இலங்கையின் தமிழீழ பகுதியில் தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு கடந்த 2008, 2009 இல் வன்னியில் நடைபெற்ற இறுதிப் போரின் போது பொது மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் பாதிப்புக்களில் பெருமளவிலானவை அரச படையினரின் எறிகணை மழையால் ஏற்பட்டவையே என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது மனித உரிமைக் குழு.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினர் அறிக்கையை கடந்த 12 ஆம் திகதி பான் கீ மூனிடம் கையளித்தது. அது உடனடியாக இலங்கை அரசுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. அறிக்கை யில் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டிருந்த விவரங்கள் இலங்கை அரசுக்கு எதிராகக் கூறப்படும் நம்பகமான குற்றச்சட்டுகளை 5 வகையாக ஐ.நா. நிபுணர் குழு பிரித்திருக்கிறது.

1.     குண்டுகளை வீசி பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களைக் கொன்றது.

2.     மருத்துவமனைகள் மற்றும் மனிதநலப் பணிகளுக்கான இடங்கள் மீது தாக்குதல் நடத்தியது.

3.     பொதுமக்களுக்கு மனித நேய உதவிகள் கிடைக்க விடாமல் செய்தது.

4.     போரில் கொல்லப்பட்ட வர்கள், தப்பியவர்கள். இடம் பெயர்ந்த வர்கள், விடுதலைப் புலிகள் என்கிற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்டவர்கள் ஆகியோருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள்.

5.     போர் நடந்த பகுதிக்கு வெளியே ஊடகங்கள், அரசு எதிர்ப் பாளர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறை ஆகியவற் றையே நம்புவதற்குரிய 5 குற்றச்சாட்டு களாக ஐ.நா. குழு கூறுகிறது.

இதுபோல விடுதலைப் புலிகள் மீது ஐ.நா. சபை கூறிய குற்றச் சாட்டுகள்

1.     பொதுமக்களைக் கேடயமாகப் பயன்படுத்தியது.

2.     தங்களது பிடியில் இருந்து தப்பியோட முயன்றவர்களைக் கொன்றது.

3.     பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் ஆயுதங்களைப் பதுக்கியது.

4.     குழந்தைகளைப் படையில் சேர்த்தது.

5.     கட்டாயமாக வேலை வாங்கியது.

6.     தற்கொலைப் படைத் தாக்குதல் மூலம் பொதுமக்களைக் கொன்றது.

ஆகியவை விடுதலைப் புலிகளுக்கு எதிரான 6 வகையான குற்றச்சாட்டுகள் கூறியுள்ளது. ஏற்கனவே உலக நாடுகளும் தமிழர் விரோத சக்திகள் கூறி வரும் கருத்தைத் தான் ஐ .நா. அறிக்கையும் கூறுகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

அடுத்து இந்த அறிக்கையில் ஐ.நா.வும் இலங்கையும் செய்ய வேண்டியவை தொடர்பாக விரிவாக விளக்கக் குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. இலங்கை அரசு தமிழர் மீது தாக்குதல் நடத்துவதற்கு விடுதலைப் புலிகள் தான் காரணம் என பல செய்திகளை ஐ.நா. குழுவும் கூறியுள்ளது என்பதை தமிழர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மேலும் அவர்கள் தங்கள் அறிக்கையில் போர் நடக்கும் பகுதியில் ஏற்படக் கூடிய அபாயங்களைப் பற்றி நன்றாகவே தெரிந்திருந்தும் அப்பகுதியில் இருந்து வெளியேறுவதற்கு பொதுமக்களை விடுதலைப் புலிகள் அனுமதிக்கவில்லை. தங்களைப் பாதுகாக்கும் கேடயங்களாக அவர்களைப் பயன் படுத்திக் கொண்டார்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

போர் நடந்து கொண்டிருக்கும்போது கட்டாய ஆளெடுப்பு நடவடிக்கைகளை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர். போர் உச்சக்கட்டத்தை எட்டிய போது, ஆளெடுக்கும் பணி தீவிரமாக இருந்தது. எல்லா வயதினரையும் தங்களது படையில் விடுதலைப் புலிகள் சேர்த்துக் கொண்டனர் எனலாம்.

விடுதலைப் புலிகள் தங்கள் பாதுகாப்புக்காகப் பதுங்கு குழிகளைத் தோண்டுவதற்குப் பொதுமக் களைக் கட்டாயப்படுத்தப்பட்டனர் என்றும், பொதுமக்களையும் விடுதலைப் புலிகளையும் பிரித்தறிய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்களுக்குக் கூடுதலான ஆபத்து ஏற்பட்டது. மேலும் 2009ம் ஆண்டு பிப்ரவரிக்குப் பிறகு சண்டை நடந்து கொண்டிருந்த பகுதியில் இருந்து வெளியேற முயன்ற பொதுமக்கள் மீது விடுதலைப் புலிகள் கண்மூடித் தனமாகச் சுடத் தொடங்கினர். இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

அடுத்து போர் உச்சக்கட்டத்தை எட்டியபோது, மருத்துவமனைகள், பொதுமக்கள் தங்கியிருக்கும் முகாம்கள் போன்றவற்றை ஆயுதங்கள் பதுங்கி வைப்பதற்காக விடுதலைப் புலிகள் பயன்படுத்தினர். அந்த நேரத்தில் விடு தலைப் புலிகள் தற் கொலைப் படைத் தாக்குதலைத் தீவிரப்படுத்தினர் என்று ஐ.நா.வின் அறிக்கை கூறுகிறது.

அதன்பின் இலங்கை அரசு செய்திருப்பதும் செய்ய வேண்டியதும் போர் நடந்து முடிந்த பிறகு அது தொடர்பான பொது விசாரணை நடத்தி இருக்க வேண்டும். ஆனால் இலங்கை அரசு தொடர்ந்து புறக்கணித்து வந்தது. உலக நாடுகளின் கட்டாயத்தின் பேரில் ராஜபட்ச அரசு கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையம் (எல்.எல்.ஆர்.சி.) என்கிற 8 நபர் குழுவை அமைத்தது. 2002ம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தம் போர் முடிவுக்கு வந்தது வரை ஆய்வு செய்வதே இந்தக் குழுவின் பணி என்று கூறப்பட்டது. போர் முடிந்த நிலையில், தேசிய அளவிலான பேச்சைத் தொடங்குவதற்கு இது நல்ல வாய்ப்பாகவும் கருதப்படுகிறது.

ஆனால் இந்த குழுவிற்கு தனித்தன்மை, தனி அதிகாரம், நடுநிலையான ஆய்வு உள்ளிட்ட சர்வதேச தகுதிகள் எதுவுமில்லை. ஆனால் அதில் சிலர் ஒரு சார்பானவர்களாகக் கருதப்பட்டார்கள். போர்க் காலத்தில் செய்யப்பட்ட சர்வதேச மனித நல மற்றும் மனித உரிமை சட்ட விதி மீறல்கள் தொடர்பாக இந்தக் குழு விசாரிக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மரியாதை அளிப்பது. சாட்சியங்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிப்பது போன்ற கடமைகளிலும் எல்.எல்.ஆர்.சி. தவறி விட்டது.

அதனால்தான் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன், இலங்கை அதிபர் ராஜபட்ச ஆகியோர் அளித்த கடமைப் பொறுப்பு தொடர்பான உறுதிகளை இந்தக் குழுவால் நிறைவேற்ற முடியாது என்று ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை கூறுகிறது.

இலங்கையில் இப்போது நிலவும் அரசியல் சூழலில் எல்.எல்.ஆர்.சி.யால் நீதியை வழங்க முடியும் என்று நம்பிக்கையில்லை. அரசியல் அதிகாரங்கள் அனைத்தும் அதிபரிடமே குவிந்து கிடக்கின்றன. நாட்டின் தலைமை வழக்கறிஞரிடமிருந்து அதிகாரங்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன. அவசர காலச் சட்டம், பயங்கரவாத ஒழிப்புச் சட்டம் ஆகியவையும் நீதி கிடைப்பதில் தடைக் கற்களாக உள்ளன எனவும் ஐ.நா. அறிக்கை சுட்டிக் காட்டியிருக்கிறது.

கடமைப் பொறுப்பு தொடர்பாக பான்கிமூன். இலங்கை அதிபர் ஆகியோரிடையே ஏற்பட்டிருக்கும் ஒத்துழைப்பு ஆக்கப்பூர்வமானதாக அமைய வேண்டுமானால் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா. குழு பரிந்துரை செய்திருக்கிறது.

போர்க் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித நல மற்றும் மனித உரிமைக் குற்றங்கள் குறித்து நியாயமான விசாரணையை அரசு உடனடியாகத் துவக்க வேண்டும்.

வன்னிப் போரில் பாதிக்கப்பட்டவர்கள், தப்பியவர்கள் ஆகியோருக்கான குறுகிய கால நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும். அரசு மற்றும் துணை ராணுவப் படையினரின் அத்து மீறல்கள் நிறுத்துவது, போரில் இறந்து போனவர்களின் உடல்கள், அஸ்தி உள்ளிட்டவற்றை உறவினர்களிடம் ஒப்படைப்பது, இறந்து போனவர்களுக்கான இறப்புச் சான்றிதழ்களை உரிய மரியாதையுடன் எந்தக் கட்டணமும் இல்லாமல் வழங்குவது போரில் பிழைத்தவர்களுக்குத் தேவையான மன நல ஆலோனைசகளைத் தருவது, முகாம்களில் வசிப்பவர் களை உடனடியாக விடுவிப்பது, மறுகுடியமர்வுப் பணிகளை மேற்கொள்வது. இடைக்கால நிவாரண உதவிகளைச் செய்வது போன்றவை இதில் அடக்கம்.

மேலும் கடத்தப்பட்டு பின்னர் மயமானவர்கள் தொடர்பான உண்மை நிலையை அறிவிக்க வேண்டும்.

அவசர நிலையைத் திரும்பப் பெற வேண்டும். சர்வதேச சட்டங்களுக்குப் பொருந்தும் வகையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்ய வேண்டும்.

விடுதலைப் புலிகள் என்கிற சந்தேகத்தின் பேரில் பிடித்து வைக்கப்பட்டிப்பவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும். அவர்கள் மீது சட்ட ரீதியாகவே நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நீதிமன்றத்தில் அவர்கள் சார்பில் வழக்குத் தொடுப்பதற்கு குடும்பத்தினருக்கு அனுமதி அளிக்க வேண்டும். கொடிய குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லாதவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அரசு நிகழ்த்தும் வன்முறைகளை நிறுத்த வேண்டும். மக்கள் கூடுவதற்கும், இடம் பெயர்வதற்கும் கருத்துகளைத் தெரிவிப்பதற்கும் எதிராக நடவடிக்கைகள் எடுப்பது நிறுத்தப்பட வேண்டும்.

அதேபோல சில நீண்ட கால நடவடிக்கைகளையும் ஐ.நா. குழு பரிந்துரை செய்திருக்கிறது. இனப் பிரச்சினை, பல்வேறு மனித உரிமை மீறல்கள் நடந்த கடுமையான போர் உள்ளிட்டவை தொடர்பாக அனைத்து சமூகத்தினரும் பங்கேற்று ஆய்வு செய்யும் நடவடிக்கைகளை அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும்.

அதேபோல், இறுதிக்கட்டப் போரில் பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக அரசு தனது பொறுப்பை ஏற்று, அதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களால் பாதிக்கப் பட்டோருக்கு உதவும் வகையிலான திட்டங்களை அமல்படுத்த வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இதில் சிறப்புக் கவனம் அளிக்கப்பட வேண்டும்.

இந்தப் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஐ.நா. பொதுச் செயலருக்கும் இலங்கை அதிபருக்கும் இடையேயான ஒத்துழைப்பை உறுதி செய்ய முடியும் என ஐ.நா. குழு கூறியிருக்கிறது. பாதிக்கப்பட்டோருக்கு நீதியும், மரியாதையும் கிடைப்பதற்கும் இலங்கையில் அமைதி ஏற்படுவதற்கும் இந்தப் பரிந்துரைகள் உதவும் என்றும் ஐ.நா. குழு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. ஏதோ ஒரு வகையில் இலங்கையின் இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில் உலக தமிழினம் இன்று காத்திருக்கிறது.

அனைத்துலக மனித உரிமை சார்ந்த சட்டங்கள் மற்றும் மனித உரிமைச் சட்டங்களை மீறுவதற்குப் பொறுப்புக் கூறுவது என்பது வெறுமனே கொள்கை முடிவு அல்ல. அனைத்துலக மற்றும் உள்ளூர் சட்டங்களின் கீழ் அது ஒரு கடமை. இந்தப் பார தூரமான சட்ட மீறல்கள் இதற்குப் பொறுப்பானவர் களைக் கண்டறிவதற்காக காத்திராமல் விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி நிற்கின்றன. சந்தேகமற இது நிரூபிக்கப்பட்டால் சர்வதேசக் குற்ற சட்டப்படி இலங்கை அரசுக்கு தண்டனை கிடைக்கும்.

இந்தப் பரிந்துரைகளில் ஐ.நா.வும் இலங்கையும் செய்ய வேண்டியவை தொடர்பாக விரிவான விளக்கக் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. ஐ.நா. அறிக்கை கையில் கிடைத்தவுடன் அவ்வறிக்கையினை முற்று முதலாக நிராகரித்து விட்டது இலங்கை அரசு. அன்றிலிருந்து இன்றுவரை “ஐ.நா. சபை எதிர்ப்பை, ஏகாதிபத்திய எதிர்ப்பாக மாற்றிக் கொண்டிருக்கின்றன சிங்கள இனவெறி அரசு.''

“நிறுவனமயப்பட்ட இனவாத அரசுகள், இவ் வகையான சர்வதேச அழுத்தங்களை எதிர்கொள் வதற்குப் பயன்படுத்தும் கருவியாக ஏகாதிபத்திய எதிர்ப்பு இன்று மாறிவிட்டது என்பது தான் சோக மானது. மேற்குல எதிர்ப்பு என்கிற பொதுமையான சொல்லாடல் ஊடாக, தேசிய இனங்கள் மீது தாம் மேற்கொள்ளும் ஒடுக்கு முறைகளையும் பாட்டாளி வர்க்கத்தின் மீது பிரயோகிக்கும் அடக்கு முறை களையும் நியாயப்படுத்த ஆளும் இவ்வரசுகள் முனைகின்றன.''

“தேசிய இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தாம் முன்னெடுக்கும் நகர்வுகளை ஐ.நா. சபையின் நிபுணர் குழு அறிக்கை சீர்குலைப்பதாகக் கவலைப்படுகிறது இலங்கை அரசு.''

இலங்கையில் இராணுவ மயப்படுத்தப்பட்ட தமிழர் தாயகத்தில் தேசிய இன நல்லிணக்கத்தை உருவாக்க முடியாதென்கிற அடிப்படையான விடயத் தை புரிந்து கொள்ள மறுக்கின்றார்கள். சர்வதேசம் பேசும் மார்க்சிய மற்றும் மனித உரிமையாளர்கள்.

ஐ.நா. மற்றும் உலக நாடுகளை எய்ப்பதற்கும் ஏமாற்றுவதற்கும் இதன் முதல் நகர்வாக இலங்கை தனியார் போக்குவரத்து அமைச்சர் சீ.பி. இரத்தநாயக்க தலைமையில், ஐ.நா. சபைக்கும் சர்வதேச சமூகத்திற்கும் எதிராக 10 இலட்சம் கையெழுத்து வேட்டையும் தொடங்கி விட்டார். இலங்கை மக்கள் ஐ.நா. நிபுணர் குழுவின் ஆலோசனையை அறிக்கையை நிராகரிக்கிறார்கள் என்று உலகத்திற்கு காட்டுவதற்காக இப்பரப்புரை வடிவம் முன்னெடுக் கப்படுகின்றது.

“மேலும் தென்னிலங்கையிலுள்ள சிங்கள அரசியல்வாதிகளிடமிருந்து பலத்த கண்டனக் குரல்கள் ஏற்கனவே ஒலிக்கத் தொடங்கி விட்டன. முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற மனிதாபிமானப் போரின் போது மனித உரிமை மீறல்கள் நடைபெற வில்லை'' என்று விளக்கமளிக்கிறார் அஸ்கிரிய பீடாதிபதி அதிவண உடகம் புத்திரகித்த தேரர்.

புலம் பெயர் நாட்டிலுள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களிடடமிருந்து கோடிக்கணக்கில் இலஞ்சம் வாங்கியுள்ளது. இந்த நிபுணர் குழுவென்று புதிய கண்டு பிடிப்பொன்றினை உதிர்த்துள்ளார் ஜே.வி.பி. யின் முன்னாள் பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்ஸ்.

ஆனாலும் ஐ.நா. குழுவினர் அளித்துள்ள அறிக்கையில் போர்க் குற்றங்களைப் பற்றிதான் அதிகம் உள்ளது என்பதை நாம் பார்க்க வேண்டும். இது இனப் படுகொலை என்று உலக தழுவிய தமிழர்கள், மனித உரிமையாளர் கூறும் குற்றச்சாட்டு களை ஐ.நா. குழுவினர் எந்தவித கருத்தையும் கூறாததையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அதனால் ஐ.நா. குழு மீது பல்வேறு அய்யங்கள் நமக்கு ஏற்படுகிறது.

அதே நேரத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை கூறியுள்ள கருத்து நமக்கு நம்பிக்கை ஊட்டுகிறது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரில் இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து நேரில் கண்ட சாட்சியங்களும் ஆதாரங்களும் நம்பத்தக்க தகவல் களும் முழுமையான பன்னாட்டு விசாரணையின் அவசியத்தை வலியுறுத்துகிறது என்றும், அவர் மேலும் கூறுகையில் நடந்த போர் குறித்து பன்னாட்டு மனிதாபிமான சட்டங்களின் கீழ் எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆலோசனை கூற ஐ.நா. பொதுச் செயலரால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கை மனதைப் பாதிக்கும் புதிய தகவல்களுடன் உள்ளது என்றும், பன்னாட்டு மனசாட்சியை அதிர்ச்சிக்குள் ளாக்கியுள்ளது என்றும் இந்த அறிக்கை தீவிரமான நடவடிக்கைக்கு நம்மை தள்ளுகிறது என்றும் கூறியுள்ளார்.

இந்த அறிக்கைப் பற்றி அமெரிக்காவின் இல் னொய்ஸ் சட்டக் கல்லூரியின் பேராசிரியரும் மனித உரிமைப் போராளியுமான பிரான்சிஸ் பொய்ல்ட் அவர்களின் கருத்தை நாம் கவனத்தில் கொள்வது நன்று. ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ள போர்க்குற்ற ஆலோசனைக் குழுவின் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள விடயங்கள் எதனையும் சிறிலங்கா அரசு நிறைவேற்றப் போவதில்லை. அதனை சிறீலங்கா அரசு உடனடியாகவே நிராகரித்தும் உள்ளது. எனவே சிறீலங்கா அரசின் இன அழிப்பில் இருந்து தமிழ் மக்கள் காப்பாற்பற்பட வேண்டுமாயின் அதற்கு ஒரே தீர்வு தமிழீழம்தான்.''

அதேபோல் இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் பின்புலத்தில் செயற்படும் ராஜபக்சே குடும்ப ஆட்சியைத் தண்டிக்கப்பட போவதில்லை ஐக்கிய நாடுகள் சபை. அமெரிக்க அய்ரோப்பிய அரசுகளின் நோக்கமும் தண்டிப்பதல்ல. இவ்வரசுகள் தமது நலனை தெற்காசியாவில் உறுதிப்படுத்திக் கொள்வதே இறுதி நோக்கம் அதற்கான அழுத்தம் அறிக்கையின் ஊடாகப் பார்க்க முடியும். தமிழர் நலன் பேசும் சில அப்பாவி இயக்கங்கள் இந்திய அரசு இந்த சிக்கலில் தலையிட்டு தமிழர்களுக்கு நீதி பெற்று தர வேண்டும் கோரிக்கை வைக்கிறார் இவர்களை என்ன வென்று சொல்வது. இலங்கை அரசின் போர்க் குற்றம் குறித்த ஐ.நா. சபையின் அறிக்கையை வெளியிட விடாமல் தடுக்க இந்தியா துணை போவதாக பல்வேறு தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.

அதனால் இந்திய அரசும், தன்னைத் தமிழினத் தலைவர் என்று அழைத்துப் பெருமை தட்டிக் கொள்ளும் தமிழக முதல்வர் கருணாநிதி கூறுவதைப் போல், இன்னும் அறிக்கையின் முழுமையாக அதிகாரப் பூர்வமாக வெளியாகவில்லை என்று சொல்லக் கூடும் அதைவிட ஒருபடி மேலே போய் போர்க் குற்றங்களில் விடுதலைப் புலிகளும் ஈடுபட்டனர். மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தினர் என்று ஐ.நா. அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக் காட்டி நடுநிலை வகிப்பதற்குக் காரணம் தேடக் கூடும். இந்தியாவை தமிழர்கள் நம்புவது பாலுக்கு பூனை நண்பன் போன்ற கதைதான்.

ஈழத் தமிழர்கள் 1980களில் இந்தியா (இந்திரா) அரசின் நோக்கத்தையும் அதன் அரசியல் பின் புலத்தை யும் புரிந்து கொண்டிருந்தால் முள்ளிவாய்க்கால் வரை நாம் சென்று நந்திக் கடலில் வீரம் செறிந்த ஒரு சந்ததியின் போராட்டத்தைக் கரைந்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

அழிக்கப்படுவதற்கான அரசியலை தமது வியாபார அரசியல் நலன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட எந்த அரசு முன் வந்தாலும் அதற்கு எதிராக மனித உரிமையாளர்கள் சனநாயகவாதிகள் முற்போக்கு சக்திகளும் போராடுவார்கள் என்பதை உணர்த்துவது எமது கடமை. நீண்ட அழிவுகள் நிறைந்த போராட்டத்திலிருந்து குறைந்தபட்சம் இதையாவது கற்றுக் கொண்டால் இன்னொரு மூலையில் மக்கள் முடக்கப்பட்டு அழிக்கப்படுவதை தடுப்பதற்கான முன் முயற்சியாக அமையும்.

உலக அளவில் இதற்கு முன் பல இன அழிப்புகள் நடந்துள்ளது. அதில் ஆர்மேனியன் இனப் படுகொலை, கிரேக்க இனப்படுகொலை, யூத இனப்படுகொலை, கம்போடியா இனப்படுகொலை, ருவாண்டா இனப்படுகொலை, போஸ்னிய இனப்படு கொலை, குர்து மக்கள் இனப் படுகொலை, தார்ஃபூர் படுகொலைகள், இவைகளில் இலங்கைத் தமிழர் இனப்படுகொலைகளே உலக அளவில் முன்னணியில் நிற்கின்றன. இத்தகைய படுகொலைகள் மீண்டும் இடம் பெறாத ஒரு சூழலை உறுதிச் செய்வதன் மூலம் மட்டுமே. மனித குல நாகரீகம் அடைந்து விட்டது என்பதை நிரூபிக்க முடியும். அதற்கு இத்தனை உயிர் பலியா என்ற கேள்வி எழுகிறது நமக்கு.

இன்று “உலக நீதிமன்றத்தால் இனப்படுகொலை என்று உறுதிப்படுத்தப்பட்ட பொஸ்னிய படுகொலையை கோடன் வைஸ் என்பவர் முள்ளிவாய்க்கால் நிகழ்வோடு பொருத்திப் பார்க்கிறார்.'' அதாவது ஈழத்தில் நடந்த படுகொலையை போர்க் குற்றம் என்று பார்க்க முடியாது. அது இனப் படுகொலை என்கிற சொல்லை உலக நாடுகள் புரிந்து கொள்ளும் என்ற நம்பிக்கையோடு.

தமிழர்களாகிய நாம் உலக நாடுகளுக்கும் மனித நேயமுள்ள மாந்தர்களிடம் எடுத்து சொல்லுவோம். ஈழத்தில் நடந்தது போர்க்குற்றம் அல்லது. அது இனப்படுகொலை என்றும் அதன் முதல் குற்றவாளி சிங்கள இனவெறியன் ராசபக்சே. இரண்டாவது குற்றவாளி இந்திய அரசு என்பதை மீண்டும் மீண்டும் உரத்துச் சொல்லுவோம். அநீதிக்கு எதிராக ஒன்று சேருவோம். நீதிக்கான போராட்டத்தை முன்னெடுப்போம்.

Pin It