கொவிட்- 19 நோய்த் தொற்று காரணமாக உலகம் முடங்கியதால், பெட்ரோலியப் பயன்பாடு வெகுவாகக் குறைந்து விட்டது. உலக அளவில் அனைத்து நாடுகளிலுமே எணணெய்ப் பயன்பாடும், தேவையும் ஊரடங்கு காரணமாகக் குறைந்துள்ளன. புதைபடிவ எண்ணெய் அடிப்படையிலான  பொருளாதார முறைமையில்  பெரும் பாதிப்பு ஏற்பட்டு விட்டது. முதலீட்டின் மீது கிடைக்கும்  இலாபம் என்பது (Energy Return on Investment - EROI) என்பது ஓர் ஆற்றலை ஒரு மூலத்திலிருந்து எடுப்பதற்கு எவ்வளவு ஆற்றல் (பணம்) தேவைப்படுகிறதோ, அதை எடுக்கப்பட்ட எண்ணெய்  மதிப்பிலிருந்து கழித்துக் கொண்டு, மீதி உள்ளது "உபரி மொத்த ஆற்றல்" (Surplus Net Energy ) என்று கூறுவோம். இது, சக்தி உற்பத்தி முறைமைக்கு (energy production system) வெளியே, சரக்கு உற்பத்தி மற்றும் சேவைக்கு பயன்படுத்தப்படுகிறது.

இப்போது கொரோனா நோய்த்தொற்று காரணமாக உலகே முடங்கிப்போன நிலையில், பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்து போனது. Surplus என்று சொல்லப்படும் உபரி குறைந்து விட்டது. 

இருபதாம்  நூற்றாண்டின் தொடக்கத்தில் முதலீட்டின் மீதான ஆற்றல் வருவாய் 100:1 என்ற அளவில் இருந்தது. இது இன்று பெரும் வீழ்ச்சி அடைந்து விட்டது. 1960-1980இல் இதன் உலக சராசரி  மதிப்பு பாதியாகக் குறைந்து, இப்போது 15:1 என்ற வீதத்தில் அமைந்து விட்டது. எண்ணெய்ப் பொருளாதாரம் நிலைத்திருக்க முடியாத சூழல் எழுந்துள்ளது.

2020 பிப்ரவரி மாதம், பின்லாந்தின் Geological Survey of Finland என்ற அமைப்புதான் ஐரோப்பிய யூனியனின் கனிமவள மூலங்கள் அமைப்பு முறைமையைத்  தீர்மானிக்கக் கூடிய அமைப்பாக விளங்குகிறது), ஓர் ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. எண்ணெய்ப் பொருளாதார விரிவு என்பது கடனால் ஊதிப் பெருக்க வைக்கப்பட்ட குமிழிதான் என்று அந்த அறிக்கை கூறியது. ஏராளமாக எண்ணெய் வளம் இருந்தாலும் அதை அடைவதற்கு அதிக செலவு ஆகிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது. "உற்பத்திச் செலவு அதிகம், உற்பத்தி குறைவு" என்ற நிலை ஏற்பட்டுள்ளது.  உலக அளவில் ஷேல் ஆயில் கம்பெனிகள் எதிர்மறையான பண ஓட்டம் ( negative cash flow ) காரணமாக வீழ்ச்சி அடைந்துள்ளன. திருப்பிக் கொடுக்க முடியாத கடன்களை பல பில்லியன் டாலர் அளவிற்குப் பெற்று என்ணெய் நிறுவனங்கள் சமாளிக்கின்றன.

இப்போது, கடனால் பெருக்கப்பட்ட குமிழியை  கொரோனா வைரஸ் தொற்று உடைத்து விட்டது. எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் பழைய நிலைக்கு வர முடியாத சூழல் நிலவுவதாக ஆய்வுகள் இப்போது தெரிவிக்கின்றன. பெட்ரோலியத் தேவையில் மிகப் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலை மேலும் 18 மாதங்கள் தொடர்ந்தால் எண்ணெய் நிறுவனங்கள் செயல்படுவது என்பது இயலாது. எண்ணெய்த் தொழில் ஒரு முடிவுக்கு வந்துவிடும். பல நாடுகளிலும் எண்ணெய்க் கிடங்குகள் பெருமளவில் சேமிக்கப்பட்டு, நிரம்பி வழிகின்றன. ஆகவே எண்ணெய்ச் சேமிப்பு என்பதும் ஒரு முடிவுக்கு வருகிறது. 

ஆகவே, பல்வேறு காரணங்களால் புதிய எரிசக்தி முறை நோக்கி உலகம் தள்ளப்படுகிறது. சுற்றுச்சூழல் வரம்புகளை மீறாத, புதிய எரிசக்திப் பயன்பாடு நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதை (ஹைட்ரோ) கார்பனுக்குப் பின்-யுகம் (Post- Carbon Age)என்று குறிப்பிடுகிறார்கள்.

உலகமே ஒரு திசை நோக்கி நகரும் போது இந்தியா மட்டும் நிலையாக முரண்டு பிடிக்க முடியாது. உலக நலன் கருதி, எண்ணெய் எடுப்பைக் கைவிட வேண்டும்.

ஆகவே இப்போதைய தேவை பன்முகப்படுத்தப்பட்ட, மையப்படுத்தப்படாத, பரவலாக அமைக்கப்படுகின்ற, ஒரு புதிய "புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முறை" ஆகும். விவசாயம் மற்றும் பொருள் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட, உயிர்ப்புள்ள ஒரு பொருளியல் கட்டுமானம் இந்தியாவுக்குத் தேவைப்படுகிறது. வழக்கமான பெட்ரோல் உற்பத்தி அடிப்படையிலான பொருளியல் அமைப்பு அடிவாங்கி விட்டதால், மாற்று இணைப்பு எரிபொருள் (alternative bridge fuels) பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டிய தேவை எழுந்துள்ளது.

மலேசியா, clean bio-fuels எனப்படும் தூய்மையான உயிரி எரிபொருள் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகித்து முன்னோடியாகத் திகழ்கிறது. அங்கே, 100 விழுக்காடு பாமாயிலிலிருந்து எரிபொருள் எடுக்கும் நுட்பத்தையும், விதிமுறைகளையும் மலேசியா வகுத்துள்ளது.

சவுதிஅரேபியா, ரஷ்யாவை விட அதிகம் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு அமெரிக்கா. மேற்கு டெக்ஸாஸ் முதல் நியூ மெக்ஸிகோ வரை நீண்டிருப்பது மிகப்பெரும் பெர்மியன் ஷேல் எண்ணெய் வயல். அப்பகுதியின் எண்ணெய்க் கிணறுகள் இப்போது மூடப்பட இருக்கின்றன. கடன் அதிகரிப்பால் எண்ணெய் நிறுவனங்கள் திவாலாகும் நிலை நோக்கித் தள்ளப்பட்டுள்ளன. எண்ணெய் சேமிக்கும் இடம் நிரம்பிக் கிடக்கிறது. ஆனால் உலக அளவில், அதை வாங்கும் சூழல் பல நாடுகளுக்கும் இல்லை. இச்சூழல் ஷேல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் கம்பெனிகளுக்குப் பேரிடியான காலமாகும். ஒப்பீட்டளவில் குறைந்த விலைக்குப் பல நாடுகளும் எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ளலாம். ஆனால், அதற்கான தேவை இல்லை. 

சர்ச்சைக்குரிய "நீரியல் விரிசல்" முறையைப் பயன்படுத்தி எண்ணெய் எடுத்த நிறுவனங்களில், இன்று மூன்றில் இரண்டு பங்கு  நிறுவனங்கள் வேலையை நிறுத்தும் நிலைக்கு வந்துள்ளன. வட டகோட்டாவில் அதிக அளவில் எண்ணெய் எடுத்துக் கொண்டிருந்த கான்டினென்டல் ரிசோர்சஸ் என்ணெய் உற்பத்தி நிறுவனம் தன் வேலையை நிறுத்திவிட்டது.

இச்சூழலில் புதுப்பிக்கத்தக்க எண்ணெய்-எரிவாயு உற்பத்தியை நோக்கி உலக நாடுகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. 2015- பாரிஸ் உடன்பாட்டின்படி,, மாற்று எரிசக்தியைப் பயன்படுத்த, அனைத்து பெரும் நாடுகளும் தீர்மானித்தன. இப்போது அதை நோக்கி நகர வேண்டிய கட்டாயத்தை கொரோனா தொற்று நோயான COVID-19 உருவாக்கிவிட்டது. 2015 -பாரிஸ் உடன்பாட்டில் இந்தியாவும் கையொப்பமிட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரை அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்தும் வகையில் உயிரி எரிபொருள் உற்பத்தி நோக்கிச் செல்வது கட்டாயமானதாகும். மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் மூலம் பெறும் எரிசக்தியை விட பல மடங்கு அதிகம் பெற மாற்று எரிசக்தி மூலங்களை இந்தியா பெற்றுள்ளது. சரியான முடிவை இந்திய அரசு எடுக்க வேண்டும். தாவர எண்ணெயும், கழிவு எண்ணெயும் உயிரி எரிபொருள் உற்பத்திக்குப்  பயன்படுத்தப்படுவதால், இவை வற்றாத எரிபொருள் மூலங்களாகும். ஒரு இலட்சம் கோடிக்கும் குறையாமல் ஆண்டுதோறும் அந்நியச் செலாவணி மிச்சப்படுத்தலாம்.

1980 முதல் தாய்லாந்தில் ஜெட்ரோபா எனப்படும் காட்டாமணக்கு எண்ணெயை டீசலுக்கு மாற்றாகப் பயன்படுத்தும் ஆய்வு நடந்துவந்தது. 1993இல் ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி, மெக்சிகோ, இஸ்ரேல், அர்ஜெண்டைனா மற்றும் ஆப்பிரிக்க  நாடுகள் இந்த ஆய்வில் கவனம் செலுத்தின.

உணவு உற்பத்திக்குக் குந்தகம் ஏற்படாத வகையில், விளை நிலம், விளையா நிலங்கள் ஆகியவற்றை உயிரி எரிபொருள் உற்பத்திக்குப் பயன்படுத்தலாம். கரும்பு, சர்க்கரைக் கிழங்கு ஆகியவற்றைப் பயன்படுத்தி, உயிரி எரிபொருள் பல நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. நுண்ணுயிர் எரிபொருள் என்பது நீலப்பாசி, நுண்பாசி ஆகியவற்றிலிருந்து பெறப்படும் எரிபொருள் ஆகும். நுண்ணுயிர் எரிபொருள் தயாரிக்க, ஆமணக்கு எண்ணெய் உற்பத்திக்குத் தேவையான நிலப்பகுதியில் ஆயிரத்தில் ஒரு பங்கு இருந்தாலே போதுமானது என்று ஆய்வுக் கட்டுரைகள் கூறுகின்றன.

உலக நாடுகளில் பயோடீசலையும், பெட்ரோலையும் சேர்த்துப் பயன்படுத்துகின்றனர். ஈஸ்ட்டு நொதியைப் பயன்படுத்தி எத்தனால் தயாரிக்கப்படுகிறது. இதை நேரடியாகவோ அல்லது பெட்ரோலுடன் கலந்தோ எரிபொருளாகப் பயன்படுத்துகிறார்கள். எத்தனால் அதிகம் பயன்படுத்தும் நாடு பிரேசில். அந்நாடு கரும்பிலிருந்து எத்தனால்  எடுக்கிறது. அமெரிக்கா சோளத்தில் இருந்து எத்தனால் தயாரிக்கிறது. பிரேசில்  எத்தனாலுடன் பெட்ரோலை 20% கலந்து பயன்படுத்துகிறது. எத்தனால் மூலம் ஊர்திகளை நேரடியாகவே இயக்கலாம். அமெரிக்காவில் 85% எத்தனாலுடன் 15% பெட்ரோல் கலந்து,  E-85 தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

இப்போது, நிலம் சார்ந்த எரிபொருள் உற்பத்தி முக்கியத்துவம் பெறுகிறது. புதைபடிவ எரிபொருள் உற்பத்தியிலிருந்து, கொரோனா வைரசும், COVID 19 தொற்றுநோயும் நாடுகளை விரட்டி அடித்திருக்கின்றன.

எண்ணெய் சாராத பொருளாதாரம் கட்டமைக்கப்பட வேண்டிய தேவையை உலக நாடுகள் உணர்ந்துள்ளன. இந்நிலையில் சூழலை உணர்ந்து, தற்சார்புள்ள நாடாக விளங்க, இந்தியாவும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், உயிரி எரிபொருள் பயன்பாட்டுக்கு மாற வேண்டும்.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காக்கத் தொழில்கள் எல்லாம் நிறுத்தப்பட்டன. மக்கள் முடக்கப்பட்டார்கள். இதை மக்களும் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் சில தொழில்களுக்குத் தளர்வு அளிக்கலாம் என்று தமிழக அரசு முடிவெடுத்து அறிவித்ததில், எண்ணெய்-எரிவாயு நிறுவனங்கள், இரும்பு உற்பத்தி, சிமெண்ட் உற்பத்தி ஆகியவை செயல்பட அனுமதி அளித்துள்ளது. எண்ணெய்-எரிவாயு உற்பத்திக்கு தமிழக அரசு இப்போது அனுமதி அளிப்பது தவறானதாகும். எண்ணெய்-எரிவாயு உற்பத்தி இத்துடன் தமிழகமெங்கும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தமிழகம் முழுவதும் எண்ணெய் எடுப்பு என்ற பேரழிவிலிருந்து காக்கப்பட வேண்டும். 

கரோனாவால்  மூடப்பட்டுள்ள தொழில்கள், தொழிலகங்கள்,  கடைகள் மற்றும்  விற்பனையகங்களுள், டாஸ்மாக்கும், எண்ணெய் - எரிவாயு எடுக்கும் கிணறுகளும், சுத்திகரிப்பு ஆலைகளும் நிரந்தரமாக மூடப்பட வேண்டியவை என்பதைத் தமிழக அரசு உணர வேண்டும்.

கொரோனா கொல்லத் தவறினால், எண்ணெய் எரிவாயுத் திட்டங்கள் பயன்படுத்தும் இரசாயனங்கள் அந்தக் காரியத்தைச் செய்து விடும். தொழிற்சாலைகள் மூடப்பட்டதில், கங்கை ஆறு தூய்மையாகி விட்டது. நாடு முழுவதும் பல ஆறுகள் தன்னியல்புக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன. இவை நிலத்தின் மேற்பரப்பில் உள்ள நீராதாரங்களின் நிலை. நிலத்தடி நீரை எண்ணெய் நிறுவனங்கள் கெடுத்துக் கொண்டே இருக்கின்றன. இவற்றின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு, தொடர் மழையால் நிலத்தடி நீர் செறிவூட்டப்படும்போது, கால ஓட்டத்தில்  நிலத்தடி நீரும் மீண்டும் தன்னியல்பைப் பெறும்.    என்ணெய் நிறுவனச் செயல்பாடுகளைத் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது.

Pin It