தொடர்புடைய படைப்புகள்

 

Foot stepsஅவளது
ஊரின் புழுதிச் சாலையையும்
பழகிய நிலவையும்
பிரிய முடியாக் கிழவியின்
புலம்பலினை ஆற்ற முடியா
அலையின் வார்த்தைகள்
மண்டியிட்டு வீழ்கின்றன
அவள் காலடியில்.

இந்தக் கடலுக்கு
அப்பால் தான்
நம் ஊரிருக்கிறதா?
மறுபடி மறுபடி
கேட்டுக் கொண்டிருக்கின்றன
குழந்தைகள்.

தன்
முதுமைச் சுருக்கங்களில்
படியும் மெல்லிய
பிரகாசத்துடன்
தலையசைத்த படியிருக்கிறாள்
கிழவி... ஆமென்று.

இந்த நிலவா
அங்கேயுமிருந்தது?
மறுபடியும் கிழவியின்
நினைவுகளைக் கலைத்த
குழந்தைகள் கேட்டன

ம் அதே தான்.
வழியவிட்ட பெருமூச்சிற்கிடையில்
இதேதான் அங்கேயுமிருந்ததாய்
கிழவி சொன்னாள்.

அப்ப...!
நிலவும் அகதியாய்
எம்முடன் வந்ததா?

விடை தர முடியாக்
கேள்வியைத் தூக்கிக் கொண்டு
குழந்தைகள் ஓடின.... 



✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.