனமும் சென்னையில் இருந்து தான் வெளிவந்தது என்பது தான் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

குன்னிகிருஷ்ணன் பின் நாட்களில் சென்னையில் இருந்து தில்லிக்கு வந்த போது நான் அவரை நண்பராகவும் வழிகாட்டியாகவும் கொண்டேன்.

இப்படிப்பட்ட வரலாற்றுப் பின்னணி கொண்ட நிகழ்வுகளை எல்லாம் எண்ணிக்கொண்டு புகழ்பெற்ற எழுத்தாளரும் என்னுடைய நண்பருமாகிய தமிழச்சியின் கவிதைப் புத்தக வெளியீட்டு விழாவிற்கு அழைக்கப்பட்டதையும் நினைத்துப் பெருமைப்படுகிறேன் .

எனக்குத் தமிழ் அவ்வளவாகத் தெரியாது. தமிழச்சியின் கவிதைகளைக் கூட என்னால் தமிழில் படிக்க முடியாது. இதே நிலை தான் தமிழச்சிக்கும்! அவராலும் என்னுடைய கதைகளை மலையாளத்தில் படிக்க முடியாது.

இதுதான் இந்தியர்களுக்கு ‘சவாலா’ன, அதே நேரம் விருப்பமான ஒன்று! இருபத்து மூன்றோ அதற்கும் அதிகமாகவோ மொழிகளைக் கொண்டிருந்தும் ஒருவருடைய படைப்புகளை மொழிபெயர்ப்பின் துணையின்றி மற்றொருவர் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் ஒரே நாடாக நாம் உணர்கிறோம். அதற்கு வெளிநாட்டு மொழியாக ஆங்கிலம் நமக்குத் துணை நிற்கிறது. வெளிப்படையாகச் சொல்வதானால் ஆங்கிலத்தை என்னால் வெளிநாட்டு மொழியாக நினைக்கவே முடியவில்லை. ஒரு வெளிநாட்டு மொழி இந்தியாவில் மறுபிறவி எடுத்து இந்தியக்குடிமகனாக மாறிவிட்டது என்றே சொல்லலாம்.

23 மொழிப் பண்பாட்டை உடைய நாம் ஒன்றாக வாழ்கிறோம்; வேலை பார்க்கிறோம் என்பதே ஒரே மொழிப் பண்பாட்டை உடைய மேலை நாட்டு மக்களுக்கு நம்ப முடியாத ஒன்றாகத் தான் இருக்கிறது. இங்கே ஒரே இந்தியப் பண்பாடு தான் இருக்கிறது என்றும் ஒரே இந்திய இலக்கியம் தான், ஒரே இந்திய மொழி தான் என்றும் சிலர் சொல்லும் போது தான் நமக்குள் சிக்கல் ஏற்படுகிறது.

என்னிடம் வரும் சிலர் இந்திய இலக்கியம் என்று கேட்கும் போது நான் ‘இந்திய இலக்கியத்தை’ப் பற்றி இல்லை, ‘இந்திய இலக்கியங்களை’ என்று பன்மையில் கேளுங்கள்’ என்று எப்போதுமே திருத்தித் தான் சொல்கிறேன். இங்கு எத்தனை இந்திய மொழிகள் இருக்கின்றனவோ அத்தனை இந்திய இலக்கியங்கள் இருக்கின்றன. அவை தாம் இந்திய எழுத்தாளராக இருப்பதில் சிறப்பைத் தருவன.

நான் தமிழச்சியைத் தமிழில் எழுதும் ஓர் இந்திய எழுத்தாளராகப் பார்க்கின்றேன். தில்லியில் நடந்த ஓர் இலக்கியக் கூட்டத்தில் தமிழச்சி தம்முடைய கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பை வாசித்த போது தான் அவருடைய கவிதைகளை முதன்முதலில் கவனித்தேன். பின்னர் அவருடைய கவிதைகள் சிலவற்றின் மொழிபெயர்ப்பை வாசித்தேன். அவை மிகச்சிறப்பாக இருந்தன.

நான் ஓர் இலக்கியத் திறனாய்வாளன் இல்லை; ஓர் எழுத்தாளன் அவ்வளவுதான்! அதனால் என்னுடைய கருத்துகளைச் சரியான வார்த்தைகளில் சொல்ல முடியுமா என்று கூட எனக்குத் தெரியவில்லை.
தமிழச்சியின் கவிதைகள் இலக்கியத் தரத்திலும் உணர்வுகளை வெளிப்படுத்துவதிலும் கற்பனைகளைக் கொண்டுவருவதிலும் சிறப்பாக இருப்பதாக நான் உணர்கிறேன். அவருடைய கவிதைகள் கொண்டிருக்கும் வினாக்கள் சிறப்பானவை.

மாய வார்த்தைகளைக் கொண்டுத் தான் கவிதை படைக்க வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. என் குருமார் நடுநிலையாக நின்று உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதை எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். தமிழச்சிக்கும் அதே வழியை அவருடைய வழிகாட்டிகள் சொல்லியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

இப்போது வருகின்ற தமிழ்க்கவிதைகளில் புதுக்கவிஞர்கள் அழுகையையும் சோகத்தையும் வெற்றுச் சத்தங்களையும் களிவெறியையும் மட்டுமே ஊட்டாமல் சொல்ல வரும் கருத்துகளில் கவனமாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட கவிதைகளை நான் படித்திருக்கிறேன்.

மலையாளத்திலும் புதிய இளைய கவிஞர்கள் இதே போல் தான் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியைத் தருகிறது. தொலைக்காட்சித் தொடர்களைப் போல் நீட்டி இழுக்காமல் அவர்களால் சுருக்கமாகத் தங்களை வெளிப்படுத்த முடிகிறது. சொல்லப்போனால் அப்படிப்பட்டவர்களால் தாம் இன்றைய மலையாள இலக்கியம் நிலைத்து நிற்கிறது.

இன்றைய தமிழ் எழுத்தில் பொதுவாக நல்ல பல மாற்றங்கள் நடந்து வருவதை நான் கவனித்து வருகிறேன். அம்மாற்றங்கள் சில சமயங்களில் வெளிப்படையானவையாகவும் சில சமயங்களில் மறைபொருளாகவும் அமைந்து பழைய தூர்ந்து போன வழக்கங்களை மாற்றி வருகின்றன.

வெளிப்படையான, துணிச்சலான மனப்பாங்கு இப்போது வளர்ந்திருக்கிறது. தமிழச்சியின் பெண்ணியம் சார்ந்த படைப்புகள் அம்மனப்பாங்கிற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. பிறவிக்குறையாக ஆணாதிக்கச் சமூகமாக விளங்குகின்ற இந்தியா போன்ற சமூகத்தில் பெண்ணியத்தின் எப்படிப்பட்ட வடிவமும் பொருள் நிறைந்தது தான்; வரவேற்கத்தகுந்தது தான்!

ஏனென்றால் இந்திய மரபின் பிற்போக்கான, பாசாங்குத்தனமான, அதிகாரவய, வரட்டு மதிப்பீடுகளே இங்கு மதங்களையும் மொழிகளையும் இடங்களையும் தாண்டிப் பெண்களின் மனப்பாங்கைக் கட்டமைத்து வந்திருக்கின்றன. பாசாங்கு மனப்பான்மையை வெளிப்படுத்தும் கேரளத்தில் இருந்து வந்திருக்கும் நான் இதை நன்றாக அறிவேன்.

இலக்கியத்திலும் மதத்திலும் பெண்களைத் தாய் என்றும் பாசம் மிகுந்தவள் என்றும் இன்னும் ஒரு படி மேல் போய்க் கடவுள் என்றும் விவரிக்கிறார்கள். ஆனால் நடைமுறையோ முற்றிலும் வேறு; தாய், பாசம் மிகுந்தவள், கடவுள் என்பதெல்லாம் பாடப்புத்தகங்களோடு சரி! ஒரு பாட்டி கூட இருட்டிய பிறகு கேரளத்தில் தனியாக நடந்து செல்ல முடியாது.

ஒரு பெண் இருட்டில் தனியாக நடந்து சென்றால் மிக மோசமாக நடத்தப்படுவாள்; வன்புணர்ச்சி கூடச் செய்யப்படலாம்; அப்போது அப்பெண் யாருடைய தாய், யாருக்குப் பாசமானவள், யாருடைய கடவுள் என்பதெல்லாம் பற்றிக் கவலையில்லை. நம்முடைய ஆண் கடவுள்கள் பலருக்குப் பெண் மோகம் இருக்கும் போது இருட்டில் எப்படி அவர்கள் தனியாகச் செல்ல முடியும்?

தமிழகத்தில் இப்படிப்பட்ட சூழல் தான் நிலவுகிறதா என்று எனக்குத் தெரியாது; ஆனால் இப்படிப்பட்ட நிலை வந்து விடக்கூடாது. கெடுவாய்ப்பாக, ஒரு மலையாள ஆணுக்கு, அவன் இந்துவாக இருந்தாலும் கிறித்தவனாக இருந்தாலும் முஸ்லீமாக இருந்தாலும் காங்கிரசில் இருந்தாலும் கம்யூனிஸ்டாக இருந்தாலும் சங்கப் பரிவாரத்தில் இருந்தாலும் கடவுள் பெண்ணைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கச் செய்திருப்பதாக இங்குள்ள மரபு சொல்லிக் கொடுத்திருக்கிறது. அதாவது பெண் ஆணின் நுகர்பொருள்களுள் ஒன்று – அவ்வளவுதான்! உண்மை என்னவென்றால் நம்முடைய மரபிலேயே பெண் மோகம் என்னும் ஆழமான நஞ்சு கலந்துவிட்டது.

இதற்காக யாரையும் குறை சொல்ல முடியாது. சிக்கல் நம்மிடம் தான் இருக்கிறது. நமக்கு இன்று தெரிய வரும் பலவற்றைப் பழங்கால மக்கள் அறிந்திருக்கவில்லை. இதை உணராமல் அம்மக்கள் சொல்லிவைத்தவை பழமையானவையாகவும் மதத்துடன் தொடர்புடையனவாகவும் இருந்த ஒரே காரணத்திற்காக நாம் அவர்களுடைய அறிவைத் துதிக்கத் தொடங்கிவிட்டோம்.

மனிதன் தன்னைக் கண்டறிந்து கொண்டிருந்த காலத்தில் அதாவது 2000, 3000 ஆண்டுகளுக்கு முன் எழுதி வைத்தவை அக்காலத்தைப் பொருத்தவரை வியப்புக்குரியவை தாம்! அவற்றை நாம் புனித நூல்; கடவுளின் வார்த்தை என்று சொல்லத்தொடங்கி விட்டோம்.

நல்வாய்ப்பாக ஹிட்லர் போரில் வெல்லவும் இல்லை; மதம் ஒன்றை உருவாக்கவும் இல்லை; அப்படி ஏதாவது நடந்திருந்தால் ‘மெயின்காம்ப்’ இன்று ஒரு புனித நூல் ஆகியிருக்கும்.
அக்காலத்தில் வந்த புத்தகங்கள் சில புதிய செய்திகளைக் கூறின; அம்மக்களை மாற்றச் செய்தன என்பதெல்லாம் உண்மைதான்! அவை அக்காலத்திற்குச் சாலப் பொருந்தியவை. அவற்றில் உலகத்திற்கே சேதி சொல்லும் சில புதுமைகள் முதல்முறையாகக் கேட்கப்பட்டன. எடுத்துக்காட்டாக இயேசு கிறித்து தம்முடைய காலத்தில் குறிப்பிடத்தகுந்த ஒரு புரட்சியாளராக இருந்தார்; சொல்லப்போனால் இன்றும் அப்படித்தான் இருக்கிறார். ஆனால் அவரும் ‘பூமி தட்டையானது’ என்பதையும் மேகங்களுக்கு மேல் இருக்கும் சொர்க்கத்தில் கடவுள் தம்முடைய தேவதைகளுடன் இருப்பதாக நம்பத்தான் செய்தார்.

சில பேர் அக்காலக் கருத்துகளை எதிர் கேள்வி கேட்கக் கூடாது என்று சொன்னது தான் நம்மிடம் உள்ள சிக்கலே! இது கடவுளின் வார்த்தை, அதைக் கேள்வி கேட்கக்கூடாது என்றெல்லாம் அவர்கள் கூறுகிறார்கள்.

கடவுளுடைய வார்த்தையாகத் தான் இருந்தால் என்ன? கடவுள் ‘என்னை யாரும் கேள்வி கேட்கக்கூடாது’ என்று எங்காவது சொல்லியிருக்கிறாரா? உண்மையில் பழைய கடவுள்களையும் பழைய நம்பிக்கைகளையும் கேள்வி கேட்டவர்கள் தாம் கடவுள் நிலையை அடைந்திருக்கிறார்கள்; அவர்களைத் தாம் இங்குள்ளவர்கள் கடவுள் நிலையை அடைந்தவர்கள் என்று சொல்லி வழிபடுகிறார்கள். புத்தர், கீதையை எழுதிய கண்ணன், இயேசு, முகம்மது நபி என்று எடுத்துக்காட்டுகளை அடுக்கலாம்.

என்னைப் பொருத்தவரை எல்லாப் புத்தகங்களும் புனிதமானவை தாம்! கழிவான புத்தகங்கள் கூட! ஏனென்றால் கடவுள் எல்லாரிடமும் இருப்பது உண்மையென்றால் கழிவான புத்தகத்தை எழுதியவரிடமும் அவர் பேசுவார் அல்லவா! எல்லாப் புனித புத்தகங்களையும் நாம் திறந்த மனத்துடன், திறனாய்வுக் கண்ணோட்டத்துடன், கேள்விகளுடன் அணுக வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஆனால் இந்தியர்களுக்கு மரபைக் கண்மூடித்தனமாக வழிபடும் ‘திறமை’ பொதுவாகவே இருக்கிறது. தொன்மக்கதைகளை எல்லாம் வரலாறாக மாற்றிடும் திறமையும் நம்மிடம் இருக்கிறது. நம்முடைய மரபுகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு பயன்படுத்தப்பட்டால் நாம் உருவாக்கியிருக்கும் ‘பூதம்’ நம்மையே என்றாவது ஒருநாள் விழுங்கி விடும் என்று தான் ஓர் எழுத்தாளனாக நான் நினைக்கிறேன்.

பொறுப்புள்ள ஓர் எழுத்தாளர் இம்மரபைத் தெளிவாகத் தேர்ந்தெடுத்தும் நுண்ணறிவுடனும் வெளிப்படுத்துவார். அவர் மரபைக் கையாளும் அளவு தெரிந்து பயன்படுத்துவார்.

மரபு என்பது நல்ல எரு போன்றது. அந்த உரம் மிகச்சிறந்த கனிகளையும் மரங்களையும் கொடுக்கும். ஆனால் அதற்காக கெடுநாற்றம் வீசும் எருவைக் கையில் வைத்துக் கொண்டு “இதைப் பாருங்கள்! எண்ணற்ற கனிகளும் மலர்களும் இதில் மறைந்திருக்கின்றன” என்று சொல்ல முடியுமா? எரு இருக்க வேண்டிய இடம் செடியின் வேர்ப்பகுதியில்! மண்ணுக்குள்!

தமிழ்நாட்டைப் பற்றி எனக்குத் தெரியாது. கேரளத்தில் எருவைச் செடியின் உச்சியில் வைத்து வழிபடும் மரபு இருக்கிறது.

நம்முடைய மனநிலை திருத்தவே முடியாத இறுக்கத்திற்கு ஆட்பட்டிருப்பதால் தான் இப்படி எல்லாம் நடப்பதாக நான் நினைக்கின்றேன். வெளியே நீங்கள் பெரிய புரட்சியாளராக இருக்கலாம்; ஆனால் உங்கள் அடி மனத்தில் நீங்கள் அழுகிய இறுக்கத்தைக் கொண்டிருக்கும் ஒருவர் தாம்!

கொண்டாடப்படும் அறிவாளியாக நீங்கள் இருக்கலாம். ஆனால் உள்மனத்தைப் பொருத்தவரை குருட்டு மனநிலை கொண்டவராகவும் சாதீய உணர்வுகளைக் கொண்டவராகவும் தாம் இருக்கிறீர்கள். மதக் கோட்பாடுகளைச் சிந்திக்காமல் குருட்டுத்தனமாக ஏற்றுக்கொள்வதில் இருந்து தான் இந்தக் குருட்டு மரபு மலையாளத்தில் வந்திருக்கிறது.

எழுத்தாளர்கள் பலருக்கு இலக்கிய மரபை மத மரபிலிருந்து பிரித்தெடுக்கத் தெரியவில்லை. பிறந்ததில் இருந்தே நம்மிடம் ஊருடுவிக் காணப்படும் மதம் தான் ‘காலனி’யாதிக்கத்தின் மிகப்பழமையான வடிவம் என்பதே அவர்களுக்குத் தெரிவதில்லை. மதங்களின் சூழ்ச்சிகள் பற்றிய விழிப்புணர்வில் மார்க்சிஸ்டுகள் கூடப் போதுமான அளவு முன்னேறவில்லை. இந்த எழுத்தாளர்களுக்குத் தாங்கள் அடிமையாக்கப்பட்டிருக்கிறோம் என்பது கூடத் தெரியவில்லை; இல்லை அடிமையாக இருப்பதையே சுகமாக நினைக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
 
மதக் கட்டமைப்புகளின் குருட்டுக் கற்பிதங்களால் மலையாளத்தின் புதுமையான பல படைப்புகள் வெளியிலேயே தெரியாமல் புதைக்கப்பட்டுவிட்டன. மதங்களின் வரலாறு என்பது பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளைக் குருதியில் குளிக்க வைத்த வரலாறு தான் என்பதை அவர்களுடைய நினைவில் இல்லை. இவ்வுலகத்தில் ஒன்றும் அறியாத மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுவதற்குக் காரணம் அரசியல் போர்கள் அல்ல; மதக் கலவரங்களே! என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட மதங்களைக் கேள்வி கேட்காமல் எப்படிக் கற்பனை செய்ய முடியும்? அதிலும் குருட்டுத்தனமான பிடிவாதத்துடன் வாதத்திற்கே ஏற்றுக்கொள்ள முடியாத அளவு மதங்களைக் கற்பனை செய்ய முடியுமா?

மதங்களின் குருதி தாங்கிய வரலாற்றையும் குருட்டு நம்பிக்கைகள் கொண்ட நச்சையும் வெறுப்பையும் பிறழ்நெறிகளையும் உரிய முறையில் ஆராயாமல் மதக் கற்பனைகளைக் கூறும் ஓர் எழுத்தாளர் தம்முடைய வாசகர்களின் நம்பிக்கைக்கு ஊறு விளைவிப்பதாகவே நான் நினைக்கிறேன். இப்படி மூளைச் சலவைக்கு உள்ளான வாசகர்களுக்கு மதக் கோட்பாடுகள் தாங்கிய குருதிச் சாயம் படிந்த கூறுகளைத் தன்னலத்துடன் கூறி அவர்களை மேலும் தவறான வழியில் வழிநடத்தி விடுகிறார்.

மத அடிப்படைவாதம் மட்டும் தான் குருதி படிந்த வரலாற்றைக் கொண்டிருப்பதாக நாம் இதுவரை தவறாக நினைத்துக் கொண்டிருந்திருக்கிறோம். அடிப்படைவாதம் மட்டும் இல்லை, மதத்தின் ஒட்டு மொத்த வரலாறே குருதிக் கோடு படிந்தது தான்! அப்படியில்லை என்று நாம் இதுவரை பாசாங்கு செய்து வந்திருக்கிறோம்.

மிகவும் சிக்கலான செய்திகள் என்று சிலரால் சொல்லப்படும் இத்தகைய செய்திகளுக்குள் நுழைந்து விட்டதற்காக நான் வருந்துகிறேன். ஆனால் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் இவை இன்றியமையாத செய்திகள் என்றே நான் நம்புகிறேன். அதிலும் குறிப்பாக, எழுத்தாளர்களையும் அறிவுசார் சமூகத்தையும் மதிக்கின்ற நம்மைப் போன்ற சமுதாயத்தில் இது தேவையான ஒன்று தான்!

இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு என்னை அழைத்துப் பெருமைப்படுத்திய தமிழச்சி அவர்களுக்கு நன்றி கூறி என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன். தன்னலம் கொண்ட சிலரால் சில சிக்கல்கள் உச்சத்தைத் தொட்டிருக்கும் இந்தச் சூழலில் அவர் என்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பைத் தந்திருக்கிறார்.

இதுவரை பொறுமை காத்ததற்கு மிக்க நன்றி! நல்ல காலம் விரைவில் வரும்; நாம் அனைவரும் உடன்பிறப்புகளாகவே இருக்கிறோம்.

மொழிபெயர்ப்பு: பூங்குழலி, முத்துக்குட்டி

Pin It