கர்நாடகத்தின் அனைத்து அணைகளிலும் தண்ணீர் நிரம்பியுள்ள போதிலும் “தமிழ் நாட்டிற்கு நாங்களாகத் தண்ணீர் திறந்து விட மாட்டோம் ; இயற்கையாக மழை பொழிந்து வெள்ள நீர் நிரம்பி வழிந்து தமிழ் நாட்டுக்குப் போகும்” என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை நேற்று (27.10.2010) செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். (தி இந்து 28.10.2010) “இது அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுத்த முடிவு” என்று அமைச்சர் பொம்மை கூறியுள்ளார்.  பதவிச் சண்டையில் ஒருவர் காலை ஒருவர் வாரிவிட்ட, ஒருவர் குரல்வளையை ஒருவர் நெரித்துக் கொண்டு  எதிரிகளாகச் செயல்பட்டு, இந்தியா முழுவதின் கவனத்தை ஈர்த்த பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சியினர் கர்நாடக முதல்வர் எடியூரப்பா (பா.ஜ.க.) தலைமையில் கூடி இணக்கமாகப் பேசி, தமிழ்நாட்டிற்கெதிராக மேற்கண்ட முடிவை எடுத்துள்ளனர்.
 
தமிழ்நாட்டில் எந்த உரிமை பறிபோனாலும், இனமே அழிந்தாலும் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்றாகக் கூடி, மக்கள் நலன் கருதி ஒரு முடிவெடுப்பதில்லை. கர்நாடகத்தில் உள்ள கட்சிகள் அங்குள்ள மக்களின் சீற்றத்திற்கு ஆளாகக் கூடாது என்றும், இனத்துரோகி என்று கூறி யாரும் தங்களைத் தனிமைப்படுத்தி விடக்கூடாது என்றும் அஞ்சுகின்றன.  ஆனால் தமிழ் நாட்டில் உள்ள ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் மக்களை மந்தையாகக் கருதி, அந்த மந்தைக் கூட்டத்தைத் தங்கள் விருப்பம் போல் எப்படி வேண்டுமானாலும் திசை திருப்பிக் கொள்ளலாம் என்றும் துணிச்சலாகச் செயல்படுகின்றன.
 
காவிரித் தீர்ப்பாயம் 2007 பிப்ரவரி 5 ஆம் நாள் இறுதித் தீர்ப்பளித்தது.  மிகவும் குறைவாக 192 டி.எம்.சி. தண்ணீர்தான் தமிழகத்திற்குக் கர்நாடகம் தரவேண்டும் என்று தீர்ப்பளித்தது.  இதைக் கூட கர்நாடகம் ஏற்க மறுத்து உச்சநீதி மன்றத்தில் வழக்குப் போட்டது.  தமிழகமும் உச்சநீதி மன்றத்தில் வழக்குப் போட்டுள்ளது.
 
இந்த இறுதித் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  இதனால் உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கும் வரை காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்புதான் செயலில் இருக்க வேண்டும்.  இதுதான் சட்ட நெறிமுறை. 1991 ஆம் ஆண்டு சூன் மாதம் 25 ஆம் நாள் காவிரித் தீர்ப்பாயம் அளித்த இடைக்கால ஆணையில் தமிழ் நாட்டிற்குக் கர்நாடகம் 205 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கூறியது.
 
இந்த இடைக்காலத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகம் உச்சநீதி மன்றத்தில் வழக்குப் போட்டது. இடைக்காலத் தீர்ப்பு செல்லும் என்று உச்சநீதி மன்றம் ஆணையிட்டதுடன் அரசிதழில் வெளியிடவேண்டும் என்றது. அதன்படி அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் அரசிதழில் அத்தீர்ப்பை வெளியிட்டார்.
 
இறுதித் தீர்ப்பு உச்சநீதி மன்றத்தால் முடக்கப்பட்டுள்ள நிலையில் இடைக்காலத் தீர்ப்பின் படி, கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று 2007ல் தி.மு.க. ஆட்சி கோரவில்லை.  அண்மையில் மூன்று மாதங்களாகத்தான் ’’இடைக்காலத் தீர்ப்புப் படி கர்நாடகம் தண்ணீர் தர வேண்டும்’’ என்று கோருகிறார் முதலமைச்சர் கருணாநிதி.
 
’’இப்பொழுது சட்டப்படி செயல்படுவோம்” என்று கூறும் கருணாநிதி, 2007 ஆம் ஆண்டிலிருந்து இடைக்காலத் தீர்ப்பில் தமிழகத்திற்குள்ள சட்டப்படியான உரிமையைக் கோர ஏன் உச்சநீதி மன்றத்தை அணுகவில்லை?
 
கர்நாடகத்தின் கிருஷ்ணராஜசாகர் அணை முழுக் கொள்ளளவான 124.80 அடி நிரம்பிவிட்டது.  ஏமாவதி, கபினி, ஏரங்கி உள்ளிட்ட அணைகள் 99 விழுக்காடு நிரம்பிவிட்டன. 
 
2010 சூன் மாதம் 1 ஆம் நாளிலிருந்து அக்டோபர் 25 வரை இடைக்காலத் தீர்ப்புப் படி கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு 163 டி.எம்.சி. தண்ணீர் தந்திருக்க வேண்டும்.  ஆனால் தமிழக எல்லைப் பகுதி மழை பெய்த நீரையும் சேர்த்து மேற்கண்ட காலத்தில் மேட்டூர் அணைக்கு வந்த தண்ணீர் 82 டி.எம்.சி.மட்டுமே. சட்டப்படி கிடைக்க வேண்டிய எஞ்சியுள்ள 81 டி.எம்.சி. தண்ணீரைப் பெற கருணாநிதி என்ன சட்ட நடவடிக்கை எடுத்தார்? எதுவுமில்லை.
 
கன்னடக் கவிஞர் சர்வக்ஞர் சிலையை சென்னை அயன்புரத்தில் திறந்த போது கருணாநிதி, “தமிழ்நாட்டிற்கும் கர்நாடகத்திற்கும் இடையே உள்ள காவிரிச் சிக்கல் உள்பட அனைத்துச் சிக்கல்களையும் சுமூகமாகத் தீர்த்துக் கொள்வோம்”. என்று கூறினார்.  அவர் சுமூகமாக எதைத் தீர்த்தார்? சுமூகமாக, தமிழ் நாட்டு உரிமைகளைக் காவு கொடுத்திருக்கிறார் அவ்வளவே.
 
காவிரிப் பாசனப்பரப்பில் பல ஆண்டுகளாகக் குறுவை சாகுபடி நிறுத்தப்பட்டுவிட்டது. காரணம் குறுவை சாகுபடிக்குரிய தண்ணீரைக் கர்நாடகம் தர மறுத்ததே. ஆழ்குழாய் கிணறு அமைக்க வாய்ப்புள்ளோர் மட்டுமே குறுவை சாகுபடி செய்தனர். இப்பொழுது ஒரு போக சம்பா சாகுபடியும் பெருமளவில் பாதிக்கப்பட்டு பாதி நிலங்கள் தரிசாகக் கிடக்கின்றன.  காவிரி நீர் ஓரளவு திறக்கப்பட்டதை வைத்துச் சாகுபடி செய்யப்பட்ட நிலங்களில் போதிய தண்ணீர் வரத்து இல்லாமல் பயிர்கள் வளர்ச்சி இன்றி பாதிக்கப்பட்டுள்ளன.
 
இவ்வளவு நெருக்கடிகள் காவிரிப் பாசனப்பகுதியில் இருக்கும்போது கர்நாடக அணைகள் நிரம்பிய நிலையிலும் தமிழக முதல்வர் தண்ணீர் பெற முடியவில்லை என்றால், இங்குள்ள பொதுப் பணித்துறை அலுவலகங்களை இழுத்து மூட வேண்டியதுதானே! நீர்ப்பங்கீடு தொடர்பாக, அதிகாரிகளுக்கும் உழவர்களுக்கும் நடக்கும் சண்டையாவது நீங்கும்.
 
நடுவண் அரசில் செல்வாக்குப் பெற்றுள்ள கருணாநிதி தமிழக உழவர்களையும்  வேளாண்மையையும் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்தார்? உச்சநீதி மன்ற ஆணை பெற்ற இடைக்காலத்தீர்ப்பைச் செயல்படுத்துமாறு கர்நாடக அரசுக்கு இந்திய அரசு கட்டளை இட அரசமைப்புச் சட்ட விதி 355 இருக்கிறது. அதைப் பயன்படுத்த முடியும்.  அத்திசையில் நடுவண் அரசைச் செயல்பட வைத்தாரா கருணாநிதி? இல்லை
 
தமிழ் மக்கள் இனியும் தேர்தல் தலைவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.  தமிழக உரிமைகளை மீட்கக் களத்திற்கு வரவேண்டும்.  இனத்துரோகி யாராக இருந்தாலும் மக்களுக்கு அடையாளம் காட்டித் தனிமைப்படுத்த வேண்டும்.
 
காவிரி உரிமையை நிலை நாட்டி கர்நாடகத்திலிருந்து இடைக்காலத்தீர்ப்பின் படி தண்ணீர் பெற்றுத் தருமாறு தமிழக அரசை வலியுறுத்திப் போராட முன்வருமாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

Pin It