சென்ற சமூக விழிப்புணர்வு அணுசக்தி சிறப்பிதழ் படித்தேன். எந்த இதழும் செய்யாத பணியை செவ்வனே செய்துள்ளது. அணு உலைகளை எதிர்ப்பது குறித்து 1970களில் அமெரிக்காவில் நடைபெற்ற போராட்டத்தை ஒட்டி வாசர்மேன் எழுதிய கட்டுரை ஒன்றினை இணையத்தில் படித்தேன். அதை இங்கு நினைவு கூறுவது பொருத்தம் என எண்ணுகிறேன்.

பல பத்தாண்டுகளாகவே எந்தவொரு காரணத்திற்கும் சமூக எதிர்ப்பினைக் காண்பித்திருக்காத அமெரிக்கா மக்களைத் தட்டியெழுப்பிய அதிசயத்தைத்தான் டாயப்லோ கேன்யான் அணுமின் நிலையம் செய்திருந்தது. அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத அமெரிக்க அரசு, இனிமேல் அணுஉலைகளைக் கட்டுவதில்லை என்று, எவராலும் இன்றும் கூட நம்ப முடியாத முடிவினை இதன்பின்னர்தான் எடுத்தது.

1968, பனியுத்தம் என்ற கற்பனைப்பேயினை நாயகனாகக் கொண்டு ஜோடிக்கப்பட்ட கோடிக்கணக்கான கதைகள் அமெரிக்க மக்களை நித்தமும் தாக்கி, வலம் வந்த சமயம். அணுயுத்த கிலியில் பீடிக்கப்பட்டிருக்கும் மக்களா? நம்மை எதிர்க்கப் போகிறார்கள் என்ற எண்ணத்தில் யாரும் கனவிலும் கூட நினைத்துப்பார்க்க முடியாத ஒரு இடத்தில் அணுமின் நிலையம் ஒன்றினைக் கட்டிட அமெரிக்க அரசு முடிவு செய்தது.

கலிஃபோர்னியா மாநிலத்தின் மையப்பகுதியில் உள்ள டாயாப்லோ கேன்யான், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திலிருந்து 200 கிலோ மீட்டர் தூரம் வடக்கே உள்ள கடல்புறத்தை ஒட்டி அமைந்துள்ள ஒரு இடம். மிகவும் குறுகலான இந்தக் கடல்புறப் பகுதியின் வடக்கில் உள்ளது ஒரு மலைமுகடு. இயற்கை அழகு கொழிக்கும் இப்பகுதியில் எண்ணிலடங்கா சுற்றிலாப் பயணிகளைக் காண்பது வெகு சாதாரணம்.

இந்த மலைமுகட்டின் மையப்பகுதிக்குக் கீழே உள்ள நிலத்தின் ஊடாகத்தான் 1989ஆம் வருடம் சான் பிரான்சிஸ்கோ நகரத்தைத் தரைமட்டமாக்கிய நிலநடுக்கத்திற்குக் காரணமான செயின்ட் ஆன்ட்ரீஸ் நிலவிரிசல் ஓடுகிறது. ஜன நெருக்கடி அதிகம் இல்லாத பகுதி இது. இங்குதான் இரண்டு அணு உலைகளைக் கொண்ட ஒரு அணுமின் நிலையத்தை அமைப்பதென்று முடிவானது.

1968ஆம் ஆண்டு தொடங்கிய அணுமின் நிலையக் கட்டுமானப் பணிகள் ஆரம்பத்தில் எந்தவொரு தடையும் இல்லாமல்தான் முன்னேறின. நிலநடுக்கும் மிகுந்த இந்தப் பகுதியில் ஏன் அணுமின் நிலையம் கட்டப்படுகிறது என்ற யதார்த்தமான ஒரு கேள்வி சிறிது சிறிதாக அடுத்து வந்த வருடங்களில் மக்களை இந்த அணுமின் நிலையத்துக்கு எதிராக ஒன்றினைத்தது.

அமெரிக்க நாட்டில் இதுவரை நடத்திட்ட அணு உலை எதிர்ப்புப் போராட்டங்களிலேயே மிகவும் எழுச்சிகரமானது இந்தப் போராட்டமே. முழுமையாகப் 10 வருடங்களுக்கும் மேலாக இந்த எதிர்ப்புப் போராட்டம் நடந்தது என்றால் நீங்கள் நம்புவீர்களா?

மேலும், 1970களின் பின்பகுதியில் அமெரிக்க நாட்டின் அனைத்து அணுஉலை எதிர்ப்புப் போராட்டங்களின் மையமாகமாகவும் இது மாற ஆரம்பித்தது.

தனிமனித எதிர்ப்புகளாகத் தொடங்கிய இந்த எதிர்ப்புப் போராட்டம் நாளடைவில் வெகுஜனப் போராட்டமாக மாறியது. 70களின் பிற்பகுதியில், உள்ளூர் மக்களின் நம்பிக்கையை சிறிது சிறிதாகக் கவர்ந்துவிட்ட எதிர்ப்பாளர்களின் கூட்டமைப்பு உருவாகியது. இந்தக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் நேரடிச் செயல்களில் ஈடுபட ஆரம்பித்தனர். தர்ணாக்களும், சாலை மறியல்களும், அணுமின் நிலைய வளாகத்திற்குள் அத்துமீறி நுழையும் போராட்டங்களும் நித்திய செயல்பாடுகளாயின.

இந்தப் போராட்டத்தின் முதல் கட்டம், அணுசக்தியினால் வரும் தீமைகளை எடுத்துக்கூறும் அனைத்து செய்திகளையும் மக்களிடையே எடுத்துச் செல்வதும், அணுசக்தி நம் அன்றாட வாழ்வினை எங்ஙனம் மாற்றி அமைக்கும் என்பதை எடுத்துக் கூறுவதும்தான். முதல் கட்டமென்றாலும் போராட்டத்தின் அனைத்துக் கட்டங்களிலும் இதுவே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அடுத்ததாக, அணுஉலைக்கு எதிரான உள்ளூர் மக்களின குழுக்கள் உருவாகின. ஒரே துறையினைச் சார்ந்த நபர்கள் அணுமையத்தை எதிர்த்த தமது குழுக்களைத் துவங்கினர்; இதுபோன்று துவக்கப்பட்ட விவசாயிகள் சங்கங்களும், சுற்றுச்சூழலியலாளர்களின் சங்கங்களும், சுற்றுப்பிரயாணிகளின் சங்கங்களும், மீன்பிடிப்பதை விளையாட்டாகக் கொண்டவர்களின் சங்கங்களும், அரசியல் கட்சிகளும் வெகுஜன அமைப்புகளும் பின்னர் ஒன்றிணைந்து அணு மையத்துக்கு எதிராகச் செயல்படத் தொடங்கின. கட்டுமானத்தின் வேகத்தைக் குறைத்திடும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. மாநிலம் தழுவிய அணு எதிர்ப்பியக்கங்களும், செய்திப் பிரச்சாரங்களும் தோன்ற ஆரம்பித்தன. இவை அனைத்தும் நடக்க ஆரம்பித்த பின்னரே நேரடிச் செயல்பாடுகள் நிகழத் தொடங்கின.

நேரடி எதிர்ப்புச் செயல்பாடுகள் மிகவும் திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட காரணம் எதிர்ப்பியக்கங்களால் நீண்ட காலத்தைய தர்ணாக்களையும், மறியல்களையும் வெகு சாதாரணமாகச் செய்ய முடிந்தது. நேரடிப் போராட்டத்தில் ஈடுபட ஆர்வம் கொண்ட ஆர்வலர்களுக்கென்றே அணு எதிர்ப்பாளர்களால் பிரத்யேக விவாதக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் காரணமாக நேரடி எதிர்ப்புக்கென்றே சுமார் 500 சிறு குழுக்கள் உருவாக்கப்பட்டன. 10 & 15 பேர் கொண்ட ஒவ்வொரு குழுவும் பெரும்பாலும் நண்பர்கள். பள்ளியில் படித்த பழைய வகுப்புத் தோழர்கள், துறைசகாக்கள் போன்றவர்களின் குழுவாகவே அமைந்திருந்தது.

உள்ளூர் விவசாயிகளின் ஏற்புடன் 2000 பேர் கொண்ட நேரடி எதிர்ப்புக் கேம்ப்புகள் தொடங்கின. முன்கூட்டியே இந்தக் கேம்ப்புகளைப் பற்றி உள்ளூர் மக்களிடம் தெரிவித்திருந்த காரணத்தால் இவற்றுக்கான உணவுக்குப் பஞ்சமேயில்லாதிருந்தது. தங்களின் தொலைபேசிகளையும், ஏன் தங்களின் கார் மற்றும் வேன்களையும்கூட உள்ளூர் மக்கள் எதிர்ப்பாளர்களுக்குக் கொடுத்துதவினார்கள். உள்ளூர் போலீசே கூட சிறிதுசிறிதாக எதிர்ப்பாளர்களின் நண்பர்களாகத் தொடங்கினார்கள்.

நேரடி எதிர்ப்புகள் பலவாறாக இருந்தன. அணி அணியாகத் திரண்டு கோஷமிட்டு வலம் வருவது ஒருவகை என்றால், கடல் வழியாக படகுகளில் வந்து அணுமையத்தின் படகுத்துறையை மறிப்பது வேறுவகை. பல்வேறு குழுக்கள் அணு மையத்தின் அனைத்து வாசல்களையும் அடைக்கும் மறியலில் ஈடுபட்டிருந்தன. சில ஊக்கம் மிகுந்த எதிர்ப்பாளர்களோ மையத்திற்குள் செல்லும் புகை வண்டியின் அடியினுள் தொற்றிக் கொண்டு உள்ளே சென்று மறியலில் ஈடுபட்டனர்.

இதுபோன்ற நேரடி எதிர்ப்புகள் சுமார் 6 வருடங்கள் நீடித்தன.

ஆயிரக்கணக்கானோர் சிறைகளில் அடைக்கப்பட்டனர்; அடுத்துள்ள சிறைச்சாலைகள் அனைத்துமே நிரம்பி வழியத்தொடங்கின.

எதிர்ப்பாளர்கள் இவை அனைத்தையுமே தெரிந்துதான் செய்தார்கள். மாசற்ற சுற்றுப்புறத்தில்தான் வாழ வேண்டும் என்ற ஆவலின் காரணத்தாலும், இயற்கையின் மீது அவர்கள் கொண்டிருந்த மீளாக் காதலினாலும் அவர்கள் இந்த எதிர்ப்பணிகளில் அங்கத்தினர்களாயினர்.

தங்களின் எதிர்ப்பை அகிம்சை முறையில் அவர்கள் வெளிப்படுத்தினர்; அரசு தரப்பினர் வன்முறையைக் கையாண்ட போதும் கூட இவர்கள் மனத்துணிவுடன் அகிம்சை முறையில் செயலாற்றியது உள்ளூர் மக்களை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. சிறைச்சாலைகள் நிரம்பிவிட்ட காரணத்தால் எதிர்ப்பாளர்களை பள்ளிகளிலும், தேகப்பயிற்சி மையங்களிலும், அலுவலகக் கட்டிடங்களிலும் அடைத்து வைக்க வேண்டி வந்தது. இதன்காரணமாக, அவர்கள் அவசர அவசரமாக விடுவிகப்பட்டனர். விடுதலையான மறுநிமிடம் எதிர்ப்பாளர்கள் மறியல் நடந்து கொண்டிருந்த அனுமையைக் கட்டிடத்தை நோக்கியே சென்றனர்.

கடைசியில் இந்த அணுமின்நிலையம் கட்டிமுடிக்கப்பட்டது; அது இன்றும் செயல்பட்டு வருவது என்னவோ உண்மைதான். இருப்பினும் இந்தப் போராட்டத்தில் இறுதி வெற்றி கிடைத்ததென்னவோ அணு எதிர்ப்பியக்கங்களுக்குத் தான்.

ஏனெனில், அமெரிக்க நாட்டில் கட்டப்பட்ட கடைசி அணுஉலை இது.

இதற்குப்பிறகு அணுஉலையைக் கட்டுவதற்கான துணிவை அரசோ, தனியார் நிறுவனங்களோ முற்றிலும், இழந்து விட்டன. நீதிமன்றத்தில் இருந்த வழக்குகளாலும், நேரடி மறியல் போராட்டங்களாலும் இந்தத் திட்டத்தின் கட்டுமான காலம் 10 வருடங்களாக நீண்டு போனது. கட்டுமானச் செலவு 12 மடங்கையும் மீறிப் போனது.

சூழலின் மீது ஏற்படவுள்ள தாக்கம் குறித்த அறிக்கை மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. அணுஉலையின் டிசைனில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. அணுஉலையைக் குளிர்விக்கக் கடலில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் மீண்டும் கடலுக்குள் செலுத்தப்படும்போது உள்ள உஷ்ணத்தைக் குறைப்பதற்காக மிகவும் விசேஷமான கருவிகளை வடிவமைக்கக் கோர்ட் உத்தரவிட்டது.

டயாப்லோ கேன்யானில் கட்டப்படவிருந்த மற்றொரு அணுஉலை அதன் திட்ட அளவிலேயே கைவிடப்பட்டது.

கட்டிய அணுஉலையைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக 1989 இல் நடந்த நில நடுக்கத்தின் போது பல கோடிக்கணக்கான டாலர்களை அரசு செலவிடவேண்டி வந்தது.

புதிய அணுஉலைகளைக் கட்டத் துணிவில்லாத நாடு அமெரிக்கா, என்ற நல்லதிசயம் நடந்தேறியது.

அமெரிக்காவைப் போல இங்கும் மக்கள் போராட்டங்கள் கிளம்ப வேண்டும். அதற்கான காலம் அதிகம் இல்லை என எண்ணுகிறேன்.

Pin It