கீற்று இணைய தளத்தில் ஒலிக்காத குரல்கள் என்ற தலைப்பில் கணீயான் சமூகத்தின் உணர்வுகளை கண்ணீர் கனவுகளை கள ஆய்வுகளோடு. வெளியிடப்பட்டிருந்தது. அதை படித்த பல இலக்கிய ஆர்வலர்கள் தொலைபேசியிலும் நேரிலும் தங்களது பாராட்டுக்களை தெரியப்படுத்தியபோது இதயம் சிலிர்த்தது.

 அடிமைப்பட்ட ஒரு இனத்தின் மீதான மனிதநேய வெளிப்பாடுகள் கணியான் இன மக்களின் இதயத்தில் ஈரமாய் இன்னும் உலராமலேயே இருக்கிறது. கட்டுரையைப் படித்துவிட்டு தமிழ்நாடு கணியான் மக்கள் சங்கத்தலைவர் திரு ஷிபு தொடர்பு கொண்டு பாராட்டியதோடு கணியான் சமூகம் பற்றிய மேலும் பல தகவல்களைச் சொன்னார். அத்தனையும் சுவாரஸ்யம் மிகுந்த அரிய பொக்கிஷங்கள் என்பதை உணர்ந்து. மீண்டும் ஒருமுறை கள ஆய்வுக்காக அவரோடு இட்டகவேலி நீலகேசி அம்மன் கோவிலுக்கு பயணமானோம்.

 கண்டு சொல்பவன் கணியான், கணித்துச் சொல்பவன் கனகன் (சோதிடம்) என இரு வேறு பிரிவு மக்கள் குமரிமாவட்டத்தில் வாழ்ந்துவரும் தகவலைச்சொன்னார். ஆனால் பலரும் தவறான தகவல்களையே இணைய தளத்தில் பதியவிட்டிருக்கின்றனர்.

 "யாதும்ஊரே,யாவரும்கேளீர்" என்று தமிழரின் வாழ்வியல் நெறியை உலகம் கேட்க உரக்க உரைத்த கணியன் பூங்குன்றனாரின் மரபு வழியினர் கணியான் என்று பலரும் எழுதிவருகின்றனர். இது உண்மையில்லை கணியன் என்ற அவரது பெயருக்கும் கணியான் என்ற பழங்குடி இனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.

 மன்னர் ஆட்சி காலங்களில் மன்னர் போருக்கு போகும்போது காலநேரங்களை கணித்துச் சொல்லவும், வானத்திலுள்ள நட்சத்திரங்களை அறிந்து  திசைகளைப்பற்றியும், இதுவரை எந்த இடத்தை அடைந்திருக்கிறோம் என்று மன்னருக்கு கணித்துச்சொல்ல கணியன் என்பவரை கூடவே அழைத்துச் செல்வதாக வரலாறுகள் கூறுகிறது.

 எதிர்காலத்தை கணித்துச் சொல்லும் கணியன் என்ற பெயர் மருவி கனகன் என்று மாறி தற்பொழுது சோதிடம் சொல்லும் தொழிலை குலத்தொழிலாக இன்றும் செய்து வருகின்றனர். காடுகளிலிருந்து பிரிந்த கணியான் இனத்துக்கும் கணித்துச்சொல்லும் கனகன் இனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் கனகன் இன மக்கள் நாங்கள் தான் கணியான் என்று சொல்லி தாசில்தாரையும் ஆர்.டி.ஓக்களையும் நம்ப வைத்து இருநூறுக்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் கணியான் என்ற சான்றிதழ் வாங்கி அரசுப்பணிகளில் ஏறி இன்று உயர்ந்த அந்தஸ்தில் வாழ்ந்து வருகின்றனர்.

 தமிழ்நாடு கணியான் மக்கள் சங்கத்தலைவர் திரு ஷிபுவின் பள்ளி மாற்றுச்சான்றிதழில் கணியான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கணியான் என்று சாதிச்சான்றிதழ் கேட்டபோது நீ கணியான் அல்ல என்று சான்றிதழ் மறுக்கப்பட்டுள்ளது. அவரது தந்தையின் சொத்து பத்திரத்தில் அவரது தந்தை பெயர் தங்கையன் கணியான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பத்திரத்தின் நகலை கொடுத்தபோதும் சான்றிதழ் தராமல் தரமறுத்திருக்கிறது தக்கலை ஆர்.டி.ஓ அலுவலகம். காரணம் என்றவென்றால் கனகன் இன மக்களுக்குத்தான் இதுவரை கணியான் என்று சான்றிதழ் கொடுக்கப்பட்டிருந்தது. 

உண்மையான கணியான் இனத்திலிருந்து திரு ஷிபு சான்றிதழ் கேட்டும் கிடைக்காத நிலையில் 05-03-2007 ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டமும், 26-11-2007 ல் தனது இனத்துக்கு சான்றிதழ் தர மறுக்கும் தக்கலை ஆர்.டி.ஓ அலுவலகம் முன்பு தனது இனமக்களை ஒன்றுதிரட்டி  சாலை மறியல் செய்திருக்கிறார். ஆவன செய்கிறோம் என்று சமாதானப்படுத்திய ஆர்.டி.ஓ அலுவலகம் இன்றுவரை சான்றிதழ் தராமல் இழுத்தடிக்கிறது.

26-02-2008 அன்று தமிழக கவர்னருக்கும் தமிழ்நாடு பழங்குடி நலத்துறை இயக்குநருக்கும், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இயக்குநருக்கும் கணியான் சாதிச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் கொடுத்திருக்கிறார்கள். 18-12-2008 அன்று உண்னாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தபோது தக்கலை ஆர்.டி.ஓ அலுவலரும், தாசில்தாரும், டி.எஸ்.பி யும் ஒரு மாதத்தில் ஏற்பாடு செய்கிறோம் என்று சொல்லி இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை கண்ணீர் மல்க சொன்னபோது நமது கண்களிலும் நீர்த்துளிகள்.    

 2009-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பும் செய்திருக்கிறார்கள் பயன் என்னவோ பூஜ்ஜியம்தான். கணியான் சமூகத்தில் படித்தவர்கள் எண்ணிக்கை மிகக்குறைவு அப்படியிருந்தும் படித்து டிகிரி வாங்கி வேலை தேடலாம் என்று சான்றிதழ் கேட்டால் தரமறுத்து இன்றுவரை திரு ஷிபு வேலையில்லா பட்டதாரியாகவே வாழ்ந்துவருகிறார்.

 திரு.ஷிபு அவர்களின் தாயார் கொடுத்த ஊக்கத்தின் பேரில் தனது இன மக்களின் உணர்வுகளை உரக்கச் சொல்ல தமிழ்நாடு கணியான் மக்கள் சங்கம் என்ற அமைப்பை தொடங்கி தனது இன மக்களுக்காக தொடர்ந்து போராடி வருகிறார். அத்தனை கோரிக்கைகளும் கிணற்றில் போட்ட கல்லாகவே கிடப்பில் கிடக்கிறது.

 திரு.ஷிபு அவர்களின் தாயார் கணியான் சமூகத்தைப்பற்றிய பழங்கால நிகழ்வுகளை அவர்களது தந்தை சொல்லக்கேட்டு நிறைய தெரிந்து வைத்திருக்கிறார். அவர்களது தந்தை நல்லதம்பி கணியான் இட்டகவேலி நீலகேசி அம்மன் கோவிலில் பூஜை செய்த ஒரு பூஜாரி.

 சென்ற இதழில் இட்டகவேலி நீலகேசி அம்மன் கதை பற்றி குறிப்பிட்டிருந்தோம், அந்த கோவிலின் வழிபாடு முறைகள் வித்தியாசமானவை. அதை அறிந்துகொள்ள தேங்காப்பட்டினத்திலுள்ள திருமதி சரசம்மா அவர்களைச் சந்தித்தோம். அவர்கள் சொன்ன தகவல்கள் மேலும் ஆச்சரியமூட்டின.

உலகத்தில் எந்த கோயிலிலும் இல்லாத நிகழ்ச்சியான கமுகு எழுந்தருளல் இங்கு ஒன்பதாவது திருவிழாவின்போது நடைபெற்று வருகிறது. இட்டகவேலி நீலகேசி அம்மன் தான் வளர்ந்த பனங்கோடு குடும்பத்தின் தலைவியால் (மாமியாரால்) கொடுமை படுத்தப்பட்டாள். இதற்கு பழிதீர்க்கும் விதத்திலும், மாமியார் மருமகள் சண்டை உலகத்தில் எந்த மூலையிலும் நடக்கக்கூடாது என உணர்த்தும் வகையில் மாமியார் மற்றும் குடும்பத்தை பழிவாங்கும் நிகழ்ச்சியாக கமுகு எழுந்தருளல் நிகழ்ச்சி கடந்த 500 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது.

  திருவிழா நடக்கும் இட்டகவேலி பறம்பின் பக்கத்தில் உள்ள உயரமான கமுகு மரத்தை (பாக்கு மரம்) வேரோடு பிடுங்கி அதன் மூட்டு பாகத்தை கணியான் இனத்தவர்களும், கொண்டை பாகத்தை மாமியாரின் குடும்பத்தினரும் (நாயர் குடும்பத்தார்களும்) இழுப்பர்.

கமுகின் மூட்டு பகுதியை கணியான் இனத்தவர்கள் 100 அடி இழுத்து வந்ததும் கொண்டை பகுதியை பிடித்த நாயர் குடும்பத்தார் விட மாட்டோம் என இழுத்துக்கொண்டு ஓடுவதுமாக ஒரு மணி நேரம் நடக்கும். அதன் பின் விழா நடக்கும் பறம்பின் பக்கத்தில் உள்ள குளத்தில் கமுகை இழுத்து போடுவர். அங்கு சுமார் இரண்டு மணி நேரம் இழுபறி ஏற்படும். குளம் கலங்கலான பின் விடாமல் கொண்டை பகுதியில் பிடித்திருக்கும் நாயர் குடும்பத்தார் குளத்தில் இருந்து கமுகை இழுத்து கொண்டு கரைக்கு ஓடுவர்.

மூட்டுப்பகுதியை பிடித்திருக்கும் கணியான் இனத்தவர்கள் மிக சாதுரியமாக இழுத்து மீண்டும் குளத்தில் போட்டு அங்கும் இங்குமாக "அம்மே சரணம், தேவி சரணம்' என்ற கோஷத்துடன் கமுகை இழுத்துக்கொண்டு பறம்பில் அம்மன் எழுந்தருளியிருக்கும் தற்காலிக கோயில் முன் கமுகை நாட்டி, கமுகின் கொண்டைப்பகுதியில் தீ வைத்து எரிப்பர். இது நீலகேசி அம்மன் வெற்றி பெற்று மாமியார் குடும்பத்தை அழித்ததாக ஐதீகம்.
 இந்த ஐதீகத்தை தொடர்ந்து 500 ஆண்டுகளுக்கு மேலாக இட்டகவேலி கோயிலில் நடத்தி வருகின்றனர், ஆனால் தற்பொழுது கணியான் இனத்தவர்கள் பக்கம், நாயர் இனத்தவர் பக்கம் என்ற வேறுபாடு காட்டாமல் எல்லா இனமக்களும் இணைந்து கமுகு மரத்தின் அடிப்பாகத்தையும் கொண்டை பாகத்தையும் இழுத்து சாதியற்றதொரு சமுகமாக அடையாளப்படுவது பெருமைக்குரிய விஷயம்.

 அங்கிருந்து விடைபெற்றுக்கொண்டு இட்டகவேலி நீல்கேசி அம்மன் ஆலயத்துக்குச்சென்றோம். முன்பு கோவில் பூசாரியாக இருந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் ராஜேஷ் அவர்களைச் சந்தித்தோம். அவர் பத்தாம்நாள் திருவிழாவைப்பற்றி சொன்ன தகவல்கள் மேலும் ஆச்சரியமூட்டின.

 கணியான் இனமக்களாலும் நாயர் குடும்பத்தார்களும் இணைந்து நடத்தும் இந்த திருவிழாக்களில் கணியான் இனமக்கள் தான் முடி எடுக்கும் நிகழ்ச்சியை நடத்துவர். இதற்க்காக இவர்கள் 41 நாட்கள் விரதமிருப்பர். தாரகனை நீலகேசி அம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி தான் பத்தாம் நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி.

 பல வருடங்களுக்கு முன்பு கேரளாவில் மத்திய அரசின் அவார்டு பெற்ற மணிசித்ரதாழ் எனும் திரைப்படமும் அதை தழுவி தமிழில் ரஜினிகாந்த நடித்த சந்திரமுகி திரைப்படமும் இரு மாநிலங்களிலும் சக்கை போடு போட்டன. அந்த திரைப்படங்களின் இறுதிக்கட்டத்தில் பழிவாங்கும் படலம் நடக்கும் தமிழில் கதாநாயகனையும் மலையாளத்தில் துணைக்கதாநாயகனையும் பழிவாங்கும் நேரத்தில் மரபொம்மையை மாற்றிவிட ஆவேசம்கொண்டு மரப்பொம்மையின் தலையை வெட்டி சாந்தமானதாக திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தது.

 அது முழுக்க முழுக்க இட்டகவேலி கோவில் திருவிழாவில் 500 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்படும் பத்தாம்நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வின் அசல்தான் அந்த திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

 தாரகனை வதம் செய்து நீலகேசி அம்மன் தாரகனின் தலையை துண்டாக்கியபோது தலை தனியாக கல்லாகி இன்றும் இட்டகவேலிக்கு அருகிலுள்ள பறம்பு  எனும் பகுதியில் கிடக்கிறது. பல வருடங்களுக்கு முன்புவரை அந்த கல்லிலிருந்து ரத்தம் வடிந்து வருவதை பலரும் பார்த்ததாகச் சொல்கிறார்கள். இந்த கல்லுக்கு திருவிழா நடைபெறும் நாட்களில் சிறப்பு பூஜை இன்றும் நடத்தப்பட்டு வருகிறது. தாரகனின் உடல் மங்கலம் எனும்  ஊர் பகுதியில் இன்றும் கல்லாய் கிடப்பதாகச் சொல்கிறார்கள்.

இந்த நிகழ்வை இன்றும் வருடந்தோறும் பத்தாம்நாள் கணியான் இனத்திலிருந்து ஒரு ஆண் பெண்வேடம் தரித்து நீலகேசி அம்மனாகவும் தாரகனாகவும் வேஷமிட்டு இந்த நிகழ்ச்சியை நடத்திவருகின்றனர்.

அம்மனாக வேடமிட்டவார் கையில் அரிவாளோடு ஆவேசம் கொண்டு புறப்படுவார். அம்மன் தாரகனின் தலையைவெட்டி பழிவாங்கும் நேரத்தில் தயாராக நிறுத்தப்பட்டிருக்கும் வளர்ந்த ஆட்டுக்கிடாவை மாற்றிவிடுவர். அம்மன் ஆவேசமாய் ஆட்டுக்கிடாயை வெட்டி சாந்தப்படுவாள். இந்த நிகழ்வுதான் மணிசித்ரதாழ் திரைப்படத்திலும் சந்திரமுகி திரைப்படத்திலும் கிளைமாக்ஸ் காட்சியாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை உண்மையாகவே நீலகேசி அம்மனாக வேடமிட்டவரின் உடம்பில் நீலகேசி அம்மன் அருள் புகுந்து தாரகனை வெட்டும் நிகழ்ச்சியின்போது ஆட்டுக்கிடாயை வெட்டாமல் தாரகனாக வேடமிட்டவரின் தலையை வெட்டி சாய்த்திருக்கிறார் நீலகேசி அம்மனாக வேடமிட்டவர்.

 தாரகனாக வேடமிட்டவரின் இந்த நிகழ்ச்சிக்குப்பிறகு கணியான் குடும்பங்களில் பிரச்சனை வலுவெடுத்தது தாரகனாக வேடமிட்டு வெட்டுப்பட்டவர் பெரியப்பாமகன் உறவும் நீலகேசி அம்மனாக வேடமிட்டு வெட்டியவர் சித்தப்பா மகன் உறவும் கொண்டவர்கள். பகை காரணமாக தாரகனாக வேடமிட்டவரை வேண்டுமென்றே வெட்டியதாக சண்டை போட்டுக்கொண்டு இனிமேல் உங்களோடு நாங்கள் வாழ விரும்பவில்லை என்று பிணங்கி தாளக்குடிக்குச் சென்று அங்கு கணியான் கூத்து ஆடும் கணியான் ஆட்டக்கலைஞர்களாக வாழ்ந்து வந்தனர்.

 கணியான் இனமக்களின் பிரிவினையால் இட்டகவேலி கோவிலில் பூஜைகள் நிறுத்தப்பட்டு திருவிழாக்கள் நடைபெறாமல் போனது. இட்டகவேலி கோவிலின் துணைக்கோவிலான கொல்லங்கோடு கோவிலில் திருவிழா நடத்தியபோது முடியெடுக்க முடியாமல் திருவிழா தடைபட்டது.

 இதற்க்கு என்ன காரணம் என்று ஜோசியரிடம் குறிகேட்டபோது தாய்க்கோவிலான இட்டகவேலியில் திருவிழா நடைபெறவில்லை முதலில் அங்கு பிரிந்துபோன கணியான் குடும்பங்களை ஒன்றிணைத்து திருவிழா நடத்துங்கள் என்று குறிசொல்லப்பட்டிருக்கிறது.
அண்ணன் தம்பி உறவுமுறைகளில் இப்படி பிரிவினை வந்து கோவில் திருவிழா நடைபெறாமல் போனதே என்று தாளக்குடிக்குச் சென்ற கணியான்களிடம் சமாதானம் பேசியிருக்கிறார்கள். அதன்பிறகு அவர்கள் இட்டகவேலி வந்து திருவிழா நடைபெற்றது. ஆனால் இட்டகவேலியில் வாழ விரும்பாமல் தாழக்குடியிலெயே வாழ்க்கையை தொடர்ந்தார்கள்.

 இட்டகவேலி கோவில் திருவிழாநடக்கும் நாட்களில் அவர்களை வரவழைத்து ஒன்பது நாட்கள் நடக்கும் திருவிழாக்களின்போது சிறப்பு பூஜை செய்யும் பணியை அவர்களுக்கே கொடுத்து சிறப்பு செய்தனர். அவர்களும் சமாதானமாகி அதை ஏற்றுக்கொண்டு இன்றும் திருவிழா காலங்களில் இட்டகவேலி வந்து சிறப்பு பூஜை செய்து வருகிறார்கள். இவர்கள் தாழக்குடியிலிருந்து இட்டகவேலி வரும்பொழுது பொன்மனை பஸ்நிறுத்தத்தில் பூமாலை அணிவித்து வரவேற்பு கொடுத்து அழைத்து வருகிறார்கள் இட்டகவேலி கணியான் இன மக்கள்.       

 குளத்தில் குதித்த மகள், அம்மா, பாட்டி ஆகிய மூன்று பேருடைய முடிகளும் வேறொரு குளத்தில் தெரிந்து அதை கணியான் இனத்தாரிடம் கிடைத்து மகளின் நினைவாக முடி எடுக்கும் எழுந்தருளுதல் நிகழ்வு இட்டகவேலியிலும், தாயின் நினைவாக கொல்லங்கோட்டில் தூக்கமும், பாட்டியின் நினைவாக வெள்ளியாணியில் தாரக யுத்தமும் இன்றுவரை மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

 தாய்க்கோவில் இட்டகவேலி என்பதால் முதலில் இட்டகவேலி கோவிலில் தான் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்பிறகே மற்ற இரு கோவில்களிலும் திருவிழா நடைபெறும். ஒருமுறை இட்டகவேலியிலிருந்து சில கணியான் இன மக்கள் திருவிழா காண கொல்லங்கோடு ஆலயத்திற்க்கு சென்று கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்திருந்தார்கள்.

 கொல்லங்கோடு கோவிலில் முடிஎடுக்கும் வேளை வந்தபோது முடியை தூக்க முடியாமல் தடுமாற்றம் அடைந்திருக்கிறார்கள். அம்மனுக்கு ஏதாவது குறை வைத்து விட்டோமோ என்று வருந்தி ஜோசியரிடம் குறி கேட்கிறார்கள். தாய்க்கோவிலிருந்து சில கணியான் இனமக்கள் வந்திருக்கிறார்கள் அவர்களை அழைத்துவந்து உரிய மரியாதை செலுத்தினால் முடியை தூக்கலாம் என்று சொல்ல அவர்களைத் தேடி அழைத்து வந்து மரியாதை செலுத்திய பிறகே முடியை தூக்க முடிந்ததாம்.

 இட்டகவேலியிலுள்ள மாதுகணியான் என்பவர் தான் காவில் ஒளிந்திருந்த நீலகேசி அம்மனுக்கு சாப்பிடுவதற்க்கு கருக்கும் பொரியும், பச்சரிசியும், கமுகம்பூவும் கொடுத்தவர். இட்டகவேலி நீலகேசி அம்மன் கோவில் முதல் பூஜையை இந்த மாதுகணியான் தான் செய்திருக்கிறார். இவர் ஒரு மந்திரவாதியாகவும் பேய் விரட்டு பவராகவும், கூடு விட்டு கூடு பாயும் வித்தகராகவும் இருந்தவர்.

 இவர் கூடுவிட்டு கூடு பாய்ந்து நாயர்களைப்போல வடிவம் பூண்டு அவர்களது வீட்டில் சென்று சாப்பிடுவது வழக்கம். இவரது தொல்லைகள் அதிகரிக்கவே ஜோசியரிடம்  சென்று குறி கேட்டிருக்கிறார்கள். இது மாது கணியான் வேலைதான் என்று அறிந்தபோது அவரை கொலைசெய்ய திட்டம் தீட்டுகிறார்கள். மாது கணியானின் முழுசக்தியும் அவன் நெற்றியில் போடும் குங்குமத்தில் உள்ளது என்பதை தெரிந்து வைத்துக்கொண்டு அவனை தங்களது வீட்டில் விருந்துக்கு அழைக்கிறார்கள்.

 விருந்தின்போது தலைவாழை இலையில் சூடான சோறு போட்டிருக்கிறார்கள் அதிலிருந்து கிளம்பிய ஆவி பட்டதும் மாதுகணியானின் நெற்றி வியர்த்து குங்குமம் அழிந்திருக்கிறது. இதுதான் தக்க சமயம் என்று மாது கணி யானை அடித்து காயப்படுத்தி ஒரு மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டிருக்கிறார்கள்.

 குற்றுயிரும் குலைஉயிருமாக மரத்தில் தொங்கியபடி தாகத்துக்கு தண்ணீர் கேட்டபோது ஒரு நாடார் குடிக்க தண்ணீர் கொடுத்திருக்கிறார். மாது கணியான் இறந்து பின்பு நாடார் இன மக்களின் வேண்டுதலுக்கு செவி சாய்க்கும் தெய்வமாகி இன்றும் அருள் பாலித்து வருவதாக அந்த வட்டார மக்கள் நம்புகிறார்கள். இட்டகவேலி நீல்கேசி அம்மன் ஆலயத்தில் மாதுகணியானுக்கு ஒரு பீடம் அமைத்து  அதற்க்கும் வழிபாடுகள் நடைபெற்று வந்திருக்கின்றன.

    கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இட்டகவேலி கோவிலில் வைக்கப்பட்டிருந்த மாதுகணியானின் பீடம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தும் இன்றும் வெளியில் வைத்து பூஜைசெய்துவருகிறார்கள்.

 கணியான் இனத்தின் அடையாளமாக இட்டகவேலி கோவிலும் அதன் வழிபாடுகளும் இருந்தபோதிலும் அந்த சமூகத்தினருக்கு சான்றிதழ் தரமறுக்கிறது தமிழக அரசு. இந்த தகவல்களை வைத்து தமிழக அரசு ஒரு முடிவுக்கு வந்து கணியான் சாதிச்சான்றிதழ் தந்தால் ஆடிமைப்பட்ட ஒரு இனம் கல்வி அறிவு பெற்று வாழ்க்கைத்தராத்திலும் முன்னேறிக்காட்டுவார்கள். பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கும் இவர்களை தமிழக அரசு கணியான் என்று சான்றிதழ் தந்து கை தூக்கி விடுமா? அல்லது மீண்டும் அகால பள்ளத்தில் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்குமா? பொறுத்திருக்கிறார்கள் கணியான் இனமக்கள்.

- ஐரேனிபுரம் பால்ராசய்யா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It