‘‘அப்பா என்னால தாங்க முடியல்ல. வள்ளத்துல்ல உள்ள மரக்கட்ட ஒரஞ்சு ஒரஞ்சு நெஞ்சு வயிறெல்லாம் ஒரே ரத்த காயம்... அதுல உப்பு தண்ணி பட்டு உயிரு போற மாதிரி காந்துது... உப்பு தண்ணி குடிச்சு குடிச்சு வயிறு முட்டிட மூச்ச உட முடியில்ல... அப்பா நான் என்ன செய்ய?

என் மகன் கேட்டப்போ ஈரக்குலை நடுங்குது. எனக்கு அவன் ஒத்தைக்க ஒரு மகன். அவனுக்கு ஒரு கஷ்டமும் இல்லாம பொத்திப் பொத்தி வளத்தேன். அவன் பள்ளிக்கூடத்துல படிக்கும்ப பிள்ளைகள் விளையாடுனதுல ஒருத்தன் இவன தள்ளிவிட்டு மூக்காமண்டை ஒடஞ்சு மூக்கு வழியா ரத்தம் சாடிச்சு. அதப் பொறுக்க முடியாம அன்னையோட அவன் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புறதையே நிறுத்திப் போட்டேன். அப்படிப்பட்ட மகன் அப்பா நான் என்ன செய்யண்ணு கேக்கிறான். அவன காப்பாத்த போக்கத்த அப்பனா நிக்கிறேன்! இல்ல இல்ல.. நானும் கடல்ல செத்துக் கொண்டுதான் கிடக்கிறேன். நான் பிழைக்கிறதே சந்தேகமாத்தான் இருக்கு.

இத்தன காலமும் கூலித் தொழிலுக்குப் போய்க் கொண்டிருந்த நாள், மகன் கொஞ்சம் தலையெடுத்ததும் சொந்தமா ஒரு வள்ளம் எடுக்கலாமுண்ணு யோசனை போட்டேன். கூலி வேலைக்குப் போய் சம்பாதிச்சு நாலு கொமுரையும் எப்படி கரை சேர்க்க முடியும்னு நெனச்சு பெண்டாட்டிக்கு இருந்த உருப்படி எல்லாத்தையும் வித்து, அஞ்சு பைசா வட்டிக்கெல்லாம் கடன் வாங்கி, சரக்கெல்லாம் நீ கேக்கிற வெலைக்குப் போடுறேண்ணு’’ சொல்லி வியாபாரிக்கிட்ட அம்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கி ஒரு வள்ளம் எறக்கினேன். இதுக்கு செலவாக்கின ரண்டு லட்சம் ரூபாயையும் கை காலு சொகமா இருந்தா ஒரு வருசத்தில கடன் மூட்டிடலாம். அதுக்குப் பெறவு வாற வருமானத்த வச்சு வருசத்துக்கு ஒரு கொமுரா கல்யாணம் கட்டிக் குடுக்கலாம். பொண்டாட்டிக்க களுத்துல நூல போலயாவது ஒரு தாலி செயின் செஞ்சு போடலாமுன்னு நெனச்சுத்தான் வள்ளம் எறக்கினேன்.

வள்ளம் எறக்கும்ப ஒரே கொண்டாட்டம்தான். அந்தோணியார் குருசடியில கஞ்சி காய்ச்சி ஊருல உள்ள எல்லாருக்கும் கஞ்சி ஊத்துனோம். அது ஒரு நேர்சசை வீட்டில் பாச்சோறு கிண்டி பக்கத்துல உள்ள எல்லாருக்கும் குடுத்தோம். என்னோட கும்பாயிரிகளுக்கு பிராண்டி பார்ட்டி நடத்தினேன். என் மகன் அவனுக்கு பிரண்டுவளுக்கு புரோட்டோ இறச்சி வாங்கிக் கொடுத்து பார்ட்டி நடத்தினான். குடும்பத்தில எல்லாருக்கும் இதுபோல ஒரு சந்தோசம் வேற இல்ல. முழுக்க ஒரு சந்தோசம். நமக்குன்னு சொந்தமா ஒரு சொத்து. எதிர்கால கனவையெல்லாம் நிறைவேத்தும் ஒரு மாபெரும் சொத்து. சீவிதத்தில் இதுதான் எங்களுக்குண்ணு உள்ள ஒரே சொத்து. பெண்டாட்டி மக்களுக்கும் ரெம்ப சந்தோசந்தான்.

தொழிலுக்குப் போறதுக்கு முந்தினநாள் கடலில் வள்ளத்தை வெள்ளோட்டம் விட்டோம். குடும்பத்தில் உள்ள பெண்களையெல்லாம் வள்ளத்துல ஏத்தி கடல்ல சுத்திக் காட்டினோம். அப்ப என் குடும்பம் முழுக்க பட்ட சந்தோசத்துக்கு கோடி ரூபாய் கிட்ட வராது. கடல் நல்ல சேலா கெடக்கும்ப குடும்பத்திலுள்ள பெண்டு பிள்ளைங்கள இப்படி கடலுக்கு ‘பிக்னிக்’ கூட்டி வரணுமுண்ணு மனசுல நெனச்சிக்கிட்டேன்.

கூலிக்காரனா இருந்த நான் இப்ப ஒரு வள்ளக்காரன். அதை நெனைக்கும்போது என் மனசு ஆகாசத்துல பறந்தது. என்ன ஒரு ரண்டு லட்ச ரூபா கடன்காரன். ஆண்டவன் சித்தத்துல நல்லா தொழில் நடந்தா நாலு மாசத்துல கடனெல்லாம் பறந்துபோவும்.

மனதெல்லாம் நிறைஞ்ச சந்தோசத்தோட என் மனைவியையும், நாலு பெண் பிள்ளைகளும் கரையில நிண்ணு, ‘‘டாட்டா’’ சொல்லி வழியனுப்ப கடலைத் தொட்டது எங்க வள்ளம். நான் என் ஒரே மகன் ஆன்றனி, எனக்க தம்பி, இன்னும் ரண்டு கூலிக்காரம்மாரு... அஞ்சு பேரும் அமைதியான கடலில் தொழிலுக்கப் புறப்பட்டோம். புத்தம் வள்ளம், புத்தம் புதிய சுசுகி என்சின் வள்ளம் கடலில் வழுக்கிச் சென்றது. எங்கள் மனசப்போலவே வள்ளமும் ஆகாசத்தில் பறப்பதுபோல் தெரிந்தது.

ரண்டு மூணு வருசத்துக்கு முன்னால எல்லாம் ரண்டு மணி நேரம் ஓடுற தூரத்தில நெறய மீனு கெடைச்சும். ஆனா இப்ப பத்து, பனிரண்டு மணிக்கூர் ஓடினாத்தான் மீனு புடுச்ச முடியும். மீனெல்லாம் ஆழக்கடக்குப் போயிட்டது. நாங்க புடுச்சிட்டு வர்ற மீனுல முக்காவாசி பெட்ரோல், மண்ணெண்ணெய்க்குத்தான் தாங்கும்.

கடப்புறத்துல இருக்க, கம்பெனி கழிவு எல்லாம் கடல்ல கலக்குதாம், வெளிநாட்டு கப்பல்கள் வந்து நம்ம கடல்ல கரையில மடி அடிச்சு மீன் பிடிக்கறானுவ அதனால் மீனெல்லாம் ஆழ்கடல்ல போயிட்டுதுன்னு சயின்ஸ் படிச்சவங்க சொல்லுதாவு. கடல்ல உப்புத்தன்னை கூடிப்போச்சு, வெப்பம் கூடிப்போச்சு அதுனால மீனு தூரத்து ஓடிப்போச்சு என்னன்னெல்லாமோ சொல்லுதாவு. என்ன செய்ய நாங்களும் பத்து, பனிரெண்டு மணிக்கூர் தூரம் ஓடி மீனை விரட்டிப் பிடிக்க வேண்டியதாயிட்டது.

வள்ளம் இறக்கின முதல்நாள் நாங்களும் ஆயிரம் சொப்பனங்களோட கடலுக்குள்ள மீன் இருக்கும் பாரைத் தேடி ஓடினோம். ஒரு வழியாக எங்கள் கணியத்தை வந்து பிடிச்சிட்டோம்.

‘‘கணக்கான நேரம்... மட்ட எளக்குங்க...’’

நான் சொன்னதும் எஞ்சின ஸ்லோவாக்கி எல்லோரும் ஜெபம் செய்துட்டு ஏற்கனவே எரகொருத்து வச்சிருந்த தூண்டில் மட்டு மொத்தமும் கடலில ஏளக்கிவிட்டோம். ஐயாயிரம் தூண்டில் இருந்த மட்டு மூச்சூடும் கடலில் எளக்கினதும் திரும்ப, தொடங்கின இடத்துக்கு வள்ளத்தை ஓட்டினோம். நாங்க அடையாளத்துக்குப் போட்ட புளோட் முக்கால்வாசி கடலில் முங்கிப் போய் கிடந்தது.

‘‘இயேசுவே... நல்ல மீன்பாடு... இன்னெக்கு நமக்கு நல்ல வருமானம்...’’ புளோட்டு தாந்து கெடந்ததப் பாத்து எனக்கு அப்பிடி ஒரு சந்தோசம்.

மட்டு தூண்டிலை ஒவ்வொண்ணா இழுத்தோம். ஒவ்வொரு தூண்டிலிலும் ஒவ்வொரு மீனு பெரிய சைசு வெளமீனு, பாரகுட்டி, புளிமீனு, சம்பு, கொழுவாள, அயில இப்பிடி விதவிதமா மீனு தூண்டில்ல கிடக்கு. மனசுல சந்தோசந்தான், ஒவ்வொண்ணா கழிச்சு கோட்டுமால்ல போட்டுட்டே இருந்தோம். அஞ்சு பேரும் மிசினப் போல வேல செஞ்சோம்.

‘‘இன்னைக்கு எப்பிடியும் ஆளுக்கு ஐயாயிரம் பங்கு கெடச்சும்.’’

கூலிக்கார பையன் சந்தோசம் தாங்காமல் துள்ளினான்.

‘‘நாளைக்கு எனக்க மோளுக்கு நர்சிங் காலேஜில கண்டிப்பா சேத்து எப்படியும் ஒரு இருபதாயிரம் கெடச்சும், பக்கத்து வீட்டு விக்டோறியாகிட்ட வாங்குன அவசரக் கடத்த தீக்கலாம். அவ காலுல சுடுதண்ணி வீத்துன போல பெடச்சிண்டு கெடக்கா... ரண்டு நாளுல கிறிஸ்துமஸ் வருது நல்லா கொண்டாடுலாம். என் மனம் கூட்டி கழித்து கணக்கு போட்டது.

ஒரு முக்கால்வாசி ‘மட்டு’ வள்ளத்தில வந்திருக்கும் நாலு கோட்டுமாலு நெறஞ்சு அஞ்சாவது கோட்டுமாலுல பாதியளவு மீனு வந்திருக்கும்.

‘‘ராசாமாருவளே சீக்கிரம் கழிச்சு போடுங்க.. மொத வள்ளமா கரையப்புடுச்சலாம்... நல்ல வெல கெடச்சும்’’

நான் சொல்லி முடிப்பதற்குள் எங்கிருந்துதான் வந்ததோ..? அந்த பேய்க்காற்று! அமைதியா பொட்டக்குளம் போல கெடந்த கடல்ல ஓ...ன்னு ஒரு பெரிய இரச்சல். பேய்க்காற்று. கூடவே கடல் கொந்தளிப்பு.

* * *

சூறாவளிக் காற்றில் நாங்க சுழற்றி அடிக்கப்பட்டோம். ஆனி, ஆடி மாசத்துல கரையில அலை எழும்பி அடிக்கிற மாதிரி பனையளவு அலையெழும்பி அடிச்சது.

‘‘தம்பி! மிச்சம் உள்ள மட்ட கொத்திவுடு. இன்னும் நா இங்க கெடக்கக் கூடாது. கரைய பாத்து வள்ளத்தத் திருப்பு.... சேலு சரியில்ல.. ஏசுநாதரு செத்தநேரம் ஒலகமே இருட்டுனது போல இருட்டுண்டு வருது... ஓடித் தப்புவோம்!’’

என் தம்பியிடம் ஆர்டர் போட்டுக் கொண்டு எல்லோரையும் உஷாராக்கி அடுத்த அலை என் வள்ளத்துலதான் விழுந்தது. பாதியளவு வள்ளம் தண்ணீரால முங்கிப் போச்சு.

‘‘மக்களே! தண்ணிய எறச்சு வெளிய ஊத்துங்க... அப்பதான் வள்ளம் ஸ்பீடா ஓடமுடியும்’’ ஆளுக்கு ஒரு சாதனம் எடுத்து தண்ணிய கோரிக வெளிய ஊத்தினோம்.

‘‘தம்பி! எஞ்சின் ஆப் ஆவுடாம, ஒனக்க கையிலதான் இருக்கு’’

என் தம்பி போட்டுல ஒரு பெரிய ஸ்ராங்கு. அவன் ஒரு எஞ்சின் மெக்கானிக்குமாக்கும். எஞ்சன பார்ட் பார்ட்டா கழத்தி போட்டாலும் நல்லா நோகா ஒண்டிச்சு சரி பண்ணிடுவான். நம்ம எஞ்சின் புத்தம் எஞ்சினாக்கும் எப்படியும் நம்மள கரையில கொண்டு சேத்துடுவாண்ணுள்ள நம்பிக்கை எங்களுக்கு இருந்தது.

‘‘அண்ணா வருது ஒரு அலை’’

அப்பிடிதான் ஒரு அலை எழும்பி வந்தது.

‘‘படார்...’’

ஓங்கி அடிச்ச அடியில எஞ்சின் ஆப் ஆகிப் போச்சு. எஞ்சின் பக்கம் இருந்த தம்பியைத் தூக்கியெடுத்து எங்கோ எறிஞ்சி போட்டது.

‘‘தம்பி இன்னா இத பிடிச்சு நீந்திவா’ நான் றோப்புக்கு ஒரு உளும்ப எடுத்து கடல்ல வீசினேன்.

‘‘தண்ணிய வேகமா எறச்சு வெளியில ஊத்துங்க...’’ தண்ணி எறச்சு ஊத்தி ஊத்தி எல்லாருக்கும் கை தளர தொடங்கியாச்சு. உள்ள பெலத்தையெல்லாம் கூட்டி தண்ணிய எறச்சி ஊத்திக்கிட்டே இருந்தோம்.

‘‘அண்ணா! இன்சின்ல தண்ணி ஏறிப் போச்சு. இன்னும் எஞ்சின ஸ்டார்ட் ஆவறது தமிசியந்தான். தம்பி போட்ட அணுகுண்டு எங்க பாதி உசுர எடுத்திட்டது. இவரு பெரிய மெக்கானிக்காம். இந்த புத்தம் புதிய எஞ்சின ஸ்டார்ட் ஆக்க முடியலைண்ணா என்ன மெக்கானிக்கு... என்ன செஞ்சாவது எஞ்சின சரி பண்ணணும்’’

இயற்கை மேல உள்ள கோபத்த தம்பிகிட்ட காட்டினேன். அவன் படிச்ச வித்த பதினாறும் பாத்தான். எங்க...

சொல்லி வாய் மூடுவதற்குள் அடுத்த அலை வந்து வள்ளத்தை புஷ்பம் போலத் தூக்கி மறிச்சப் போட்டது. நாங்க அஞ்சு பேரும் ஆளுக்கொரு பக்கமா பொத்துன்னு விழுந்தோம். வள்ளம் கமந்து கெடக்கு. கொஞ்ச நேரத்துக்கு முன்ன மனசெல்லாம் நெறச்சு, எங்க கஷ்டங்களையெல்லாம் போக்க கெடச்ச மீனெல்லாம் கோட்டுமாலுவளோட கடல்ல போயிடுச்சு. வள்ளத்துல இருந்த ஏத்தினம் எல்லாம் கடல்ல ஒவ்வொண்ணா மொதக்குது.

‘‘எல்லாரும் வாங்க... வள்ளத்த வந்து புடிங்க வள்ளத்த புடிச்சிட்டு கெடப்போம். மீனு ஏத்தினம் எல்லாம் போனா போட்டு, உசுர காப்பாத்துவோம் வேற ஏதாவது வள்ளமோ போட்டோ வந்தா நம்மள காப்பாத்துவாங்க..’’

இனி வள்ளமும் இல்ல. எஞ்சினும் இல்ல... அஞ்சு உசுருமாவது பொழச்சா போதும். எனது மனம் ரணமாக வலித்தது.

நாலு பெண் பிள்ளைகளின் கல்யாணம், ரண்டு லட்ச ரூபா கடன், புது வீடு கட்டுறது எல்லா சொப்பனக் கோட்டையும் நொறுங்கிப் போச்சு.

‘‘கடவுளே! எங்கள உசுரோட கரை சேருங்க’’ இப்ப இந்த பிரார்த்தனைதான் எல்லார் மனசிலயும்....

கடலின் அலை முகத்தில் மாறி மாறி வந்து அடிச்சதால வாய்க்குள்ள உப்பு தண்ணீ கேனு கேனா உள்ள போவுது. சுமந்து கெடக்குத வள்ளத்துக மேல அஞ்சு பேரும் இறுக்கமா புடுச்சிண்டு கெடந்தோம்.

‘‘நாளைக்கு என்ன சம்பந்த ஒறப்பு.... குடும்பகாறங்கல்லாம் வீட்டுல வந்திருக்காங்க. நான் இங்க...’’

அதுக்குமேல் அந்த கூலிக்காரப் பையனுக்கு பேச்சு வரல்ல.

‘‘ஏதாவது கெடச்சா பிள்ளைக்கு பீஸ் கட்டலாம்னு நெனச்சு வந்தேன். பீசு கட்ட முடியல்லைன்னாலும் பரவாயில்லை. உயிரப் பிச்சையா போடுங்க தாயே!’’

என் தம்பி ஓ.... ன்னு கதறினான். அவனால அதுக்குமேல கதறவும் முடியவில்லை. பிளந்த வாயில் ஒரு குடம் உப்பு தண்ணீர் இறங்கி அடைச்சது.

‘‘அப்பா! நம்ம குடும்பத்தப் பிடிச்ச கிரகமெல்லாம் தீந்ததுன்னு நெனச்சோமே! இப்ப.... நாம பெழச்சுவோமா?’’

‘‘மக்களே! எது போனா நமக்கென்ன நாம உசுரோட இருந்தா... எல்லா கஷ்டமும் தீரும். மக்களே! இப்ப ஏதாவது வள்ளக்காரனோ போட்டுக்காரனோ வந்து நம்மள காப்பாத்துவான்பாரு. பேடிச்சாத மக்களே பேடிச்சாத!’’

‘‘இப்ப வள்ளம் வரும். இப்ப போட்டு வரும். இப்ப கப்பல் வரும்னு சொல்லிச் சொல்லி நான் எல்லோருக்கும் நம்பிக்கை குடுத்தாலும் நேரம் போகப் போக எல்லோரும் நம்பிக்கை இழந்துண்டுதான் இருந்தோம். சாப்பிட சாப்பாட்டில்ல, குடிச்ச தண்ணியில்லை. உப்பு தண்ணி வயிறு நிறைய இருக்கதால குடலப் புடுங்கி வெளியே கொண்டு வாறதுபோல இருந்தது.

‘‘நாளைக்கு கிறிஸ்மஸ்... எல்லோரும் நடுச்சாம பூசைக்குப் போவாங்க. புத்தம் புதிய புத்தாடை உடுத்துவாங்க பட்டாசு வெடிப்பாங்க. பலகாரம் செய்வாங்க. சொந்தகாரங்களோட சந்தோசமா இருப்பாங்க... நமக்கு மட்டும் ஏன் இந்த கதி?

வள்ளத்தில தொழிலுக்கு வந்த ஒரு கூலிக்கார பையன் பேசினது என்ன உருக்கி எடுத்தது. ஏதாவது வள்ளம் வரும். போட்டு வரும் எண்ணு நம்பிண்டிருந்த கடைசி நம்பிக்கையும் தவிடு பொடியா போனது. ஏன்னா? கிறிஸ்மஸ் அன்னைக்கு யாரும் தொழிலுக்கு வரமாட்டாவ. 26ஆந் தேதி சுனாமி நினைவு நாள். ஊரெல்லாம் மெனக்கெடு யாரும் தொழிலுக்கு வரமாட்டாவ. ஊருலயிருந்து நம்மள தேடி வாற வள்ளகாரங்களும் எங்கேயண்ணு தேடுவாங்க.... நாமதான் வழிஞ்சி கண்காணா தேசத்துக்கு வந்துட்டோமே! நாம எல்லோரும் கடலின் கெர்ப்பப் பாத்திரத்திலேயே சமாதியாவப் போறோம் நான் மனசுல நெனச்சேன்.

வள்ளத்தை இறுக்கமாப் பிடிச்சுட்டு கெடந்ததால எனக்க மகனுக்கு நெஞ்சு வயிறுண்ணு எல்லா பக்கமும் வள்ளத்துல உள்ள மரக்கட்டை உரஞ்சி இரத்தக்காயம்.

அதில் உப்புத்தண்ணி பட்டு உசுரு போறது மாதிரி காந்தல்.

‘‘அப்பா! என்னால தாங்க முடியல்ல.... வள்ளத்தல உள்ள கட்ட ஒரஞ்சு நெஞ்சு வயிறெல்லாம் ரத்த காயம். உப்பு தண்ணிய குடிச்சு குடுச்சு மூச்சு முட்டுது. அப்பா நான் என்ன செய்ய?’’ என் மகன் ஆன்றனி என்னிடம் கேட்கும்போதே அவன் நினைப்பு தப்பிப் போவது.

கண்ணெல்லாம் மேச்சொருகி, வாயிலிருந்து பசை தள்ளுது. நான்தான் என்ன செய்ய முடியும். என் மகன் என் கண் முன்னாலே செத்திண்டிருக்கானே! அதைப் பார்த்ததும் அவனை காப்பாத்த முடியாத ஒரு அப்பனாக நான் இருக்கேனே!

‘‘அப்பா... நான்....’’

என் மகனின் கடைசி மூச்சும் அடங்கிப் போச்சு. என்னால அழக்கூட முடியல்லை ஏன்னா அடுத்து நானும் கூட இப்படி சாவப் போறேனே!

‘‘றோப்ப எடுத்து எல்லாரும் கை காலுல கட்டி வள்ளத்துல கட்டிப் போடுங்க யாராவது கரையிலிருந்து தேடி வரும்ப நம்ம பொணமாவது கெடச்சட்டும்.

இறந்த என் மகனின் கைகாலையும் கட்டி என் இடுப்பில சேர்த்து கட்டிப் போட்டேன். எனக்க உசுர புடுச்சு நிறுத்த முடியாத நான் எனக்க மகனின் சுமையையும் சேர்த்து சொமக்கிறேன்.

‘‘இனிகோ அன்னா தாந்து போறான்’’ இன்னைக்கு அவனுக்கு சம்மந்த ஒறப்பு. ஒரு மாசத்துல கல்யாணம். அவன் சொப்பனமெல்லாம் இதோ கடலில்ல தாந்துகிட்டிருந்தது.

அவன் பிணத்தையும் என் இடுப்போடு சேர்த்து கட்டினேன். இப்ப எனக்கு என்னையும் சேர்த்து மூணு சுமை இப்ப எனக்கு நினைவும் தப்பிப் போவுது.

வரும்... வரும்... வள்ளம் வரும். நம்மைக் காப்பாத்தும் எண்ணு எனக்க மனசு நம்பிக்கை என்னை அப்பப்ப தட்டியெழுப்பிச்சு. அரைகுறை நினைவில் இருந்த எனக்க செவிகள் மட்டும் திறந்திருந்தது. ஏதாவது சத்தம் போட்டு சத்தம் கேக்குதா எண்ணு...

கேக்குது... ஒரு வள்ளம் ஓடி வரும் எஞ்சின் சத்தம் கேக்குது... இதோ... பக்கத்துல இன்னும் பக்கத்துல கேக்குது. அதுக்குமேல எதுவும் என் நினைவில் இல்ல...

Pin It