தங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நம் நாட்டுத் தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும் அதிகமாக போராட்ட பாதையில் இறங்கியுள்ளனர்.

உணவு, இருப்பிடம், குடிநீர், சுகாதாரம், கல்வி, மருத்துவம், போக்குவரத்து, மின்சாரம் போன்றவற்றின் உரிமைகள் ஆனாலும் சரி அல்லது இன்று மனிதன் வாழ்வதற்கான அத்தியாவசியமான மற்ற பிற உரிமைகள் ஆனாலும் சரி, இன்றைய அரசாங்கம் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று உட்கார்ந்து கொண்டு அமைதியாகக் காத்திருக்க இனிமேலும் நம் மக்களுக்கு விருப்பமில்லை. ஒவ்வொரு தேர்தலுக்கு பின்னரும் அரசாங்கங்கள் மாறி மாறி வருவதை மக்கள் கண்டுவிட்டனர், ஆனால் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் வெறும் காகிதத்தில்தான் உள்ளன. மக்கள் தங்கள் உரிமைகளைக் கோரும் போது, அவர்கள் ஆளும் வர்க்கத்தின் பாசிச ஒடுக்குமுறையை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. தொழிலாளிகள் மற்றும் உழைக்கும் மக்களின் எதிர்ப்பின் முதல் அறிகுறிகள் தோன்றிய உடனேயே போராட்டத்தை அடக்குமாறு முதலாளி வர்க்கம் குரலெழுப்புகிறது.  எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், இந்தக் கேள்வியில் எந்த வித்தியாசமும் இல்லை.

சூன் 20 அன்று அரியானாவின் குருகானில் தொழிலாளிகளுக்கும் காவல் துறைக்கும் இடையே பெரும் மோதல்கள் நடந்துள்ளன. ஓரியண்ட் கிராப்ட் என்ற முதன்மையான ஆடை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் தங்களுடைய சக தொழிலாளி மின்சாரம் தாக்கப்பட்டு இறந்தார் என்ற செய்தியைக் கேட்டவுடன், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கோபமாக கிளர்ச்சியில் வெளிவந்தனர். குருகான், மானேசர் பகுதியிலுள்ள மற்ற நிறுவனங்களைப் போலவே இந்த நிறுவனத்திலும் தொழிலாளர்கள் கடுமையாகச் சுரண்டப்படுகின்றனர், நீண்ட நேரங்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற சூழலில் அவர்கள் வேலை செய்யுமாறு நிர்பந்தப்படுத்தப் படுகிறார்கள். தொழிலாளர்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு அரியானா அரசாங்கத்தின் பதில் காவல் துறையை ஏவிவிட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைத் தாக்கியதாகும்.

அதே நாளில், இமாசல் பிரதேசத்தின் மாண்டியிலுள்ள ஐஐடி-யில் (இந்திய தொழில்நுட்பக் கழகம்) கட்டுமான இடத்தில் வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கும், ஒரு ஒப்பந்தகாரரால் கூலிக்கு அமர்த்தப்பட்ட குண்டர்களுக்கும் இடையே கடுமையான மோதல் என்று செய்தி வெளிவந்தது. மே மாதத்திலிருந்து தங்களுக்குக் கூலிகளைக் கொடுக்காமல் இருப்பதை கொடுக்கக் கோரி, தொழிலாளிகள் ஒரு அமைதியான போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த போது குண்டர்கள் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கி சூட்டினால் பல தொழிலாளர்கள் மோசமாகக் காயமடைந்தனர். தொழிலாளர்களைத் தாக்கிவிட்டு ஓடிய நான்கு குண்டர்கள் அருகில் இருந்த மலை சரிவுகளில் வழுக்கி விழுந்து இறந்து கிடந்தனர்.

அடுத்தடுத்து வந்துள்ள அரசாங்கங்கள் அரசு மருத்துவமனைகளை திட்டமிட்டு சீரழித்து வருவதை எதிர்த்து தில்லியில் அரசு மருத்துவமனையிலுள்ள 20,000 பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருந்தனர். 24 மணி நேரத்திற்குள் தில்லி அரசாங்கம், இந்த வேலை நிறுத்தத்தை “சட்ட விரோதமானது” என்று அறிவித்து, பாசிச அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தை ஏவிவிட்டு, மருத்துவர்களின் நியாயமான போராட்டத்தை நசுக்க ஆயிரக்கணக்கான காவல்துறையினரை ஈடுபடுத்தியது. 

மறுபக்கம் இதே அரசாங்கங்கள் முதலாளி வர்க்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் மிகவும் மும்முரமாகச் செயல்படுகின்றனர். “தொழில் நிறுவனங்கள் நடத்துவதை எளிதாக்குவதற்கு”மத்திய அரசு கடுமையாக உழைத்து வருகிறது. அது இந்திய மற்றும் பன்னாட்டு மூலதனத்திற்கு இந்தியா ஒரு கவர்ச்சிகரமான நாடாக ஆக்குவதற்காக அதிக நேரம் உழைத்து வருகிறது. முதலாளி வர்க்கத்தின் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற, கம்பெனிகள் சட்டத்தை அது மாற்றிவிட்டது, மற்றும் தொழிலாளிகளின் உரிமைகளை பறித்து சுரண்டலை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கத்தோடு பல முயற்சிகளை அது எடுத்து வருகிறது, இவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றபட்டுவிட்டன அல்லது விரைவில் நிறைவேற்றப்பட உள்ளன. தொழிலாளிகள் சங்கம் அமைப்பதை மேலும் கடினமாக்குவதற்கும், தொழிலாளிகளை எந்தவித சமூக பாதுகாப்பும் இல்லாது ஒப்பந்த அடிப்படையில் வேலையில் அமர்த்துவதையும் தூக்கி எறிவதையும் மேலும் சட்டரீதியாக ஆக்கவும், உழைப்பு நாளின் நேரத்தை அதிகரிப்பதை சட்டரீதியாக ஆக்கவும், நிறுவனங்கள் மூடுவதையும் தொழிலாளிகளை கூண்டோடு வேலையிலிருந்து தூக்கி எறிவதையும் எளிதாக்கவும், மற்றும் பல லட்ச நிறுவனங்களை கம்பெனிகள் சட்டத்திலிருந்தும், தொழில் தகராறுகள் சட்டத்திலிருந்தும் விலக்கு அளிப்பதையும் நோக்கமாக இந்தத் திருத்தங்கள் கொண்டுள்ளன. முதலாளி வர்க்கம் கோரியதற்கு இணங்க, அரசாங்கம் பொருளாதாரத்தின் முக்கிய துறைகளான பாதுகாப்பு, காப்பீடு, இரயில்வே ஆகியவற்றை அதிகப்படியான அந்நிய நேரடி முதலீடுகளுக்கு திறந்து விட்டுள்ளது.

முதலாளி வர்க்கம் மற்றும் அதன் பரப்புரையாளர்களின்படி, தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும் தங்கள் உரிமைகளுக்காக போராடினால் அவர்களின் போராட்டம் “தேசிய நலனுக்கு” எதிரானது, அது நசுக்கப்பட வேண்டும். அவை "வன்முறை" என்று அறிவிக்கப்படும். அவை முதலாளிகளை அச்சுறுத்தித் துரத்துவதன் மூலம், பொருளாதாரத்தை பாதிக்கும் என்கின்றனர்.  சமீபத்தில் முதலாளிகளிகளின் வன்முறையை எதிர்த்தும், தங்கள் மீது சுமத்தப்படும் மனிதாபிமானமற்ற உழைக்கும் சூழ்நிலைகளை எதிர்த்தும் குருகானிலும், மண்டியிலும் தொழிலாளிகள் மேற்கொண்ட போராட்டங்களில் இதுவே நடைபெற்றது. சுகாதாரம் கல்வி போன்ற சேவைத் துறைகளில் அரசாங்கம் திட்டமிட்ட முறையில் பொது மருத்துவமனைகளையும் அரசுக் கல்வி நிலையங்களையும் சீரழித்து, சமுதாயத்திற்கு எதிரான திட்டத்தை நடைமுறைப்படுத்திவரும் வேளையில், இந்த நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் மருத்துவர்களும் செவிலியர்களும் ஆசிரியர்களும் தங்கள் நிலைகளையும் சீரழிவுகளையும் எதிர்த்து போராடும் பொழுது அவர்கள் “பொறுப்பில்லாதவர்கள்” என்றும், “சமுதாயத்திற்கு எதிரானவர்கள்”என்றும் பலவகையிலும் தாக்கப்படுகின்றனர். ஒவ்வொரு போராட்டத்திலும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்காக, காவல்துறை உள்ளிட்ட அரசு இயந்திரத்தின் முழு சக்தியோடு முதலாளிகளின் தனிப்பட்ட குண்டர்களும் முழு வீச்சில் கட்டவிழ்த்து விடப்படுகின்றனர்.

முதலாளி வர்க்கமும் தொழிலாளி வர்க்கமும் எதிரெதிரான நலன்களுக்காக நிற்கின்றனர். அவர்களுக்கு இடையில் எந்தவொரு சமரசத்திற்கோ விட்டுக்கொடுத்தலுக்கோ இடமில்லை. உழைக்கும் பெரும்பான்மையினர் தங்கள் நிலைமைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர் என்பதைத் தொழிலாளிகள் மற்றும் உழவர்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், பழங்குடியின மக்கள் மற்றும் மற்ற சுரண்டப்பட்ட ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டங்கள் காண்பிக்கின்றன.

ஒரு பக்கம், அரசு அதிகாரத்தை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள பிற்போக்குத்தனமான முதலாளி வர்க்கம் இருக்கின்றது. மத்தியிலும் மாநிலங்களிலும் உள்ள எல்லா அரசாங்கங்களும் முதலாளி வர்க்கத்தின் நிர்வாகக் குழுக்களே ஆகும். நம் மக்களின் நிலம் உழைப்பு மற்றும் இயற்கை வளங்களை தடையில்லாமல் கொள்ளையடிப்பதனால், இந்திய மற்றும் வெளிநாட்டு முதலாளிகள் அதிகபட்ச இலாபங்கள் ஈட்டுவதை உறுதிப்படுத்தும், தொழிலாளர்களுக்கு எதிரான, உழவர்களுக்கு எதிரான, தேசத்திற்கு எதிரான மற்றும் சமுதாயத்திற்கு எதிரான திட்டத்தை விசுவாசத்தோடு நடைமுறைப்படுத்த அவர்கள்அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர்.

மறுபக்கம், தொழிலாளி வர்க்கமும் உழைக்கும் உழவர்களும், அவர்கள் மனிதனாக இருப்பதனால் உள்ள உரிமைகளுக்காகவும் சமுதாயத்தின் செல்வத்தை உற்பத்தி செய்பவர்களாகவும் இருப்பதனால் உள்ள உரிமைகளுக்காகவும் போராடி வருகின்றனர்.

இன்று பொருளாதாரத்தின் போக்கு, அதிகபட்ச சுரண்டலின் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலாளிகளைக் கொழுக்க வைப்பதாக உள்ளது. தாராளமய, தனியார்மயமாக்கல் மூலம் உலகமயமாக்கும் திட்டம், இதைக் கூடிய மட்டும் விரைவாக அடையும் நோக்கத்தைக் கொண்டதாகும்.

எல்லோருக்கும் வளத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் பொருளாதாரத்தின் போக்கை மாற்றியமைப்பதற்காக தொழிலாளி வர்க்கமும் உழவர்களும் போராட வேண்டும். சிறப்புரிமை பெற்ற சிறுபான்மையான பெரிய முதலாளிகள் அரசு இயந்திரத்தில் அவர்களுக்கு இருக்கும் கட்டுப்பாட்டைக் கொண்டு பெருவாரியான உழைக்கும் மக்களை ஏறி மிதிப்பதை உறுதி செய்யும் ஒரு அமைப்பை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. பெருவாரியான மக்கள் கடுமையாகச் சுரண்டப்படுவதையும் எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்டு,  ஊட்டச் சத்து குறைபாட்டிற்கும் வெள்ளத்திற்கும் பஞ்சத்திற்கும் சுகாதாரமின்மைக்கும் நோய்களுக்கும், வேலையின்மைக்கும் ஆளாகி நிற்கும் ஒரு அமைப்பை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

முக்கிய கேள்வி அரசியல் அதிகாரத்திற்கானது – அதாவது எந்த வர்க்கம் அரசு அதிகாரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்பதாகும். அரசு அதிகாரத்தை முதலாளி வர்க்கம் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளவரை, அரசாங்க மாற்றம் எது ஏற்பட்டாலும் அது தொழிலாளி வர்க்கத்திற்கு பயனளிக்கப் போவதில்லை. இதைத்தான் வாழ்க்கை அனுபவம் நமக்குக் கற்பிக்கிறது.

முதலாளிவர்க்க ஆட்சியை மாற்றி, தொழிலாளிகள் மற்றும் உழவர்களின் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும். அப்படிச் செய்வதினால் மட்டுமே, இன்று வளத்தையும் பாதுகாப்பையும்மறுக்கப்பட்டுள்ளவர்களுக்கு அவற்றை உறுதி செய்வதற்காக, நாம் பொருளாதாரத்தை மாற்றி அமைக்க முடியும்.

தெளிவாகவும் தொலைதூரப் பார்வையோடும் இந்தப் போராட்டங்களுக்குத் தலைமை கொடுக்கும் பொறுப்பு கம்யூனிஸ்டுகளாகிய நமக்கு இருக்கிறது. தொழிலாளி வர்க்கம் தன்னுடைய திட்டத்தை ஒட்டி ஒன்றுபட்டிருப்பதை ஒவ்வொரு கட்டத்திலும் நாம் உறுதி செய்ய வேண்டும் என்பது இதற்குப் பொருள். அரசைப் பற்றியும் இந்த அமைப்பைப் பற்றியும் முதலாளி வர்க்கமும் அதன் ஆதரவாளர்களும் மக்களின் தலையில் திரும்பத் திரும்ப ஏற்றி வரும் மாயைகளை, அந்த உழைக்கும் மக்களின் வாழ்க்கை அனுபவங்களை வைத்தே தொடர்ந்து தரைமட்டமாக்க வேண்டும். 

இந்த பொருளாதார, அரசியல் அமைப்பு நன்றாகவே உள்ளது என்றும் அதை மக்களுக்காகச் செயல்பட வைக்க முடியும் என்று மக்களை நம்ப வைப்பதற்காக ஒவ்வொரு நாளும், முதலாளி வர்க்கம் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. மக்களைப் பிரிப்பதற்கும் ஒருவரை மற்றொருவருக்கு எதிராளியாக ஆக்குவதற்கும் எல்லா வகையான கொடூரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எல்லாப் பிரச்சனைகளுக்கும் மக்கள் மீது பழி சுமத்தப்படுகிறது. இந்தியாவில் பெரிய மோதல் முதலாளி வர்க்கத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளிடையில் நடப்பதாக பிரச்சாரம் நடத்தப்படுகிறது. முதலாளி வர்க்கக் கட்சிகளுக்குள், “சுமாரான மோசத்தைத்” தேர்ந்தெடுக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இந்த வகையில் முதலாளி வர்க்கம் மக்களைப் பிளவுபடுத்தி இந்த அமைப்போடு அவர்களைக் கட்டிப்போட்டு வைத்துவிட்டு, தன்னுடைய நிகழ்ச்சி நிரலை நடத்தி வருகிறது.

முதலாளிவர்க்க திசைதிருப்பலான பொறிகளில் சிக்கி சீரழியாமல், கம்யூனிஸ்டுகள் இந்த பொறிகளை அம்பலப்படுத்தி, முதலாளிவர்க்க ஆட்சியை தொழிலாளிகள் மற்றும் உழவர்களின் ஆட்சியால் மாற்றியமைப்பதற்காக தொழிலாளி வர்க்கத்தையும் உழவர்களையும் ஒருங்கிணைக்க திட்டமிட்ட முறையில் வேலை செய்யவேண்டும்.

தொழிலாளருக்கு எதிரான, உழவர்களுக்கு எதிரான, தேசத்திற்கு எதிரான மற்றும் சமுதாயத்திற்கு எதிரான முதலாளி வர்க்கத் திட்டத்தை முறியடிப்போம்!

தொழிலாளர் உழவர்கள் ஆட்சியை நிறுவுவதற்காகப் போராடுவோம்!

Pin It