vadivelu"நோ.... இந்தக் கைப்புள்ள கட்டைல போறவரைக்கும் வேற யார் வண்டியிலும் ஏறமாட்டான்...”

“ஏன்டா... இன்னுமாடா இந்த ஊர் நம்மள நம்புது?”

“அடிக்கும்போது ஒருத்தன் சொன்னான் இவன் எவ்ளோ அடிச்சாலும் தாங்கறான்டா, ரொம்ப நல்லவன்னு சொன்னாம்மா......”

“அது வேற வாயி... இது நாற வாயி...”

“என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு?”‍

“பில்டிங் ஸ்டிராங்கு ஆனா... பேஸ்மட்டம் வீக்கு...”

- கிட்டத்தட்ட தமிழர்களுக்கு மனப்பாடமாகிப்போன வசனங்கள் இவை. இவற்றின் சொந்தக்காரர் நகைச்சுவையில் தனி முத்திரை பதித்த நம்ம வடிவேலு.

தமிழர்களை சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கவலைகளை மறந்து சிரிக்கச் செய்த மாயக்காரன் வைகைப் புயல் வடிவேலு. தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. கலைவாணர் தொடங்கி தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ் என்று அந்த வரலாற்றுச் சங்கிலி அறுபடாத ஒன்றாகவே தொடர்ந்தது தமிழ் சினிமாவின் உன்னதங்களுள் மிகமுக்கியமான ஒன்று. தேங்காய், சுருளி, கவுண்டமணி - செந்தில், விவேக் என்று இன்னும் பலரோடு சேர்த்து ஒரு மிக நீண்ட பட்டியலே போடுமளவுக்கு இங்கே நகைச்சுவைக் கலைஞர்களின் பெரும் படையே கோலோச்சியது, கோலோச்சிக் கொண்டிருக்கிறது. இந்திய சினிமாக்களில் இப்படிப் பட்டதொரு சிறப்பு தமிழ் சினிமாவைத் தவிர வேறொன்றில் இருக்குமா என்பது சந்தேகமே. தமிழின் நகைச்சுவைக் கலைஞர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவமானவர்களாகவே தங்களை நிலைநாட்டியிருக்கின்றனர். அப்படிப்பட்டதொரு அண்மைக்கால தனித்துவ நகைச்சுவை நாயகன் நம்ம வடிவேலு.

மதுரையில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, சொற்ப ஊதியத்தில் வயிற்றைக் கழுவிக்கொண்டிருந்த அவருக்கு சினிமாவில் அதிக ஈடுபாடு இருந்தது. எந்த வேலை செய்துகொண்டிருந்தாலும் எப்போதும் பழைய சினிமாப் பாடல்களைப் பாடிக் கொண்டேயிருக்கும் அவரது வாய். எண்பதுகளின் இறுதி, தொண்ணூறுகளின் துவக்கத்தில் கஸ்தூரி ராஜாதான் வடிவேலுவைக் கண்டுபிடித்து சினிமாவில் சேர்த்தவர். அவரது `என் ராசாவின் மனசிலே’ தான் வடிவேலு அறிமுகமான முதல் படம். காய்ந்துபோன தோலுடன் வெறும் எலும்புதான் உடம்பு. ஆனாலும் அப்போதே ஒருவித தனித்துவம் கொண்ட நடிப்பு அவரிடமிருந்து வெளிப்படத்தான் செய்தது. அப்போதிலிருந்து தன்னை உருவாக்கிக் கொள்வதில் சலிப்பின்றி இயங்கினார் வடிவேலு. கவுண்டமணி --செந்தில் ஜோடியோடு கொசுறுபோல வந்துபோன வடிவேலு எல்லா நகைச்சுவை முன்னோடிகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தனக்கென ஒரு நகைச்சுவை ராச்சியத்தையே உருவாக்கிக் கொண்டது தனிக் கதை. அந்த வெற்றிக்கு வடிவேலுவின் வெறித்தனமான கடும் உழைப்பும் உடல்மொழியும் மட்டுமே காரணமாக இருக்க முடியும்.

ராசாவின் மனசிலேவைத் தொடர்ந்து வடிவேலுவின் மீது ஒரு கவனிப்பை ஏற்படுத்திய படம் காதலன் (1994). அவரது வெற்றியைப் பறைசாற்றிய படங்களாக அதனைத் தொடர்ந்து பாரதி கண்ணம்மா, வெற்றிக் கொடி கட்டு, வின்னர், சந்திரமுகி போன்றவை வெளிவந்தன. அவரது இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ஒரு மைல் கல் என்றால் மிகையல்ல. அந்தப் படத்தில் வடிவேலு முதல்முறையாக இரட்டை வேடத்தில் கலக்கினார். ராஜா காலத்துப் படம் போலிருந்தாலும் நவீன ஏகாதிபத்திய எதிர்ப்பு, உலகமயம், தாராளமயம் போன்றவற்றின் மீதான விமரிசனம் போன்றவை வேறு எந்தப் படத்திலும் இல்லாத அளவுக்கு இருந்தது. தரமான நகைச்சுவையும் இந்தப் படத்தை வெற்றிகரமாக ஓட வைத்தது. ஆனால் அதனைத் தொடர்ந்து வடிவேலுவை வைத்து எடுக்கப்பட்ட இந்திரலோகத்தில் நா.அழகப்பன் மண்ணைக் கவ்வியது வேறு விஷயம்.

வடிவேலு செய்த பாத்திரங்களின் பெயர்கள் சின்னக் குழந்தைகளின் நினைவில் வந்து கூட அவர்களைக் குஷிப்படுத்தின. கைப்பிள்ளை, வக்கீல் வண்டு முருகன், ஸ்நேக் பாபு, நாய் சேகர் என்று எத்தனை எத்தனை சிரிப்பு காட்டும் கற்பனைப் பெயர்கள்...
வடிவேலுவின் பல நகைச்சுவைக் காட்சிகள் உலகத்தரம் வாய்ந்தவை என்பது என் கருத்து. கற்பனைத் திறன் நிரம்பக்கொண்டு, எவரையும் மெய் மறந்து சிரிக்கவைக்கும் இயல்பு கொண்டவை அவை. யாரையும் மனம் புண்படும்படி தரம் தாழ்ந்த நகைச்சுவையை வடிவேலுவிடம் காண்பது அரிது. அதிலும் குறிப்பாக பெண்களை இழிவு செய்து பண்ணப்படும் காமநெடிக் காமெடியை வடிவேலுவிடம் பார்க்கமுடியாது. அப்படியொரு தேவை வந்தாலும் அதை நாசூக்காகக் கையாளும் கலையில் அவர் வல்லவராகவே இருந்திருக்கிறார். அதில் விரசம் வராமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்தத் தன்மை வடிவேலுவுக்கே உரிய சிறப்பு என்றும் கருதுகிறேன். (பாலியல் ரீதியாகப் பெண்களைக் கொச்சைப்படுத்திப் பேசும் விரச வகை நகைச்சுவையிலிருந்து விவேக்கூட தப்பவில்லை. சந்தானம் இதில் ஒரு சகிக்கஇயலாத சாதனையே புரிந்து வருகிறார்.) ஆனால், வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் என்றும் காணத் தக்கவை, எல்லா வயதினருக்குமான இயல்பு கொண்டவை.

இப்படி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்களைக் கவலைகளை மறந்து சிரிக்கவைத்த அந்தப் பெருங்கலைஞனுக்கு மூன்று ஆணடுகளுக்கு முன்னர் ஒரு பெரும் சோதனை வந்தது... தேர்தல் எனும் வடிவில்.

ஏற்கெனவே மக்களின் ஆவேச எதிர்ப்பிற்கு உள்ளாகிப்போன அன்றைய ஆளும் கட்சியான தி.மு.க.விற்கு ஆதரவாக வடிவேலு பிரச்சாரம் செய்யக் கிளம்பினார். அப்போது விஜயகாந்த்தோடு அவருக்கிருந்த சொந்தப் பகைமையை தி.மு.க. தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடிவுசெய்து வடிவேலுவைக் களமிறக்கியது. அவரும் ஜெ. மீது எதிர்ப்பைக் காட்டாமல், விஜயகாந்தை மட்டுமே மேடைகளில் விளாசித் தள்ளினார். சினிமாவில் நாகரீகம் காத்த வடிவேலு, தேர்தல் பிரச்சாரத்தில் தரம் தாழ்ந்துபோனார். அவரின்மேல் அன்பு கொண்டிருந்த சாதாரண ரசிகர்கள் இதைக் கண்டு அப்போதே முகம் சுளித்தனர்.

தேர்தலில் தி.மு.க. (எதிர்பார்த்தபடியே) படுதோல்வியடைந்தது. அப்போது ஆரம்பித்தது வடிவேலுவுக்கான இருண்ட காலம். தி.மு.க.வோடு சேர்ந்த பாவத்திற்காக வடிவேலுவும் வீட்டுக்கு அனுப்பட்ட பரிதாபம் அரங்கேறியது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்கு சினிமா வாய்ப்புகள் இல்லவேயில்லை. தமிழ் மக்களைத் தனது கள்ளமற்ற நகைச்சுவையால் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய அந்த உன்னதக் கலைஞனுக்கு இன்று வரையில் பழைய நிலைமை திரும்பாத நிலை. அண்மையில் வெளிவந்த தெனாலிராமன் படமும் அவ்வளவாக எடுபடவில்லை. வடிவேலு மறுபிரவேசம் செய்துவிட்டார் என்று ஆசைஆசையாகச் சென்று படம்பார்த்தால் அந்த இம்சை அரசனுக்கு ஈடாகவில்லை இந்தப் படம்.

இரண்டு தலைமுறைகளாக தமிழர்களை மகிழ்வித்த அந்தக் கலைஞன் மீண்டும் தன் பழைய நிலையை எப்போது எட்டிப் பிடிக்கப்போகிறாரோ தெரியாது. ஆனால், அரசியலில் இறக்கி, தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக்கொண்ட தி.மு.க. தலைவர் குடும்பத்துத் திரைப்பட நிறுவனங்களே அவரை ஒதுக்கி வைத்திருந்ததுதான் ஏன் என்ற கேள்வி நம்முள் தோன்றி, அதற்கு விடையாக மர்மமே மிஞ்சுகிறது. அது மட்டுமல்ல... இந்த நாட்டின் குடிமகன் என்ற அடிப்படையில் வடிவேலுவுக்கு தனக்குப் பிடித்த அரசியலைப் பேசவோ, தனக்குப் பிடித்த அரசியல் கட்சியை ஆதரிக்கவோ, அதற்காகப் பிரச்சாரம் செய்யவோ உரிமை இல்லையா? தனது ஜனநாயகக் கடமையைச் செய்த அந்தக் கலைஞனை ஆளும் கட்சி அரசியலுக்குச் சாதகமாகச் செயல்படவில்லை என்ற காரணத்துக்காக ஒட்டுமொத்த சினிமா உலகமும் ஒதுக்கி வைத்தது எந்த வகையில் நியாயம்?

சின்னக் குழந்தை முதல் வயதான முதியோர் வரையில், ஆண் - பெண் பேதமின்றி விரும்பி ரசித்த அந்தக் கலைஞனின் எழுச்சி நமக்கெல்லாம் மகிழ்ச்சியைத் தந்தது. அவரின் இந்த வீழ்ச்சி அவரோடு முரண்பட்ட சிங்கமுத்துவுக்குக்கூட சந்தோசத்தைத் தந்திருக்காது என்றே நம்புவோம். இந்தக் கால அவகாசம் அவருக்கு ஒரு நிதானத்தையும், பலவகையில் பாடங்களையும் கற்றுத் தந்திருக்கும். அந்த அனுபவ வெளிச்சத்தில் வடிவேலுவின் மறு நுழைவு அழுத்தமாகவும், வீரியத்தோடும் அரங்கேறட்டும். மறுபடியும் தமிழகம் மனம்விட்டுக் குலுங்கிக் குலுங்கிச் சிரித்து மகிழட்டும்.

- சோழ.நாகராஜன்

Pin It