'பசிக்குப் பனம் பழத்தைச் சாப்பிடாதே; பின்னால் வயிற்றுப் போக்கால் சாகாதே' என்று ஒரு பழமொழி உண்டு. அது நம்முடைய சிறிய, நடுத்தர தொழிலதிபர்களின் அணுகுமுறைக்கு ஒத்ததாக உள்ளது. தமிழ்நாடு சிறிய, மிகச் சிறிய தொழிலக அதிபர்களின் சங்கத்தின் கூட்டம் 21.11.2011 அன்று ஏற்காட்டில் நடந்தது. தற்போது நடைமுறையில் உள்ள மின்வெட்டுப் பிரச்சினையைச் சுட்டிக் காட்டி, கூடங்குளம் அணு மின் உலையைத் திறந்து உடனடியாக மின் உற்பத்தியைத் தொடங்க வேண்டும் என்று மைய, மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டு இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். இதே போல் கோயம்புத்தூரில் 3.12.2011 அன்று நடுத்தர தொழிலதிபர்களுக்கான 20 சங்கங்களின் கூட்டமைப்பினர் இதே தீர்மானத்தை நிறைவேற்றியது மட்டுமல்லாமல் இக்கோரிக்கையை வலியுறுத்தி 20.12.2012 அன்று உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் முடிவு செய்துள்ளனர்.
 
          மின்வெட்டுப் பிரச்சினை மிக மிக...மிக முக்கியமான பிரச்சினை என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. அது உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும் என்பதிலும் கருத்து வேறுபாட்டிற்கு இடமில்லை. ஆனால் என் வீட்டிற்கு வெளிச்சம் வேண்டும் என்பதற்காக பக்கத்து வீட்டுக் கூரைக்கு நெருப்பு வைக்க முற்படுவது போன்றது தான் மின்வெட்டுப் பிரச்சினையைத் தீர்க்க, கூடங்குளம் அணுமின் உலையை இயக்கக் கோருவதும். கல்பாக்கம் அணுமின் உலையின் இயக்கத்தால் அங்கு பணிபுரிபவர்கள் மட்டுமல்லாமல் சுற்றுப்புறத்தில் வாழ்பவர்களும் அணுக் கதிர்வீச்சினால் பலவிதமான நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பதும், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் நோயுடன் பிறப்பது பற்றி அறிந்த பிறகும் அதைப் பற்றிச் சிறுதும் கவலைப்படாமல், மேலும் அணுமின் உலைகளுக்கு அதரவாகப் பேசுவது மனித நேயமாக இல்லை. மனித நேயம் எக்கேடும் கெட்டுப் போகட்டும்; எங்களுக்கு எங்கள் சுகம் தான் முக்கியம் என்று நினைப்பவர்கள் புகுஷிமாவையும் செர்னோபில்லையும் கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
 
          கல்பாக்கத்தில், கதிர்வீச்சு பாதிக்காதபடி அணு உலையில் இருந்து போதுமான அளவை விட அதிகமான தொலைவில் தான் உயரதிகாரிகள் தங்கள் இருப்பிடங்களை வைத்துக் கொண்டுள்ளனர். பராமரிப்பு வேலை என்ற பெயரில் அணு உலைக்கு அருகில் வசிக்கக் கட்டாயப்படுத்தப்படும் கீழ்நிலை ஊழியர்களும், மீனவர்களும் தான் கதிர்வீச்சு அபாயத்திற்கு உட்படுகின்றனர். இதையும் தாங்கள் சாமர்த்தியமாக தப்பித்துக் கொள்வதாகவும் நினைத்துக் கொள்ளலாம். ஆனால் விபத்து என ஒன்று ஏற்பட்டால் கல்பாக்கத்தில் இருந்தும் கூடங்குளத்தில் இருந்தும் உயரதிகாரிகளின் இருப்பிடங்கள் மட்டுமல்ல; ஏற்காடும் கோயம்புத்தூருமே ஒரு தொலைவே அல்ல என்பதை செர்னோபில்லும் புகுஷிமோவும் அறிவுறுத்தியுள்ளன.
 
          நாம் அனுபவ அறிவைக் கணக்கில் எடுத்துக் கொள்ளப் போகிறோமா அல்லது பசிக்குப் பனம் பழம் சாப்பிடப் போகிறோமா?
 
- இராமியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It