ஏழு தலித் உயிர்களைப் பலி வாங்கிய பரமக்குடி கலவரமும் ஐந்து முனை சாலையும் இன்று அமைதியாக இருக்கிறது. அதன் கோரமுகம் இப்போதைக்கு மறைக்கப்பட்டு மணல்புழுதி மேடுகளாய் கிடக்கிறது. ஏன் இந்த கலவரம்? இதைக் கலவரம் என சொல்ல என் மனம் ஒப்பவில்லை, ஒரு சின்ன போராட்டம் கலவரமாக மாற்றப்பட்டிருக்கிறது.

இத்தனை காலமாக அமைதியான முறையில் நடைபெற்று வந்த தியாகி இம்மானுவேல் சேகரனின் வழிபாடு இந்த 54வது வருடம் மட்டும் கலவர பூமியானதற்கு என்ன காரணம்? இந்த குருபூஜை வழிபாடு மட்டுமல்ல எல்லா சாதியினர் நடத்தும் குருபூஜை வழிபாட்டிலும் சிறுசிறு வன்முறையும், தாக்குதல்களும் நடந்திருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் காவல்துறை இத்துனை பெரும் துப்பாக்கி சூடு நடத்தியதில்லை. இந்த ஒரு சமூகத்தை மட்டும் நோக்கி ஏன் இத்தனை இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தவேண்டும், அதற்கான அவசியம்தான் என்ன?

நாம் ஆராய வேண்டிய இடங்கள்:

* பல லட்சம் பேர் கூடும் அன்றைய தினத்தில் அந்த சமூகத்தின் ஒரு தலைவரை கைது செய்ய வேண்டியதின் அவசியம் என்ன? அவர் வந்தால் கலவரம் நடக்கும் எனச் சொல்லும் நல்லவர்களே.. அவரை கைது செய்ததால் நடந்த கலவரத்திற்கு யார் பொறுப்பு? அவர் நல்லவர், கெட்டவர் என்பதெல்லம் வேறு விசயம். (எந்த அரசியல்வாதி நல்லவர் ஒருவரையாவது எடுத்துக்காட்டாக சொல்லுங்கள் பார்க்கலாம்?) ஆனால் எல்லா அரசியல் வியாதிகளையும் மற்ற குருபூஜை வழிபாட்டின் போதெல்லாம் பூப்போல தாங்கிப் பிடித்து பாதுகாப்பு தரும் அரசு இவரை மட்டும் தடை செய்வதன் நோக்கம்? இங்கு சாதீயத்தை யார் தூண்டுவது சொல்லுங்கள்?

* சரி கைது செய்தாயிற்று என்ன பின்விளைவு நடக்கும் எனத் தெரியாதா? அதுவும் பல லட்சம் பேர் கூடுமிடத்தில் போராட்டம் நடத்துவார்கள் எனத் தெரியாதா? அதனைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்திருந்தார்கள்? 7 அப்பாவி உயிர்கள் பலியான பிறகு அங்கு இத்தனை காவல்துறை குவிந்து என்ன பயன்?

* 11 மணியளவில் 50 பேர் கொண்ட கும்பல் மட்டுமே கூடியிருக்கிறது. காவல்துறை கைது செய்தவரை விடுதலை செய்தாயிற்று என்று சொன்னவுடன் கலைந்து சென்றிருக்கிறார்கள். ஆனால் விடுதலை செய்யப்படவில்லை என 11.30 மணியளவில் மீண்டும் கூடியிருக்கிறார்கள். இந்தமுறை அப்பாவி மக்கள் கூட்டமும் அதிகமாகவே காவல்துறை ஒரு சாக்கு போக்கும் சொல்லாமல் அடிதடியில் இறங்கிவிட்டது, எல்லோரும் ஓடியிருக்கிறார்கள். விடாமல் தாக்கப்படவே திருப்பித் தாக்கி இருக்கிறார்கள். அதிகப்படியான கும்பலின் தாக்குதலுக்கு பதில் தாக்குதலாய் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டும் விட்டது.

* இந்த ஏவல் துறைக்கு யார் உடனடியாக இவ்வளவு அதிகாரம் தந்தது? அப்புறம் எதற்கு தண்ணீர் பீய்ச்சும் வாகன‌ம், கண்ணீர் புகைக்குண்டுகள் அவர்களுக்கு வழங்கப்பட்டது? நேரடியாக மனிதக் கொலைகள் செய்யும் அதிகாரம் யார் மூலம் பெறப்பட்டது? ஐந்து முனை சாலையிலாவது போராட்டம் நடந்தது, தாக்குதல் நடந்தது. மதுரை மற்றும் மற்ற இடங்களில் துப்பாக்கி சூடு எந்த அடிப்படையில் நடத்தப்பட்டது? கார்களில் இருந்து இறங்கி நின்றவர்களை சுடுவார்களாம்; எந்த ஊர் நியதி இது?

* இந்த விசயத்தைப் பொருத்தவரையில் காவலர்களுக்கு எங்கிருந்தோ ஏவல் செய்தவர்கள் யாரென்று அறிந்தால் தெரியும் மற்ற விசயம் எல்லாமே.

* ஓய்வுபெற்ற நீதிபதியை வைத்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டிருக்கிறது. எந்த அளவில் நியாயமாக நடக்கும், உண்மை வெளிப்படும் என்பது வரும் காலத்திற்கே வெளிச்சம்.

நெடுங்காலமாக பிரிந்து கிடந்த தலித் சமூகங்கள் இன்று கொஞ்சம் கொஞ்சமாக தியாகி இம்மானுவேல் சேகரனின் வழிபாடு நிகழ்ச்சியின் மூலம் ஒன்றிணைய முற்படுகிறது. அதைத் தடுக்க ஆதிக்கவாதிகள் நினைத்ததின் விளைவுதான் இது. அதற்காக அவர்கள் செய்த திட்டமிடலில் அப்பாவி மக்கள் 7 பேர் பலியாயிருக்கின்றனர். இதோடு நின்று போய் விடவில்லை. அந்த மக்களை துன்புறுத்த அடுத்த கட்ட நகர்வுகளும் ஆரம்பித்தாயிற்று. ஆம் ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு என்பதன் பொருள் என்ன?.

7 குடும்பங்கள் ஏற்கனவே அனாதை ஆக்கப்பட்டு விட்டது. அடுத்து 1000 குடும்பங்கள் பொய் வழக்குகளுடன் அவதிப்பட வேண்டும். அதற்கான வேலைகளில் காவல்துறை கச்சிதமாக இறங்கிவிட்டது; ஆம் ஆள் பிடிக்கும் வேலைகளில் இறங்கிவிட்டது. ஒவ்வொரு ஊர்களிலும் இரவு நேரங்களில் சென்று கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பித்து விட்டது. படிக்கும் அப்பாவி இளைஞர்களும், விவசாய வேலை செய்யும் சமூக மனிதர்களும் கைது பயத்தில் இருக்கின்றனர். ஆனால் அரசும், ஊடகங்களும் இதையெல்லாம் சொல்லாமல் வேறு திசை நோக்கி திரும்பி தங்களது வியாபாரத்தை பெருக்கி கொள்ளும். வழக்குகளுடனும், கலவரக்காரர்கள் எனும் பட்டத்துடனும் அம்மக்கள் வாழவேண்டும்.

அடுத்தவன் உழைப்பில் வாழும், அடுத்தவனை மோசம் செய்து வாழும் எல்லோரும் நலமாக இருக்கையில், உழவு செய்து, வருந்தி உழைத்து வாழும் மக்களுக்கு மட்டும் ஏன் இந்த கதி; கலவரக்காரர்கள் எனும் பெயர்?

இதன் மூலம் வர்க்க குணம் கொண்ட ஆதிக்க சாதியினருக்கு கொண்டாட்டம், சந்தோசம். நமக்காக‌ அரசியல்வாதிகளோ, அரசு ஊழியர்களோ, ஊடகங்களோ, சமூக வியாக்கியானம் பேசுபவர்களோ வரப்போவதில்லை. எல்லாம் நடந்த பிறகு சமாதானம் எனும் பெயரில் வரும் புல்லுருவிகள் யாரையும் அனுமதிக்காதீர்கள். நாம்தான் நமக்காக இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்வோம். இனியாவது சிந்திப்போம்.. கற்போம், ஒன்றுசேர்வோம் புரட்சி செய்வோம்.

Pin It