இரோசீமா, நாகசாகி மீது அணு குண்டுகளை வீசி 70 ஆண்டுகளுக்குப் பின்னர்..

சப்பானிய நகரங்களாகிய இரோசீமா, நாகசாகி மீது முறையே ஆக 6, ஆக 9, 1945 அன்று அணு குண்டுகளை அமெரிக்கா வீசி 70 ஆண்டுகள் கடந்துவிட்டதை இந்த ஆண்டு குறிக்கிறது.

குண்டு வெடிப்புக்குப் பின் இரு மாத காலத்திற்குள்ளாகவே மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆடவர், பெண்கள், குழந்தைகள் இறந்துவிட்டனர். அதில் பாதி பேர் குண்டு போட்ட அன்றைய தினமே கொல்லப்பட்டனர். அணு குண்டிலிருந்து வெளிப்படும் நீண்டகால கதிர் வீச்சின் காரணமாக தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மனித குலத்திற்கு எதிரான இந்த கொடூரமான குற்றத்தை நடத்திய அமெரிக்க ஏகாதிபத்தியர்களை சப்பானிய மக்களும், உலக மக்களும் என்றுமே மன்னிக்க மாட்டார்கள்.

போரில் தோல்வியடைந்த சப்பானிய ஏகாதிபத்தியம், சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்காவின் தலைமையில் இருந்த கூட்டு சக்திகளிடம் சரணடையும் கட்டத்தில் இருந்த நேரத்தில் இரோசீமா, நாகசாகி மீது அணு குண்டுகள் போடப்பட்டன. அது சரணடைவதற்கான சூழ்நிலைகளை சீனா, வியட்நாம், கொரியா, பர்மா, மலாயா, இந்தோனேசியா, பிலிப்பைன்சு, சிங்கப்பூர், லாவோசு மற்றும் கம்போடியாவைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்களுடைய போராட்டம் உருவாக்கியிருந்தது. சப்பானுடைய ஆக்கிரமிப்பின் கீழிருந்த சீனாவின் ஒரு பகுதியான மன்சூரியாவை விடுதலை செய்வதற்காக ஆகஸ்டு 1945-இல் பத்து இலட்சம் வீரர்களைக் கொண்ட செஞ்சேனையை அனுப்பியதன் மூலம் சோவியத் யூனியன் அளித்த பெரும் பங்களிப்பும் இந்தச் சூழ்நிலையை உருவாக்கியிருந்தது. சப்பானுடைய பெரும்பாலான நகரங்கள் மீது குண்டுமழை பொழிவதன் மூலம் அமெரிக்கா ஏற்கெனவே அங்கு மோசமான சீரழிவையும், சாவையும் உருவாக்கியிருந்தது. குண்டு மழையிலிருந்து அது வரை ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த இரோசீமாவும், நாகசாகியும் அணு குண்டுகளுக்கு இலக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குக் காரணம், அவை இராணுவ இலக்கு என்பதல்ல. அணு குண்டுகளின் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதைச் சோதனை செய்வதற்காகவே அவை தேர்ந்தெடுக்கப்பட்டன.

இரோசீமா, நாகசாகி மீது அணு குண்டு போடப்பட்டது, பாசிசத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக போராட்டத்தில் பொங்கியெழுந்த சோசலிச சோவியத் யூனியனுக்கும், ஐரோப்பிய ஆசிய மக்களுக்கும் உலகின் எல்லாப் பகுதிகளிலும் மக்களுடைய புரட்சிகர மற்றும் விடுதலைப் போராட்டங்களை நசுக்குவதற்கு பாசிசத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம் இப்போது தன் கையில் எடுத்துக் கொள்ளுமென்றும், உலக ஏகாதிபத்தியத்திற்கு அது தலைமை கொடுக்குமென்றும் ஒரு திட்டவட்டமான எச்சரிக்கையை அனுப்புவதற்காக ஆகும். இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததிலிருந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடிய நடவடிக்கைகள் இதை உறுதி செய்கின்றன.

இரண்டாம் உலகப்போரில் அணு குண்டு பயன்படுத்தப்பட்டது, அதைத் தொடர்ந்த பயங்கரமான ஆயுதங்களுக்கான போட்டியை நியாயப்படுத்தியது. தங்கள் நாட்டு நலன்களைப் பாதுகாத்துக் கொள்வது என்ற பெயரில் பல்வேறு வல்லரசுகள், மக்களைப் பெருமளவில் அழிக்கக் கூடிய புதிய மேலும் நவீன ஆயுதங்களை தயாரிப்பதற்காக மிகப் பெரிய அளவில் பணத்தைச் செலவழித்தனர். இது ஒரு அணு பேராபத்து நிகழக்கூடிய அளவிற்கும், ஒட்டுமொத்த உலகத்தையே அச்சுறுத்துகின்ற அளவிற்கும் அது இருந்தது. இந்த இராணுவமயமாக்கலுக்கு முக்கிய உந்து சக்தி, அமெரிக்க ஏகாதிபத்தியமாகும். இரோசீமாவைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில், அமெரிக்க ஏகாதிபத்தியம் அப்பட்டமாகவே பிற மக்களுடைய உயிர்களை அலட்சியப்படுத்தியும், அற்பமான சாக்குப்போக்குகளைக் காட்டி எண்ணெற்ற போர்களை நடத்தியும், அணு, வேதியியல் ஆயுதங்கள், கிருமிகள் மற்றும் உயிரியல் போர் ஆயுதங்களென புதிது புதிதான மிகவும் பயங்கரமான ஆயுதங்களை பரிசோதித்தும் வருகிறது.

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த பின்னர், ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் தன்னுடைய நிலையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, நாடுகள் மற்றும் மக்களுடைய இறையாண்மை மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத் தொடுத்தது. அது கிரேக்க மக்களுடைய புரட்சிகர எழுச்சியைக் காட்டுமிராண்டித்தனமாக நசுக்கியது. தொழிலாளி வர்க்கம் மற்றும் மக்களிடமிருந்து எழக்கூடிய எந்தக் கிளர்ச்சியையும் நசுக்குவதற்காகவும், சோவியத் யூனியனையும் பிற மக்கள் குடியரசுகளையும் அச்சுறுத்துவதற்காகவும் மேற்கு ஐரோப்பாவில் அது இராணுவத் தளங்களை அமைத்தது. அமெரிக்கப் படைகள் கொரியாவை பிளவுபடுத்தி ஆக்கிரமித்துக் கொண்டன. அவர்கள் சப்பானை ஆக்கிரமித்தன. சப்பானிய மக்கள் எதிர்த்து வந்திருந்துங்கூட அது ஒக்கினாவா-வில் இராணுவத் தளத்தை தொடர்ந்து தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கிறது. வியத்நாமினுடைய வீரமான விடுதலைப் போராட்டத்தில் பிரஞ்சு காலனியர்கள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர்கள் விட்டுச் சென்ற இடத்தை அமெரிக்க ஏகாதிபத்தியர்கள் எடுத்துக் கொண்டனர். தென் வியத்நாமைக் கைப்பற்றிய அமெரிக்கா, வரலாற்றிலேயே மிகவும் நீண்ட இரத்தவெறி பிடித்த போரை நடத்தினார்கள். அதில் இலட்சக் கணக்கான வியத்நாமிய மக்கள் கொல்லப்பட்டனர். இறுதியில் 1975-இல் அமெரிக்கா தோற்கடிக்கப்பட்டு தூக்கியெறியப்பட்டனர்.

பனிப்போர் காலத்தில், மக்களுடைய புரட்சிகர, தேசிய விடுதலைப் போராட்டங்களை நசுக்குவதில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தோடு, சமூக ஏகாதிபத்திய சோவியத் யூனியன் தீவிரமாகப் போட்டியிட்டது. இந்த இரு வல்லரசுகளுக்கிடையே உலகை மறுபங்கீடு செய்யும் முயற்சியில் அவர்கள் போட்டியிட்டனர். பனிப் போர் முடிவுக்கு வந்ததையும், சோவியத் யூனியன் உடைந்து நொறுங்கியதையும் தொடர்ந்து, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாசிச போர்வெறிச் செயல்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. "நாகரிகங்களுடைய மோதல்" என்ற பெயரிலும், "பயங்கரவாதத்தை எதிர்த்துப் போர்" என்ற பெயரிலும், ஆசியாவின் பல நாடுகளிலும், ஐரோப்பா, அமெரிக்காவிலும் கூட முஸ்லீம் மத நம்பிக்கை கொண்ட மக்களுக்கு எதிராக ஒரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை அமெரிக்கா கட்டவிழ்த்து விட்டுள்ளது.

யுகாசுலாவிய கூட்டரசை உடைத்த பின்னர், அது ஆப்கானிஸ்தானை இராணுவ ரீதியாகக் கைப்பற்றியது. "மக்களைப் பெருமளவில் அழிக்கக் கூடிய ஆயுதங்களை" இராக் வைத்திருப்பதாகவும், அது "மனித குலத்திற்கு ஒரு அச்சுறுத்தல்" என்றும் ஒரு பொய்யான பரப்புரையின் மூலம் அமெரிக்காவின் தலைமையின் கீழ் பெரிய மேற்கித்திய ஏகாதிபத்திய சக்திகள் 2003-இல் இராணுவ தாக்குதல் நடத்தி, இராக்கை ஆக்கிரமித்தனர். வட கொரியாவை ஒரு மோசமான சக்தியாகக் காட்டி, அந்த நாட்டிற்கு எதிராக தினசரி அச்சுறுத்தல்களும், வணிகத் தடைகளும், இரானுக்கு எதிராக நாட்டை செயலிழக்கச் செய்யக் கூடிய வணிகத் தடைகளும், இந்த நாடுகளோடு உறவுகளை ஏற்படுத்தும் எல்லா பிற நாடுகளுக்கு அச்சுறுத்தல்களும், அமெரிக்க ஏகாதிபத்தியம் எப்படி தன்னுடைய மேலாதிக்கத்தைப் பிற நாடுகள் மீது செலுத்தி வருகிறது என்பதற்கான பிற எடுத்துக் காட்டுகளாகும்.

எகிப்து, லிபியா, சிரியா போன்ற நாடுகளில் ஆட்சிகளை நிலைகுலைக்கவும், ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவரவும் இராணுவ ஆதரவு பெற்ற பல்வேறு வகையான கிளர்ச்சி சக்திகளுக்குக் கூட அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆதரவளித்து வந்திருக்கிறது. இதன் மூலம் மிகப் பழமையான நாகரிகங்களையும் நவீன பொருளாதார அரசியல் அமைப்புக்களையும் வளர்த்துள்ள இந்த நாடுகளைக் குழப்பத்திலும் அராஜகத்திலும் ஆழ்த்தியிருக்கிறது. உக்ரேனில் ஒரு பொம்மை அரசாங்கத்தை அமைப்பதற்காக அது அங்கு ஒரு இராணுவக் கிளர்ச்சியை நடத்தியிருக்கிறது. பிற ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளோடு கூட்டாக இரசியா மீது காட்டுமிராண்டித்தனமான வணிகத் தடைகளை அது விதித்திருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்தத் தாக்குதல்களை எதிர்த்து வரும் கிழக்கு உக்ரேன் மக்கள் மீது சாவையும், அழிவையும் அது பொழிந்து வருகிறது.

அணு ஆயுதக் குவிப்பு தொடரும் வரை, ஆயுதங்களுக்கான போட்டி தடையின்றித் தொடரும் வரை, இன்றைய உலகில் ஆக்கிரமிப்புப் போர்களுக்கும், மேலாதிக்கத்திற்கும் அடிப்படையாக இருக்கின்ற முதலாளித்துவமும் ஏகாதிபத்தியமும் இந்த மண்ணிலிருந்து பிடுங்கி எறியப்படாத வரை, உலகம் எப்போதுமே பாதுகாப்பானதாக இருக்க முடியாதென இரோசீமாவும், நாகசாகியும் நமக்கு நினைவு படுத்துகின்றன.

இந்த முழு உலகையும் பத்து முறை அழிக்கக் கூடிய அளவிற்கு அணு மற்றும் பிற வழக்கமான பேரழிவான ஆயதங்களை அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னிடம் சேமித்து வைத்திருக்கிறது. ஒரு அணு குண்டுத் தாக்குதலை முதல் முறையாக ஏவிய ஒரே ஏகாதிபத்திய சக்தியான இந்த இரத்தவெறி பிடித்த ஏகாதிபத்திய சக்தியாகும் இந்த அமெரிக்கா. அது, தற்போது இரான் நாட்டு மக்களுக்கு சொல்லொணாத் துயரங்களை உருவாக்கியிருக்கும் பொருளாதாரத் தடைகளை நீக்குதற்கு மாற்றாக "இரானை அணு குண்டுகளைத் தயாரிப்பதிலிருந்து தடுப்பது" என்ற பெயரில் இரான் மீது கடுமையான கட்டுப்பாடுகளைத் திணிப்பதில் ஈடுபட்டிருக்கிறது. மிகச் சில பெரிய அணு சக்தி நாடுகளோடு சேர்ந்து அது, மின் சக்தித் தேவைகள் உட்பட அமைதியான பயன்பாடுகளுக்குக் கூட எந்தெந்த நாடுகளை அணு சக்தித் திட்டங்களை வைத்திருக்க "அனுமதிப்பது" என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை அது தனக்குத் தானே கைப்பற்றி வைத்திருக்கிறது.

சப்பானிய மக்களுக்கு எதிராக அணு ஆயுதத்தைப் பயன்படுத்தியவர்களும், பிற மக்கள் மீதும் அதைப் பயன்படுத்துவோமென வெளிப்படையாகவே அச்சுறுத்தி வருபவர்களும் அமெரிக்க ஏகாதிபத்தியர்கள் என்று இரோசீமா, நாகசாகி தெளிவாக வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியர்கள் கட்டவிழ்த்து விட்டு வரும் பாசிச பயங்கரத்திற்கும், அச்சுறுத்தல்களுக்கும் உலகத் தொழிலாளி வர்க்கமும், சுதந்திரம் விரும்பும் மக்களும் என்றும் அடிபணிந்ததில்லை. ஏகாதிபத்தியம், பாசிசம், போருக்கு எதிராகவும், புரட்சி மற்றும் தேசிய விடுதலைக்காகவும், ஏகாதிபத்திய அச்சுறுத்தல்களும், மேலாதிக்கமும் இல்லாமல் தங்களுடைய பாதையைத் தாங்களே தீர்மானிப்பதற்கான உரிமைக்காகவும் அவர்கள் போராடி வந்திருக்கின்றனர், இனியும் தொடர்ந்து போராடுவார்கள்.

இரோசீமா, நாகசாகி மீது அணு குண்டுகளைப் போட்டு 70 ஆண்டுகள் கடந்திருக்கும் இந்த வேளையில், ஏகாதிபத்தியம், பாசிசம் மற்றும் போருக்கு எதிரான போராட்டப் பாதையை விட்டுக் கொடுக்காமல் தொடர வேண்டுமென்றும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தோடு கைகோர்த்தும் போட்டியிட்டும் வருகின்ற, உலகை மறு பங்கீடு செய்வதற்கான பேரழிவானப் போர்களில் தங்களுடைய நாடுகளையும் மக்களையும் ஆழத்துவதற்கு அச்சுறுத்தி வருகின்ற இந்த நாடுகளில் உள்ள ஆளும் வர்க்கங்களுக்கு எதிரான போராட்டங்களையும் தீவிரப்படுத்த வேண்டுமென இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி தொழிலாளி வர்க்கத்தையும், மக்களையும் அழைக்கிறது.

Pin It