தகவல் தொழில் நுட்ப ஊழியர்களின் அமைப்பின் முன்முயற்சியின் காரணமாக, ஒரு உண்மையை அறியும் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் உறுப்பினர்களாக திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மூத்த இதழியலாளரும் மனித உரிமை செயல் வீரருமான திரு. பிஆர்பி. பாஸ்கர், மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெவேலப்மென்ட் சென்னையின் துணைப் பேராசிரியர் டாக்டர். எம். விஜயபாஸ்கர், சேலத்தைச் சேர்ந்த சட்ட வல்லுனர் வழக்குறைஞர் பாபி குன்உ மற்றும் சென்னையைச் சேர்ந்த மென்பொருள் வல்லுனரும் தொழிலாளர் உரிமைகள் செயல் வீரருமான செல்வி. சந்திரிகா இராதாகிருஷ்ணன் ஆகியோர் செயல்பட்டனர்.

உண்மை அறியும் குழு, வேலை நீக்கம் செய்யப்பட்ட பல தகவல் தொழில் நுட்ப ஊழியர்களுடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். பெரும் எண்ணிக்கையிலான தகவல் தொழில் நுட்ப வல்லுனர்களிடம் மதிப்பாய்வும் நடத்தப்பட்டது. டிசிஎஸ்-இன் மனிதவள மேலாண்மை பற்றி ஆழமான விவரங்களைக் கொண்டிருந்த மூத்த தகவல் தொழில் நுட்ப ஊழியர்களிடமும் ஆதாரங்களைக் குழு சேகரித்தனர். இந்த ஆதாரங்கள் மற்றும் ஆய்வின் அடிப்படையில் குழு எடுத்த முடிவுகள் பின்வருமாறு -

* டிசிஎஸ்-இன் இந்த வேலை நீக்கமானது, நடுத் தட்டிலுள்ள தொழில் நுட்ப ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கத்தோடு, நிர்வாகத்தால் கவனத்தோடு திட்டமிட்டு செயல்படுத்தப்படும் திட்டமாகும்.

* இந்த வேலை நீக்கத்தை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்படும் செயல்பாட்டு மதிப்பீட்டு அமைப்பு (Performance appraisal system) அறிவியல் அடிப்படையில் இல்லாததும், முறையற்று இருப்பதும் தெள்ளத் தெளிவு. அது திருத்தியமைக்கப்பட வேண்டும். தங்களைப் பற்றிய மதிப்பீடு பற்றி கருத்துத் தெரிவிக்க ஊழியர்களுக்கு போதுமான வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும். அதனடிப்படையில் மதிப்பீடு திருத்தப்பட வேண்டும்.

* மகப் பேறு விடுப்பு எடுக்கக் கூடியவர்களாகவும், வேலை நேரத்தைக் கடந்தும் நெடு நேரம் வேலை செய்யவோ, இரவுகளில் வெகு நேரமோ வேலை செய்ய முடியாதவர்களாகவும் இருக்கும் பெண் ஊழியர்களை, செயல்பாட்டு மதிப்பீட்டு அமைப்பு பாகுபாடான முறையில் நடத்துகிறது. இதை மென்பொருள் தொழில் நிறுவனங்கள் வழக்கமாகவே ஆக்கி வைத்திருக்கின்றன.

* நிர்வாகத்தின் செயல்பாடு மதிப்பீடும், அதைத் தொடர்ந்த வேலை நீக்க வழிமுறையும், ஊழியர்களுடைய பிரச்சனைகளை தீர்க்க வழிமுறைகள் இல்லாமல் இருப்பதும், இந்திய அரசியல் சட்ட முன்னுரையில் கூறப்பட்டுள்ள இயற்கை நீதி அடிப்படைக் கோட்பாடுகளை முற்றிலும் மீறுவதாகும்.

* நாஸ்காம் (NASSCOM) இன் திறன் பதிவு பற்றி தகவல் தொழில் நுட்ப ஊழியர்களிடையே அச்சமும், கவலையும் இருப்பதால், அரசு தகவல் தொழில் நுட்ப ஊழியர்களுடைய தனிப்பட்ட விவரங்களை அவர்களுடைய ஒப்புதலின்றி மீறப்படுவது அல்லது பகிர்ந்து கொள்வது பற்றி அரசு ஆராய வேண்டும்.

* வேலை வாய்ப்புக்கும் தொழிலாளர்கள் நலத்திற்கும் பொறுப்புடைய அரசாங்கம், இந்த முக்கிய தொழில் துறையில் நியாமற்ற பெரும் எண்ணிக்கையில் வேலை நீக்கம் நடைபெறுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கக் கூடாது. டிசிஎஸ்-இன் ஊழியர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக எல்லா மாநில அரசாங்கங்களும் இந்தப் பிரச்சனையில் தலையிட வேண்டுமென நாங்கள் கோருகிறோம்.

* டிசிஎஸ்-இன் வேலை நீக்கம் குறித்தும், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுடைய வசதிக்கேற்ப வேலை நீக்கம் செய்யும் கொள்கை அடிப்படையில் தொழிலாளர் மற்றும் மனித உரிமைகள் மீறப்படுவது குறித்தும் அரசு ஒரு சட்ட ரீதியான ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென நாம் கோருகிறோம்.

* தகவல் தொழில் நுட்பம் மற்றும் அது சார்ந்த தொழில் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுடைய நியாமான நலன்களைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு சில தொழிற் சட்டங்களிலிருந்து அளிக்கப்பட்டிருக்கும் விலக்கு குறித்து விசாரிப்பதற்கு இந்த அறிவு சார்ந்த துறைகளுக்கு ஒரு நிரந்தரமான சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டுமென நாங்கள் அறிவுறுத்துகிறோம்.

Pin It