கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கே போராடும் மக்களை சிறுமைப்படுத்தும் விதமாக அவர்களை வழி நடத்துபவர்கள் மீது வீண் பழி சுமத்தப்படுகின்றன. உண்ணாவிரதமே நடைபெறவில்லை என ஒரு சிலரும், அணுமின் நிலையம் அமைய வேண்டும் என சில குழுக்களும் வாதங்களைத் தொடர்ந்து வருகின்றனர். போராடும் மக்களின் கருத்துக்களை உதாசீனம் செய்துவிட்டு, மேம்போக்காக தனி நபர்களுக்கு எதிராகவும், தனி அமைப்புகளுக்கு எதிராகவும் களமிறங்கி மக்களுக்கிடையே பிளவு ஏற்படுத்த இத்தகைய புல்லுருவிகள் முயலுகின்றனர். பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காணாமல், காலந்தாழ்த்தியே பழகிப்போன மத்திய அரசும், மக்கள் நலனில் அக்கறையின்றி எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

அணுமின் நிலையத்திற்கு எதிரான சில முக்கிய கருத்துக்களுக்கு யாராலும் விடை காண முடியாது என்பதே நிதர்சன உண்மை. நாம் எத்தகைய பாதுகாப்பு வளையத்தை ஏற்ப்படுத்தினாலும், இயற்கை சீற்றத்திற்கு அதனால் ஈடு கொடுக்க இயலாது. இந்த அடிப்படையை நாம் காலம் காலமாக அனுபவித்து வருகிறோம். இந்த நிலையில் அணுமின் நிலையத்தில் ஏற்படுகிற பாதிப்புகள் ஏதோ நம் வாழ்நாளில் நமக்கு மட்டுமே நிகழப் போவதில்லை. அது நமது உடலின் நுண் செல்களில் குடி கொண்டு, நம் சந்ததியினரையும் தொடர்ந்து காயப்படுத்திக் கொண்டிருக்கும். அதை உணர்த்துவதற்காகவே, பிறந்து சில நாட்களே ஆன குழந்தைகளோடு தாய்மார்களும் போராட்ட களத்தில் முன் நிற்கின்றனர்.

இயற்கை சீற்றங்களை விடுங்கள்! மனித தவறுகள், இந்திய திருநாட்டில் சர்வ சகஜமாக நடைபெறும் ஒரு நிகழ்வு என்பதை நாம் எத்தனை முறை கண்டிருக்கிறோம்? போபால் விச‌ வாயு விபத்து நடந்து கால் நூற்றாண்டு ஆன பிறகும், தவறு செய்தவர்களை நம் ஜனநாயகத்தால் என்ன செய்ய முடிந்தது? அமெரிக்காவில் முக்கிய குற்றவாளியான ஆண்டர்சன் உல்லாசமாக பொழுதைக் கழித்துக்கொண்டு, முதியவராகி வாழ்நாளை முடித்துக் கொள்ளும் வயதில் இருக்கிறார். அவரை பாதுகாப்பாக அனுப்பி வைத்த இந்திய அரசு, அமெரிக்காவால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை எனக் கூறியே நம் காதில் பூ சுற்றிக் கொண்டிருக்கிறது. அப்பாவி பொது மக்களோ நிவாரணம் போதவில்லை, மருத்துவ வசதிகளில் குறைபாடு எனக் கூப்பாடு போட்டுக்கொண்டே வாழ்க்கையை வலியுடன் தொடர்கின்றனர். யாரைப் பாதித்தது அந்த விபத்து? ஊனமுற்ற குழந்தைகள் இந்த மண்ணில் இன்னும் பிறந்து கொண்டிருப்பதை அணுமின் நிலையத்திற்கு ஆதரவு கூறும் எவராவது மறுக்க முடியுமா? மெத்தில் ஐசோ சயனைடு வாயுவினாலேயே இந்த கொடுமை எனில், கதிரியக்கக் கசிவுகளும், அதன் கழிவுப் பொருட்களும் எத்தகைய பாரிய விளைவை நமக்கு ஏற்படுத்தும் என்பதை நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது. போபால் குடும்பங்களின் சோகத்தை, ஆழப் பதிந்துவிட்ட வடுக்களைப் பார்த்தாவது நாம் திருந்த வேண்டாமா?

அதுவும் போகட்டும்! அணுமின் நிலையத்தில் விபத்து நடந்தால், அதற்கு நிவாரணம் கொடுக்க நாங்கள் தயாரில்லை என சவடால் பேசும் பன்னாட்டு நிறுவனங்களிடம், நம் வெட்கங் கேட்ட அரசு மண்டியிட்டு சொல்வது என்ன தெரியுமா? "அதனால் என்ன, பரவாயில்லை, நாங்களே கொடுத்துக் கொள்கிறோம்", என்று. நர்மதா அணைப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை கூட தெரியாத அரசு நிர்வாகத்தின், இந்த அவலட்சணமான பதிலிலேயே அடங்கியுள்ள பொறுப்பற்றத்தனத்தை நாம் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறோம்?

தன் மக்கள் மீது பரிவு கொண்ட ஜெர்மனி போன்ற அரசுகள், தற்போது உள்ள அணுமின் நிலையங்களை விரைவில் மூடி விட முழு மனதுடன் ஆயத்தமாகி விட்டன. மின் பற்றாக்குறையை எப்படித்தான் போக்குவது என்ற வாதமும் நிர்மூலமாகி விட்டது. பெரும் செலவு செய்து அதிகபட்சம் 12 சதவீத மின் உற்பத்தியை அடைவதை விட சூரிய ஒளி, காற்று, நீர் போன்றவற்றின் மூலம் மின் ஆற்றலை திறம்பட நம்மால் உருவாக்கிக் கொள்ள முடியும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

எனவே பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு, மக்களுக்கு தீமை தரும் திட்டங்களை நிறைவேற்ற யாரும் ஆதரவு திரட்ட வேண்டாம். அணுமின் நிலையப் பணியாளர்களின் திறமைகளுக்கு ஏற்ப, ஏதுவான பணிகளில் அவர்களை அரசு நியமிக்கட்டும். கட்டி முடிக்கப்பட்டவை ஒரு வரலாற்றுச் சுவடாகவே இருக்கட்டும். மனித குல நாசகார திட்டங்களை நாம் நினைக்கவே கூடாது என்ற பாடத்தை அது நம் சந்ததியினருக்கு சொல்லிக் கொண்டிருக்கும்!!

Pin It