உலகமயமாதலின் இரும்புப் பிடிக்குள் சிக்கிய இந்த நூற்றாண்டில் இனியொரு மக்கள் புரட்சி சாத்தியமே இல்லை என்றுதான் உலகம் விரக்தியுடன் அடங்கிக் கிடந்தது. பூமி உயிர் துடித்த நாளிலிருந்தே தொடங்கிவிட்ட எகிப்தின் பழமை வாய்ந்த பண்பாட்டு நாகரிகம், வரலாற்றின் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளிலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது.

பூலோக அமைப்பில் ஆஃப்ரிக்கா கண்டத்திலிருந்தாலும், அது அரபு நாடுகளின் அரசியல் தளங்களில் ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் ஒரு அரை நூற்றாண்டாய் ஏகாதிபத்திய நாடுகளின் காலடியில் சிக்கிய எல்லா அரபு நாடுகளையும் போலவே, எகிப்தும் ஆதிக்கத்தின் வன்கொடுமைகளால் ஒடுக்கப்பட்டு நாகரீக அடிமைகளாய் 30 ஆண்டுகள் அடங்கி கிடந்தது. மேற்கின் வசீகரத்தில் படுமோசமாக ஈர்க்கப்பட்டு, எகிப்து நாடு அமெரிக்காவின் இன்னொரு பகுதி என்பது போன்ற மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. இஸ்ரேலின் மனிதகுல விரோத நடவடிக்கைகளுக்கு எந்த எதிர்ப்பும் காட்டாமல் நட்பு பாராட்டியும் வந்த நேற்றைய எகிப்து இன்று இல்லை. 

ஆனால் கடந்த 18 நாட்களாக தன்னெழுச்சியாய் ஒன்று திரண்ட மக்கள் சக்தியின் கட்டுக்கடங்காத போராட்டத்தின் காட்டுத்தீயில் இனி மேலும் தாக்குப் பிடிக்க முடியாது என்ற நெருக்கடியில், பிப்ரவரி 11ல் சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக் அதிபர் பதவியில் இருந்து துரத்தப்பட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பி ஓடியதும், சர்வாதிகாரம் பறிபோன அதிர்ச்சியில் உடல் நிலை மோசமாகி உயிருக்குப் போராடும் சூழலும் உருவாகியுள்ளது. உலகப்புகழ் பெற்ற போராளிகள் கூட இன்று உயிரோடு இருந்திருந்தால் கற்பனைகளை மிஞ்சும் நாசகார ஆயுதங்களின் வெறியாட்டங்களுக்கு முன்னால் அடையாளம் இல்லாத அளவிற்கு அவர்களின் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டிருக்கும்.

மனிதநேயம் அழிக்கும் சர்வ வல்லமை கொண்ட ஆதிக்க எந்திரங்களுக்கு முன்னால் எதுவுமே சாத்தியம் இல்லை என்ற நிலையில், வெறும் இணையதள செய்தி பறிமாற்றங்களின் மூலமாக இன்று ஒரு மாபெரும் சரித்திர மாற்றத்தை உருவாக்கியுள்ளனர். ஆயுதங்கள் இல்லை, ஓடி ஒளியும் தலைமறைவு வாழ்க்கை இல்லை, பெரும் உயிர் இழப்புகள் இல்லை, ஆதிக்கசக்திகளின் கால்களை நக்கிக் கெஞ்சவும் இல்லை. ஆனால் நெருப்பினை சுமந்த இதயங்களைத் தொடர் சங்கிலிகளாய் இணைத்தது இணையதள தொடர்புகள் face book ,twitter ,orkut என மக்களின் உள்ளங்களில் புரட்சித் தீ தன்னெழுச்சியாய் வளர்க்கப்பட்டது.

எகிப்தில் உருவான புரட்சி, தலைவர்களே இல்லாத மக்கள் புரட்சியாகும் (This is a revolution without leaders.). சுதந்திர கனவுடன் போராட்டக் களத்தில் துடித்த மூன்று மில்லியன் இதயங்களும் அச்சம் தவிர்த்து நம்பிக்கையை மட்டும் தேர்ந்தெடுத்து கொண்டது. போராட்டக் காலத்தின் ஒவ்வொரு மணித் துளிகளையும் மரணத்திடம் சமர்ப்பித்து விட்டு தங்களின் சுதந்திர வேட்கையுடன் அகிம்சையாகப் போராடினார்கள்.

காகிதப் புலிகள் தானே இவர்கள் என்ன செய்யமுடியும் என்று அலட்சியமாய் இருந்த எகிப்திய சர்வாதிகாரி ஹோஸ்னிக்கு எல்லாம் முடிந்து தெளிவடைவதற்குள் ஆட்சி அதிகாரங்கள் எல்லாம் தலைகீழாய் மாறிவிட்டது. இனி உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பி ஓடி ஒளிந்துவிட்டார். வல்லரசுகள் என்று ஆணவம் கொண்ட சர்வாதிகாரங்கள் எல்லாம் வாய்பிளந்து நிற்கின்றன. வாழ்த்து செய்திகள் அனுப்புகின்றன, பதட்டத்துடன் காணப்படுகிறது. 

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்கள், புரட்சியாளனுக்கு எல்லாமே ஆயுதங்கள் தான். கணினியில் பதியும் ஒவ்வொரு எழுத்தும் புரட்சி நெருப்பாய் இணையதளங்களில் பரவி, நெருப்பு பேரலைக் கடலாய் பொங்கி பெரும் சுழற்சியில் ஆட்சி அதிகாரங்களை தவிடு பொடியாக்கியது. தெருவில் இறங்கிப் போராடிய மக்களுக்கு துப்பாக்கிகளும், பீரங்கிகளும் கொன்று குவிக்கும் தளவாடங்களும் கைப்பொம்மைகளாய் மாறியது.

பெண்கள் தெருவில் இறங்கிப் போராட ஆரம்பித்தாலே மாற்றங்கள் அங்கு உறுதி செய்யப்படுகிறது. அஸ்மா மஹபூபா என்ற ஒரு வீரப்பெண்மனி எகிப்தின் ஆண்மையை தூண்டிவிட, ஒரு சிறு நெருப்பு சர்வாதிகாரத்தை சுட்டெரித்துள்ளது.

செவ்வாய் ஜனவரி 25ல் மிகவும் அமைதியாக திரண்டக் கூட்டம் ஆயிரமாயிரமாய் பெருகியது. பல இலட்சம் உணர்வாளர்களின் உணர்ச்சிப் போராட்டத்தால் டெஹ்ரீர் சதுக்கம் சுதந்திரத்தைப் பிரசவிக்க தொடங்கியது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுதந்திர சதுக்கத்தை நோக்கி வந்த பெரும் மக்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை அன்று பல்கி பெருகியபடியே இருந்தது.

மக்கள் தன்னெழுச்சியாய் சுதந்திர சதுக்கத்தில் (Tahrir Square) திரண்டதை காவல்துறையினரின் துப்பாக்கிச் சூடு, தடியடி பிரயோகம், கண்ணீர், புகைக் குண்டுகள் என எல்லா வன்முறைகளையும் கையில் எடுத்தும் ஒரு சிறு கூட்டத்தைக் கூட கலைக்கமுடியாமல் திணறினர். இராணுவம் தடை உத்தரவு கொண்டு வந்தும் மக்கள் திரண்டு வருவதை எதுவும் செய்ய முடியாமல் அமைதியானர்கள்.

மாறாக சுதந்திர சதுக்கம் மக்களின் போராட்டத்தின் கூடாரமாகியது, மக்களின் ஒன்றுபட்ட தியாகமும் புரிந்துணர்வுடன் கூடிய திட்டங்களும் போராட்டத்தை இன்னும் பல மடங்கு வேகப்படுத்தியது. தயங்கி தயங்கிக் குரல் கொடுத்து வந்த எதிர்க்கட்சிகள் எல்லாம் தெருவில் இணைய ஆரம்பித்தனர்.

காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிலும், ரப்பர் குண்டடியிலும் தடியடிகளால் காயம் அடைந்தவர்களுக்கும் அங்கேயே மருத்துவ சிகிச்சைக் கொடுக்கப்பட்டது, வலிகள் குறைவதற்கு அவகாசம் கொடுக்காமல் காயங்களுடனே மறுபடியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் தொழில் நுட்ப வசதிகள் எல்லாம் தடை செய்யப்பட்டது. வங்கிகள், கடைகள், பணப்புழக்கங்கள் என்று மக்களின் எல்லா அத்தியாவசியங்களும் தடைசெய்யப்பட்டது.

இருப்பினும் ஒவ்வொரு எகிப்திய இளைஞனும் தனது நண்பர்களை போராட்டத்தில் இணைக்க வீடு வீடாகச் சென்று அழைத்தபடி இருந்தனர், நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் புரட்சியின் தாக்கத்தை பரப்புவதிலும் தீவிரமாக ஈடுபட்டனர். தலைநகரினை நோக்கிய மக்கள் கூட்டம் தடையைத் தாண்டி சுதந்திர சதுக்கத்தில் குவிந்த வண்ணம் இருந்தது.

எகிப்து மக்களிடையே மதங்களாலும், கொள்கை நடைமுறைகளால் வேறுபட்டு இருந்தாலும் பொது எதிரியை எதிர்க்கும்போது சிறு வேறுபாடுகள் கூட காட்டாமல் இணைந்து போராடினர். இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும், கிறிஸ்துவ குருமார்களும், கன்னியாஸ்திரிகளும், பெண்ணியம் பேசுபவர்களும், பொதுவுடமைவாதிகளும், ஆண்களும் பெண்களுமாய் இணைந்து போராடியது அரசாங்கத்திற்கு மாபெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. சுதந்திர சதுக்கம் முழுவதும் ஒரு குடும்பம் போலத்தான் காட்சியளித்தது. முகம்தெரியாத சக போராட்டத் தோழர்களுக்கு உணவளித்து, தங்குவதற்கு கூடாரத்தில் இடம் கொடுத்து, காயம்பட்டவர்களை தோள்களில் சுமந்து துளித் தூக்கம் கூட இல்லாமல் 24 மணி நேரமும் தொடர்ச்சியாய் போராட்டத்தை நடத்தினார்கள். எகிப்தின் முபாரக் அரசாங்கம் அதன் அத்தனை சதிகளையும் மக்கள் போராட்டத்திற்கு எதிராக திசை திருப்பியது. கலவர எதிர்ப்பு காவல் துறையினரை திரும்ப அழைத்துக் கொண்டது. காவல்துறையினரையும், சிறையிலிருந்த கைதிகளையும் சீருடையில்லாமல் மக்கள் கூட்டத்தில் ஊடுருவச் செய்து, துப்பாக்கிச சூட்டினாலும் தடியடிகள் நடத்தியும் மக்களின் கூட்டத்தை சீர்குலைக்க முயற்சி செய்தனர்.

மேலும் காவல்துறை வாகனங்களால் கண்மூடித்தனமாகக் கூட்டத்தில் மோதி பலரைக் கொன்றனர். முதல் நாள் சீருடையில் வந்து மக்களைத் தாக்குவதும் மறு நாள் அவர்களே சீருடையில்லாமல் அதிபரின் ஆதரவாளர்கள் போல வந்து பொதுமக்களைத் தாக்குவதும் தொடர்ந்தது.

பணம் கொடுத்து வரவழைக்கப்பட்ட அதிபரின் ஆதரவு NDP உறுப்பினர்கள் குதிரைகளிலும் ஒட்டகங்களிலும் சென்று போராட்டம் நடத்திய மக்களைத் தாக்கினார்கள். ஆனாலும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நிதானம் தவறாமலும் அதே நேரத்தில் தங்களிடையே குழப்பவாதிகள் ஊடுருவாமலும் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்ததோடு, குழப்பவாதிகளை தனிமைப்படுத்தினர்.

போராட்டக்காரர்களுக்கு எதிராகக் கலவரம் செய்தவர்களை எல்லாம் அதிபரின் அபிமானிகளாகவும் அமைதியை விரும்புவர்களாகவும் அரசு ஆதரவு ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டனர். அரசு ஆதரவு தொலைக்காட்சிகளில் முபாரக்கின் ஆதரவாளர்கள் கூடி அமைதிப் பேரணி நடத்துவது போலவும், போராட்டக்காரர்கள் நாட்டில் வன்முறையைத் தூண்டி அரசாங்கத்தை முடமாக்குவதாகவும் தொடர் பிரச்சாரங்கள் செய்யப்பட்டது.

நம் ஊரைப் போலவே சினிமா நட்சத்திரங்கள் தொலைக்காட்சிகளில் தோன்றி தேசபக்தியுடையவர்கள் அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டுத் திரும்புபடி கோரிக்கை வைத்தனர்.

ஆனால் மக்களின் ஒன்றுபட்ட தொடர்சியானப் போராட்டத்தினால் முபாராக்கின் அத்தனை சதிகளும் தகர்க்கப்பட்டது. வேறு வழியே இல்லாமல் முபாரக் தொலைக்காட்சியில் தோன்றி இன்னும் 8 மாத காலத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்ற உறுதிமொழியை மக்களுக்கு வழங்கினார். அந்த உரை மிகவும் உருக்கமாகவும் மக்களைப் பாதிக்கக் கூடியதுமான உரையாக இருந்தது. முபாரக்கின் முதலைக் கண்ணீர் போராட்டத்தில் இருந்த ஒரு சில மக்களைக் கூட வெகுவாக பாதித்தது. போராட்டக்காரர்களில் சிலர் தாங்கள் தவறு செய்து விட்டதாகக் கூட சமயத்தில் பின் வாங்கினர். அரசியல் மாற்றம் வரும் என்ற வாக்குறுதியில் திருப்தியடைந்த மக்கள் அனைவரும் ஒரு கட்டத்தில் போராட்டத்தைக் கைவிட்டு அரசாங்கத்தை இயங்க செய்ய வேண்டும் என்ற பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர்.

பொதுவாக அனைத்து எதிர்க்கட்சிகளும் முபாரக்கின் பேச்சுவார்த்தைக்கு உடன்படலாம் என்ற மன நிலைக்கு வந்தனர்.

அடிமைகள் தங்களின் எஜமானை மன்னித்து மறுபடியும் அடிமை வாழ்க்கையைத் தொடரலாம் என்ற நிலைக்கு வந்தனர். ஆனாலும் சர்வாதிகாரத்தை அழித்து வளமான எகிப்தினை உருவாக்க உறுதிகொண்ட மக்கள் எந்த ஒரு அரசியல் நாடகங்களையும் நம்பாமல் அதிபர் முபாரக் பதவி விலகும் வரையிலும் போராட்டம் தொடரும் என்று உறுதி காட்டினார்கள்.

பெரும் மக்கள் போராட்டத்தினால் அதிகமாய் அச்சத்தில் உறைந்து போனது அமெரிக்காவும், இஸ்ரேலும் தான். என்ன செய்வது என தெரியாமல் திக்குமுக்காடினார்கள். முடிந்த வரை விளைவுகளை தனக்கு எப்படி சாதகமாக்கிக் கொள்ளலாம் என்ற நீண்ட திட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

ஒரு கட்டத்தில் இந்த புரட்சியினால் இஸ்லாமிய தீவிர அடிப்படைவாத அமைப்பான இஸ்லாம் பிரதர்ஹூட் (சகோதர இயக்கம்) அரசியல் லாபம் காணப்போகிறது என்றும் இது எகிப்தில் மதவாத இஸ்லாமிய ஆட்சிக்கு வழி வகுக்கும் என்றெல்லாம் மக்கள் மத்தியில் பரப்புரை செய்யப்பட்டு ஒரு வித அச்ச உணர்வை ஏற்படுத்த நினைத்தனர். மக்கள் இதை யாரும் நம்புவதாகவும் இல்லை, போராட்டத்தை கைவிடுவதாகவும் இல்லை. புரட்சியின் போது 500க்கும் மேற்பட்ட மக்கள் வீரமரணம் அடைந்தார்கள்.

போராட்டத்தின் உச்சத்தில் இராணுவமும் மக்களின் போராட்டத்திற்கு மறைமுக ஆதரவு கொடுத்தது. பிடி இழந்த முபாரக் தப்பி ஓடியதுடன் மக்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

போராட்டத்தின் புழுதியில் வெளியில் தெரியாத இன்னும் சில தியாகங்கள் எதிர்காலம் இல்லாமல் அன்னியப்பட்டுள்ளது. அது எகிப்தின் சாலையோர சிறுவர்கள். வீடு, வாசல், சொந்தம், பந்தம் என எதுவும் இல்லாமல் சாலையோரத்தில் வசித்து வந்த சுமார் ஐம்பதாயிரம் சிறுவர்களின் தியாகங்களும் இந்த போராட்டத்தின் வெற்றியில் கவனிப்பார் அற்று கிடக்கிறது. கடைகள் திறக்கப்படாத, தினசரி வாழ்க்கை தடைபட்டுப் போராட்டங்கள் உச்சத்தில் இருந்த நிலையில் உணவின்றி உறக்கமின்றித் தெருத்தெருவாக சுற்றிய இந்த அனாதைச் சிறுவர்களுக்கு வெளிச்சம் தந்தது சுதந்திர சதுக்கம். இளம் போராளிகளின் போராட்டத்தில் 15 வயதே நிரம்பிய பெயர் தெரியாத ஒரு சிறுவன் பெயர் தெரியாத ஒருவனால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டான். போராட்டம் முடிவுக்கு வந்து இரண்டு வாரங்கள் ஆகிய நிலையிலும் இறந்தவனின் பிணத்தைக் கூட வாங்க யாரும் முன் வராமல் பிணவறையில் கிடந்திருக்கிறான். எகிப்தில் மலரப்போகும் ஜனநாயகத்தின் நினைவுகளில் இவன் முகம் தெரியாமல் போகலாம். ஆனாலும் அச்சமில்லாமல் வாழப்போகும் பெயர் தெரியாத பல குழந்தைகளின் எதிர்காலப் பாதுகாப்புக்கு இவனின் வீரமரணமும் காரணமாக அமையலாம்.

எவன் இந்த குழந்தைகள் தெருவுக்கு வரக் காரணமானவனோ அவன் அதே குழந்தைகளால் ஆட்சியிலிருந்து விரட்டப்பட்டான்.

பெண்களும் குழந்தைகளுமாய், இளைஞர்களும், பெரியவர்களுமாய் ஒன்று திரண்ட போராட்டத்தினால் மிகவும் குறுகிய காலத்திலேயே இந்தப் போராட்டம் வெற்றி பெற்றது. களத்தில் போராடும் மனிதர்களை மிகவும் அற்பமான உயிர் என்று அழித்தொழிக்கும் மூர்க்கத்தைக் கொள்ளாமல் மிகவும் சிக்கலான நேரத்திலும் பொறுமையாக சூழ்நிலைகளை கையாண்டதில் எகிப்திய ராணுவம் எல்லா நாடுகளுக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறது.

நம் ஊரில் காவல் துறையினரிடம் அகப்படும் சாமனியனைக் கூட உலகத் தீவிரவாதி போல சித்திரவதை செய்து போலி மோதல் கொலைகளிலேயே பல ஆயிரம் பேரைக் கொன்று குவித்து விடுவார்கள். இந்திய இராணுவத்தைக் கேட்கவே வேண்டாம்.

அந்நிய நாடுகளுடனான போர்களில் அகிம்சை, ஆனால் சொந்த மக்களின் மீது போர் என்று புதிய கொள்கையுடன் செயல்படுகின்றனர். எகிப்திய ராணுவத்தினர்கள் மனநோயாளிகள் போல் செயல்படாமல் கடமை உணர்ந்து மிகவும் பொறுப்புடன் நடந்து கொண்டனர்.

துனிசியாவில் ஒரு பழ வியாபாரி கொளுத்தியப் புரட்சித் தீ.. எகிப்தைக் கடந்து, ஓமன், பக்ரைன், லிபியா மற்றும் ஈரான் என பயணித்தப்படியே இருக்கிறது. பக்ரைன் அரசு தனது சொந்த மக்களையே தெருவில் ஓட ஓட விரட்டி சுட்டுக்கொள்கிறது. 42 ஆண்டுகால லிபியாவின் கொடுங்கோல் ஆட்சியியாளன் கர்னல் கடாபி சொந்த மக்களை வான்வெளி தாக்குதல்களால் குண்டுகள் வீசியும், கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடுகள் நடத்தியும் ஓர் உள்நாட்டுப் போரை நடத்தி வருகிறான். நாட்கள் பல கடந்தாலும் இவர்களின் போராட்டங்கள் அதி தீவிரமாகித்தான் வருகிறது. அமெரிக்காவின் காலடி நாய் போல இருந்த மற்ற அரபு நாட்டு அதிபர்களும், மன்னர்களும் தங்கள் மக்கள்களுக்கு சலுகைகளை வாரி வழங்கி வருகின்றனர். புரட்சியின் தேவை அவர்களுக்கு வந்துவிடாமல் இருப்பதற்காக வரலாறு காணாத சலுகைகளையும், உதவிகளையும் வழங்கி வருகின்றனர். இதற்கிடையே உலகம் முழுவதும் பரவிவரும் மக்கள் புரட்சியினை தங்களுக்கு சாதகமாக மாற்றும் முயற்சியில் அமெரிக்காவும், இஸ்ரேல் பயங்கரவாத அரசுகளும் தங்களது எதிரி நாடுகளில் ஆட்சி மாற்றங்கள் ஏற்படுத்துவதற்கு குள்ள நரிவேளைகளும் பார்த்து வருகிறது.

எதேச்சதிகாரங்களை விரும்பாத இஸ்லாமிய மண்ணில் இத்தனை வருடங்களாக அமைதியாய் இந்த மக்கள் அடங்கிக் கிடந்ததே பெரும் ஆச்சரியமான ஒன்றாகும். ஏனென்றால் ஜனநாயகத்தை நிலைநாட்ட வரலாறு முழுவதும் பல தியாகங்களை விதைத்துள்ளனர்.

உலகம் முழுவதும் புரட்சியின் சிந்தனை விழித்துக் கொண்டது. ஒவ்வொரு சேகுவாரா இதயங்களுக்குள்ளும் தீப்பிடிக்க, தீப்பிடிக்க உலகம் எங்கும் புரட்சி தீ பரவிக்கொண்டிருக்கிறது..... நாளை அது அரபு தேசத்தை சுட்டெரிக்கலாம், பிறகு பாகிஸ்தானை, ஆப்கானை .. ஏன் அது இந்தியாவையும் கூடத் தொடலாம்..

இந்தியாவை இந்த தீ தொட்டுவிடாது என்று உறுதியாக சொல்வதற்கு இந்த அதிகார வர்க்கத்திடம் ஏதாவது காரணங்கள் இருக்கின்றதா?.

இந்தியா மற்ற தேசங்களை விட எல்லா வகையிலும் எப்பொழுதுமே முன்னோடிதான். காரணங்களாகவே வாழும் நாடு இந்தியா.... அது ஊழல் என்றாலும் உலகம் காணாத ஊழல், ஏமாற்று மோசடி என்றாலும் வரலாறு காணாத மோசடிகள்.. பட்டினி சாவு, விலைவாசி உயர்வு, உள்ளூர் மக்களை அழித்து பெரும் முதலாளிகளை மட்டும் வாழ வைக்கும் ஆட்சி முறைகள், எங்கோ உருவான எயிட்ஸ் உட்பட எல்லா உயிர் கொல்லி நோய்களுக்கும் நோய் விற்கும் சந்தை, சுவாசிக்கும் காற்று முதல் குடிக்கும் தண்ணீர் உட்பட எல்லாமே இங்கேயே எடுத்து இங்கு இருப்பவர்களிடமே காசு பறிக்கும் உலகமயம்.

கல், மண், சிலை, மயிர், மட்டை, புல், புண்ணாக்கு, மது, மங்கை, புகை, ஆன்மிகம் அறிவியல், அரசியல் இப்படி எதை எடுத்தாலும் தொழில் செய்யும் பன்னாட்டு உலக சந்தையாகத் தான் இந்தியா பார்க்கப்படுகிறது.

நடுத்தரவாதிகளை விலைவாசி உயர்வினால் பிச்சைக்காரர்களாக்கியும், விவசாயிகள், உழைக்கும் மக்கள் கழுத்தில் தூக்குக் கயிற்றை இறுக்கியும், காடுகளை அழித்தும் கனிமங்களைத் திருடியும், பழங்குடியினரை நகரங்களுக்குத் துரத்தியும் மக்களை அடக்கியும், வன்கொடுமைகளால் ஒடுக்கியும், சொந்த மக்களிடம் சர்வாதிகாரம் செய்து வருவது மன்னராட்சி அல்ல.. நாம் அரசியல் சூதாட்டாத்தால் தேர்ந்தெடுத்த மக்கள்நாயக அரசுகள் தான்.

ஆக மொத்தம் புரட்சிக்கான காரணங்கள் நம் தேசம் முழுவதுமாய் பரவி, நிரம்பி, தேங்கிக் கிடக்கின்றது. மற்ற நாடுகளை விடவும் புரட்சித் தீ வெடித்து மக்கள் விரும்புகின்ற நல்லாட்சி மலர இந்தியாவிற்குத் தான் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மக்கள் ஒதுங்கி இருந்தாலும் ஆதிக்க சக்திகள் மக்களைப் புரட்சியினை நோக்கி விரட்டிய வண்ணம் உள்ளனர்.

எல்லாவற்றிற்கும் சாத்தியமான இந்தியாவில் புரட்சிகளுக்கான சாத்தியங்களும், காரணங்களும் அதிகமாகவே இருக்கின்றன!!!!

சுதந்திர சதுக்கம், பேர்ல்ஸ் சதுக்கம், கிரீன்ஸ் சதுக்கம் எனத் தொடங்கியது அண்ணா சதுக்கம் என்றும் மாறலாம்....

நெருப்புகள் எப்பொழுதோ மூட்டப்பட்டு விட்டது...

- மால்கம் X இராசகம்பீரத்தான்

Pin It