இரட்டைமலை சீனிவாசன் யாரு – நம்
மொத்த பேர்க்கும் அவரு பாட்டனாரு
திட்டம் போட்டு அடக்கிவச்ச சாதி – அதன்
திமிர் அடக்கிக் கிடைக்க வச்சார் நீதி  

பறையர் மகா ஜன சபையைக் கண்டு – அவர்
பகல் இரவாய்ச் செய்த பெரும் தொண்டு
நிறைய நன்மை தந்ததுவே இன்று – அவர்
நினைவைப் போற்றி வாழ்ந்திடுவோம் நன்று

வட்டமேசை மாநாட்டில் அன்று – நல்ல
வலக்கரமாய் அண்ணலுடன் நின்றார்
திட்டமிட்ட செயல்பலவும் கண்டு – நம்
சேரித்தமிழர் உரிமைகளை வென்றார்   

தென்னாப்பிரிக்க நாடுவரை சென்றார் – அங்குக்
காந்தியுடன் சேர்ந்து தொண்டில் வென்றார்
நன்றாக காந்தி தமிழ் கற்க – நம்
தாத்தாதானே துணையாக நின்றார்   

பறையர் இதழ் மூலம் விழிப்பை ஊட்டி – சாதிப்
பகைவர்களைக் குத்திய கூர் ஈட்டி – நம்
குறைகள் சட்ட சபையில் சுட்டிக்காட்டி – தலித்
குலங்கள் வாழ வாழ்ந்த வழிகாட்டி  

சிலைகள் வைத்து மாலைபோட்டால் போதுமா – நம்
சிக்கல் தீர அவைகள் வழிகள் ஆகுமா?
உலைத் தீயாய்க் கனன்றெழுவோம் வாருங்கள் – தாத்தா
உழைத்த உழைப்பு வெற்றிகாண வாருங்கள்!  

- கவிஞர். தமிழேந்தி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.