அனுப்புநர்

மருத்துவர் வி. புகழேந்தி M.B.B.S.,

1/187, முதலியார் தெரு,

சத்ரசு, காஞ்சிபுரம் மாவட்டம் – 603102

பேசி: 8870578769

 பெறுநர்

குடியரசின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும்

 மதிப்பிற்குரியவர்களே,

 பொருள்: கல்பாக்கம் அணுமின் நிலையத்தைச் சுற்றி அணுக்கதிர் வீச்சினால் ஏற்படும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வரும் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் கூறி என்னுடைய பணியைத் தடுப்பது பற்றி..

 நான்  ஒரு மருத்துவராக (M.B.B.S.,) கல்பாக்கம் அணுமின்நிலையத்தின் அருகில் உள்ள சத்ரசு கிராமத்தில் 1989ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறேன்.     மதுரை மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவப்படிப்பு படித்தபோது தங்கப் பதக்கம் வென்ற மாணவன் நான்.  கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்னும் ஒரே காரணத்திற்காக மேற்கொண்டு மேல்படிப்புக்கு நான் விண்ணப்பிக்கவில்லை.  கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் என்னுடைய நண்பர்கள் பலர் அப்போது வேலை செய்து வந்ததால் கல்பாக்கத்துக்குப் பக்கத்தில் உள்ள சத்ரசு என்னும் இடத்தைத் தேர்ந்தெடுத்தேன்.

Pugazhendi1989 ஆம் ஆண்டு முதல் 2000ஆவது ஆண்டு வரை அப்பகுதியில் உள்ள தலித்துகளுக்கும் மீனவர்களுக்கும் தொண்டுசெய்வதையே முதல் குறிக்கோளாகக் கொண்டு நான் பணியாற்றி வந்தேன்.  மக்களின் உடல் நலத்தைப் பேணுவதில் அதிக ஆர்வம் காட்டி வந்த நான், மக்களுக்கு அடிக்கடி ஏற்படும் நோய்களுக்கு மிகக் குறைந்த செலவில் சிகிச்சை அளிக்கும் புதிய முறைகள் பலவற்றைக் கண்டறிந்து செய்து வந்தேன்.  இம்முறைகள் பற்றி பல இதழ்களில் நான் எழுதி வந்திருக்கிறேன்.  இவற்றைப் பற்றிப் புத்தகங்களும் வெளியிட்டிருக்கிறேன்.  இவற்றை எல்லாம் அறிந்த உள்ளூர் ஊடகங்களும் தேசிய அளவிலான ஊடகங்களும் பல முறை என்னுடைய நேர்காணல்களை வெளியிட்டிருக்கிறார்கள்.  முதலுறு வேக உற்பத்தி உலை('Prototype Fast Breeder Reactor')யை இங்கு தொடங்குவதற்கு முன் 2001ஆம் ஆண்டு சூலை 27ஆம் நாள் மக்கள் கலந்தாய்வுக்கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.  இதனையொட்டி 2001 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில்  ஆங்கில இதழான ‘அவுட்லுக்’, எங்கள் பகுதியில் மிகைவிரல் நோய் ('Polydactyl') (கை, கால் ஆகியவற்றில் ஐந்து விரலுக்கும் அதிகமாக விரல்கள் கொண்டிருப்பது) இருப்பது பற்றி கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. 

இப்பகுதி மக்களுக்குக் கதிர்வீச்சால் ஏற்படும் விளைவுகள் பற்றிப் படிக்க என்னை இக்கருத்துக்கணிப்பின் முடிவுகள் தூண்டின.  அதிலிருந்து கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அறிய முழுவீச்சில் இறங்கினேன்.  தேசிய அளவிலும் உலக அளவிலும் கடைபிடிக்கப்படும் பாதுகாப்பு அளவுகளை நம்முடைய அணுமின் நிலையமும் கடைபிடிக்க வேண்டும் என்னும் நோக்கில் பல்வேறு கேள்விகளை அணுமின் நிலையப் பொறுப்பாளர்களிடம் எழுப்பினேன்.  கதிர்வீச்சின் மோசமான விளைவுகளைச் சிந்திக்கும் மக்கள் ஓர் அமைப்பை உருவாக்கியிருந்தனர்.  அவ்வமைப்பின் பெயர் “அணுக் கதிர்வீச்சு பாதுகாப்புக்கான மக்கள் இயக்கம்” என்பதாகும்.   என்னுடைய செயல்பாட்டைப் பாராட்டி அவ்வமைப்பின் தொழில்நுட்பம், மருத்துவம் ஆகியவற்றுக்கான அறிவுரையாளராக என்னை அமர்த்தினார்கள். தேசிய அளவிலும் பன்னாட்டு அளவிலும் கடைபிடிக்கப்படும் பாதுகாப்பு அளவுகளை, கல்பாக்கம் அணுமின் நிலையம் கடைபிடிக்கத் தவறியதைக் கண்டித்து இவ்வமைப்பு தான் வருகின்ற திசம்பர் 12ஆம் நாள் போராட்டம் நடத்தவிருக்கிறது.  நிறைய அறிவியல் சான்றுகளுடன் அவர்கள் இந்தப் போராட்டத்தை நடத்துகிறார்கள்.  கடந்த ஒரு மாதமாக இப்போராட்டத்திற்கான வேலைகளை இவ்வமைப்பு செய்து வருகிறது. 

இந்தப் பின்னணியில் தான் கடந்த திசம்பர் ஒன்றாம் நாள் மாலை ஆறு மணிக்குப் புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் இருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.  அக்காவல் நிலைய ஆய்வாளர் திரு. சிவக்குமார் என்பவர் பேசினார்.  ‘புதுப்பட்டினம் பஞ்சாயத்துத் தலைவர் எனக்கு எதிராக விண்ணப்பம் கொடுத்திருப்பதாகவும் இதற்காகக் காவல் நிலையம் வர முடியுமா’ என்றும் அவர் என்னிடம் கேட்டார்.  நான் அப்போது என்னுடைய மருத்துவமனையில் வேலையாக இருந்தேன்.  அதைச் சொல்லி வேலை முடிந்ததும் காவல் நிலையம் வந்து பார்ப்பதாகக் கூறினேன்.  பின்னர் இரவு 7.30 மணிக்கு அங்கு சென்றேன்.  என்னைக் காத்திருக்கச் சொன்னார்கள்.  அதன் பின், காவல் ஆய்வாளர் பஞ்சாயத்துத் தலைவரைத் தொலைபேசியில் அழைத்தார்.  அவர் அங்கு 8.10க்கு வந்தார்.  முப்பது மணித்துளிகள் விசாரணை நடந்தது.  நான் இரவு 8.50க்கு அங்கு இருந்து கிளம்பினேன். 

என் மீதும் திரு. நேரு என்பவர் மீதும் புதுப்பட்டினம் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் திரு. கலியபெருமாள் கூறும் குற்றச்சாட்டுகள் எனக் காவல் நிலைய ஆய்வாளர் சொன்னவை இவைதாம்:

நாங்கள் இருவரும் செய்து வரும் அணு உலை எதிர்ப்பு வேலைகளுக்கு உரிய ஒத்துழைப்பைக் கொடுக்காவிட்டால் கொன்று விடுவோம் என்று இருவரும் அவரை மிரட்டினோமாம்.  இந்த மிரட்டலை ஒரு மொட்டைக் கடிதத்தின் மூலம் அவருக்கு அனுப்பினோமாம்.  அக்கடிதம் என்னுடைய வழிகாட்டுதலின் பேரில் திரு.நேரு எழுதினாராம்.   ஏதோ ஒரு தெரியாத கைப்பேசி எண்ணில் இருந்து அவருடைய கைப்பேசிக்குக் கொலை மிரட்டல் குறுஞ்சேதி அனுப்பப்பட்டிருக்கிறதாம்.  அதுவும் என்னுடைய வழிகாட்டுதலின் பேரில் யாரோ செய்தது தானாம்!  இது மட்டுமன்றி, தெரியாத கைப்பேசி எண்கள் பலவற்றில் இருந்து அவரைத் திட்டிக் குறுஞ்சேதிகள் வருகின்றனவாம்.  அவை அத்தனையும் என்னுடைய வழிகாட்டுதலின் பேரில் நடப்பதாக அவர் நம்புகிறாராம். 

இக்குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் காவல் நிலைய ஆய்வாளரிடம் நான் கொடுத்த மறுமொழிகள்:

நான் அணுக்கரு எதிர்ப்பு வேலை எதிலும் ஈடுபடவில்லை.  அணுக்கதிர் வீச்சின் பாதிப்புகள் பற்றியும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தால் ஏற்படும் கதிர்வீச்சின் பாதிப்புகள் பற்றியும் கடந்த இருபதாண்டுகளாக நான் செய்து வந்த ஆராய்ச்சிகளின் முடிவுகளைத் தாம் எல்லோரிடமும் பகிர்ந்து வருகின்றேன்.  நான் அணுக்கரு எதிர்ப்பு அமைப்பு எதையும் அமைக்கவில்லை.  அப்படிப்பட்ட அமைப்புகளில் தொழில்நுட்பம், மருத்துவம் ஆகியவற்றுக்கான அறிவுரையாளராக மட்டுமே இருந்து வருகின்றேன்.  கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கம் அண்மையில் என்னுடைய பணிசார்ந்த பட்டறிவைப் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டியது.  இதே போல் நாடு முழுவதும் பல இடங்களில் என்னுடைய பட்டறிவைப் பகிர்ந்து வந்திருக்கிறேன். 

 பஞ்சாயத்துத் தலைவர் திரு. கலியபெருமாள் அவர்களை நான் பல இடங்களில் சந்தித்திருக்கிறேன்; உள்ளாட்சித் தேர்தலில் அவர் வென்ற அன்றே அவரைப் பாராட்டியும் இருக்கின்றேன்.  அணுக்கரு கதிர்வீச்சைப் பற்றி எல்லோரிடமும் சொல்வது போல, அவரிடமும் சொல்லியிருக்கின்றேன்.  நான் ஓர் அரசியல்வாதியாக இருந்தால் கூட அவரை என்னுடைய ‘வேலைக்காக’ மிரட்டினேன் என்பது பொருந்தலாம்.  ஒரு மருத்துவராகப் பணியாற்றும் என்னுடைய வேலை மருத்துவம் பார்ப்பது, படிப்பது, பகிர்வது ஆகியவை தாம்!  இதில் நான் அவரை என்னுடைய வேலையில் சேர்ப்பதற்காக மிரட்டினேன் என்பது எப்படிப் பொருந்தும்?

இருந்தாலும் நீங்கள் அக்கேள்வியை என்னிடம் கேட்பதால், நான் திரு. கலியபெருமாளை அணுக்கரு எதிர்ப்புப் போராட்டத்தில் சேர்ந்து கொள்ளுமாறு எந்தச் சூழலிலும் மிரட்டவில்லை என உறுதியாகத் தெரிவிக்கிறேன். 

கொலை மிரட்டல் விடுக்கும் மொட்டைக் கடிதங்களுக்கும் எனக்கும் எத்தொடர்பும் இல்லை.  திரு.நேரு என்பவரை எனக்குத் தெரியும்.  ஆனால் நானும் அவரும் இணைந்து பணியாற்றியதே இல்லை.  என்னுடைய வழிகாட்டுதலில்தான் திரு.நேரு இக்கடிதத்தை எழுதினார் என்பது வடிகட்டிய பொய்யாகும். 

இப்படி என்னுடைய மறுமொழியை முடித்ததும் காவல் நிலைய ஆய்வாளர், தாம் முதல் தகவல் அறிக்கையைப் பதியவில்லை என என்னிடம் கூறினார்.  “நீங்கள் அழைக்கும் போதெல்லாம் நான் விசாரணைக்காகக் காவல் நிலையம் வருவேன்.  அப்படி வரவில்லை என்றால் என் மீதுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையானவை” என்று எழுதித் தருமாறு கேட்டார்.  அவர் இப்படிச் சொன்னதும், ‘இப்படிக் காவல் நிலையத்திற்கு அலைந்து கொண்டிருந்தால் என்னுடைய தினசரி வேலை என்னாவது?  இது என்னுடைய மருத்துவத் தொழிலைப் பாதிக்கும் என்றும் பல மைல் தொலைவில் இருந்து என்னைப் பார்க்க வரும் ஏழைமக்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள்’ என்றும் என்னுடைய நிலையை அவரிடம் எடுத்துச் சொன்னேன்.  ஆனாலும் எழுத்தில் தரச் சொல்லி அவர் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருந்தார்.  கடைசியில் ‘நல்ல சமாரியனாக’ ‘அவர் விசாரணைக்குக் கூப்பிடும்போதெல்லாம் காவல் நிலையம் வருவதாக’ எழுதிக் கொடுத்தேன். 

இப்படி எழுதிக் கொடுத்தது தான் மிச்சம்!  “டாக்டர்!  உங்களுக்கு ஒன்று தெரியுமா?  நீங்கள் செய்யும் வேலைக்கு நான் நினைத்தால் உங்களைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கம்பி எண்ண வைக்க முடியும்.  ‘போலீசு என்கவுன்டர்’ என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  கவனமாக இருங்கள்!” என்று மிரட்டும் குரலில் சொன்னார்.

இதைக் கேட்டு நான் அரண்டு போனேன்.  இருந்தாலும் என்னுடைய மருத்துவப் பணியையும் சமூகப் பணியையும் யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்னும் உறுதி எனக்கு இருந்தது. 

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அளவீடுகள் பற்றிய உண்மை நிலையை அண்மைக்காலமாக நான் வெளியே சொல்லி வருகிறேன்.  இக்கருத்துகளால் அணுமின் நிலையப் பொறுப்பாளர்கள் கேள்விக்குள்ளாகி வருகிறார்கள்.  எனவே, ஆய்வாளரின் இந்த மிரட்டலுக்குப் பின்னால் அணுமின் நிலையப் பொறுப்பாளர்கள் இருப்பார்கள் என்னும் வலுவான ஐயம் எனக்கு இருக்கிறது.  கல்பாக்கம் அணுமின் நிலையப் பாதுகாப்பு அளவீடுகள் தொடர்பாக நான் ஒரு புத்தகம் வெளியிடப் போகும் செய்தி அவர்களுக்கு உளைச்சலை ஏற்படுத்தியிருக்கும் என்று நினைக்கிறேன்.  எனவே காவல்துறை மூலம் என்னை மிரட்டுவதன் மூலம் ‘உண்மைகள் மறைந்து போகும்; கல்பாக்கம் அணு மின் நிலையம் சுற்றுச்சூழல் கதிரியக்கச் சார் பாதுகாப்பானது எனக் காட்டிக்கொள்ளலாம்’ என அவர்கள் கருதுவதாக நான் நினைக்கிறேன்.  அணுமின் நிலையப் பொறுப்பாளர்களிடம் நான் பல முறை விவாதங்களில் பங்கேற்றிருக்கிறேன்.  பல முறை அவர்களைச் சந்தித்து நான் திரட்டிய தரவுகளை அவர்களிடம் நான் பகிர்ந்திருக்கிறேன்.  ஆனாலும் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக என்னுடைய கேள்விகளில் ஒன்றுக்குக் கூட அவர்கள் விடையளித்ததே இல்லை.  எனவே அவர்கள் தாம் என்னுடைய வேலைகளை முடக்க மறைமுகமாக, இப்படி இறங்கியிருக்கலாம் என நினைக்கிறேன். 

இப்படிப்பட்ட சூழலில், குடியரசின் மீது நம்பிக்கையும் பற்றும் கொண்ட நீங்கள் ஒவ்வொருவரும் எனக்காகவும் என் குடும்பத்தினருக்காகவும் குரல் கொடுக்க வேண்டுகிறேன். 

தங்கள் உண்மையுள்ள,

மருத்துவர் புகழேந்தி,

புதுப்பட்டினம்

காஞ்சிபுரம் மாவட்டம்

2011 திசம்பர் இரண்டாம் நாள். 

மொழிபெயர்ப்பு: முத்துக்குட்டி

ஆங்கில மூலம்: http://www.dianuke.org/pugazhenthi-kalpakkam/

படம் நன்றி: அவுட்லுக்

Pin It