அண்மைப் படைப்புகள்

கீற்றில் தேட

tamil_desam_aug12

child-abuse 300போரில் நடக்கும் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான அனைத்துலக மாநாடு இலண்டனில் சூன் 1ஆம் நாள் தொடங்கியது.

‘போரில் பாலியல் வன்கொடுமைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஐநா பிரகடனத்தை அங்கீகரித்த அரசுகளுக்குத்தான் இம்மாநாட்டிற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதை அங்கீகரிக்காமல் இருப்பதால் எங்களுக்கு அழைப்பு இல்லை. ஆனால் நாங்கள் மாநாட்டில் பங்குபெறவே விரும்பினோம்’ என இலண்டனிலுள்ள இலங்கைத் துணைத் தூதர் நெவில் டி சில்வா பிபிசி யிடம் தெரிவித்தார்.

இலங்கை ஏன் அதை அங்கீகரிக்கவில்லை என்பதற்கான விளக்கம் தர அவர் மறுத்துவிட்டார்.

அதேபோது பிரிட்டனின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஹியூகோ ஸ்வயரின் அனுப்பிய மாநாட்டு அழைப்பு எங்களுக்குக் கிடைத்தது என இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி. எல். பெரிஸ் உறுதிப்படுத்தினார்.

இந்த மாநாட்டின் முக்கியத்துவத்தை ஒப்புக்கொண்டாலும், சர்வதேசத்தின் ஒரு பகுதி அரசுகள் மட்டும் ஐநா பிரகடனத்தை ஏற்றுள்ள நிலையில் நாங்கள் அதை அங்கீகரிக்க முடியாது.

இந்த மாநாடு எமது நாட்டுக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம் என்பதால் இதில் இலங்கை அரசு பங்கேற்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். கண்ணியமிக்க எந்த சர்வதேச அவையிலும் இலங்கை பங்கேற்க முடியாத நிலை மெல்ல உருவாகி வருகிறது. இதை மேலும் விரிவுபடுத்த வேண்டும்.

இலங்கையைத் தனிமைப்படுத்துவதில்தான் நமது வெற்றி அடங்கியுள்ளது.

Pin It

telugukhana 600சென்ற ஆண்டு அனைத்துலக உழைக்கும் பெண்கள் நாளை முன்னிட்டு ஐதராபாத்தில் நடந்த ஒரு நாள் நிகழ்ச்சியில் உரையாற்றுவதற்காக நான் இங்கிருந்து சென்றிருந்தேன். தெலங்கானா போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு  வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடந்தது.

அப்போது போராட்டத்தில் உயிர் விட்ட மாணவர் ஒருவரின் தாயார் பேசும் பொழுது, பெருமை கலந்த கண்ணீருடன்  போராட்ட வடுக்களையும் வலிகளையும் சுமந்தபடி ‘ம தெலங்கானா மீக்கே காவாலி’ என்று சொன்ன வார்த்தைகள் இன்று நனவாகி  உள்ளன. 

கடந்த  2014 சூன் 2ஆம் நாள்  இந்தியாவின் 29ஆவது மாநிலமாகத் தெலங்கானா  அறிவிக்கப்பட்டது. 3.5 கோடி மக்கள்தொகை, 10 மாவட்டங்கள். நாற்புறமும் நிலம் சூழ்ந்த மாநிலமாகத் தெலங்கானா அமைந்துள்ளது. சூன்  2 ஆம் நாள் மாநில அரசின் பதவி ஏற்பு விழா நடந்தது.  தெலங்கானா இராஷ்ட்ரிய சமிதியின் தலைவர் சந்திரசேகர ராவ் முதல்வராகப் பொறுப்பேற்றார்.

ஒரு சமூகம் முழுமையும் ஓரங்குலம் முன்னேறிச் செல்வதற்கு எத்துணை நீண்ட நெடிய போராட்டம் நடத்த வேண்டி இருக்கின்றது என்பதை தெலங்கானா போராட்டம் நமக்கு உணர்த்துகின்றது. தெலங்கானா மக்களின் வீரஞ்செறிந்த போராட்ட வரலாறு போராடும் அனைத்து மக்களுக்கும் ஊக்கமாகும்.

தனி மாநிலமானதால் எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா? மாநில அரசே ஒரு 'மேற்பார்வை’ அரசு தானே? என்று கேட்கலாம். நாமும் பிரச்சனைகள் தீர்ந்துவிட்டதாகக் கருதவில்லை. சனநாயகத்திற்கான போராட்டத்தில் ஓரடி முன்னே போயினர் தெலங்கானா மக்கள் என்கின்றோம்.  அடக்குமுறைக்கு அடி பணியாத பண்பைத் தமது இரத்தத்திலேயே கொண்ட தெலங்கானா மக்கள் இந்திய அரசின் தேசிய ஒடுக்கு முறைக் கெதிராகவும்  கிளர்ந்து எழுவார்கள்! 

நீண்ட போராட்டத்தின் பயனாய்த்  தெலங்கானா மக்கள் தமது வரலாற்று வளர்ச்சிப் போக்கில் ஓரடி முன்னேறியுள்ளனர். தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை ஆதரித்துக் குரல்  கொடுத்தவர்கள் என்ற முறையில் தெலங்கானா மக்களின் மகிழ்ச்சிப் பெருக்கில் நாமும் பங்கு பெறுகின்றோம். தெலங்கானா போராட்டத் தியாகிகளுக்கு வீர வணக்கம்! தெலங்கானா மக்களுக்கு நமது நேசமிகு  வாழ்த்து!

- பரிமளா (சேவ் தமிழ்ஸ்)

Pin It

enalankilli 350நம் தமிழ்ப் பெற்றோர்கள் திடீர்க் கல்வியாளர்களாகி உதிர்க்கும் அறிவு முத்துக்கள் பல. தமிழ் மண்ணில் தப்பித் தவறி குழந்தைகளைத் தமிழ்வழிக் கல்வியில் படிக்க வைக்கும் பெற்றோர் எவரையும் பார்த்து இந்தக் கல்வியாளர்கள் உடனடியாகக் கேட்கும் கேள்வி:

“உங்க புள்ளைக்கு இங்கிலீஷ் எப்படி வரும்?” தமிழ் தெரியாமல் போனால்தான் ஆங்கிலம் குழந்தைகளின் நாக்கில் நன்கு தவழும் என்பது இவர்களின் உறுதியான கருத்து. இது எவ்வளவு மோசமான குருட்டு நம்பிக்கை என்பதை இரு அமெரிக்க ஆய்வுகள் தெளிவாகக் காட்டுகின்றன.

அமெரிக்கக் கல்வித் துறை ரமிரெஸ் எட் அல் 1991 (ramirez et al 1991)  என்ற பெயரில் பெரும் பொருட்செலவில் சுமார் 8 ஆண்டுகள் ஸ்பானியத்தைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களிடம் ஆய்வொன்றை மேற்கொண்டது. அம்மாணவர்களுக்குச் சிறந்த பயிற்று மொழி ஆங்கிலமா? ஸ்பானியமா?

எனக் கண்டறிவதே ஆய்வின் நோக்கம். இந்த ஆய்வில் 2,342 மாணவர்கள் 3 குழுக்களாகக் கலந்து கொண்டனர். முதல் குழுவினர் ஆரம்பம் முதல் எல்லாப் பாடங்களையும் ஆங்கிலவழியில் மட்டுமே பயின்றனர்.

இரண்டாம் குழுவினர் முதல் ஓரிரண்டு ஆண்டுகள் ஸ்பானிய மொழியில் பயின்று விட்டு, பிறகு ஆங்கிலவழிக் கல்விக்கு மாறினர்.

மூன்றாவது குழுவினர் முதல் 4 அல்லது 6 ஆண்டுகள் அனைத்தையும் ஸ்பானிய மொழியில் மட்டுமே பயின்றாலும், ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாக மட்டும் கற்றுக் கொண்டனர். அதன் பிறகு அவர்கள் ஆங்கிலவழிக்கு மாறினர்.

சில ஆண்டு கழிந்து மூன்று குழு மாணவர்களிடமும் அறிவுத்திறன், ஆங்கில ஆற்றல் குறித்த சோதனைகள் நடந்தேறின, பின்னர் முடிவுகள் வெளியாயின.

தொடக்கத்திலேயே ஆங்கிலவழியில் பயின்ற மாணவர்களின் மூளையில் இங்கிலீஷ் பொங்கி வழியும் என நம் தமிழ்ப் பெற்றோர்கள் கண்ணை மூடிக் கொண்டு சொல்லி விடுவார்கள், அல்லவா?

ஆனால் கிடைத்த முடிவுகளோ வேறு. அனைத்தையும் தாய்மொழி ஸ்பானியத்தில் மட்டுமே பயின்ற 3ஆம் குழுவினர் அறிவுத்திறத்தில் மட்டுமல்லாது, ஆங்கில ஆற்றலிலும் முதலிடம் பிடித்தனர். அனைத்தையும் ஆங்கிலத்தில் பயின்ற முதல் குழுவினருக்கோ மூன்றாம் இடந்தான் கிடைத்தது.

இதே அடிப்படையில் தாமஸ், & கால்லியர் ஆய்வு அமெரிக்கக் கல்விதுறையின் நிதியுதவியுடன் 6 ஆண்டு (1996-2001) நடைபெற்றது. ஆனால் இப்போது அந்த 3 குழுக்களில் சுமார் 2 இலட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். மொழிச் சிறுபான்மையினருக்காக இன்றுவரை உலகில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் மிகப் பெரியது இது. இப்போதுங்கூட தாய்மொழியில் பயின்ற ஸ்பானிய மாணவர்களே அறிவுத் திறனிலும் ஆங்கிலப் புலமையிலும் ஓங்கி நின்றனர்.

ஒரு மாணவர் தாய்மொழி தமிழில் எந்தளவுக்கு வலுவாக இருக்கிறாரோ, அவர் அந்தளவுக்கு ஆங்கிலம் உள்ளிட்ட உலகின் எந்த மொழியையும் எளிதில் கற்கலாம் என்றும், உலகின் எந்த அறிவைப் பயிலவும் தாய்மொழி தமிழே சிறந்தது என்றும் தமிழ்க் கல்வியாளர்கள் நீண்ட நாள் கூறி வரும் கூற்றுகளுக்கு இவ்விரு அமெரிக்க ஆய்வுகளே சான்றாகின்றன. நம் தமிழர்களுக்கு நம் தமிழறிஞர்களின் பேச்சுதான் காதில் விழாது. அவர்களே வியந்து நோக்கும் இந்த அமெரிக்கர்களின் பார்வையேனும் காதில் விழுமா?

Pin It

1. தானேமண் புதைந்து முளைக்கும் விதைகண்டு

    தானுமதைச் செய்துகண்டார் பயிர்.

2. வேட்டையில் வேறாகும் மேய்ப்பு, மேய்ப்பிலும்

   வேறாகும் வேளாண் தொழில்.

3. ஓடும்உயிர் வளர்ப்பு மேய்ப்பாயின், நிற்கும்

    உயிர்வளர்ப்பு வேளாண் தொழில்.

4. அலையுறுமந் தையால்அலைவுற்றார்ஆயர், நிலைபயிர்

    செய்துநிலை பெற்றாரு ழவர்.

5. காட்டுமிராண் டிவேடர் கால்நடை யினர்இடையர்

    நாகரிக வாழ்வுக்கு ழவர்.

6. காட்டோடு வேடர்புல் வெளியில் இடையர்

    ஆற்றங் கரையிலு ழவர்.

7. தோலாடை வேடர்க்கு முடியாடை இடையர்க்கு

    நூலாடை உழவர்க்கு அணி.

8. சுட்டுண்ணல் முன்னவரின் வழக்கு, பொங்கல்

    இட்டுண்ணல் உழவுசார் நடப்பு.

9. ஊன்ஒருவர் பால்ஒருவர் காண, மாட்டின்கண்

   உழைப்பைக் கண்டவரு ழவர்.

10.வில்லாண்ட வர்வேடர் கோலாண்ட வர்ஆயர்

     நல்லேர் ஆள்வாரு ழவர்.

Pin It

nursery-school-banner 600இருபதாண்டு முன்பு தமிழகத்தில் ஒரு புதிய கல்வி இயக்கமாகப் பிறந்த தாய்த் தமிழ்ப் பள்ளிகள் இப்போது கடும் தவிப்பில் உள்ளன. மெல்லத் தமிழ் இனி வாழும் என்று தாய்த் தமிழ்ப் பள்ளிகளை வாழ்த்தியது தினமணி பொங்கல் மலர். இது கல்வித் துறையில் ஒரு புரட்சி என்று போற்றினார் தமிழண்ணல். தாய்த் தமிழ்ப் பள்ளிகளுக்கு அரசு துணை நிற்கும் என்று அமைச்சர்கள் வாக்களித்ததும் உண்டு.

தமிழ்க் கல்வியையும் தமிழ்வழிக் கல்வியையும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள் என்ற அவப்பெயரை மாற்றித் தமிழ்நாடெங்கும் தமிழ்ப் பற்றாளர்களின் முயற்சியினால் தமிழ் மக்களின் ஆதரவோடு ஐம்பதுக்கு மேற்பட்ட தாய்த் தமிழ்ப் பள்ளிகள் நிறுவப்பட்டன. இவை தவிர பல பகுதிகளில் தமிழ்வழிப் பள்ளி-களும் இயங்கி வந்தன. இப்போது இவற்றின் எண்ணிக்கை சுருங்கி விட்டது. மாணவர்ச் சேர்க்கை குறைந்து விட்டது என்று எல்லாப் பகுதிகளிலிருந்தும் செய்தி வருகிறது.

தாய்த் தமிழ்ப் பள்ளிகளின் இந்த நலிவுக்கு என்ன காரணம்? அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிப் பிரிவுகளை ஆங்கிலவழிப் பிரிவுகளாக மளமளவென மாற்றுவதில் முனைந்து செயல்படும் தமிழக அரசின் கொள்கையே முதன்மைக் காரணம் எனப்படுகிறது.

மக்களிடம் கல்வி ஆர்வம் மிகுந்துள்ளதே தவிர கல்வித் தெளிவு இல்லை. அரசிடமே தெளிந்த கல்விக் கொள்கை இல்லாத போது மக்களை எப்படிக் குறை சொல்ல முடியும்? அனைவர்க்கும் கல்வி, அனைத்துக் கல்வியும் தமிழில் என்பதை அரசே ஒரு கொள்கையாக ஏற்று முழுமையாகச் செயல்படுத்துமானால், தாய்த் தமிழ்ப் பள்ளிகளுக்கே தேவையிருக்காது.

ஆனால் அரசின் கொள்கை நேர்மாறாக இருக்கும் போது தமிழையும் சமூகநீதியையும் காப்பதற்கும், தமிழ்ச் சமூகத்தின் நல்வாழ்வை உறுதிசெய்வதற்கும் தாய்த் தமிழ்ப் பள்ளிகள் நிலைத்து நிற்க வேண்டும், அவை வளர்ந்து செழிக்க வேண்டும். இதற்கு அரசு துணைநிற்பது இன்றியமையாதது. இப்பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்குவது, நிலம் ஒதுக்கித் தருவது, கட்டடம் கட்டிக் கொடுப்பது, ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது, விரைந்து ஒப்புதல் அல்லது அறிந்தேற்பு வழங்குவது, கல்வித் துறைக் கெடுபிடிகளை நீக்குவது... இப்படிப் பல்வேறு வழிகளிலும் தமிழக அரசு உதவ வேண்டும்.

அரசு உதவட்டும் என்று தமிழ்ப் பற்றாளர்களும் கல்வி ஆர்வலர்களும் ஒதுங்கி இருந்து விடக் கூடாது. தாய்த் தமிழ்ப் பள்ளிகளைக் காக்கவும் வளர்க்கவும் அவர்கள் ஒல்லும் வகையெல்லாம் உதவிடல் வேண்டும். படித்த இளைஞர்கள், இளம்பெண்கள் கிடைத்த நேரமெல்லாம் இப்பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியத் தொண்டர்களாகப் பயிற்சி பெற்றுப் பணியாற்ற முன்வர வேண்டும்.

மக்களிடையே தமிழ்வழிக் கல்வியின் தேவையைப் பரப்புதல் வேண்டும். தாய்த் தமிழ்ப் பள்ளிக் குழந்தைகளின் கல்விக்குப் பொறுப்பேற்று இயன்றதனைத்தும் செய்திடல் வேண்டும். இது தமிழ்ப் பணி, கல்விப் பணி, அறிவுப் பணி. நம் கடன் இப்பணி செய்வது என்ற உணர்வோடு செயலாற்ற முன்வாருங்கள் என்று அழைக்கிறோம்!

Pin It