தமிழகத்தின் முதல்வரும் தி.மு.க. வின் தலைவருமான கருணாநிதி தாழ்த்தப்பட்ட மக்களுக்காக இன்று முதலைக் கண்ணீர் வடிக்கிறார்  நடுவண் அமைச்சர் ராசாவின் ஊழல் இன்று இந்தியாவின் முக்கிய செய்தியாக உள்ளது. இந்த நேரத்தில் தகத் தகாய (கதிரவன்) தங்க தலித் மகன் என்று இராசாவை புகழ்ந்து தள்ளி தன்னை தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராகவும், தம் கட்சியினர் செய்த தவறை மறைக்கவும் இன்றும் முயல்கிறார் கருணாநிதி. இவர் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைத்த துரோகத்தைப் நாம் பட்டியல் வெளியிட முடியும்.

இவருக்கு ஆட்சியில் எப்போதெல்லாம் நெருக்கடி ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களின் சம்பந்தி என்றும், ஆரியர், திராவிடர் மோசடி வித்தைகளை தன் தம்பிமார்களுக்கும் இளித்த வாய் தமிழனுக்கும் மடல் எழுதுவார். அதற்கு விளக்கவுரை எழுதவும் பரப்பவும்  பேராசிரியர் (சுப.வீ), ஆசிரியர் (வீரமணி) உள்ளனர். ஈழத் தமிழர்களை கொத்து கொத்தாய் சிங்கள வெறியர்கள் கொல்வதற்கு, இந்திய அரசும் காங்கிரசும் செய்த துரோகத்திற்கு துணை நின்வர்கள் இவர்கள்.

அப்போதெல்லாம் இவர்களுக்கு ஆரியர், திராவிடர் என்ற வேறுபாடு தெரியாது. இவர் ஆட்சியில் தாழ்த்தப்பட்டவர்கள் (அதிகாரிகள்) எப்படி எல்லாம்  நடத்தப்பட்டார்கள் என்பதை பார்ப்போம். அண்மையில் உமா சங்கர் பற்றி நமக்கு தெரியும். அவரின் சாதி சான்றிதழ் சிக்கலை பெரிதுபடுத்தி அசிங்கப்பட்டவர் தான் கருணாநிதி.

1990 இல் இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உமாசங்கர் சாதிச் சான்றிதழின் உண்மைத் தன்மையைப் பரிசீலித்து ஏற்றுக் கொண்ட பின்னரே தேர்வாணையம் பணி நியமனம் அளித் துள்ளது. தான் திட்டமிட்டுப் பழிவாங்கப்படுவதாகச் சொல்லும் உமாசங்கர், அவர் மீதான குற்றச்சாட்டு களை மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டுமெனக் கோரியிருக்கிறார்.

பல்வேறு தலித் அமைப்புகளும் ஊடகங்களும், ஜெயலலிதா உள்ளிட்ட எதிர்கட்சியினரும் உமாசங்கர் மீதான புகார் என்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையிலும் கருணாநிதி அரசு அவர் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளைப் பிடிவாதமாகத் தொடர்ந்தது. உமாசங்கர் கிறித்தவ மதத்துக்கு மாறிய தலித். ஆகவே அவர் சட்டப்படி பிற்படுத்தப்பட்டவர் என்கிறது அரசுத் தரப்பு. இது தொடர்பாகத் தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தில் முறையிட்டிருக்கிறார் உமாசங்கர்.

உமாசங்கர் தொடர்பான சாதிச் சான்றிதழ் பிரச்சினை சமூகத்தில் சாதி என்பதன் பொருள் என்ன, அது எவ்வாறு அர்த்தப்படுத்தப்பட்டு வருகிறது போன்ற வினாக்களை எழுப்புகிறது.

தலித் ஒருவர் இந்துவாக இருந்து கிறிஸ்தவராக மதம் மாறி விடும்போது சட்டப்படி அவர் தலித் அல்லாதவராகிறார். ஆனால் சமூகத்தில் அவர் தலித்தாகவே கருதப்படுகிறார். அதனால்தான் தலித் கிறிஸ்தவர்களைப் பட்டியல் இனமாகவே (எஸ்.சி) கருத வேண்டுமெனத் தலித் கிறிஸ்தவ அமைப்புகள் கடந்த 20 ஆண்டுகளாகப் போராடி வருகின்றன.

கடந்த தேர்தல் அறிக்கையில் இக்கோரிக்கையை முன் வைத்த கட்சிகளில் தி.மு.க.வும் ஒன்று. அப்படியிருக்கும் போது தி.மு.க உண்மையில் உமாசங்கருக்காகப் போராடியிருக்க வேண்டும். ஆனால் அவரைப் பழிவாங்க பார்த்தது. பார்த்துக் கொண்டே இருக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் திருநெல்வேலி அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் காளியப்பனை அத்தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ. மாலைராஜா என்பவர் தாக்க முயன்றுள்ளார். கல்லூரிகளையும் மாணவர்களையும் கையாளும் திறனுடைய கல்வியாளர் ஒருவரின் அடையாளம் சாதிச் செல்வாக்காலும் கந்து வட்டிப் பணத்தாலும் அதிகாரத்திற்குரியவராக மாறிவிட்ட அரசியல்வாதி யின் முன் சிறுத்துப் போகிறது.

அதிகாரத்தின் கருணைக்காக அரசியல்வாதியைக் கெஞ்சி நிற்கும் கல்வியாளர்களே உயர் பதவிக்கு வரும்போது அவர்களிடம் தங்களுக்கான கௌரவத்தை எதிர்பார்ப்பவர்களாக அரசியல்வாதிகள் மாறி விடுகிறார்கள். தமிழகத்தின் பெரும்பான்மை யான துணைவேந்தர்களும் பல்கலைக் கழகப் பேராசிரியர்களும் ஆளும் கட்சியினரால் நியமிக்கப் படுகையில் அவர்களைப் பாராட்ட, கௌரவிக்க விதி மீறிய முன்னுதாரணங்கள் ஏற்படுத்தித் தருகின்றனர்.

துணைவேந்தர் தலித் என்பதால் மட்டும் இது சாதி சம்பந்தப்பட்டது என்று சொல்லவில்லை. ஆனால் அவர் தலித் என்பதும் இங்கு முக்கியம். திமுக மாலை ராஜாவைக் கட்சியை விட்டு நீக்கவோ, கண்டிக்கவோ செய்யாது. மறவர் என்னும் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வைக் கண்டித்துக் கல்வித் துறையைக் காப்பாற்றி ஆகப் போவது என்ன?'

இவ்விடத்தில் துணைவேந்தர் மறவர் சாதியாக இருந்து தலித் எம்.எல்.ஏ. ஒருவர் அவரைத் தாக்குவது பற்றி நாம் கற்பனையும் செய்ய முடியாது.

1970 களில் திமுக தலித்துகளுக்கான நிதியை வேறு வழிகளில் செலவழிக்கிறது என்று சொன்னபோது சத்திய வாணிமுத்து வெளியேற்றப்பட்டார். அவர் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தபோது சத்தியவாணிமுத்துவுக்கு எதிராக முதன் முதலாகச் சென்னை மாவட்டத்தில் தலித் வகுப்பைச் சேர்ந்த இளம்பரிதி என்பவரைத் திமுக முன்னிறுத்தியது.

இப்போது உமாசங்கரைப் பணிநீக்கம் செய்த அதேவேளையில் கிறிஸ்துதாஸ் காந்திக்குத் தலைமைச் செயலாளர் பொறுப்பு அளித்துள்ளது. மேலும் மத்திய அமைச்சர் ஆ. ராசா மீதான ஸ்பெக்டராம் ஊழல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டபோது அவரது தலித் அடையாளத்தைக் கேடயமாக்கினார் கருணாநிதி.

உமா சங்கருக்கு மறுக்கப்பட்ட தலித் அடையாளம் ஊழல் கறை படிந்த அமைச்சர் ஆ. ராசாவுக்குப் பொருந்துவது எவ்வாறு? ராசாவின் தலித் அடையாளம் தலித்துகளுக்காகப் பயன்படுவதை விடக் கருணாநிதி குடும்பத்திற்குப் பயன்படுகிறது. உமாசங்கரின் அடையாளம் கருணாநிதி குடும்பத்தாருக்குப் பயன்படாமல் தலித்துகளுக்குப் பயன்படுகிறது. இங்கேதான் ஆ.ராசா ஆசீர்வதிக்கப் படுவதும் உமாசங்கர் பழிவாங்கப்படுவதும் நடக்கின்றன.

திமுக அமைச்சர் சுரேஷ்ராஜன் மீது எஸ்சி/ எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தேவை என்ற கோரிக்கை எழுந்தபோது அவர் திராவிட இயக்கத்தவர் என்பதை மட்டுமே கருணாநிதி சுட்டிக் காட்டினார்.

திராவிட இயக்கம் இல்லாத உத்திரப் பிரதேசத்தில் மாயாவதி என்ற தலித் பெண் முதல்வராக வர முடிவதும் திராவிட இயக்கம் செல்வாக்குப் பெற்றுத் திகழும் தமிழகத்தில் பாப்பாப்பட்டியிலும், மேலவளவிலும் தலித் ஒருவர் பஞ்சாயத்துத் தலைவராக முடியவில்லை என்பவையே நிதர்சனங்கள்.

திராவிட அடையாளத்தைப் பயன்படுத்துவது கருணாநிதியின் ஒருவகைத் தந்திரமே. கடவுள், மனுதர்மம், இந்து மதம் போலவே நாத்திகம், சமூக நீதி, திராவிடம் கூடச் சாதியைக் கடந்தவையாக இருந்துவிடவில்லை, கருணாநிதியின் தாழ்த்தப் பட்டோரின் மீதான பாசம் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

Pin It