tamil_desam_aug12

நம் சமூகநீதித் தமிழ்த் தேசம் ஏட்டில் (2009 தை/சனவரி) இதழிலிருந்து) அறிஞர் அண்ணா குறித்து எழுதிக் கொண்டிருந்த ஆய்வுத் தொடரை மீண்டும் தொடர வேண்டுமென நாமும் தமிழ் ஆர்வலர்களும் அன்புரிமையுடன் கேட்டு வந்தோம். இப்போது புதுப் பொலிவுடன் மீண்டெழுந்துள்ள நம் தமிழ்த் தேசம் ஏட்டில் அத்தொடரைத் தொடர அவர் மகிழ்வுடன் இசைவு தெரிவித்துள்ளார். இத்தொடரில் இது வரை 11 பகுதிகள் வந்துள்ளன. பகுதி 12 அணியமாகிக் கொண்டிருக்கிறது.

உவத்தல் காய்தலின்றியும் அறிவியல் வழிநின்றும் தமிழ்த் தேசிய நோக்கில் அறிஞர் அண்ணா எனும் அரசியல் ஆளுமை குறித்துத் தொடர்ந்து நம்மோடு உரையாட வரும் முனைவர் த. செயராமனை வரவேற்க வேட்கையுடன் காத்திருப்போம்.

 அடுத்த இதழ் (2014 ஆனி) வரும் வரை!

 ஆசிரியர்.

Pin It

thamildesam june 14 600தேசத்தின் குரல்:

சூன் 12 & ஆண்டுதோறும் மேட்டூர் அணையிலிருந்து காவிரிப் பாசனத்துக்குத் தண்ணீர் திறந்து விடும் நாள் என்பது கடந்த காலப் பழக்கம். கடந்த காலம் என்றால் 1925 முதல் 1975 வரை நிலவி வந்த பழக்கம். அதாவது தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் காவிரி நீர்ப் பகிர்வு தொடர்பான ஐம்பதாண்டுக் கால ஒப்பந்தம் செயலில் இருந்த காலத்தில் அநேகமாய் ஒவ்வோராண்டும் இது முறையாக நடைபெற்று வந்தது.

1947 வரை வெள்ளையராட்சியிலும், பிறகு இந்தியராட்சியிலும் இந்த ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

1975உடன் காவிரி ஒப்பந்தம் முடிந்த பிறகு புதிய ஒப்பந்தம் செய்யப்படவில்லை, இதற்குத் தமிழகத்தின் காவிரி உரிமையை மறுத்த கர்நாடக அரசின் அழிச்சாட்டியமே காரணம்.

கடந்த கிட்டத்தட்ட நாற்பதாண்டுக் காலத்தில் ஓராண்டு கூட சூன் 12இல் மேட்டூர் அணை திறக்கப்பட்டிருக்குமா என்பது ஐயத்துக்குரியதே. இதனால் காவிரிப் பாசனப் பகுதியில் ஐந்து லட்சம் எக்டேருக்கு மேல் நடைபெற வேண்டிய குறுவை நெல் சாகுபடி பெரும்பாலும் அற்றுப் போய்விட்டது. தாளடி, சம்பா நெல் சாகுபடியும், கரும்பு, பிற வகைப் பயிர்ச் செலவும் குறுகிச் சிறுத்து விட்டன.

காவிரி உரிமைக்காக நாம் தொடர்ந்து போராடி வருகிறோம். தமிழக அரசும் தில்லி அரசிடம் பேசிக்கொண்டே இருக்கிறது. நீதிமன்ற வழக்குகள் பெரும் இழுத்தடிப்புகளுக்குப் பிறகாவது தமிழகத் தரப்பு நியாயத்தை ஓரளவு நிறுவியுள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக சட்டப்படி தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு இடைக்காலத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு எல்லாம் வாங்கிவிட்டோம். இறுதித் தீர்ப்பினை அரசிதழில் வெளியிடச் செய்வதற்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்காடி வெற்றி பெற்றதையே தமிழக முதல்வர் தாம் பெற்ற பெருவெற்றியாகக் கொண்டாடினார்.

இறுதித் தீர்ப்பின்படி தண்ணீரைப் பகிர்ந்து கொடுப்பதற்கான காவிரி மேலாண்மை வாரியமும், அதன் கீழ் செயல்படுவதற்கான காவிரி ஒழுங்குமுறை ஆணையமும் அமைக்கப்படாத வரை தீர்ப்பாயத்தின் தீர்ப்பு வெறும் ஏட்டுச் சுரைக்காய்தான். ஆனால் சட்டப்படியான இந்த வாரியத்தையும் ஆணையத்தையும் அமைக்கக் கூடாது என்று கர்நாடகம் மல்லுக்கட்டுகிறது. ‘யாமிருக்க பயமேன்?’

என்று தில்லியும் அதற்கு ஆபத்பாந்தவனாக அடைக்கலம் கொடுக்கிறது. இதில் மன்மோகன் வழியிலேயே நரேந்திர மோதியும் செயல்படுகிறார். தமிழகத்தை வஞ்சிப்பதில் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கும்பாசக தலைமையிலான அரசுக்கும் நூலிழை வேறுபாடுமில்லை.

இந்த ஆண்டும் சூன் 12 காய்ந்து கிடக்கும் காவிரிப் படுகை ஈரம் காணாத நாளாகவே போய்விட்டது. அந்த நாளில் மேட்டூர் அணையைத் திறக்க இயலாது என்று தமிழக முதல்வர் அறிவித்து விட்டார். அணையில் வெறும் 44 அடி உயரத்துக்குத்தான் தண்ணீர் நிற்கிறது. எப்படித் திறக்க முடியும்? என்று நம்மவர்களே கேட்கிறார்கள். உண்மைதான்.

ஆனால் தண்ணீர் இவ்வளவு குறைவாக இருப்பதற்கு யார் காரணம்? சூன் 11ஆம் நாள் கர்நாடக அணைகளில் எவ்வளவு தண்ணீர் தேங்கியிருந்தது என்பது தமிழக முதல்வருக்குத் தெரியுமா? இந்தியத் தலைமையமைச்சருக்குத் தெரியுமா?

cauvey-dam 600இதோ நாம் திரட்டிய தகவல்கள்:

2014 சூன் 11ஆம் நாள் கிருஷ்ணராஜசாகர் எனப்படும் கண்ணம்பாடி அணையில் நீர் மட்டம்: 91 அடி. மேட்டூரில் வெறும் 44 அடி. கண்ணம்பாடியில் திறந்து விட்டால்தான் மேட்டூர் மட்டம் உயரும். கண்ணம்பாடிக்கு வந்து சேரும் நீரின் அளவு: 18,967 நொடிக் கன அடி. அங்கிருந்து வெளியேறும் நீரின் அளவு 324 நொடிக் கன அடி.

அதாவது கண்ணம்பாடிக்கு வருவது ஒரு நொடிக்குச் சுமார் 19,000 கன அடி, அங்கிருந்து வெளியே விடப்படுவது ஒரு நொடிக்கு வெறும் 324 கன அடி மட்டுமே. மேட்டூர் போதிய நீர் இல்லாமல் காய்வதற்குக் காரணம் புரிகிறது அல்லவா?

இது மட்டுமல்ல. 1975இல் ஒப்பந்தம் முடிந்த பிறகு கர்நாடகம் தமிழகத்தின் ஒப்புதல் பெறாமல் சட்டப் புறம்பாகக் கட்டிய அணைகளிலும் நீர் அலையடித்துக் கிடக்கிறது. காட்டாக, ஏமாவதி அணையின் உயரம் 2922 அடி; சூன் 11ஆம் நாள் அந்த அணையில் நீர் மட்டம் 2882 அடி. நீர் வரத்து: 14,152 நொடிக் கன அடி; நீர்ப் போக்கு: 150 நொடிக் கன அடி.

குடகுப் பகுதியில் நல்ல மழை பெய்து ஆரங்கி அணையும், மேற்குத் தொடர்ச்சி மலையில் பெருமழை பொழிந்து கபினி அணையும் நிறைந்து வருகின்றன, கர்நாடகத்தில் ஏரிகள், குளங்களில் கொண்டுபோய்த் தேக்கப்படும் காவிரித் தண்ணீருக்கும் பஞ்சமில்லை.

மேட்டூரிலிருந்து இந்த ஆண்டும் சூன் 12ஆம் நாள் தண்ணீர் திறந்து விட முடியாமைக்குக் காரணம் கர்நாடகத்தின் வஞ்சகமும், அதற்குத் துணை போகும் தில்லியின் சூழ்ச்சியுமே தவிர வேறல்ல. நம்மூர்க் ‘காவிரி கொண்டான்’களும் ‘காவிரி தந்த கலைச் செல்வி’களும் தமிழர்களுக்கு இந்த உண்மைகளைச் சொல்வார்களா?

தமிழர்களே, தமிழர்களே, நாம் எல்லாருமே காவிரி மக்கள், காவேரி மைந்தர்கள்! சிறைப்பட்ட காவிரித் தாயை மீட்கக் களமாட எழுவோம்!

Pin It

srilanka 600ஐந்தாண்டு முன்பு முள்ளிவாய்க்கால் அவலமாக உச்சங்கண்ட இத்துணைப் பெரிய தோல்விக்கும் இத்துணைக் கொடிய அழிவுகளுக்கும் பிறகுங்கூட தமிழீழ மக்கள் நீதிக்காகவும் விடுதலைக்காகவும் அயராது தொடர்ந்து போராடி வருவது பெருமைக்குரிய செய்தி.

முக்களப் போராட்டம்

இந்தப் போராட்டம் புவியியல் நோக்கிலும் அரசியல் நோக்கிலும் மூன்று களங்களில் நடைபெற்று வருகிறது. தமிழீழத் தாயகம், புலம்பெயர் நாடுகள், தமிழ்நாடு ஆகியஇம்மூன்று களங்களிலும் நடந்து வரும் இப்போராட்டங்களின் இறுதிக் குறிக்கோள் தமிழீழ விடுதலைதான் என்றாலும், இந்தக் கட்டத்தில் வடிவங்களிலும் வழிமுறைகளிலும் உடனடிக் குறிக்கோள்களிலும் வேறுபாடு இருக்கவே செய்யும்.

இந்த மூன்று களங்களையும் ஒன்றாக இணைக்க முடியாது என்னும் போதே இவற்றுக்கிடையே ஒருவகை ஒருங்கிணைவு தேவைப்படுகிறது. புலம்பெயர் நாடுகளில் கிடைக்கும் சனநாயக வெளிகளைப் பயன்படுத்திப் பன்னாட்டு அரங்கில் சிங்களப் பேரினவாத அரசைத் தனிமைப்படுத்தும் முயற்சிகளும் சரி, தமிழகத்தில் இந்திய வல்லாதிக்க அரசுக்கு நெருக்கடி கொடுத்து சிங்கள அரசுக்கு எதிராகவும் தமிழ் மக்களுக்கு ஆதரவாகவும் மாற்றம் கொண்டுவருவதற்கான முயற்சிகளும் சரி, இறுதி நோக்கில் தமிழீழத் தாயகத்தில் விடுதலை வேண்டி நிற்கும் மக்களுக்குத் துணிவூட்டிப் போராடச் செய்வதற்காகத்தான், இதுவே மூன்று களங்களின் ஒருங்கிணைவு என்பதன் சாரம்.

முதற்களத்தில் ஆயுதப் போராட்டம், இரண்டாம் களத்தில் பொருளியல் ஆதரவு, மூன்றாம் களத்தில் அரசியல் ஆதரவு என்பது போன்ற புரிதல் இப்போது உதவாது. இப்போது மூன்று களங்களிலும் அரசியல் போராட்டங்களே!

ஒன்றோடு ஒன்று பின்னிக் கிடக்காமல் ஒன்றுக்கொன்று இசைவுடன் நடைபெற வேண்டிய போராட்டங்கள் இவை. இந்த இசைவை சாதிப்பதற்கு ஈழப் போராட்டத்தின் இன்றைய நிலை பற்றியும் எதிர்கால வாய்ப்புகள் குறித்தும் தெளிவான புரிதல் தேவை.

ஒற்றுமை தேவை

முக்களங்களின் இசைவுக்கான முயற்சிகள் ஒருபுறமிருக்க, அந்தந்தக் களத்திலும் போராட்ட ஒற்றுமை தேவைப்படுகிறது. தமிழீழக் களத்திலும் புலம்பெயர் களத்திலும் எதிர்வகையில் சிங்கள அரசின் அடக்குமுறையும் நேர்வகையில் இயக்கங்களின் பொறுப்புவாய்ந்த அணுகுமுறையும் சேர்ந்து, ஒற்றுமையின் திசையில் நல்ல முன்னேற்றத்துக்கு வழிசெய்துள்ளன. சிற்சில சுருதிபேதங்கள் இருப்பினும் அவற்றைப் பொருட்படுத்தத் தேவையில்லை.

ஆனால் தமிழகத்தில்? பதவி அரசியலால் போராட்ட ஒற்றுமை சிதறுவது பழைய கதை. கொள்கைவழி நின்று தன்னளிப்போடு போராடும் இயக்கங்களுக்கிடையே ஒற்றுமை கலைந்து போயிருப்பது கவலைக்குரிய செய்தி. கலைந்து போயுள்ளதே தவிர அடியோடு குலைந்து விட்டதாக நாம் கருதவில்லை.

இந்நிலையைச் சீர்செய்து ஒற்றுமையை மீட்டெடுக்க வேண்டும் என்ற முயற்சியின் ஒரு பகுதியாகத்தான் இதை எழுதுகிறோம். எவ்வித உள்நோக்கமும் இல்லாமலும் எவ்வித உள்நோக்கமும் கற்பிக்காமலும் கருத்து வேறுபாடுகளைக் கருத்து வேறுபாடுகளாகவே மதித்து விவாதிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம்.

விவாதப் பொருள்

எத்தனையோ கருத்துவேறுபாடுகள் இருக்கலாம், இப்போதைய நம் நோக்கத்துக்கு எல்லாவற்றையுமே விவாதித்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. நிகழ் வேறுபாடுகளுக்கு மையமாக இருக்கிற ஒன்றை முதலில் எடுத்துக் கொள்வோம். அது ஐநா மனித உரிமை மன்றத் தீர்மானம் குறித்தான பார்வை.

இதில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை ஓரடி முன்னே... (தமிழ்த் தேசம் 2014 சித்திரை) கட்டுரையில் விளக்கியுள்ளோம். இதே பொருள் குறித்து எமக்கு மாறுபட்ட பார்வையுடன் வெளிவந்துள்ளவற்றை விவாதத்துக்கு உள்ளாக்குவதே இங்கு நம் நோக்கம்.

இந்த வரிசையில், மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள ஒரு குறுநூலில் இடம்பெற்றுள்ள ‘அமெரிக்கத் தீர்மானத்தை ஏன் எதிர்க்க வேண்டும்?’ என்ற அறிக்கையை முதலில் எடுத்துக் கொள்வோம்.

“தமிழினப் படுகொலையைத் தடுத்து நிறுத்தத் தவறிய தமிழகத்தின் அரசியல் தோல்வியிலிருந்து உருவான மே பதினேழு இயக்கம் தமிழீழ விடுதலைக்காகவும் தமிழர் நலன் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காகவும் போராடி வருகிறது” என்று மேற்கூறிய அறிக்கை கூறுவதை ஏற்றுக் கொள்கிறோம். இந்தப் போராட்டத்தில் ஒத்த கருத்துடைய அமைப்புகளோடு மே பதினேழு ஒருங்கிணைந்து செயல்பட்டிருப்பதும் உண்மை.

தேசிய ஓர்மை மறுப்பு

தமிழீழ ஆதரவுப் போராட்டத்தைப் பொறுத்த வரை, மே பதினேழுடன் நாம் கருத்து மாறுபாடு கொள்ள நேரிட்டது 2014 மார்ச்சு ஐநா மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்மொழிந்த தீர்மானம் தொடர்பாகத்தான். அமெரிக்கத் தீர்மானம் தமிழர்களை ஒரு தேசிய இனமாகவே ஏற்றுக் கொள்ளவில்லை என்பது மே பதினேழு முன்வைக்கும் அடிப்படைக் குற்றாய்வு.

ததேபொகவும் இதே குற்றாய்வை முன்வைப்பதை அறிவோம். இது மே பதினேழு, ததேபொக ஆகியவற்றின் பார்வை மட்டுமன்று, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமும் தமிழகத்தின் தமிழீழ ஆதரவு அமைப்புகள் அனைத்தும் இதே பார்வை கொண்டவைதாம்.

புலம்பெயர் நாடுகளில் இயங்கி வரும் பொறுப்புள்ள தமிழர் அமைப்புகள் எதுவும் அமெரிக்கத் தீர்மானம் தமிழீழ மக்களின் தேசிய இனச் சிக்கலுக்குத் தீர்வு தரும் என்று நம்பவில்லை. விவாதம் இது குறித்தன்று.

கண்டனம் சரி, காரணம் தவறு

“தமிழர்கள் ஒரு தேசிய இனமாகவும், அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு விசாரணை தேவை என்பதாகவும் இருந்த சர்வதேச விவாதத்தினை, அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தின் மூலம் வேறு திசையில் மாற்றி இருக்கிறார்கள்” என்று மே பதினேழு அறிக்கை சொல்கிறது.

தமிழர்களை ஒரு தேசிய இனமாக ஒப்புக்கொண்டு ஐநா மனித உரிமை மன்றம் போன்ற அதிகாரப்பற்றுள்ள பன்னாட்டு அரங்கில் ஒரு சர்வதேச விவாதம் எங்கே எப்போது நடைபெற்றது?

1985 திம்பு பேச்சுவார்த்தையின் போது தமிழீழ அமைப்புகள் அனைத்தும் சேர்ந்து வலியுறுத்திய நான்கு அடிப்படைக் கொள்கைகளில் முதலாவதே ஈழத் தமிழர்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான். இந்தக் கொள்கைக்காக நாம் தொடர்ந்து போராடுவோம் என்பது உறுதி.

ஆனால் இது வரை இந்தக் கொள்கையின் அடிப்படையில் எந்தப் பன்னாட்டு அரங்கிலும் விவாதம் நடத்தப்பட்டதோ எந்த அரசு சார்பிலும் தீர்மானம் முன்மொழியப்பட்டதோ இல்லை.

தமிழர்களை ஒரு தேசிய இனமாகக் கொண்டு அவர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு விசாரணை வேண்டும் என்று ஐநா மனித உரிமை மன்றத்திலோ அது போன்ற வேறு பன்னாட்டு அரங்குகளிலோ ஒரு விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது போலவும், அதை அமெரிக்கத் தீர்மானம் வேறு திசைக்கு மாற்றி விட்டதாகவும் சொல்வதற்கு எவ்வித அடிப்படையும் இல்லை.

தமிழர்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள மறுப்பதும், அவர்களுக்கெதிரான இனக்கொலைக் குற்றத்துக்கு விசாரணை நடத்த மறுப்பதுமான அமெரிக்கத் தீர்மானத்தைக் கண்டிப்பது வேறு. அது வரை சென்று கொண்டிருந்த சரியான திசையை அமெரிக்கத் தீர்மானம்தான் மாற்றி விட்டது என்று அதற்கொரு காரணம் கற்பிப்பது வேறு.

டப்ளின் & பிறேமன் தீர்ப்பாயங்கள்

ஒருவேளை நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் டப்ளின், பிறேமன் அமர்வுகளை மனத்திற்கொண்டு மே பதினேழு பேசுகிறதா?

நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் டப்ளின் அமர்வு (2010 சனவரி) தமிழ் மக்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் குற்றங்கள் குறித்து ஆய்வு செய்கிறது என்றாலும், தமிழர்களை ஒரு தேசிய இனமாக அறிந்தேற்பது அல்லது அறிந்தேற்க மறுப்பது குறித்து விவாதிக்கவோ முடிவு கூறவோ இல்லை. அதற்கான தேவையும் அப்போது எழவில்லை.

பிறேமன் தீர்ப்பாயம் தமிழர்கள் மீதான தேசிய இன ஒடுக்குறையின் தொடர்ச்சியாக சிறிலங்கா புரிந்த இனக்கொலைக் குற்றம் குறித்துப் பேசுவது குறிப்பிடத்தக்கது. ஆனால் பிறேமனுக்கு ஐநா மனித உரிமை மன்றமோ அதன் உறுப்பு அரசுகளோ சட்ட மதிப்பு அளிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

பிறேமனின் அற மதிப்பை நம் பரப்புரையில் நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பது சரி. அமெரிக்கா என்றாலும், வேறு அரசு என்றாலும், ஐநா மனித உரிமை மன்றத்தில் முன்மொழியக் கூடிய தீர்மானத்தை பிறேமன் தீர்ப்பைக் காட்டித் குற்றத் திறனாய்வு செய்வதிலும் தவறில்லை.

ஆனால் ஐநா மனித உரிமை மன்றத்தின் வரம்புகளையும் அமெரிக்கா போன்ற வல்லாதிக்க அரசுகளின் நோக்கங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டு, பிறேமன் தீர்ப்பின் முடிவை அடியற்றிய தீர்மானத்தை அமெரிக்காவிடமிருந்து ஐநா மனித உரிமை மன்றத்தில் எப்படி எதிர்பார்க்க முடியும்?

புதிய அமெரிக்கத் தீர்மானம் குறித்து மேம்பாடு அல்லது முன்னேற்றம் என்ற கணிப்பு பழைய தீர்மானங்களுடன் ஒப்பிட்டுப் பெறப்படுவதுதானே தவிர, டப்ளின் அல்லது பிறேமனுடன் ஒப்பிட்டன்று.

இருதரப்பு விசாரணை

மே பதினேழு அறிக்கை “இருதரப்பு விசாரணை என்பதன் நோக்கம் என்ன?”

என்று வினாத் தொடுக்கிறது. இருதரப்பு விசாரணை என்பது அமெரிக்கக் கண்டுபிடிப்பன்று. டப்ளின் தீர்ப்பாயம் பன்னாட்டுச் சமுதாயத்துக்கும், நன்கொடையளிக்கும் அரசுகளுக்கும், ஐக்கிய நாடுகள் அமைப்புக்கும் அளித்துள்ள முதல் பரிந்துரை இதுதான் (பத்தி 6.2):

“சிறிலங்காவுக்கான ஐநா சிறப்புத் தொடர்பாளர் ஒருவரை அமர்த்தி, சண்டையிட்ட எல்லாத் தரப்பினரும் புரிந்த மனித உரிமை மீறல்களுக்கும், மனிதநேயச் சட்ட மீறல்களுக்கும், போர்க் குற்றங்களுக்குமான பொறுப்புகளைப் புலனாய்வு செய்து இனங்காண வேண்டும்.” (அழுத்தம் சேர்க்கப்பட்டது.)

எல்லாத் தரப்பினரும் என்பதன் பொருள் என்ன? இது சிறிலங்காஅரசை மட்டும்தான் குறிக்குமா? ‘இருதரப்பு விசாரணை’ என்பதன் வித்து டப்ளின் தீர்ப்பிலேயே இருக்கக் காணலாம். இத்தனைக்கும் டப்ளின் தீர்ப்பாயம் சிறிலங்கா அரசின் குற்றங்கள் குறித்து விசாரித்ததே தவிர, விடுதலைப் புலிகளின் செயல்களை ஆய்விற்கொள்ளவே இல்லை.

தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வுப் பொறியமைவு ஒன்றை அமைக்கும்படி ஐநாவுக்கு முதலில் பரிந்துரை செய்தது மூவல்லுனர் குழு அறிக்கைதான். அது சிறிலங்கா அரசு மீது மட்டுமின்றி, விடுதலைப் புலிகள் மீதும் நம்பும்படியான குற்றச்சாட்டுகள் (credible allegations)  இருப்பதாக வகைப்படுத்தி, அவை குறித்துத் தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு நடத்தப் பரிந்துரைத்தது.

தமிழர் அமைப்புகளும் மனித உரிமை அமைப்புகளும் இனக்கொலை, போர்க்குற்றங்கள், மானிட விரோதக் குற்றங்கள் குறித்துத் தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு என்ற கோரிக்கையை வலியுறுத்துவதற்கு மூவல்லுனர் குழு அறிக்கை உரமூட்டியுள்ளது.

இந்தக் கோரிக்கை குறித்து மே பதினேழு என்ன கருதுகிறது? ‘தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு வேண்டும், ஆனால் சிறிலங்கா அரசு மீதான குற்றச்சாட்டுகள் குறித்து மட்டுமே அது நடைபெற வேண்டும்.

விடுதலைப்புலிகள் தொடர்பான குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யாமலே தள்ளுபடி செய்து விட வேண்டும்’ என்று நம்மால் கோர இயலுமா? அல்லது மூவல்லுனர் குழு அறிக்கை விடுதலைப் புலிகளையும் குறை சொல்கிறது என்பதால், அந்த அறிக்கையை அடியோடு மறுதலித்து, அதனடிப்படையிலான புலனாய்வு எதுவும் தேவையில்லை என்று சொல்ல முடியுமா? அடிப்படையில் மூவல்லுனர் குழு அறிக்கையை நாம் வரவேற்பதா, இல்லையா?

சிங்கள அரசும் புலிகளும் ஒன்றல்ல

நம்மைப் பொறுத்த வரை இனக் கொலைகார சிறிலங்கா அரசின் மீதான குற்றச்சாட்டுகளையும், தமிழ் மக்களின் பாதுகாப்புக்காக ஆயுதமெடுத்த விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டுகளையும் நிகர்ப்படுத்துவதை ஏற்பதற்கில்லை.

அதேபோது புலிகளையும் சரி, வேறு எவரையும் சரி, பிழையாப் பெருமை கொண்டவர்களாக நாம் கருதவில்லை, தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு நடந்தால், சிறிலங்கா அரசின் மீறல்களையும் புலிகளின் பிழைகளையும் ஒரே வகைக் குற்றங்கள் என்ற முடிவு ஏதும் வர வாய்ப்பே இல்லை. அப்படியே வந்தாலும் அதனால் தமிழீழ மக்களின் நீதிக்கும் விடுதலைக்குமான போராட்டம் சேதப்படாமல் பாதுகாக்கும் அற வலு தமிழர்களுக்கும் உலகெங்கும் உள்ள மனித உரிமை ஆற்றல்களுக்கும் உண்டு என நம்புகிறோம்.

இப்போது புலிகள் மீது சொல்லப்படுவன போன்ற குற்றச்சாட்டுகள் கடந்த காலத்தில் உலகின் வேறு பல விடுதலை இயக்கங்கள் மீதும் சொல்லப்பட்டவைதாம். இவற்றில் சில குற்றங்கள் உண்மையிலேயே நடந்தவைதாம் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டதும் உண்டு. இதனாலேயே அவை விடுதலை இயக்கங்கள் இல்லை என்று ஆகி விடவில்லை.

சான்றாக, பாலத்தீன விடுதலை அமைப்புகளையும், ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரசையுமே குறிப்பிடலாம். ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸ் மீதான இப்படிப்பட்ட சில குற்றச்சாட்டுகளை நெல்சன் மண்டேலாவே ஏற்றுக் கொண்டுள்ளார். வீரத் தெலங்கானா ஆயுதப் போராட்டத்தின்போது இவ்வாறான குற்றங்கள் நிகழ்ந்ததை இந்தியப் பொதுமைக் கட்சி ஏற்றுக் கொண்டுள்ளது.

பன்னாட்டுச் செயல்வழிகள்

தமிழீழ விடுதலைப் புலிகளைக் குற்றம் சொல்வதா? என்று உணர்ச்சி மேலிடக் கேட்டு, வினவல், ஆய்தல், உசாவல் (enquiry,  investigation and trial) எனும் பன்னாட்டுச் செயல்வழிகளைத் தவிர்க்கப் பார்ப்பது உலகின் பார்வையில் நம்மை நியாயமற்றவர்களாகக் காட்டிப் பகைக்கே வலுச்சேர்ப்பதில் போய் முடியும்.

எந்த விசாரணைக்கும் புலனாய்வுக்கும் எங்களை உட்படுத்திக் கொள்ள நாங்கள் தயார், சிங்களப் பகை தயாரா? என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்வோம், இதுதான் பகையைத் தனிமைப்படுத்தி, நம் போராட்டத்தை வலுப்படுத்தும்.

இருதரப்பு விசாரணை என்பது அமெரிக்கத் தீர்மானத்தில் புதிதாக வந்து விழுந்து விடவில்லை. மூவல்லுனர் குழு அறிக்கை மட்டுமன்று, மனித உரிமை ஆணையரின் அறிக்கை, சேனல் நான்கு ஆவணப் படங்கள் என்று நடுநிலை ஆய்வுகள் பலவும் விடுதலைப் புலிகளும் பன்னாட்டுச் சட்டங்களை மீறிக் குற்றம் புரிந்திருப்பதாகச் சொல்லவே செய்கின்றன.

எனவே இந்தக் குற்றச்சாட்டுகளைக் கைகட்டி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நாம் சொல்லவில்லை. ஆனால் இவற்றின் மீதான விசாரணையோ புலனாய்வோ கூடாது என்று வாதிடுவது நம் நியாயத்தை வலுக்குன்றச் செய்து சிங்களப் பகை தப்புவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பதாகி விடும் என்கிறோம்.

இந்திய, சிங்கள அணுகுமுறை

இருதரப்பு விசாரணை என்பது தமிழ்த் தரப்புக்குப் பாதகம் செய்வதும் சிங்களத் தரப்புக்கு நன்மை செய்வதும் ஆகும் என்றால், சிறிலங்காவும் இந்தியாவும் அதை எதிர்க்க வேண்டியதில்லையே?

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், உலகத் தமிழர் பேரவை, பிரித்தானியத் தமிழர் பேரவை, கனேடியத் தமிழர் பேரவை போன்ற தமிழர் அமைப்புகள் அதை ஏற்க வேண்டியதும் இல்லையே? புலிகள் புரிந்த போர்க் குற்றங்கள் குறித்து தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு தேவை என்று சிறிலங்காவோ இந்தியாவோ ஒப்புக்கும் கோரிக்கை வைக்கவில்லையே, ஏன்?

அப்படி ஒரு புலனாய்வு நடந்தால் தமிழர்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்பைக் காட்டிலும்...

இந்திய உடந்தையோடு சிறிலங்கா செய்த இனக்கொலை, போர்க்குற்றங்கள், மானிட விரோதக் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் அம்பலப்பட்டு விடவே கூடுதல் வாய்ப்புள்ளது என்ற அச்சம்தானே காரணம்?

எவர் எப்படி விசாரித்தாலும் சரி, புலிகள் சிங்களர்களை இனக்கொலை செய்தார்கள் என்று யாராலும் விரல் நீட்டிச் சொல்ல முடியுமா?

எனவே புலிகளின் ஆட்சியிலிருந்து சிங்களர்களுக்கு விடுதலை வேண்டும் என்று கேட்க முடியுமா? மாறாக சிங்கள அரசு புரிந்த இனக்கொலை, போர்க்குற்றங்கள், மானிட விரோதக் குற்றங்களுக்கு ஈடாகத் தமிழர்களுக்கு ஈடுசெய் நீதி வேண்டும், பாதுகாப்பு வேண்டும், பொது வாக்கெடுப்பு வேண்டும் என்றெல்லாம் கேட்க முடியுமே! கேட்டதும் கிடைக்காதுதான், ஆனால் அவற்றுக்கான மக்கள் போராட்டத்துக்கு வலுச் சேர்க்க முடியுமே!

சட்ட நுணுக்கங்களும் அரசியல் விளைவுகளும்

இருதரப்பு விசாரணையால் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்குப் பாதிப்பு இருக்காது என்றும், தமிழர் தரப்புக்கே பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும், விசாரணை முடிய 15, 20 ஆண்டுகள் வரை ஆகலாம் என்றும் மே பதினேழு அறிக்கை அச்சம் தெரிவிக்கிறது. இப்படிச் சொல்வதற்கான சட்ட நுணுக்கங்கள் சரி என்றே வைத்துக் கொண்டாலும், அவற்றைக் காட்டிலும் இந்த விசாரணையின் அரசியல் விளைவுகள்தாம் முக்கியமானவை எனக் கருதுகிறோம். 2009 தொடங்கி நாளது வரையிலான ஐநா மனித உரிமை மன்ற நடடிக்கைகள், மூவல்லுனர் குழு அறிக்கை, ஆணையர் அறிக்கை, தீர்மானங்கள் மீதான விவாதங்கள், வாக்கெடுப்புகள்...

இவை யாவும் தமிழீழக் களத்தில் போராட்ட வெளியை உருவாக்கவும் விரிவாக்கவும் துணை செய்துள்ளனவா, இல்லையா? உலக அளவிலும் தமிழக அளவிலும் தமிழீழ ஆதரவுப் போராட்டங்களுக்குத் துணை செய்துள்ளனவா இல்லையா?

எது போராட்டப் பாதை?

இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்கும் போது தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிசெய்யும் ஒரு தீர்மானம் இருதரப்பு விசாரணை என்ற ஒரு காரணத்தாலேயே ‘தமிழீழ விடுதலையை நோக்கி நகருகின்ற நமது போராட்டப் பாதையைப் பின்னுக்குத் தள்ளி’ விடும் என்று மே பதினேழு அச்சப்படுவதற்கு அடிப்படை ஏதுமில்லை. தமிழீழ விடுதலையை நோக்கி நகருகின்ற போராட்டப் பாதை என்று சொல்வதை நீங்களே விண்டுரைக்க முற்பட்டால் உங்கள் தன்முரண்பாடு தானாக வெளிப்படும். நீங்கள் பரிந்துரைக்கும் போராட்டப் பாதை என்பது அறிந்தோ அறியாமலோ பன்னாட்டு அரங்கில் நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்வதில் போய் முடியும்.

அமெரிக்க மயக்கமில்லை

அமெரிக்கத் தீர்மானத்தைக் குற்றாய்வு செய்வதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. இதை நாம் மட்டுமன்று, பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழி செய்கிற அளவில் அதை வரவேற்றுள்ள உலகத் தமிழர் அமைப்புகளும் தெளிவுபடுத்தியுள்ளன.

அமெரிக்க வல்லரசு குறித்து ஒருசில தமிழர்களுக்கு மயக்கம் இருக்கலாம், எமக்கு இல்லவே இல்லை. ஆனால் அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்க்கும் மிகையார்வத்தில் ‘அமெரிக்கா மட்டும் இருதரப்பினரையும் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பதை விமர்சிக்காமல் எவ்வாறு கள்ள மௌனம் சாதிக்க முடியும்?’ என்று மே பதினேழு அறிக்கை கேட்கிறது.

‘இது வரை எந்த ஒரு சர்வதேச அறிக்கைகளிலும், சார்லஸ் பெட்ரி, நோர்வே, ஐநா வல்லுநர் குழு, மனித உரிமைக்குழுக்கள் புலிகளுக்கு எதிரான ஆதாரங்களை முன்வைக்காத பொழுது...’ என்ற பீடிகையோடு மேற்சொன்ன வினா தொடுக்கப்படுகிறது.

சர்வதேச அறிக்கைகளில் புலிகள்

‘எந்த ஒரு சர்வதேச அறிக்கையிலும்’ புலிகளுக்கு எதிரான ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லையா? மூவல்லுனர் குழு அறிக்கை சொல்வது என்ன? போரின் இறுதிக் கட்டங்களில் புலிப் படை பொதுமக்களைப் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்துக்கொண்டது, படைக்குக் கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டது போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை ‘நம்பும்படியான குற்றச்சாட்டுகள்’ என்ற வகையில் அது குறிப்பிடுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளை இறுதியாக மெய்ப்பிக்கவோ பொய்ப்பிக்கவோதான் தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு தேவைப்படுகிறது.

சிங்கள அரசின் கொடுங்குற்றங்களை உலகறியச் செய்ததன் மூலம் தமிழினத்துக்கு அருந்தொண்டாற்றியுள்ள சேனல் நான்கு & கலம் மக்ரே புலிகள் மீதும் சில குற்றச்சாட்டுகளைச் சொல்லியிருக்கிறார்.

பன்னாட்டுப் பொதுமன்னிப்புக் கழகம் சில குற்றச்சாட்டுகளைச் சொல்லி ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளது. சிங்கள அரசு ‘தமிழ்ப் பெண் புலி’ என்று வர்ணிக்கின்ற நவநீதம் பிள்ளையும் புலிகள் மீது சில குற்றச்சாட்டுகளைச் சொல்லியிருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டுகளை அடியோடு மறுத்து வாதுரைக்கவோ, காரண விளக்கம் சொல்லவோ, ஒப்புக்கொண்டு சரி செய்ய முயலவோ நமக்கு முழு உரிமை உண்டு. ஆனால் யாருமே சொல்லாததை அமெரிக்கத் தீர்மானம் இட்டுக்கட்டிக் கிளப்பி விடுகிறது என்று சொல்வது உண்மைக்கு மாறானது.

பெட்ரி அறிக்கையும்தான்

மே பதினேழு அறிக்கை சார்லஸ் பெட்ரியையும் போகிறபோக்கில் தனக்கு சாட்சி ஆக்கிக் கொள்கிறது. பெட்ரியின் ஐநா உள்ளக ஆய்வறிக்கையை மே பதினேழு தோழர்கள் மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டுகிறோம். இந்த அறிக்கை ஐநா நடவடிக்கைகள் தொடர்பானதே என்றாலும், புலிகளைப் பற்றிய குற்றச்சாட்டுகளும் இல்லாமலில்லை.

சான்றாக ஒன்றைக் குறிப்பிடுவதென்றால், “அரசுப் படைகள் தொடர்ந்து இராணுவத் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த போதே, பொதுமக்கள் சண்டைப் பகுதியிலிருந்து வெளியேற விடுதலைப் புலிகள் அனுமதிக்க மறுத்து, செயலளவில் அவர்களைக் கேடயங்களாகப் பயன்படுத்திக் கொண்டனர்.” இது பெட்ரி அறிக்கையின் பத்தி 19இல் காணப்படும் குற்றச்சாட்டு.

எதிர்ப்பது எப்படி?

அமெரிக்கத் தீர்மானத்தை ஏன் எதிர்க்க வேண்டும்? என்று வினாத் தொடுத்து விடையிறுக்க முற்படும் மே பதினேழு அறிக்கை... அமெரிக்கத் தீர்மானத்தை எப்படி எதிர்க்க வேண்டும்? என்ற வினாவிற்கும் விடை தேடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அமெரிக்கத் தீர்மானத்தைக் கிழித்தெறிவோம்! அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிடுவோம்! என்ற முழக்கங்கள் மட்டுமே எதிர்ப்பாகி விடுமா? அயோக்கியத்தனமான அமெரிக்கத்

தீர்மானத்தைத் தோற்கடிக்க வேண்டாமா? தோற்கடிக்கும்படி ஐநா மனித உரிமை மன்ற உறுப்பு நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தீர்களா? இந்தியாவிடம் அப்படிக் கோரிக்கை வைத்தீர்களா?

இந்தியாவிடம் கோரிக்கை என்ன?

நாம் இந்தியாவில் இருந்து கொண்டு போராடுவதாலும், இந்தச் சிக்கலில் இந்தியாவின் பங்கு முக்கியமானது என்பதாலும், இந்தியாவிடம் நம் கோரிக்கை என்ன என்பதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். அமெரிக்கா தீர்மானம் கொண்டுவருவது உறுதியான பின் அதற்கு எதிராக வாக்களிக்கும் படி இந்தியாவைக் கோருவதுதான் உங்கள் நிலைப்பாட்டிலிருந்து எடுக்க வேண்டிய தருக்கவழி முடிவாக இருக்க முடியும்.

அமெரிக்கத் தீர்மானம் & அதிலடங்கிய எல்லாக் குறைநிறைகளோடும் நிறைவேறியதைத் தமிழர்களுக்கு ஏற்பட்ட பெருந்தோல்வியாகவும், சிங்களத்துக்குக் கிடைத்த பெருவெற்றியாகவும் கருதுகின்றீர்களா?

இத்தீர்மானத்தைத் தடுக்க முயன்று, இறுதியில் வாக்கெடுப்பிலிருந்து விலகி நின்ற இந்தியாவின் நிலைப்பாடு குறித்து உங்கள் பார்வை என்ன? இந்தக் கேள்விகளைக் கேட்பது உங்கள் பிழையை உணர்த்தும் நோக்கிலும், அதன் வழி கருத்தொற்றுமைக்கும் செயலொற்றுமைக்கும் வழிகோல வேண்டும் என்பதற்காகவும்தானே தவிர, உள்நோக்கம் கற்பித்து உங்கள் பார்வையைக் கொச்சைப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல.

வெற்றியும் விழிப்பும்

ஆக, அமெரிக்கத் தீர்மானம் ஈழத் தமிழர்களை ஒரு தேசிய இனமாக அறிந்தேற்கவில்லை என்பதையோ அது இருதரப்பு விசாரணையைக் கோருகிறது என்பதையோ மட்டும் வைத்து, செயலளவில் பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிகோலும் அதன் பயன்பாட்டைப் புறந்தள்ளி விட முடியாது. இது அமெரிக்க அரசோ பிரித்தானிய அரசோ பிற அரசுகளோ தமிழ்மக்களுக்கு இடும் பிச்சை அன்று.

இது ஈடுசெய் நீதிக்காக உலக அளவில் தமிழர்களும் மனித உரிமை ஆற்றல்களும் நடத்தியுள்ள ஐந்தாண்டுக் காலப் போராட்டத்துக்குக் கிடைத்திருக்கும் வெற்றி. இந்த வெற்றியை முன்னெடுத்துச் செல்ல... தொடர்ந்து விழித்திருந்து போராட வேண்டிய கடமை நமக்குண்டு. அயர்ந்தால் ஆதிக்க அரசுகள் நம்மை ஏமாற்றிவிடும் ஆபத்துண்டு.

பிறேமன் தீர்ப்பு

தமிழீழ மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதற்கான போராட்டம் அதிகாரப்பற்றுள்ள பன்னாட்டு நிறுவனங்களை மட்டும் சார்ந்து நிற்கத் தேவையில்லை. இன்றைய உலகில் அரசுகள் மட்டுமே ஆற்றல்கள் அல்ல. நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் போன்ற அறவழி நிறுவனங்களின் வழிமுறைகளும் நமக்குத் தேவை.

மூவல்லுனர் அறிக்கை வருவதற்கு முன்பே டப்ளின் தீர்ப்பு நம் முயற்சிகளுக்குத் துணை செய்தது. அதே போல் பிறேமன் தீர்ப்பும் மதிப்புமிக்க ஒன்று. நடந்தது இனக்கொலை என்று வரையறுத்ததிலும் அதில் வல்லரசுகளின் பங்கை நிறுவியதிலும் அதன் பங்கு முகாமையானது. பிறேமனில் மே பதினேழு எடுத்த சீரிய முயற்சியைப் பாராட்டுகின்றோம்.

பிறேமன் தீர்ப்பை ஐநா மனித உரிமை மன்றப் புலனாய்வு பின்னுக்கிழுத்து விடும் என்பது ஒரு மேற்போக்கான பார்வை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இது வெறும் குற்றவியல் நீதிக்கான போராட்டமன்று, அதற்கும் மேலே இது அரசியல் நீதிக்கான போராட்டம்.

பிறேமனைப் பெரிதாகக் கண்டுகொள்ளும் தேவை இராசபட்சனுக்கு எழவில்லை. ஆனால் ஐநா புலனாய்வுக்கு எடுத்த எடுப்பிலேயே முட்டுக்கட்டை போடத் தொடங்கி விட்டது சிங்களம். உலகம் இதற்கு எதிர்வினை ஆற்றியாக வேண்டும்.

சிங்களத்தைத் தனிமைப்படுத்துவோம்!

புறக்கணிப்பு முதல்நீக்கம், தடைகள் (BDS = Boycott- Divestment- Sanctions ) என்ற வழிகளில் சிறிலங்காவை நெருக்கும்படி உலகையும் இந்தியாவையும் வலியுறுத்த வேண்டும். இதனால் சிங்களத்தை மென்மேலும் தனிமைப்படுத்த இயலும். இதற்கிணையாகத் தமிழினம் மென்மேலும் ஊக்கம் பெற்றுப் போராடும்.

அந்தப் போராட்டத்தில் தமிழகம் தனக்குரிய பங்கினை ஆற்றுவதற்கு நம்மிடையே – போராடும் இயக்கங்களிடையே  –கொள்கை வழிப்பட்டஒற்றுமை தேவை. ஒன்றுபடுவதற்காகவே ஒன்றுபடுவது அன்று, போராடுவதற்காக ஒன்றுபடுவதுதான் புரட்சிகர ஒற்றுமை. அத்தகைய ஒற்றுமைக்கு உரிமையுடன் அழைக்கிறோம்!

(தமிழீழ ஆதரவு இயக்கங்களிடையே ஒற்றுமை நோக்கில் இந்த விவாதத்தைத் தொடங்கியுள்ளோம். இயக்கங்களும் தலைவர்களும் மட்டுமல்ல, வாசகர்களும் எழுதலாம் & இயன்ற வரை சுருக்கமாக. - ஆசிரியர்.)

Pin It

urutheakumaran 300(நாடு கடந்த தமிழீழ அரசாங்கப் பிரதமர் உருத்திரகுமாரன் அறிக்கை)

கடந்த சில தினங்களாகத் தென்னிலங்கையில் மிகத் திட்டமிட்டு அப்பாவி முஸ்லீம் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவன்செயல்கள் இன்றைய தினத்தில் (17.06.2014) மத்திய மலைநாட்டின் பதுளை போன்ற நகரங்களிலும் முஸ்லீம் மக்களின் பாதுகாப்பினை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளன.

சிறீலங்காவின் மேல் மாகாணத்தில் உள்ள களுத்துறை மாவட்டத்தில் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் அளுத்கமை, தர்க்காநகர் ஆகிய பகுதிகளில் பௌத்த பல சேனாவின் நேரடி நெறிப்படுத்தலில் முன்னெடுக்கப்பட்டுள்ள முஸ்லீம்களுக்கு எதிரான வன்செயல்களையும் அப்பாவி முஸ்லீம் மக்களின் வழிபாட்டுத் தலங்கள், பொருளாதார மையங்கள், குடியிருப்புக்கள் எல்லாம் நிர்மூலமாக்கப்பட்டு அவர்களை அவர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த பிரதேசங்களிலிருந்து வெளியேற்ற முயல்வதும் சிங்கள பௌத்த மேலாதிக்க அரசின் குறிக்கோளின் ஒரு பகுதியாகவும் 1983இல் தமிழ்மக்களுக்கு எதிரான இனவெறி வன்செயலின் தொடர்ச்சியாகவுமே விளங்க முடிகிறது.

இத்தகைய இனவழிப்பு செயற்பாடுகள் தொடர்வதனையும் தமிழ்மக்களைத் தொடர்ந்து முஸ்லீம் மக்களும் சிறிலங்காவின் இனவழிப்பு திட்டத்திற்கு பலிக்கடாக்களாக்கப்படும் அபாயம் வெளிப்படுவதையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மிகவன்மையாகக் கண்டிப்பதோடு பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்திலும் பங்கேற்கிறது.

அதேவேளையில் இலங்கைத்தீவு முழுவதனையும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் குறியீடாக மாற்ற முயலும் சிங்கள பௌத்த தேசிய வன்முறையாளர்களின் திட்டமிட்ட செயற்பாடுகளுக்கு எதிராகத் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் ஒன்றாக இணைந்து போராடவேண்டிய உன்னதமான தருணம் வந்துவிட்டது என்பதனையும் நாம் விரைந்து சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இலங்கைத் தீவில் 1880ல் இந்திய வர்த்தகர்களுக்கு எதிராக அனகாரிக தருமபாலாவின் தலைமையிலான எதிர்ப்பும்; 1883ஆம் ஆண்டு சிங்கள கிறித்தவர்களுக்கு எதிரான கொட்டகேனா கலவரமும்; 1915இல் சிங்கள முஸ்லீம் கலவரமும்; 1950இல் மலையகத் தமிழர்களின் வாக்குரிமை, குடியுரிமை பறிப்பும்.

1956ஆம் ஆண்டு ஜூலை தமிழர்களுக்கு எதிரான களனிக் கலவரமும்; 1958, 1977 தமிழர்களுக்கெதிரான இனக்கலவரமும்; 1983 தமிழர்களுக்கெதிரான இனவழிப்பு வன்செயலும்; 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும் காலத்துக்குக் காலம் சிங்கள பௌத்த மேலாதிக்க வெறி கொண்ட தேசியவாதிகளால் சிறிலங்கா தீவினை முழுமையாக சிங்கள பௌத்த நாடாக்கும் இலக்குடன் முன்னெடுக்கப்பட்டன.

முஸ்லீம்களுக்கெதிரான தற்போதைய இனவன்செயல்களும் இந்த வரிசையில்தான் அமைகின்றன.

சிறிலங்கா அரசு கலவரங்களைத் தமது அரசியல் இராணுவ இலக்குகளை அடையும் கருவிகளாகவே வழிநடத்தினர். தமிழர்களுக்கெதிரான 1958, 1977 இனக்கலவரங்களும் 1983 இனவழிப்பு வன்செயல்களும் சிறிலங்கா அரசின் அனுசரணையுடன் நடாத்தப்பட்டவை என்பதும் காலத்தால் நிரூபிக்கப்பட்ட உண்மைகளாகும்.

போதி பல சேனாவின் கூட்டத்தைத் தடுக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையின் நிராகரிப்பும் போலிசாரின் செயலற்றமையும் தற்போதைய முஸ்லிம்களுக்கெதிரான இன வன்செயல்களும் சிறிலங்கா அரசின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்படுகின்றன என்பதற்கான சான்றுகளாக அமைகின்றன.

இலங்கைத் தீவு சிங்கள பௌத்த மக்களுக்கு மட்டுமல்லாது தமிழ் மொழியைத் தாய் மொழியாக கொண்ட இந்துக்கள், இசுலாமியர்கள், கிறித்தவர்கள், பௌத்தர்கள் ஆகியோரினதும் பாரம்பரியத் தாயக பூமியாகும். தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் சிறிலங்கா தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமக்கென ஆள்புலத்தினையும் வாழ்வாதாரத்தினையும் பண்பாட்டுச் சுவடுகளையும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே கொண்டிருந்தார்கள்.

காலத்துக்குக் காலம் செல்வாக்கு செலுத்திய சமயக்கோட்பாடுகளையும் மார்க்க நம்பிக்கைகளையும் உள்வாங்கிய மக்கள் மதங்களால் வேறுபட்டிருந்தும் மொழியாலும் மொழிசார் பண்பாட்டினாலும் ஒன்றுபட்டுச் செழுமை பெற்றனர். மதவெறியும் மேலாதிக்க உணர்வும் என்றுமே அவர்களைப் பிரிக்கவில்லை.

பிரித்தாளும் அரசியல் தந்திரோபாயமும் அதிகாரப் போட்டிகளும் பெரும்பான்மை சனநாயகத்தின் தவிர்க்க முடியாத குறைபாடும் காரணிகளாக அமைந்து இன்று தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் தமது பாரம்பரியத் தாயகத்திலும் மரபுரிமையான வாழ்விடங்களிலும் திட்டமிட்டுப் பிரிக்கப்பட்டுச் சிதைக்கப்படுகிறார்கள்.

அவர்களது பண்பாட்டு அடையாளங்களும் வாழ்வாதார வளங்களும் வழிபாட்டு உரிமைகளும் மேலாதிக்க இனஉணர்வு கொண்ட பெரும்பான்மையினரின் அதிகாரவெறிக்கு பலியாக்கப்படுகின்றன.

இவற்றினைத் தடுத்து நிறுத்துவதற்கும் தன்னம்பிக்கையும் பொருண்மியத் தற்சார்பும் தன்னாட்சியுரிமையும் கொண்ட வலுவான சமூகத்தினைக் கட்டியெழுப்புவதற்கும் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் தமிழ் மொழிபேசும் மக்கள் என்ற குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பாக வேண்டி நிற்கின்றேன். 

Pin It

(2013 ஏப்ரல் 3ஆம் நாள் உசிலம்பட்டியில் நடைபெற்ற பெருங்காமநல்லூர் ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் தோழர் தியாகு ஆற்றிய உரை)

தோழர் முகில்நிலவன் அவர்கள் குற்றப் பரம்பரைச் சட்ட வரலாற்றைப் பல கட்டுரைகளாகத் தொகுத்து குற்றப் பரம்பரை அரசியல் என்ற செறிவான நூல்வடிவில் நமக்குத் தந்துள்ளார். அதேபோல் தோழர் சுந்தரவந்தியத் தேவன் எழுதிய பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும் என்ற நூலும் இவ்வரலாற்றைப் பயில்வதற்கும், மக்களிடம் முன்னெடுத்து செல்வதற்குமான ஆர்வத்தை எமக்களித்தது.

வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான்.

பெருங்காமநல்லூரின் ஈகம் இன்றைக்கும் பொருத்தப்பாடு உடையது. இன்றைக்கும் அத்தகைய வீரம் தமிழர்களுக்குத் தேவைப்படுகிறது என்பதால் அந்த ஈகியரை நாம் வணங்குகிறோம். இன்றைக்கும் தமிழ்ப் பெண்கள் மாயக்காள் போன்ற வீரப் பெண்களாக இருக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம். அப்படிப்பட்ட வீரப் பெண்களை நாம் வணங்குகிறோம்.

நண்பர்களே! பெருங்காமநல்லூரில் 1920 ஏப்பிரல் 2ஆம் நாள் 93 ஆண்டு முன்பு இதே நாளில் & சுட்டுக் கொல்லப்பட்ட 16 பேரும் & நடையநேரியில் இருந்து வாழ்க்கைப்பட்டு வந்து பெருங்காமநல்லூரில் வதைபட்டு, சுடுபட்டு வீழ்ந்த மாயக்காள் உள்ளிட்ட பதினாறு பேரும் & பிறமலைக் கள்ளர்கள். இவர்கள் ஒரு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இது ஒரு சாதிப் போராட்டம் அல்ல.

1968 திசம்பர் 25ஆம் நாள் கீழவெண்மணியிலே 44 பேர் உயிரோடு கொளுத்தப்பட்டார்கள். அவர்களில் ஒருவர் கூட சாதி இந்து இல்லை. அனைவரும் சேரி மக்கள். அதனால் அது ஒரு சாதிப் போராட்டம் ஆகி விடாது. எங்களுக்குப் பெருங்காமநல்லூரும் வெண்மணியும் தமிழ் இனத்தின் இரண்டு ஈகக் களங்கள், வீரக்களங்கள் என்று பார்க்கிறோம்.

தமிழ்த் தேசியம் என்பது ஒடுக்குண்ட மக்களின் போராட்ட ஒற்றுமையைச் சார்ந்திருக்கிறதே தவிர அவர்களுக்கு இடையேயான மோதலைச் சார்ந்திருக்கவில்லை. அந்த முறையில் தமிழ்த் தேசியத்திற்கான ஒற்றுமையைக் கட்டுவதற்கு பெருங்காமநல்லூரின் ஈகமும் தேவை, வெண்மணியின் ஈகமும் தேவை.

நண்பர்களே! ரேகைச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்திய அந்த வீரமிக்க தமிழர்களை நாம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியத் துணைக்கண்டத்திலே மட்டுமல்ல, உலகெங்கிலும் உவமை காட்டிப் போற்ற முடியும். நம்முடைய தமிழ்ச் சமூகத்தைப் பீடித்திருக்கின்ற இரண்டு பெரிய சங்கிலிகளில் ஒன்று காலனி ஆதிக்கம்.

மற்றொன்று வர்ண சாதி ஆதிக்கம். காலனி ஆதிக்கத்திற்கும் வர்ண சாதி ஆதிக்கத்திற்கும் பொதுவான ஒரு தன்மை இருக்கிறது. அது மனிதர்களைப் பிறப்பால் வேறுபடுத்திப் பார்ப்பது. குறிப்பிட்ட சிலரைப் பிறப்பால் குற்றவாளிகளாகப் பார்ப்பது. இட்லர் ஜிப்சிகளைப் பிறப்பால் குற்றவாளிகளாகப் பார்த்தார்.

யூதர்களைப் பிறப்பால் குற்றவாளிகளாகப் பார்த்தார். அதனால்தான் இரண்டாம் உலகப் போர் தொடங்குகின்ற பொழுது ஐரோப்பாவில் 90 இலட்சம் யூதர்கள் இருந்தார்கள்.

போர் முடிகின்ற பொழுது வெறும் 30 இலட்சம் யூதர்கள்தான் மிச்சப்பட்டார்கள். 60 இலட்சம் யூதர்களைக் கொன்று குவித்து விட்டான். இன்றைக்கு வல்லமை பொருந்திய அமெரிக்க வல்லாதிக்கம் ஒருவர் இசுலாமியர் என்றாலே அவரைப் பயங்கரவாதி என்று ஐயுறுகிறது. முசுலீம்களைப் பிறப்பால் குற்றவாளிகளாகப் பார்க்கிறது.

ஒரு காலத்தில் தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்கள் கறுப்பின மக்களைப் பிறப்பால் குற்றவாளிகளாகப் பார்த்தார்கள். பெருங்காமநல்லூருக்கு இணையான ஒரு வீரமிக்க வரலாற்றைத் தென்னாப்பிரிக்கக் கறுப்பின மக்கள் படைத்தார்கள். அங்கேயும் இதே போன்று கைரேகைச் சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது.

ஒரு இனக் குழுவிற்கு எதிராக மட்டுமல்ல, வெள்ளையர் அல்லாத அனைவருக்கும் எதிராகப் பயன்படுத்தப்பட்டது. இதை எதிர்த்துத்தான் காந்தியார் இங்கிருந்து சென்ற மக்களைத் திரட்டிப் போராடினார். அந்தப் போராட்டத்திலே ஒரு முக்கியத் தன்மை உண்டு.

என்னவென்றால், அந்தப் போராட்டத்திலே தமிழர்கள் இருந்தார்கள், குசராத்தியர்கள் இருந்தார்கள், இந்திக்காரர்கள் இருந்தார்கள், பத்தானியர்கள் இருந்தார்கள். ஆனால் அந்தப் போராட்டத்தின் வலிமைமிக்க ஆற்றல் தமிழர்கள்தான்.

காந்தியார் அந்தப் போராட்டத்திலே மிகப் பெரிய ஈகப் பெண்ணாகக் குறிப்பிட்டது யாரைத் தெரியுமா? தில்லையாடி வள்ளியம்மையைத்தான். அவர் அந்தப் போராட்டத்திலே சிறைப்பட்டுப் பின் உயிர் நீத்தவர்.

ஆனால் காந்தியார் செல்வதற்கு முன்பு&இத்தகைய அறப் போராட்டங்கள், சத்தியாகிரகங்கள் நடப்பதற்கு முன்பு &தென்னாப்பிரிக்க மக்கள் பழங்குடிகளாகப் பிரிந்து இருந்தார்கள்.

வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து ஒவ்வொரு பழங்குடியும் போரிட்டது, பிரிந்து கிடக்கின்ற சமூகத்தை அடிமைப்படுத்துவது எளிது என்றாலும் அவர்கள் தனிதனி இனக்குழுக்களாக அணிசேர்ந்து போராடினார்கள்.

கறுப்பின மக்கள் பிரிட்டனின் பீரங்கிகளையும் துப்பாக்கிகளையும் எதிர்த்துக் களங்கண்டு வெற்றி பெற்றது ஒரு புகழார்ந்த வரலாறு. 1879இல் பிரெடெரிக் எங்கெல்சுக்குச் செய்தி ஒன்று கிடைக்கிறது. இன்றைக்கு இருப்பது போல் இணையம், தொலைகாட்சி வசதிகளோ நவீனத் தொடர்பு வசதிகளோ அதிகம் இல்லாத காலம் அது.

சூலு இன மக்கள் தங்கள் மன்னர், அதாவது குலத்தலைவர் செஸ்ட்வாயோவின் தலைமையில் கரந்தடி முறையில் போரிட்டார்கள். வெறும் வேல்கம்பும் ஈட்டியும் வில் அம்பும்தான் அவர்களிடம் இருந்தது. இசாந்திலவானா மலையில் பிரித்தானியப் படையை & பீரங்கிகள், துப்பாக்கிகளோடு வந்த 2000 பேர் கொண்ட அந்தப் படையை & சூலு வீரர்கள் சுற்றி வளைத்துத் தோற்கடித்தார்கள். மலையடியில் வெள்ளைப் படை, உச்சியில் கறுப்புப் படை. கறுப்பர்கள் அணியணியாகப் பாய்ந்து வந்தார்கள்.

ஓரணி வீழ்த்தப்பட்டால் உடனே அடுத்த அணி வரும். இப்படி வரிசையாக வந்து நெருங்கிநின்று. வேல் கம்புகளாலும், ஈட்டிகளாலும் வெள்ளைப் படையினை வீழ்த்தி வெற்றி கண்டார்கள். அந்தப் போர்க் களத்திலே அவர்கள் வெற்றி பெற்ற செய்தியை லண்டனிலிருந்த ஒரு வெள்ளைக்காரர் கேள்விப்பட்டு மகிழ்ந்து கொண்டாடினார். அவர்தான் பிரெடெரிக் எங்கெல்சு.

ஆனால் அடுத்து வந்த போர்க்களங்களில் வெள்ளையர்கள் அவர்களை வீழ்த்தி அடிமைப்படுத்தி விட்டார்கள். காலப்போக்கில் பழங்குடிகளாக இருந்த மக்கள் தென்னாப்பிரிக்கத் தேசிய இனமாக உருப்பெற்றார்கள். ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரஸ் மலர்ந்தது. ஆப்பிரிக்கர்கள் மட்டுமல்லர்.

இந்தியர்கள், கலப்பினத்தவர்கள், சனநாயக உள்ளங்கொண்ட வெள்ளையர்கள் எல்லோரையும் ஒன்றிணைத்து தென்ஆப்பிரிக்கத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் வெற்றி கண்டார்கள்.

அரசியல் வகையில் ஒப்பிட்டுச் சொன்னால் இசாந்திலவானாவில் சூலுக்கள் போராடியதைப் போன்றது பெருங்காமநல்லூரில் பிறமலைக்கள்ளர்கள் நடத்திய போராட்டம். கொடிய குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து அவர்கள் கலகம் செய்தார்கள் எனலாம். கள்ள நாட்டு ஊர்ப் பெரியவர்கள் கூடி, ரேகை வைக்கக் கூடாது என்றும், இச்சட்டத்தின் கீழ் தங்களைப் பதிவு செய்வதைக் கடுமையாக எதிர்ப்பது என்றும் முடிவு செய்தனர். அதற்காக ரேகை எதிர்ப்புக் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது.

ரேகைப் பதிவிற்கு யாரும் ஒப்புக்கொள்ளக் கூடாது என்று ஊர் ஊருக்கு ஓலை விட்டார்கள். இந்தச் சட்டத்தை நிறுத்தி வைக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு மனு எழுதி அனுப்பி வைத்தனர்.

ஆனால் 1920 ஏப்ரல் 2ஆம் நாள் இரவே சிந்துபட்டி காவல் நிலையத்தில் சிறப்புக் காவல் படை வந்து குவிந்து விட்டது. ஏப்ரல் 3ஆம் நாள் அதிகாலையில் போலீஸ் படை ஊருக்குள் நுழைந்தது.

வட்டாட்சியரும் நீதிபதியும் போலீஸ் அதிகாரிகளும் வந்திருந்தார்கள். மக்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. ஏறத்தாழ 3000க்கும் மேற்பட்ட மக்கள் கூட்டம். எங்கும் ஒரே ஆரவாரம். கட்டுக்கடங்காத நிலை.

அதிகாரிகள் கலக்கம் அடைந்தனர். கல், கம்பு, கத்தி, ஈட்டி, வில் அம்பு, வளைதடி போன்ற ஆயுதங்களோடு மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது. அதிகாரிகள் ரேகைப் பதிவிற்கு ஒத்துழைப்புக் கேட்டனர். அதனை ஏற்காத மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆத்திரம் அடைந்த அதிகாரிகள் மக்களைத் தாக்க ஆரம்பித்தனர். கூட்டத்திலே விட்டி பெருமாள்தேவன் போலீஸ் அதிகாரிகளை நோக்கி, Òஅடாத காரியம் செய்து மக்களை அடிமைப்படுத்த வந்த பயல்களே, மரியாதையா ஊரை விட்டு போய் விடுங்கள், இல்லையென்றால் ஒங்களை வெட்டி காத்தாண்டம்மனுக்கு பலி கொடுத்து விடுவோம்” என்று எச்சரித்தார்.

கள்ளர் கூட்டத்திலே “ஓவாயன்” என்பவரும் இருந்தார். அவர் கைகளைப் பின்னால் கட்டியிருந்தார். இரண்டு கைகளில் ஒரு கையில் கேழ்வரகு ரொட்டி இருந்தது. மறுகையிலே கல் இருந்தது.

அதிகாரிகளை நோக்கி, Òசமாதானம் என்றால் இதோ இந்த ரொட்டியை உனக்குத் தருவேன், சமாதானம் இல்லையென்றால் இந்தக் கல்லைக் கொண்டு உன்னுடைய மண்டையைப் பிளந்து விடுவேன்” என்று எச்சரித்தார்.

வரலாற்றிலே நம் காலத்தில் உலக அரங்கில் இதே தன்மையான ஒரு சம்பவம் நடந்தது. தோழர்களே! பாலத்தீன மக்களுடைய அன்புத் தலைவர், பாலத்தீன விடுதலை அமைப்பினுடைய தலைவர் யாசர் அராபத் ஐநா பொதுப் பேரவையிலே உரையாற்றச் சென்றார். ஐநாவில் அவர் உரையாற்றக் கூடாது என்பற்காக அமெரிக்கா அவருக்கு விசா தர மறுத்தது.

எனவே ஐநா பொதுப்பேரவைக் கூட்டம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவிற்கு மாற்றப்பட்டது. அங்கே போய் அராபத் பாலத்தீனம் பற்றிப் பேசினார். பேசுகிற போது அவருடைய இடுப்பிலே ஒரு கைத்துப்பாக்கி இருந்தது. கைத்துப்பாக்கியில் ஒரு கையை வைத்துக்கொண்டு சொன்னார்,

”எங்களைப் பொறுத்த வரை எங்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிற இஸ்ரேலிய யூதர்களுக்குச் சொல்கிறோம். எங்களுடைய ஒரு கையில் துப்பாக்கி இருக்கிறது, இன்னொரு கையிலே அமைதியின் அடையாளமான ‘ஒலிவ் கிளை’ இருக்கிறது. பகைவனே!

உனக்கு அமைதி வேண்டுமென்றால், இந்த ஒலிவ் இலையைக் கையில் பிடி!. இல்லையென்றால் இந்தத் துப்பாக்கியால் உன்னைச் சந்திப்பேன்!” என்று அய்.நா. மன்றத்திலே நின்று யாசர் அராபத் முழங்கினார். யாசர் அராபத் ஐநா மன்றத்திலே தீப்பிழம்பாய் நின்று இப்படி முழங்கப் போவது பெருங்காமநல்லூர் ஓவாயனுக்குத் தெரியுமா? தெரியாது. பெருங்காமநல்லுரில் ஓவாயன் செய்தது அராபத்துக்குத் தெரியுமா? தெரியாது. ஆனால் ஓவாயனுடைய வழியிலே யாசர் அராபத் அன்று முழங்கினார்.

ஓவாயனைப் போல், விட்டி பெருமாத் தேவரைப் போல் மக்களனைவரும் ஓன்று திரண்டு அதிகாரிகளை முற்றுகையிட ஆரம்பித்தனர். நிலைமை கட்டுக்குள் அடங்காமல் போய் விட்டது. உதவி தாசில்தார் ஜான் அன்பு நாடார் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தவிட்டார்.

சம்பவ இடத்திலேயே 11 பேர் கொல்லப்பட்டனர். சண்டையிட்டவர்களுக்குத் தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்த மாயக்காள் என்ற பெண்ணும் சுட்டு வீழ்த்தப்பட்டார். அவரைச் சுட்டதுமில்லாமல் துப்பாக்கிச் சனியனாலும் குத்திக் கொடூரமாகக் கொலை செய்தனர். படுகாயம் அடைந்த 5 பேர் மருத்துவமனையில் இறந்தனர். மொத்தம் 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தோழர்களே! எதற்காக இந்த 16 பேரும் கொல்லப்பட்டார்கள்? இவர்கள் மீது ஏன் கைரேகைச் சட்டம் பாய்ந்தது? இவர்கள் உண்மையிலேயே குற்றப் பரம்பரையினர்தானா? ஒரு தலைமுறைக் காலம் முழுவதும் காவல் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு என்னென்ன கொடிய சித்திரவதைகளை இவர்கள் அனுபவித்தார்கள்? இந்தச் சட்டம் யார் யார் மீதெல்லாம் ஏவப்பட்டது?

இம்மக்களுக்காக யாரெல்லாம் போராடினார்கள்? இந்தச் சட்டத்தினால் அழிந்த குடும்பங்கள் எத்தனை எத்தனை? இந்த சட்டத்தின் காலனியத் தேவைதான் என்ன? இந்தச் சட்டம் தமிழ்ச் சமூக அரசியல், பொருளியல், பண்பாட்டில் என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தியது? சமகாலச் சூழலில் இந்தப் போராட்ட வரலாற்றின் தேவை என்ன?

இந்தக்கேள்விகளுக்கு விடை காண முயல்வோம்.

(தொடரும்)

உரை தொகுப்பு: இருகூர் தேவராசு

Pin It