முடிச்சுகள் எப்போதுமே புதிரானவை. முடிச்சைப் போட்ட சிலராலேயே சில சமயங்களில் அவற்றை அவிழ்க்க முடியாது. வரலாற்றில் விழுந்த முடிச்சுகளும் அப்படித்தான்! தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக அப்படிப்பட்ட ஒரு முடிச்சை அவிழ்க்கத்தான் சில மாதங்களுக்கு முன் முயன்றிருக்கிறார் அனுசு தர். முன்னாள் தலைமையமைச்சர் இலால் பகதூர் சாசுதிரியின் மரணம் குறித்த அவருடைய கேள்விகள் இந்திய அரசைச் சிக்கலில் ஆழ வைத்துள்ளன. சாசுதிரி ஒருவர் மட்டுமில்லை; நேதாசி முதலிய வேறு சில தலைவர்களின் மரணத்தில் உள்ள முடிச்சுகளும் இன்னும் அவிழ்க்கப்படவில்லை.
யார் இந்த அனுசு தர் ('ANUJ DHAR')?
'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தலைமையமைச்சரின் அலுவலகத்தில் கேள்வி கேட்டிருக்கும் அனுசு தர் 'சிஐஏவின் பார்வையில் தெற்காசியா' (‘CIA’s Eye On South Asia’) என்ற புத்தகத்தையும் நேதாசியைப் பற்றி 'மரணத்திலிருந்து மீட்சிக்கு' (‘Back From The Dead’) என்ற புத்தகத்தையும் எழுதியவர்.
இலால் பகதூர் சாசுதிரி:
நேரு மறைந்து நாடு இக்கட்டான சூழலில் சிக்கித் தவித்த போது தலைமையமைச்சராகப் பொறுப்பேற்றவர்; பொறுமைக்கும் தெளிவான முடிவுகளுக்கும் பெயர் பெற்றவர்; தொடர்வண்டித்துறை அமைச்சராக இருந்தபோது 1956இல் அரியலூரில் நடந்த நேர்ச்சி(விபத்து)க்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகியவர்.
அப்போது 'சாசுதிரி மிகவும் திறமையானவர்; அவருடைய திறமையின்மையால் இந்நேர்ச்சி நடக்கவில்லை. ஆனாலும் அவருடைய பதவி விலகலை நான் ஏற்றுக்கொண்டதற்குக் காரணம் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குச் சாசுதிரிக்கு இருப்பதைப் போலக் கண்ணியம் இருக்க வேண்டும் என்பதுதான்' என நேருவால் பாராட்டப்பட்டவர். இவ்வளவு பெருமைகளையும் உடைய சாசுதிரி 1966ஆம் ஆண்டு சனவரி 11ஆம் நாள் இரசியாவில் உள்ள தாசுகண்டில் இறந்து போனார் என்பது எல்லோருக்கும் தெரியும்; ஆனால் எப்படி இறந்து போனார் எனபதுதான் யாருக்கும் தெரியாது.
1965ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவிற்கும் பாகிசுதானிற்கும் இடையேயான போர் முடிவுக்கு வந்தது. அதன்பின் 1966ஆம் ஆண்டு சனவரியில் பாகிசுதானின் அன்றைய தலைவர் அயூப்கானிடம் பேச்சுவார்த்தை நடத்த, தாசுகண்டு சென்றார் சாசுதிரி.
'தாசுகண்டு' ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மறுநாள் அங்கேயே சாசுதிரி இறந்துபோனார். இறப்பதற்கு முன் அவர் தொடர்ச்சியாக இருமினார்; அது கண்டு - அருகில் இருந்த அவருடைய மருத்துவர் 'சக்' ('R. N. CHUGH') முதல் உதவிக்கு விரைந்தார். சிறிது நீரைக் குடித்த சாசுதிரி, சில மணிநேரங்களிலேயே மயக்கமடைந்து மரணமடைந்தார். அவருடைய மரணத்திற்குக் காரணம் மாரடைப்பு. இதுதான் பல ஆண்டுகளாக இந்திய அரசு கூறிவரும் செய்தி.
ஆனால் வெளியில் உலவிவரும் செய்திகள் பல. அமெரிக்க உளவு நிறுவனமான 'சிஐஏ'வின் சதியால் சாசுதிரி கொல்லப்பட்டார் என்பது அவற்றில் ஒன்று. பதவிக்கு ஆசைப்பட்டு அவரையடுத்துத் தலைமைப் பொறுப்பேற்ற இந்திராகாந்தியின் தூண்டுதலால் சாசுதிரி கொல்லப்பட்டார் எனக் கூறுவோரும் இருக்கிறார்கள். (இவ்விரண்டு செய்திகளையுமே இந்திய அரசு இதுவரை அறுதியிட்டு மறுத்ததில்லை!)
மாரடைப்பால் சாசுதிரி காலமானார் என இந்திய அரசு சொன்னாலும் அவருடைய மனைவி இலலிதா அதை மறுத்தே வந்திருக்கிறார். சாசுதிரியின் உடல் நீலமாக மாறியிருந்ததைச் சுட்டிக்காட்டி உணவில் நஞ்சு கலந்து கொல்லப்பட்டிருக்கிறார் என்றே அவர் கூறி வந்தார். (சாசுதிரிக்குத் தாசுகண்டில் உணவாக்கிக் கொடுத்த இரசியச் சமையல்காரர் சில நாட்கள் விசாரிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.)
இப்போது 'இலால் பகதூரின் உடல் உடல்கூறாய்வுக்கு ('POSTMORTEM') உட்படுத்தப்பட்டதா என்ற அனுசு தரின் வினாவிற்கு 'இல்லை' என்ற இந்திய அரசின் விடை மேலும் பல ஐயங்களை எழுப்பியிருக்கிறது.
நேதாசி சுபாசு சந்திர போசு
'உங்களுடைய இரத்தத்தை என்னிடம் தாருங்கள். நான் உங்களுக்கு விடுதலை வாங்கித் தருவேன்’
- நேதாசியின் இவ்வார்த்தைகள் தாம் அன்றைய இளைஞர்கள் பலரை இந்தியத் தேசிய இராணுவத்தில் சேர வைத்தன.
அன்றைய இளைஞர்கள் மட்டுமன்றி இன்றைய இளைஞர்கள் பலரிடமும் 'பிடித்த விடுதலைப் போராட்ட வீரர் யார்?' என்று கேட்டால் பளிச்செனச் சொல்வது 'நேதாசி' என்ற பெயரைத்தான். நேதாசியின் மிடுக்கான தோற்றமே நம்மை ஈர்த்துவிடும். (இன்றைக்கும் காந்தியடிகள், நேரு ஆகியோரின் சிலைகளுடன் இராணுவச் சீருடையில் நேதாசி நிற்பது போன்ற சிலையைப் பாராளுமன்றத்தில் காணலாம்.)
வெள்ளையர் காலத்தில் இங்கிலாந்து சென்று 'ஐ. சி. எசு' (‘I.C.S’) படிப்பது என்பது இப்போது குடியுரிமைத் தேர்வான 'ஐ. ஏ. எசில்' தேர்ச்சி பெறுவதற்குச் சமமானது. அப்படிப்பட்ட உயர்ந்த படிப்பை இலண்டனில் படித்து முடித்துவிட்டு நாட்டு விடுதலைக்காக அதைத் தூக்கி எறிந்தவர் நேதாசி. 'எதிரியின் எதிரி நண்பன்' என்னும் முறையில் இங்கிலாந்தின் எதிரி நாடுகளான சப்பான், செருமனி ஆகியவற்றுடன் கைகோத்து இந்திய விடுதலைக்கு முயன்றவர்.
இதெல்லாம் தெரிந்த கதைதான்! எண்பதாயிரம் பேரைக் கொண்ட இந்தியத் தேசிய இராணுவத்தை வெளிநாட்டு மண்ணில் உருவாக்கிய நேதாசி எப்படிக் காலமானார்? (எப்படி என்பதை விடுங்கள்! எப்போது காலமானார் என்பதே தெரியாது!)
1941ஆம் ஆண்டு வீட்டுக்காவலில் இருந்து தப்பிய நேதாசி காபூல் வழியாகப் பெர்லின் நகரத்திற்குச் சென்றார். அங்கு இட்லரை('Hitler')ச் சந்தித்தார். இப்படியே போய் 1945ஆம் ஆண்டு ஆகச்டு 14ஆம் நாள் வானூர்தியில் அவர் ஏறுவது வரை உறுதியாகக் கூற முடியும். அதன்பின் என்ன நடந்தது?
செருமன் படையினருடன் நேதாசி தைவானில் நடந்த வானூர்தி நேர்ச்சி('விபத்து')யில் அவர் 1945 ஆகச்டு 18ஆம் நாள் இறந்து விட்டதாக இந்நாள் வரை கூறிவந்தார்கள். ஆனால் இந்திய அரசு நேதாசியின் மரணம் பற்றி ஆராய மூன்று குழுக்களை அமைத்தது.
சா நவாசு (‘SHAH NAWAZ’) குழு (1956)
யார் இந்த சா நவாசு?
இரண்டாவது இந்தியத் தேசிய இராணுவத்தில் 'லெப்னினன்ட் கர்னல்' பதவி வகித்தவர்; மைய அரசில் அமைச்சராகவும் இருந்தார்.
குழு உறுப்பினர்கள்:
மித்திரா, சுரேசு சந்திரபோசு(நேதாசியின் அண்ணன்)
குழுவின் முடிவு:
தைவான் வானூர்தி நேர்ச்சியில் நேதாசி காலமானார்.
சிக்கல்:
குழு உறுப்பினரான சுரேசு சந்திரபோசு இம்முடிவை மறுத்து 'அரசு உண்மையை மறைக்கப் பார்க்கிறது' எனக் குற்றம் சுமத்தினார்.
நீதிபதி கோசுலா (‘GD KHOSLA’) குழு(1970)
யார் இந்தக் கோசுலா?
பஞ்சாபு உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர்.
குழு உறுப்பினர்கள்:
பேராசிரியர் சமர் குகா, அமியாநாத்து போசு (நேதாசியின் மருமகன்)
குழு முடிவு:
தைவான் வானூர்தி நேர்ச்சியில் நேதாசி காலமானார்.
சிக்கல்:
உறுப்பினராக இருந்த பேராசிரியர் சமர் குகா குழுவின் முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை என 1978இல் அறிவித்தார். அன்றைய தலைமையமைச்சராக இருந்த மொரார்சி தேசாயும் 'நேதாசியின் மறைவை அறிவதில் சில சிக்கல்கள் இருப்பதாக' ஒப்புக்கொண்டார்.
நீதிபதி முகர்சி (‘MUKHERJEE’) குழு (1999)
யார் இந்த முகர்சி?
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி
குழு உறுப்பினர்கள்:
யாருமில்லை (தனியாள் அமர்வு)
முகர்சியின் முடிவு:
தைவான் வானூர்தி நேர்ச்சியில் நேதாசி இறக்கவில்லை. அச்செய்தி அவர் இரசியாவிற்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய தந்திரமாக இருக்கலாம்.
சிக்கல்:
2006ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் வாசிக்கப்பட்ட இம்முடிவை இந்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனால் அப்படி ஒரு நிகழ்வே தைவானில் நடக்கவில்லை என இப்போது அதிரடியாக அறிவித்திருக்கிறது தைவான் அரசு. தைவானின் இவ்வறிவிப்பு இந்தியாவின் நிலைப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. தைவானின் இவ்வறிவிப்புக்கு முன்னரே நேதாசியின் மரணம் குறித்துப் பல செய்திகள் உள்ளன. 'நேதாசி இறக்கவில்லை. அவர் எங்கோ ஓரிடத்தில் வாழ்ந்து வருகிறார்' என 1946ஆம் ஆண்டு சனவரி 2ஆம் நாள் காந்தியடிகள் கூறினார்.
சுபாசின் தீவிர ஆதரவாளராகத் திகழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கம் 1949ஆம் ஆண்டு சனவரி 23ஆம் நாள் பேசும்போது சுபாசு உயிருடன் இருப்பதாகவும் தாம் அவரைப் பார்த்து விட்டு வந்ததாகவும் குறிப்பிட்டார்.
நேதாசி இறந்ததாகக் கூறப்படும் வானூர்தியை 1945 ஆகச்டு 19ஆம் நாள் (நிகழ்வுக்கு அடுத்த நாள்) ஆங்காங்கில் சிலர் பார்த்ததாகக் கூறுகிறார் சிங்கப்பூர் பொதுப்பணித்துறையில் தலைமைப் பொறியாளராக இருந்த டி. கே. நாயர். இவற்றிற்கெல்லாம் மேலாக, அயோத்தி அருகில் உள்ள பைசாபாத்தில் 1985ஆம் ஆண்டு வரை வாழ்ந்து வந்த 'பகவன்' பாபா (சவுல்மரி, கும்னமி என வேறு பெயர்களும் இவருக்கு உள்ளன.) என்னும் துறவி நேதாசிதான் என்னும் கருத்தும் நிலவுகிறது. (இத்துறவி உருவத்தில் அப்படியே நேதாசியைப் போலவே இருப்பார். 'இந்துசுதான் டைம்சு' (‘Hindustan Times’) நாளிதழ் நடத்திய தனி ஆய்வில் இவர் நேதாசியாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.)
இப்படிப் பல கருத்துகள் நிலவி வரும் நிலையில் இந்திய அரசு, நேதாசி போன்ற தலைவர்களை மதிக்காமல் புறக்கணிப்பதையே அரசின் நிலைப்பாடு காட்டுகிறது என்ற சமூக ஆர்வலர்களின் கருத்தையும் மறுப்பதற்கில்லை.
பிரபாகரன்
'நேதாசியே என் மனம் கவர்ந்த இந்தியத் தலைவர்',
'நாங்கள் யூகோசுலேவியாவில் இருப்பது போன்ற ஒற்றையாட்சி முறை சமத்துவத் தமிழ் ஈழத்தை அமைப்போம்'
-1985இல் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் பிரபாகரன்
ஈழத்தின் காந்தியடிகள் தந்தை செல்வா மறைந்த பின் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றதில் பிரபாகரனின் பங்கு முதன்மையானது. கரந்தடிப் ('கெரில்லா') போர் முறையைக் கையாண்ட ஒரு குழுவைத் தரைப்படை, கப்பல்படை, வான்படை என முப்படைகள் கொண்ட ஒரு பேரியக்கமாக மாற்றுவது ஒன்றும் அவ்வளவு எளிதானதில்லை. அதைச் சாதித்த பெருமை பிரபாகரனுக்கு உண்டு. தன் சொந்த மகனையே போர்க்களத்தில் காவு கொடுத்த பிரபாகரனின் மன உறுதியை அவருடைய எதிரிகளும் பாராட்டுவார்கள். தமிழீழ விடுதலைப்புலிகளின் பெருந்தலைவரான பிரபாகரனைப் பிடித்தால் ஈழ விடுதலைப் போராட்டத்தையே முடிவுக்குக் கொண்டுவந்து விடலாம் என நினைத்தது இலங்கை அரசு. அதற்கேற்பக் காய்களை நகர்த்திப் புலிகளை வீழ்த்திக் கடைசியில் பிரபாகரனையும் கொன்று விட்டதாக அறிவித்தது இலங்கை அரசு.
இங்கே தான் சிக்கல் தொடங்குகிறது. இதற்கு முன்னும் பிரபாகரன் இறந்துவிட்டார் என வதந்திகளைப் பலமுறை இலங்கை அரசு பரப்பியிருக்கிறது. (கடைசியாக, 'சுனாமி' ஆழிப்பேரலையில் பிரபாகரன் இறந்து விட்டார் என்றுகூடச் சொன்னார்கள்.) ஆனால் இப்போது இன்னும் கொஞ்சம் விவரமாகப் புகைப்படம், காணொலி('வீடியோ') ஆகியவற்றையும் இலங்கை இராணுவம் வெளியிட்டிருக்கிறது. அவற்றைப் பார்த்தால் முடிச்சு அவிழும் என நினைத்தால் - அங்கேதான் சிக்கலின் முடிச்சு இன்னும் இறுகுகிறது.
எழுப்பப்படும் வினாக்கள்:
1) 2004ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் எடுக்கப்பட்ட பிரபாகரனின் படத்தில் உள்ள முகச்சுருக்கங்கள் கூட 2009இல் இலங்கை அரசால் காட்டப்படும் படத்தில் இல்லை. இது எப்படி முடியும்?
2) காணொலியை வெளியிட்ட சில மணிநேரங்களிலேயே மரபணு ஆய்வு ('டிஎன்ஏ') முடிந்துவிட்டதாகச் சிங்கள இராணுவம் அறிவித்தது. மரபணு ஆய்வு நடத்தக் குறைந்தது 24 மணிநேரம் ஆகும் என மரபணு அறிஞர்கள் அடித்துக் கூறுகிறார்கள். அப்படியிருக்க, அவ்வாய்வு எப்படிச் சில மணிநேரங்களில் முடிந்திருக்க முடியும்?
3) ஈழப்போர் முடிவுக்கு வந்ததாக இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய இராசபக்சே பிரபாகரனைப் பற்றி ஒருவரி கூடக் குறிப்பிடாதது ஏன்? தமிழ் ஈழ உருவாக்கத்தை ஆதரிப்பதாகக் கூறித் தேர்தல் நேரத்தில் பரபரப்பு காட்டிய முன்னாள் முதல்வர் செயலலிதா பிரபாகரன் மரணத்தைப் பற்றி (இன்று வரை) எதுவும் பேசாமல் அமைதி காப்பது ஏன்?
4) மே பதினெட்டாம் நாள் (திங்கள்கிழமை) பிரபாகரன் கொல்லப்பட்டார் என அறிவித்த இலங்கை அரசின் செய்தித்தொடர்பாளர் நாணயக்காரா திடீரென மே 19 அன்றுதான் அவர் கொல்லப்பட்டார் எனக் குழப்பியது ஏன்?
5) பிரபாகரன் இறந்துவிட்டதாக மே 17ஆம் நாள் (ஞாயிறு) மாலையே இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்திய வெளியுறவுத்துறை அலுவலர் விச்ணு வரதனும் மே 17 அன்று பிரபாகரன் கொல்லப்பட்டதாக மே 18 அன்று அறிவிக்கிறார். ஆனால் அதே நாள் புது தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதல்வர் கருணாநிதி (மைய அரசில் பதவிகள் பெறுவது குறித்துப் பேசக் கருணாநிதி அப்போது தில்லியில் முகாமிட்டிருந்தார்.) 'பிரபாகரன் மறைவைத் தம்மால் உறுதிப்படுத்த முடியாது' எனக் கூறினார். இந்த முரண்பாட்டுக்கு என்ன காரணம்?
6) முதலில் பாதுகாப்பு வலயப் பகுதியில் கொல்லப்பட்டதாக அறிவித்த இலங்கை அரசு, பின்னர் நந்திக்குளம் பகுதியில் கரையோரம் பிரபாகரனுடைய பிணம் கிடந்ததாகக் கூறுகிறது. நீர்ப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருந்தால் உடல் உப்பிப் பெரிதாக இருக்க வேண்டும். முகத்தில் (தண்ணீர் பட்டுச்) சிதைவுகள் காணப்பட வேண்டும். கண்கள் வெளிவந்திருக்க வேண்டும். ஆனால் இலங்கை அரசு காட்டும் படத்தில் பிரபாகரன் இவை எதுவும் இன்றி இளமையாக இருக்கிறார்.
7) மே 19 அன்று பிரபாகரனுடன் பேசியதாகவும் அவர் உயிருடன் இருப்பதாகவும் கூறிய புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த செல்வராசா பத்மநாபன், மே 25ஆம் நாள் மே 17அன்றே பிரபாகரன் கொல்லப்பட்டார் எனக் கூறினார். ஏன் இந்தக் குழப்பம்?
8) பிரபாகரனின் உடல் எனப் புகைப்படத்தையும் காணொலியையும் காட்டிய இலங்கை அரசு, பிபிசி முதலிய பன்னாட்டுச் செய்தியாளர்களை அழைத்து அவருடைய உடலைக் காட்டாமல் மறைத்தது ஏன்?
வரலாற்றுக் காலம் தொட்டே இவை போன்ற முடிச்சுகள் ஏராளம் உள்ளன. நம்மூர் வடலூர் இராமலிங்க வள்ளலார் தொடங்கி வெளிநாட்டு நடிகர் புரூசு லீ வரை பல்வேறு வகைப்பட்டவர்களின் இறப்பில் அடங்கிக்கிடக்கும் கமுக்கங்கள் தோண்டத் தோண்ட வெளிவரும் பூதங்கள் தாம்! நாட்டுக்காக உழைத்த நேதாசி போன்ற நல்லவர்களின் வாழ்க்கைகள், வருங்காலத் தலைமுறைக்கு வழிகாட்டும் வரலாறுகள்! அவற்றில் அரசு காட்டி வரும் மெத்தனப்போக்கு அவ்வளவு நல்லதில்லை!