அது எப்போதும் நடக்கும் ஒரு சம்பவமல்ல... இந்த தேசமே பொறுப்பின்மை எனும் கொடிய நோயால் பீடிக்கப்பட்டிருப்பதை உலகிற்கு மறுபடியும் உணர்த்தும் ஒரு தலைகுனிவு நிகழ்வு. ரயிலில் அல்லது பேருந்தில் அல்லது வேறு எதிலும் இந்த நாட்டில் ஒரு பெண் தனியே இன்னமும் பயணம் செய்யமுடியாது என்ற நிலை நீடிக்கிறதென்றால் நாம் விடுதலை பெற்று இத்தனை ஆண்டுகள் ஆனதன் பொருளென்ன? உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அருணிமா சின்கா ஒன்றும் சாதாரணப் பெண்ணல்ல, அவர் இந்த நாடே அறிந்த விளையாட்டு வீராங்கனை. ஒரு விளையாட்டல்ல, கால் பந்து மற்றும் கைப்பந்து ஆகிய இரண்டிலும் தேசிய அளவிலான வீரர் அவர். அந்த அருணிமாவுக்கு நேர்ந்துவிட்ட துயரகரமான நிகழ்வினைப்போல நமது எதிரிக்குக்கூட ஏற்பட்டுவிடக்கூடாது என்றுதான் யாரும் நினைப்பர். 

சோனு என்றும் அழைக்கப்படும் அருணிமா வேலைக்கான தேர்வொன்றை எழுதுவதற்காக தனது ஊரான பரேலியிலிருந்து டெல்லிக்கு பத்மாவத் எக்ஸ்பிரஸ் ரயிலில் கிளம்பினார். அது இரவு நேரம். ரயில் பரேலியை விட்டு பக்கத்து ஊரான செனாட்டியை நெருங்கிக்கொண்டிருந்தது. அப்போது மூன்று கயவர்கள் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு அருணிமா பயணம் செய்த அந்த ரயில் பெட்டியில் ஏறியிருக்கின்றனர். தனது கழுத்திலிருந்த தங்கச் செயினைப் பறிக்க முயன்ற அவர்களிடமிருந்து திமிறியிருக்கிறார் அருணிமா. போராடும் அந்தப் பெண்ணைச் சகியாமல் அப்படியே ரயிலிலிருந்து வெளியே தூக்கி வீசியிருக்கிறது அந்த மிருகக்கூட்டம். 

கீழே விழுந்த அருணிமாவுக்குத் தலையில், உடலின் பல பாகங்களில் காயங்கள். தான் தூக்கி வீசப்பட்டது இன்னொரு தண்டவாளத்தில் என்று அறிந்து எழ முயன்றிருக்கிறார் அவர். அதற்குள் அவரை நோக்கி இன்னொரு ரயில் வந்துகொண்டிருப்பதை கவனித்தார் அருணிமா. விரைவாக எழ முடியாத நிலையில் அந்த ரயில் அவரது இடது காலில் ஏறி அதனைத் துண்டித்துவிட்டது. நினைவை இழந்தார் அருணிமா. 

அருணிமாவை மருத்துவமனையில்தான் இன்னமும் இருக்கிறார். முதலில் உள்ளுரிலும் பின்னர் டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையிலும் சிகிச்சை பெறுகிறார். அவருக்கு செயற்கைக் கால் பொருத்தவேண்டுமானால் இரண்டு லட்ச ரூபாய் செலவாகுமாம். 

இந்த நாட்டில்தான் கிரிக்கெட் விளையாட்டுக்கு எவ்வளவு மரியாதை, உபசரிப்பு! இதுவே ஒரு கிரிக்கெட் விளையாட்டு வீரருக்கு இப்படியொரு விபத்து நேர்ந்ததென்றால் இந்நேரம் இந்த நாடே எத்தனை அல்லோலகல்லோலப்பட்டிருக்கும்? பிரதமர் முதல் நமது தமிழக முதல்வர் வரை, இந்திப் படஉலகினர் முதல் தமிழ்த் திரையினர் வரை, இந்த நாட்டின் எல்லா நியாயக்காரர்களும் நல்லவர்களும் ஒரே குரலில் அந்த விபத்தை- அதற்குக் காரணமாயிருந்த அந்தக் கயவர்களைச் சபித்துத் தள்ளியிருப்பார்களே! என்ன செய்ய? இந்த அப்பாவிப் பெண் அருணிமாவோ பிழைக்கத் தெரியாதவராக அல்லவா கால் பந்து வீராங்கனையாகவும், கைப்பந்து வீராங்கனையாகவும் தன்னை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். 

என்னதான் சூதாட்டக்களமாகவே மாறியிருக்கிற நிலையிலும் கிரிக்கெட் ஒன்றுதானே இங்கே விளையாட்டு! அதுவும் நமது நாட்டு அணியும் பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன என்றால் அது என்னவோ ஒரு மகாயுத்தமாகவே நமது ஊடகங்களால் சித்தரிக்கப்படுகின்ற அவலம் வேறு. விளையாட்டை விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் மனநிலை இங்கே இன்னமும் கேள்விக்குறிதானே? எத்தனை எத்தனை கோடிகள் புரளுகிறது சமாச்சாரமாகிப்போனது இந்தக் கிரிக்கெட்! 

விபத்துகளும் அலட்சியப் போக்குகளும் மலிந்துவிட்ட ரயில்வே துறையின் அமைச்சர் என்ன சொல்கிறார்? நடந்துவிட்ட இந்த சம்பவத்திற்கு யார்தான் உளமாற வருத்தம் தெரிவிக்கின்றனர்? இத்தகைய கொடுமை நடந்தது இந்த நாட்டிற்குப் பெருமை சேர்த்துவந்த ஒரு பெண்ணுக்கு என்ற உணர்வில்லை இங்கே. விபத்து நடந்து பல நாட்களாகியும் இன்னமும் உருப்படியாக எந்தத் துப்பையும் துலக்கவில்லை நமது ரயில்வே காவல்துறை. கொள்ளையர்கள் யார் யார் என்ற கேள்விக்கு இதுநாள்வரையில் யாரிடமும் பதிலில்லை. நடந்துவிட்ட இந்தச் சம்பவத்தை விசாரிக்க 4 பேர் கொண்ட உயர்மட்ட (?) விசாரணைக்குழு ஒன்றை அமைத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார் மொரதாபாத் கோட்ட ரயில்வே துணை மேலாளர் ஏ.கே. சிங்கால். அதோடு நிற்காமல் மருத்துவமனையில் அருணிமாவைச் சந்தித்து ஐந்தாயிரம் ரூபாயை (அடேயப்பா, எவ்வளவு பெரிய தொகை!) முதல்கட்ட நிவாரணமாகத் தந்திருக்கிறார். கனவாகிப்போன விளையாட்டையும் காணாமல் போன கால் ஒன்றையும் நினைத்து நினைத்து மருகிக்கொண்டிருக்கும் அருணிமாவுக்கு ஆத்திரமும் கோபமும் அடக்கமுடியாமல் பீறிட்டன.

"நான் இப்போது ஒரு பிச்சைக்காரி போல ஆகிவிட்டேன்" என்று வெடித்தே விட்டார். "சில ஆயிரம் ரூபாய்கள் எனக்கு எந்தவகையிலும் பயனளிக்காது. நான் இன்னமும் ஒரு நீண்ட வாழ்க்கையை வாழ வேண்டியிருக்கிறது. இப்போது என் தேவையெல்லாம் ஆறுதலும் நல்ல வேலையும்தான்" என்றார் அருணிமா. 

மத்திய விளையாட்டுத்துறை அவருக்கு இரண்டு லட்ச ரூபாயை நிவாரணமாக அறிவித்திருக்கிறது. இலவசமாக அவருக்கு ஜெய்ப்பூர் கால் பொருத்தும் ஏற்பாடுகளும் நடக்கின்றன. கிரிக்கெட் பிரபலங்கள் சிலரும் அவருக்குத் தங்களின் சொந்தப் பணத்தில் உதவ முன்வந்திருக்கின்றனர்.     

ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு ஆசை கொஞ்சம் அதிகம்தான். அவரது நிர்வாகத்தின் கீழ் ரயில்வே துறை சீரழிந்துபோய்க் கிடக்கிற நிலையில் மேற்குவங்கத்திலும் ஆட்சியைப் பிடிக்கத் துடியாகத் துடிக்கிறார் இந்த அம்மையார். மேற்குவங்கத் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு திடீரெனப் பாசம் வந்தவர்போல ரயில்வேயில் அருணிமாவுக்கு வேலை என்று சொல்லியிருக்கிறார். 

எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சையிலிருக்கும் அருணிமாவுக்கு முதுகுத் தண்டிலும் முறிவு ஏற்பட்டிருக்கிறது என்று மருத்துவர்கள் தற்போது சொல்லியிருக்கிறார்கள். அவரது இடதுகால் துண்டிக்கப்பட்டு அதனை அவர் இழந்துள்ள நிலையில் அவரது வலது காலின் நீண்ட இரு எலும்புகளும் முறிந்திருக்கின்றனவாம். தலையிலும் அடிபட்டிருக்கிறது. அவர் மனதளவில் தற்போது சிறிது உற்சாகம் காட்டுகின்றபோதும் முழுவதுமாக குணமடைய நீண்டகாலம் பிடிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். 

அடிமைப் புத்தியை இன்றும் புதுப்பிக்கும் காமன்வெல்த் போட்டியில் ஊழல் செய்த கேவலம் இன்னமும் நாற்றமடித்துக்கொண்டிருக்கிறது. அதிகார மையங்களின் தலையீடென்பது விளையாட்டுத்துறையில் திறமையற்றவர்களையே மேலே கொண்டுவந்து தேசத்தின் தலைகுனிவுக்கு தடமமைக்கிறது. கிரிக்கெட் ஒன்றே இங்கே விளையாட்டென ஒருவிதப் போலிச் சித்திரத்தை வரைந்து, இளம் தலைமுறையின் பன்முகப்பட்ட விளையாட்டுப் பேரார்வத்திற்குக் கருவிலேயே சவக்குழி வெட்டுகிறது. எங்கும் ஊழல், எதிலும் தலையீடு, எல்லா இடங்களிலும் முறைகேடு என்று நமது விளையாட்டுத்துறையின் பண்பாடே இங்கே படுபாதாளத்தில் ஒரு நோயாளியாகப் படுத்தபடுக்கையாகக் கிடக்கிறது. சாதாரணப் பின்னணியிலிருந்து வந்து, தேசிய அளவில் விளையாட்டில் உயர்ந்து, நமது நாட்டின் உண்மையான பெருமையாக உயர்ந்த அருணிமா சின்கா போன்ற விளையாட்டு வீராங்கனைகளின் வாழ்வில்தான் எத்தனை விதமான சோதனைகள்! 

இப்படியே கிடப்பதுவோ இந்த நாடு? இன்று ஒரு அருணிமா... நாளை? இனியேனும் விழித்துக்கொள்ள வேண்டும் நமது சமூகம். எல்லா விளையாட்டுக்களையும் ஒன்றுபோலப் பாவித்து, ஒன்றாகவே ஊக்குவிக்கும் நிலை வரவும், நமது நாட்டின் குடிமக்கள் எல்லோருக்கும் எல்லாத் தளங்களிலும் தக்க பாதுகாப்பை உறுதிசெய்யும் சூழல் உருவாகவும், இத்தகைய நல்ல மாற்றங்களுக்குத் தடையாக நீடிக்கும் சுயநல அரசியலை அம்பலப்படுத்தவும் வேண்டும் இங்கே விழிப்புணர்வுமிக்கதோர் இயக்கம். மக்கள் பங்கேற்போடுகூடிய அத்தகையதொரு இயக்கத்தின் தேவையையே பிரதானமாக உணர்த்துகிறது அருணிமாவுக்கு ஏற்பட்டுவிட்ட இந்தத் துயரகரமான நிகழ்வு. 

- சோழ. நாகராஜன்

Pin It