ஓடும் பேருந்தில் 23 வயது இளம் பெண் கும்பலால் கற்பழிக்கப்பட்டதும், அதனால் வேதனையோடு சாக நேரிட்டதும், நீதிக்காகவும், பெண்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் தொடர்ந்து நடைபெற்றுவரும் போராட்டத்தைக் கிளறி விட்டுள்ளது. இந்த அனுபவம் சில முக்கியமான படிப்பினைகளைக் கொண்டு வந்துள்ளது.

முதல் படிப்பினையானது காவல் துறையும், சட்டத்தின் ஆட்சியும், நமது நாட்டில் தனிச் சிறப்புரிமை கொண்ட ஒரு சிலரை மட்டுமே பாதுகாக்க இருக்கின்றன, பெரும்பான்மையான குடிமக்களை அல்ல. சட்டத்தின் ஆட்சியானது, ஒரே சீராக நடைமுறைப் படுத்தப்படுவதில்லை. எனவே, வேலை செய்யும் ஒவ்வொரு பெண்ணிற்கும் பாதுகாப்பு அளிக்க காவல்துறையை நம்ப முடியாது.

பலியான அந்தப் பெண்ணோடு பயணம் செய்த அடிபட்ட இளைஞன் தான் நேரில் பார்த்த சாட்சியத்தை பெற்றுக் கொண்ட தில்லி காவல்துறை பல நாட்களுக்கு  அதை மறைத்து வைத்திருந்தனர். எவ்வளவு விரைவாக காவல் துறை செயல்பட்டது என்று ஒரு கட்டுக் கதையை அவர்கள் வெளியிட்டனர். நேரில் பார்த்த சாட்சி நடந்த நிகழ்ச்சிகளை ஒரு தொலைக் காட்சிக்குப் பின்னர் கூறிய போதுதான், காவல்துறை கூறியதெல்லாம் முழுக்கவும் பொய் என்பது வெட்ட வெளிச்சமாகியது. பேருந்தில், அந்தப் பெண்ணோடு சேர்ந்து தாக்கப்பட்ட அந்த இளைஞன் மிகவும் மோசமான நிலையில் இருவரும் ஒட்டுத் துணியும் இன்றி சாலையில் கிடந்த போது, அங்கு வந்த காவல்துறையினர், இந்தப் பிரச்சனைக்கு எந்த காவல் நிலையம் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டுமென்பதைத் தீர்மானிக்க அரை மணிநேரத்தை வாக்குவாதத்தில் கழித்தனர்.

இந்த நேர்வில் தில்லி காவல் துறை நடந்து கொண்ட முறையானது விதி விலக்கானதல்ல. காவல் துறை எப்படி ஒரு சிறுபான்மையான வர்க்கத்தைப் பாதுகாத்து செயல்படவும், கோரமான வன்முறைத் தாக்குதல்களுக்கு ஆளான உழைக்கும் பெண்கள் மற்றும் ஆடவர்களை எப்படி நடத்துமாறு காவல்துறைக்குப் பயிற்சியளிக்கப்பட்டுள்ளதற்கு இது வெட்ட வெளிச்சமான எடுத்துக் காட்டாகும். எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு உண்மைகள் மறைத்து வைக்கப்படுகின்றன. மக்களிடம் ஒரு பொய்யான கட்டுக் கதை கூறப்படுகிறது. குற்றவாளிகளுக்கு உயர்மட்ட தொடர்பு எதும் இருக்கிறதாவெனவும், பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய புள்ளி எவரும் இதில் இருக்கிறார்களா என்பன போன்றவற்றை விசாரிக்க காவல்துறைக்கு இது நேரம் கொடுக்கிறது.

பொறுப்பிலுள்ள அரசியல்வாதிகளுடைய பதிலும் நடவடிக்கைகளும், உழைக்கும் பெரும்பான்மை மக்களைப் பற்றி அவர்களுக்குக் கொஞ்சமும் அக்கறை இல்லாததையும், மெத்தனத்தையும் காட்டுகின்றன. இது அரசியல்வாதிகளுக்கும், காவல்துறைக்கு மட்டுமல்ல, அரசு இயந்திரத்தில் மேலிருந்து கீழ்வரை இதே நிலைதான் இருக்கிறது.

தில்லி காவல்துறை மத்திய உள்துறை அமைச்சரகத்தின் கீழ் வருகிறது, தில்லி மாநில அரசாங்கத்தின் கீழ் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி, தில்லி முதலமைச்சர் திருமதி சீலா தீக்சித் பிரச்சனையை திசை திருப்பினார். உள்துறை அமைச்சர் சிந்தே தன் பங்கிற்கு, தலை நகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சந்திக்க மறுத்துவிட்டார். அவர்கள், காவல் துறையைச் சீரழிக்க மாவோயிஸ்டுகளோடு ஒத்துழைத்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.

நியாயங் கேட்பதற்காகக் கூடியிருந்த பெண்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது தடியடி நடத்தவும், கண்ணீர் புகைக் குண்டுகளையும் தண்ணீர் பீரங்கிகளையும் பயன்படுத்தவும் அவர் ஆணையிட்டார்.

குற்றம் நடைபெற்ற பேருந்து, நகரத்திற்குள் மக்களைக் கொண்டு செல்வதற்கு அனுமதியே இல்லாதது என்பது வெளிவந்துள்ளது. தில்லி போக்குவரத்து சேவைகளை மென்மேலும் தனியார் மயப்படுத்துவது, கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதின் காரணமாக காவல்துறை மற்றும் அதிகாரத்திலுள்ள அரசியல்வாதிகளுடைய ஆதரவோடு எல்லா வகையான வாகனங்களும் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட பேருந்துகளில் வேலை செய்யும் ஓட்டுனர்களும் நடத்துனர்களும் தற்காலிக ஒப்பந்தத்தில் வேலைக்கு வைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, அவர்களுடைய சமூகப் பொறுப்பும், கடப்பாடும் மேலும் குறைகிறது. தில்லி போக்குவரத்து நிறுவனத்தைச் சேர்ந்த முறையான தொழிலாளிக்கு தன்னுடைய வேலை போய்விடக்கூடும் என்ற அச்சம் இருக்கும், ஆனால் தற்காலிக ஒப்பந்தத்தின் கீழ் இருப்பவருக்கு இழப்பதற்கு அதிகமில்லை. இவ்வாறு பெண்களின் பாதுகாப்பிற்கான போராட்டம், பேருந்து போக்குவரத்து சேவைகள் தனியார் மயப்படுத்தும், கட்டுபாடுகளைத் தளர்த்தும் கொள்கை சமூக விரோதமானது என்பதை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது.

காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் செயல்பாடு மற்றும் குறைகளைப் பற்றி உண்மைகளை ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு மன்மோகன் சிங் அரசாங்கம், மேகரா குழு என்ற ஒரு சிறப்புக் குழுவை நியமித்திருக்கிறார்கள். இதற்கிடையில், தங்களுடைய அனுமதியின்றி உண்மையை வெட்ட வெளிச்சமாக்கியதற்காக, தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது தில்லி காவல்துறை வழக்கு தொடுத்திருக்கிறார்கள்.

இரண்டாவது முக்கிய வெட்ட வெளிச்சமானது, தாக்கப்பட்டதற்குப் பெண்களே காரணம் என்ற ஆளும் ஆதிக்கத்தின் சித்தாந்தமாகும். இது, கருத்தியல் அடிப்படையிலும் நடைமுறையிலும் இன்றிருக்கும் அரசியல் அமைப்பானது பெண்களுக்கு எதிரானது என்பதைக் காட்டுகிறது.

பெண்களுக்கு எதிராக மிகவும் பிற்போக்கான இனவெறியான கருத்துக்களை எண்ணெற்ற முக்கிய புள்ளிகள் கூறியிருப்பதை ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன. "பெண்கள் மீது இப்படிப்பட்ட தாக்குதல்கள் நகர்ப்புறங்களில் மட்டுமே நடைபெறுகிறது, கிராமப்புறங்களில் இல்லை" என ஆர்.எஸ்.எஸ் தலைவன் கூறியிருப்பது போன்ற அப்பட்டமான பொய்களுக்கு அதிக விளம்பரம் கொடுக்கப்படுகிறது.

மிகவும் முக்கியமாக, பெண்கள் தாக்கப்படுவதற்கு பல்வேறு நியாயங்களை பல "மக்கள் பிரதிநிதி"களும் வெளியிட்டிருக்கின்றனர். அவர்கள் மீது, அவர்களுடைய கட்சியோ அல்லது அவர்கள் உறுப்பினராக இருக்கும் மன்றமோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தியக் குடியரசுத் தலைவருடைய மகனும், காங்கிரசு கட்சியைச் சேர்ந்த மேற்கு வங்க பாராளுமன்ற பிரதிநிதியும் ஆனவர், தில்லியில் ஆர்பாட்டம் நடத்திய பெண்களைத் "தரங்கெட்டவர்கள் என்றும், ஒழுக்கம் கெட்டவர்கள்" என்றும் கூறியிருக்கிறார். மாலை நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே வருபவர்கள், பிரச்சனைக்கு அழைப்பு விடுகிறார்களென ஆந்திரப் பிரதேச காங்கிரசு கட்சித் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். "லட்சுமணன் கோட்டை"க் கடந்த பெண்கள், தவிர்கவியலாமல் தாக்கப்படுவார்களென மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

இவை எல்லாவற்றிலிருந்தும், நாம் பெறுகின்ற முக்கிய படிப்பினையானது, பெண்களுடைய பாதுகாப்பை உறுதி செய்ய, பாராளுமன்றத்தில் உள்ள கட்சிகளை நம்பி நாம் இருக்க முடியாது என்பதாகும்.

பாலியல் வன்முறைக்கு எதிராக சட்டங்களை வலுப்படுத்துவது பற்றி பல்வேறு கருத்துக்களைப் பற்றி நிறுவன ஊடகங்கள் ஒரு பெரிய விவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். கற்பழிப்புக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிரான மற்ற பிற வன்முறைகளுக்கு எதிராகவும் சட்டங்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை அறிவுறுத்துவதற்காக மன்மோகன் சிங் அரசாங்கம், வர்மா குழுவைக் கூட நியமித்துள்ளது.

மக்கள் காவல் துறையோடு சம்பந்தப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை என்பதையும், எனவே தெருக்களில் இறந்து கொண்டிருப்பவர்களைக் காப்பாற்றக்கூட காவல் துறைக்கு சொல்ல அவர்கள் விரும்பவில்லை என்பதை தில்லி கற்பழிப்பு நிகழ்ச்சி காட்டுகிறது. கற்பழிக்கப்பட்டவரோடு சேர்ந்து தாக்கப்பட்ட இளைஞர் இதைத் தெளிவாகச் சுட்டிக் காட்டினார். மக்கள் விலகி, காவல்துறையை அணுகுவதற்கு அச்சப்பட்டு இருக்கும் வரை சட்டங்களை வலுப்படுத்துவதில் எந்தப் பயனும் இல்லையென அவர் பொருளுள்ள வகையில் கூறியிருந்தார்.

சட்டங்களை எப்படி வலுப்படுத்துவது என்ற விவாதங்களில் எல்லா மக்களும் ஈடுபட்டிருக்க வேண்டுமென ஆளும் வர்க்கங்கள் விரும்புகின்றனர். இது ஒரு பயனற்ற பயிற்சியும், திட்டமிட்ட திசை திருப்பலும் ஆகும். சட்டத்தை நடைமுறைப்படுத்தும் இயந்திரம் ஒரு சிறுபான்மையான சிறப்புரிமை பெற்றவர்களை மட்டுமே பாதுகாக்க வடிவமைக்கப்பட்டிருக்கும் போது, சட்டங்களைத் தீவிரப்படுத்துவது பயனற்றதாகும்.

இந்த எல்லாப் படிப்பினைகளையும் ஒன்றுகூட்டிப் பார்க்கும்போது, உடனடி அடிப்படையில் கூட்டு தற்பாதுகாப்பு அவசியமென்ற முடிவுக்கு தவிற்கவியலாமல் ஒருவர் வர வேண்டியுள்ளது. அரசியல் தலைவர்களையோ, காவல் துறையையோ நம்பி நாம் இருக்க முடியாது. நம்மைப் பாதுகாத்துக் கொள்ள, நம்முடைய சொந்த கூட்டு சக்தியை நாம் ஒன்று திரட்ட வேண்டும்.

உழைக்கும் மக்கள், பெண்கள், இளைஞர்கள் என அணைவருமே நம்மைப் பாதுகாத்துக் கொள்ள ஒன்று திரள வேண்டும். நாம் நம்முடைய சகோதரிகளையும், நண்பர்களையும், தாய்மார்களையும், பிள்ளைகளையும், உடன் படிப்பவர்களையும், உடன் வேலை செய்பவர்களையும், மனைவியரையும், பெண்களையும் பாதுகாக்க வேண்டும். ஒவ்வொறு பகுதியிலும் உள்ள மக்கள் குழுக்கள், வசிப்பவர்களைப் பாதுகாக்கவும், பெண்களுக்கு சமூக சூழ்நிலையை உறுதி செய்யவும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

கூட்டு தற்காப்பை ஏற்பாடு செய்ய உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அரசியல் அமைப்பிலும் சட்டத்தின் ஆட்சியிலும் அடிப்படை மாற்றங்களைக் கோரி அவற்றிற்காகப் போராட வேண்டும். தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களை மன்னர்களாக ஆக்குவதற்கும், மக்களை அதிகாரத்திற்குக் கொண்டுவர வழிவகுக்கும் பணியை அரசியல் கட்சிகள் மேற்கொள்ளவும் அரசியல் அதிகாரம் திருத்தியமைக்கப்பட வேண்டும். பெண்கள் என்ற அடிப்படையிலும், மனிதர்கள் என்ற அடிப்படையிலும், பெண்களுடைய உரிமைகளை கருத்தியலிலும் நடைமுறையிலும் சட்டம் பாதுகாக்க வேண்டும். எக்காரணத்திற்காகவும், பெண்களுடைய எந்த உரிமையும் மீற அனுமதிக்காத ஒரு நவீன சனநாயக அமைப்புக்காக நாம் போராட வேண்டும்.

Pin It