கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு, அதை நிராகரிக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் கலைஞர்கள் கூட்டறிக்கை எனும் தளத்தில் தங்களை முன்னிறுத்தி ஒரு சர்ச்சை உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தாங்கள் அறிவீர்களா? 

சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் திரு.ஞானம் அவர்களின் நிறைவுரையில் என்னைத் தொடர்புபடுத்தி எழுந்த சர்ச்சையைக் குறித்து ஓரளவுக்கு நான் அறிவேன். 

நீங்கள் தமிழ்நேயம் அமைப்பின் தலைவர் எனவும், அதில் நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் இருப்பதாகவும், கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு ஆதரவாக  நீங்கள் தமிழக எழுத்தாளர்களுக்கு சுற்றுநிரூபம் அனுப்பி கொழும்பு மாநாட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் செயல்பட்டதாகவும், அதன்பின் தமிழக எழுத்தாளர்களின் எதிர்ப்பு அலை ஓய்ந்துவிட்டதாகவும் மாநாட்டு ஏற்பாட்டாளர்களில் ஒருவரான திரு.தி.ஞானசேகரன் தனது கொழும்பு மாநாட்டு உரையில் தெரிவித்திருக்கிறார். இது குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? 

kovai_gnani_400திரு.ஞானம் மாநாட்டில் என்னைக் குறித்து தெரிவித்த கருத்துக்கள் பலவும் உண்மையில்லை. என்னைப் பொறுத்தவரையில், நான் 'தமிழ்நேயம்' இதழின் ஆசிரியர். 'தமிழ்நேயம்' இதழுக்கென்று தனி அமைப்பு எதுவுமில்லை. நெருக்கமான நண்பர்கள் சிலர் எனக்குண்டு. தமிழ்நேயம் அமைப்பில் நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் இருப்பதாக திரு.ஞானம் சொல்வதில் சிறிதளவும் உண்மையில்லை. 

கொழும்பு தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்கு தமிழகத்தில் தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பை முறியடிக்கும் நோக்கத்துடன்தான் 'என்னைத் தெரிவு செய்து', என் கேள்விகளுக்கு திரு.ஞானம் பதில் தந்தார் என்று அவர் தெரிவிக்கும் கருத்தில் அவரது ‘அரசியல்' தான் புலப்படுகிறது. 

திரு.ஞானம் அவர்கள் மூலம் நான் அறிந்த செய்திகளை வைத்து தமிழகத்தில் உள்ள எழுத்தாளர்களின் கருத்தை மாற்றும் நோக்கில் நான் எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. 

திரு.ஞானம் அவர்கள் தொலைபேசியில் எனக்குத் தெரிவித்த விபரங்களையும் அவருக்கு நான் தந்த என் பதிலையும் என்னளவில் மறைக்க வேண்டாம் என்ற முறையில் நண்பர் திரு. சூரிய தீபனுக்கு ஒரு மடல் எழுதி அதன் நகலை கவிஞர் இன்குலாப் அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். 

சிங்கள அரசின் அனுமதியோடும் ஆதரவோடும் மாநாடு கூட்டப்படவில்லை என்று திரு. ஞானம் உறுதியாக தெரிவித்ததோடு போர் முடிந்து ஆண்டு கழிந்த நிலையில் தமிழ் எழுத்தாளர்கள் இலங்கையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி குறித்து பேசுவதற்காகவும், நலிவடைந்த எழுத்தாளர்களுக்கு நிதிஉதவி செய்யும் முறையில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கிலும் மாநாட்டை நடத்துவதாகவும், சிங்கள அரசுக்கு எதிராக தங்களால் எதுவும் தற்கால சூழலில் செய்வதற்கு இல்லையென்றும் திரு.ஞானம் தெரிவித்ததை ஏற்று, இப்படித்தான் மாநாடு நடைபெறும் என்றால் மாநாட்டுக்கு என் வாழ்த்துக்கள் உண்டு என்றும் திரு.ஞானம் அவர்களுக்கு நான் தெரிவித்த செய்தியை நண்பர்களுக்கு இடையில் மறைக்கவேண்டாம் என்ற முறையில் திரு.சூரிய தீபனுக்கும், கவிஞர் இன்குலாபுக்கும் தெரிவித்தேன். 

அவர்கள் கருத்தை மாற்றுவது என் நோக்கமாகவும் இருக்கவில்லை. 

நீங்கள் கொழும்பு எழுத்தாளர்கள் மாநாட்டை நிராகரிக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்களின் கூட்டறிக்கையில் கையொப்பமிட்டிருக்கிறீர்கள். அதே நேரத்தில் நீங்கள் கொழும்பு மாநாட்டை வரவேற்று, வாழ்த்தியிருப்பதாக திருமதி.ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம், திரு.தி.ஞானசேகரன் போன்றவர்கள் சொல்கிறார்கள். இது முரண்பாடானதாக இருக்கிறது. என்ன நடந்தது என்பது குறித்து விரிவாகச் சொல்வீர்களா? 

கொழும்பு மாநாட்டை நிராகரித்து தமிழ் எழுத்தாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் எனக்கு உடன்பாடு உண்டு. சிங்கள அரசு ஈழத் தமிழ் மக்களின் விடுதலை போராட்டத்தை இந்தியா முதலிய நாடுகளின் ஒத்துழைப்போடு நடத்தி முடித்தது என்பதிலும், ஈழத் தமிழர்கள் மீண்டும் எழுவதற்கான எந்த முயற்சியையும் தொடர்ந்து முறியடிக்கும் என்பதிலும், இலங்கையில் வாழ்ந்து கொண்டு சிங்கள அரசுக்கு எதிராக தமிழ் எழுத்தாளர்கள் எத்தகைய தீர்மானத்தையும் நிறைவேற்ற முடியாது என்பதிலும் எனக்கு உறுதியான நம்பிக்கை உண்டு. 

சிங்கள அரசை எந்த வகையிலும் பகைத்துக் கொள்ள இயலாத நிலையில் தமிழ் எழுத்தாளர்கள் கொழும்பில் கூடி இலக்கியம் பற்றி உரையாடுவதில் இலங்கைக்கு வெளியில் உள்ள தமிழ் எழுத்தாளர்கள் முரண்பட வேண்டியது இல்லை. கூடுதலாக நான் இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகின்றேன். ஈழ மக்களின் விடுதலையை முன்னர் விரும்பி ஏற்றுக்கொண்ட தமிழர் தேசிய கூட்டணியின் தலைவர் திரு.சம்பந்தம் அவர்கள், போருக்குப் பிறகான சூழலில் மாபெரும் அழிவை எதிர்கொண்ட ஈழத் தமிழ் மக்களின் வாழ்வுக்கு வழிதேடும் முறையில் சிங்கள அரசோடு ஒத்துழைப்பதை தவிர வேறு வழியில்லை என்று கூறி வருவதையும் நான் நினைவில் கொள்கிறேன். 

மாநாட்டில் அரசியல் எதுவும் பேசமாட்டோம் என்று திரு.ஞானம் கூறியதையும் நாம் புரிந்து கொள்ள முடியும். இலங்கையில் தமிழ் இலக்கிய வாழ்வும் வளர்ச்சியும், தமிழ் மக்களின் வாழ்வுரிமைகளோடு இன்றியமையாத உறவுடையது என்பதையும் நான் மறுக்கவில்லை. இந்நிலையில் சிங்கள அரசோடு தமிழ் எழுத்தாளர் அமைப்பு உள்ளார்ந்த முரண்பாட்டை கொண்டதாகத்தான் இருக்கின்றது. இன்று இல்லை என்றாலும் நாளடைவில் இந்த முரண்பாடு வெளிப்படத்தான் செய்யும். 

மேலும் நான் தெரிவித்த வாழ்த்து என்பதும் எந்த வகையிலும் சிங்கள அரசு பற்றிய என் கருத்தில் மாற்றத்தை குறிப்பதாக நண்பர்கள் கருத வேண்டியதில்லை. 

திரு.ஞானம் அவர்கள் தன்னைப் புலி ஆதரவாளர் என்று தொலைபேசியில் எனக்குத் தெரிவித்ததோடு, பல்லாண்டுகளாகத் தான் நடத்திவரும் ஞானம் இதழ்களில் இடம்பெற்ற 13 ஆசிரியர் உரைகளையும் எனக்கு அனுப்பி வைத்தார். அந்த உரைகளில் சிங்கள அரசுக்கு ஆதரவாக ஒரு சொல்கூட இல்லை. அன்றியும் ஈழத்தமிழர் விடுதலை போராட்டத்திற்கு எதிராக ஒரு சொல்லும் இல்லை. திரு. ஞானம் அவர்களை நான் நம்பியதற்கு இதுவும் ஓர் ஆதாரம். 

திருமதி. இராஜேஸ்வரி அவர்களின் நிலைபாட்டை நானும் நன்கு அறிவேன். அவரது நிலைபாட்டோடு நான் என்றும் உடன்பாடு தெரிவிக்கவும் இல்லை. விடுதலைப்புலிகளின் போரை அவர் தொடர்ந்து மறுத்தே வந்தார். போருக்குப் பிறகான சூழலில் மாபெரும் அழிவை எதிர் கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு அரசு தரப்பில் இருந்தும், வேறு இடங்களில் இருந்தும் குறைந்த அளவுக்கேனும் சில உதவிகளை பெறுவதற்காகவே அவர் அலைந்து கொண்டிருக்கிறார் என்று நான் புரிந்து கொள்கிறேன். 

இலங்கை அரசு ஆதரவாகச் செயல்படுபவர்கள், மகிந்த ராஜபக்சேவின் அரசியலை உலகெங்கும் எடுத்துச் செல்பவர்கள், இலங்கையில் இனக்கொலை நடக்கவில்லை என்பவர்கள் மாநாட்டுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருக்கும் சூழலில், கொழும்பு மாநாட்டின் பிரதான பேச்சாளர்களாகவும் இவர்கள் பங்கு பற்றியிருக்கும் சூழலில் இந்த மாநாட்டுக்கு அரசியல் இல்லை என நீங்கள் கருதுகிறீர்களா? இந்த மாநாட்டினை இலங்கை அரசு பயன்படுத்தாது என நீங்கள் கருதுகிறீர்களா? 

மாநாட்டில் யார் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்ற பட்டியல் என்னிடம் இல்லை. இவர்களில் சிங்கள அரசின் இனப்படுகொலையை ஆதரிப்பவர்கள் யாரென்பதும் எனக்குத் தெரியாது. இத்தகையவர் மாநாட்டில் பங்கு கொள்வார்கள் என்றால், மாநாட்டின் நோக்கம் குறித்து ஐயுறுவதில் தவறில்லை. 

இப்படித்தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு எனக்கு இல்லை. மாநாட்டை இலங்கை அரசு பயன்படுத்தி கொள்ளத்தான் செய்யும். அதாவது உலக அளவிலான தமிழ் எழுத்தாளர்கள் கொழும்பில் கூடி பலநாட்கள் மாநாடு நடத்தும் அளவிற்கு இலங்கையில் அமைதி நிலவுகின்றது. மனித உரிமைகள் இலங்கையில் மதிக்கப்படுகின்றன என்றெல்லாம் இலங்கை அரசு பரப்புரை செய்ய முடியும். 

மாநாடு நடைபெற்று முடிந்த நிலையில் உண்மைகள் மெல்ல மெல்ல வெளிப்படத்தான் செய்யும். தமிழில் எதிர் இலக்கியத்தின் வகிபாகம் என்ற அமர்வில் அரசுக்கு எதிரான உணர்வுகள் வெளிப்படுத்தப்பட்டதாகவும் அறிகிறேன். 

இதுபற்றி மேலும் செய்திகள் நமக்கு வந்து சேரலாம். 

நீங்கள் ஒப்பிக் கையொப்பமிட்ட கொழும்பு மாநாட்டை நிராகரிக்கக் கோரும் எழுத்தாளர்கள் கலைஞர்களின் கூட்டறிக்கையானது அடிப்படையில் இனக்கொலை எனும் பிரச்சனையில் எழுத்தாளர்கள் மேற்கொள்ள வேண்டிய அறநிலைப்பாட்டையும், இலங்கையில் எழுத்தாளர்கள் கலைஞர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதனையும், கருத்துச் சுதந்திரத்திற்கு அங்கு இடமில்லை என்பதனையும் முன்வைத்திருந்தது. இன்றைய இலங்கையில் நிலவும் சூழலில் நீங்கள் அறுதியாகத் தேர்ந்து கொள்ளும் நிலைப்பாடு எது?  

துல்லியமான மொழியில் கேட்பதானால், இன்றைய இலங்கையின் இனப்படுகொலை அரசைக் கருத்தில் கொண்டு, கொழும்பு மாநாட்டினை நிராகரித்த தமிழ் எழுத்தாளர்களோடு தங்களை நீங்கள் அடையாளப்படுத்திக் கொள்கிறீர்களா? அல்லது கொழும்பு மாநாட்டின் பின்னிருக்கும் அரசியலற்ற இலக்கிய அரசியலோடு தங்களை இணக்கப்படுத்திக் கொள்கிறீர்களா? 

சிங்கள அரசின் அனுமதியோடும் முழுமையான ஆதரவோடும்தான் மாநாடு கொழும்பில் கூட்டப்படுகிறது என்ற அடிப்படையில் கொழும்பு மாநாட்டை நாம் நிராகரித்தோம். சிங்கள அரசின் அணுசரணை இல்லாமல் மாநாடு நடத்தப்படுவதற்கு வாய்ப்பிருக்க முடியாது என்றும் நாம் நம்பினோம். மற்றபடி கொள்கையில் இருந்து எந்த வகையிலும் எனக்கு மறுப்பில்லை. 

அரசின் அணுசரனையோடுதான் மாநாட்டை அவர்கள் கூட்டுகிறார்கள் என்றே வைத்துக்கொண்டாலும் அவர்கள் கருத்துக்கு ஒத்த முறையில் நடத்தும் மாநாட்டை நாம் நிராகரிக்க வேண்டியதில்லை என்ற அளவில் மட்டும் நான் பிறகு வேறுபட்டேன். 

இலங்கையில் எழுத்தாளர்களுக்கு கருத்துச் சுதந்திரம் இல்லை. அரசுக்கு எதிராக அவர்கள் செயல்பட முடியாது என்பதில் எந்த மறுப்பும் இல்லை. கொழும்பு மாநாட்டை நிராகரித்தல் என்ற அளவில் நான் மாறுபடுகிறேனே ஒழிய மற்றபடி (நிராகரித்து) அறிக்கை வெளியிட்ட தமிழ் எழுத்தாளர்களின் கருத்தில் முற்றான உடன்பாட்டோடுதான் நான் இருக்கிறேன். 

தற்போதைய நிலையில் அரசியலற்ற இலக்கியம் என்பதை முன்வைத்துத்தான் மாநாட்டை அவர்கள் கூட்டியிருக்க வேண்டும். ஆனால் நாம் கேட்கலாம்; அரசியலற்ற இலக்கியமென்று ஏதேனும் இருக்க முடியுமா? 

திரு. ஞானம் அவர்கள் என்னை வைத்து ஏதோ செய்ய முனைந்தது எனக்கு மரியாதை தருவதாக இல்லை. நான் சொல்லி எவர் கருத்தையும் மாற்றவும் இல்லை. 

நான் வாழ்த்து தெரிவித்தேன் என்பதற்காக கூட்டறிக்கையில் கையெழுத்திட்ட எழுத்தாளர்களுக்கு எந்த இழுக்கும் நேர்ந்திருப்பதாக நான் கருதவில்லை. இழுக்கு நேர்ந்தது என்று கருதி நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டியதும் இல்லை. எனக்கு மட்டும் ஏதோ இழுக்கு நேர்ந்ததென்று நண்பர்கள் கருதலாம். 

மேலும் ஒன்று சிங்கள அரசையோ கொழும்பு மாநாட்டையோ நாம் விமர்சனம் செய்வது ஒரு புறமிருக்க, திரு. ஞானம் அவர்கள் கேட்டுக் கொண்டபடி, ஈழத்துக் குழந்தைகளின் கல்விக்கு, நலிவடைந்த மக்களுக்கு, தமிழ் எழுத்தாளர் என்ற முறையில் நாம் ஏதாவது செய்ய வேண்டாமா? திருமதி. இராஜேஸ்வரி அவர்கள் கேட்டுக் கொண்டபடி, வெள்ளத்தில் அவதிப்படும் மக்களுக்கு நாம் என்ன செய்ய முடியும்? 

இதுபற்றி நண்பர்கள் ஏதாவது செய்யத்தான் வேண்டும்.

Pin It