கடந்த இரண்டு மாதங்களாக ஈழத் தமிழர்களை பகடைக்காயாக வைத்து நடைபெறும் அரசியல் நாடகத்தின் அடுத்த கட்டம் ஆரம்பம் ஆகியுள்ளது. இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் தமிழர்களை குண்டுவீசி பூண்டோடு அழிக்கும் சிங்கள ராணுவத்தை, இந்திய அரசு போர் நிறுத்தம் செய்யுமாறு வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றக் கோரி தமிழக அரசின் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் நின்று வலியுறுத்தி ஏறத்தாழ 2 மாதங்கள் நிறைவு பெற்றாலும் ஈழத்தில் நிலைமை மாறவில்லை. ஒரு பயனும் இல்லை. சிங்கள ராணுவம் கருமமே கண்ணாக தமிழினத்தை பூண்டோடு அழித்துக் கொண்டிருக்கிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தமிழகம் முழுவதும் ஓரணியில் திரண்ட நிலையில் தமிழக அரசின் சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. அதன் முடிவில் இலங்கையில் சிங்கள ராணுவம் போரை நிறுத்த மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் அவ்வாறு 2 வாரத்திற்குள் போர் நிறைவேற்றப்படாவிட்டால் தமிழகத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா என்றும் முடிவெடுக்கப்பட்டது.

அதன் பின்பு விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினார்கள் என்று கூறி வைகோ, சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மறுபக்கம் கொட்டும் மழையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அதன் பின்பு ராஜபக்ஷே டெல்லி வருகையின் பொழுது போர் நிறுத்தம் சாத்தியமில்லை என்று கூறிவிட்டார். பிரணாப் முகர்ஜி சென்னை வந்து தமிழக முதல்வரைச் சந்தித்து பேசிய பின்பு கலைஞர் பேச்சு வார்த்தை திருப்தி என்று கூறி ராஜினாமா மிரட்டலை கை விட்டார். ஈழத் தமிழர்களுக்கான நிவாரண நிதி வசூலில் இறங்கினார்.

இவ்வாறு போர் நிறுத்தம் இல்லாவிட்டால் ராஜினாமா என்று ஆரம்பித்த கோரிக்கை அதற்குப் பிறகு நிவாரண வசூலில் முடிந்தது. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸோ விடுதலைப் புலிகள் விடுதலைக்கு போராடும் இயக்கம் என்று கூற ஜி. கே. மணியோ மறுத்தார். ஓட்டு வாங்குவதற்கு தமிழக மக்களிடம் கையேந்தும் மார்க்சிஸ்ட்கள் ராஜினாமா பற்றி டெல்லி மேலிடம் தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறிவிட்டனர். ஈழத் தமிழர் ஆதரவு தமிழகத்தில் அதிகரிக்கவே எங்கே மக்கள் தற்பொழுதைய ஆட்சிக்கு எதிரான மனநிலையில் இருந்து மாறிவிடுவார்களோ என்று ஜெயலலிதா மக்களைத் திசை திருப்ப தினமும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து அறிக்கைவிட்டார். ராஜபக்ஷேவின் நண்பர்களான காங்கிரஸ் எம். எல். ஏ. க்களோ குறுக்குச் சால் ஓட்டினர்.

இப்படித் தமிழக அரசியல் கட்சிகள் பல்வேறு குரலில் ஏற்ற இறக்கங்களுடன் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த, சிங்கள ராணுவமோ முன்னிலும் மூர்க்கமாக தமிழர்களைக் கொன்று குவிக்கிறது. அதற்கு ஏற்றாற் போல் மத்திய அரசு கள்ள மவுனம் சாதித்து வருகிறது. தமிழக அரசியல் கட்சிகளின் மிரட்டலை மத்திய அரசு ஒரு பொருட்டாகவே கருதாதற்குக் காரணம், தமிழக அரசியல் கட்சிகளைப் பற்றி நன்கு அறிந்திருப்பதுதான். பதவி சுகத்தை அனுபவிக்கும் கட்சிகள் ஈழத் தமிழர்களுக்காக ராஜினாமா செய்யும் அளவுக்கு செல்லமாட்டார்கள் என்னும் பெரு நம்பிக்கை இருக்கிறது. ஆகவே நமது ஆட்சிக்கு பாதிப்பு இல்லை என்று கருதுகிறது. மேலும் இலங்கைத் தமிழர் பிரச்னை தீருவதற்கு அங்குள்ள தமிழர்களைக் கொல்வதே தீர்வு என்னும் இலங்கை அரசின் முடிவு சரியானது என்றும் அதன் மூலமே இந்திய இறையாண்மைக்கும் பங்கம் வராது என்று கருதுகிறது. அதனை ஒட்டியே தமிழர்களை கொல்லும் சிங்கள அரசுக்கு ஆயுதங்களை வாரி வழங்குகிறது. தேவையான நிதி உதவிகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குகிறது.

இந்த உண்மைகள் அனைத்தும் கலைஞருக்கும் மற்றும் பதவி வகிக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் தெரியும். ஆனாலும் இன்னமும் மீதமிருக்கும் தமிழ் உணர்வின் காரணமாகவும், இங்கு எழுந்துள்ள ஈழத் தமிழர் ஆதரவின் காரணமாகவும் பதவியைத் தாண்டி சில நேரம் குரல் கொடுக்கிறார். அதுவும் தெரிந்ததினால்தான் மத்திய அரசு அமைதியாக இருக்கிறது.

போர் நிறுத்த கோரிக்கை பலனளிக்காத நிலையில் கலைஞர் இரண்டாம் முறையாக அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். கலைஞர் ஈழத் தமிழர்களுக்கு உதவுகிறாரோ இல்லையோ சென்ற முறை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தின் விளைவாக விலைவாசி உயர்வு, மின்வெட்டு போன்ற பிரச்சனைகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்ப உதவியது. இந்த முறை மீண்டும் கூட்டணியில் பா. ம. க. வைச் சேர்க்க உதவியது. இந்த முறை டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்த குழுவிடம் விரைவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பிரணாப் முகர்ஜி செல்வார் என்று உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத் தலைவர்களுக்கே இல்லாத அக்கறை ஈழத் தமிழர்கள் மீது பிரணாப் முகர்ஜிக்கு எப்படி இருக்க முடியும்? ஆகவே அவர் கண் துடைப்பாக என்றாவது ஒருநாள் கொழும்பு செல்லக் கூடும். சிங்கள அதிபருடன் விருந்து உண்ணக் கூடும். பெயரளவுக்கு பேசி முடிக்க கூடும். அதன் பின்பு சிங்கள அரசு விடுதலைப் புலிகளை மட்டுமே தாக்குகிறோம். தமிழக மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்ற கூட்டறிக்கை சம்பிரதாயமாக வெளியிடப்படலாம். சரத் பொன்சேகா போர் நிறுத்தம் கோரும் தமிழக அரசியல் தலைவர்களை கோமாளிகள் என்று திமிராக பேசியுள்ள சூழ்நிலையில் இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம். அல்லது இப்படியே இழுத்தடித்து இன்னும் ஒரு மாதம் கழித்தோ அதற்குப் பிறகோ போர் நிறுத்தம் என்று இலங்கை அரசு அறிவிக்கலாம்.

அப்பொழுது கலைஞர் போர் நிறுத்த அறிவிப்பு நமது வெற்றி என்று அறிக்கை விடுவார். சோனியாவுக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதுவார். முரசொலியில் கவிதை எழுதுவார். பெரியார் அறக்கட்டளைத் தலைவர் மி. கி. வீரமணி கலைஞருக்குப் பாராட்டு தெரிவித்து விழா எடுப்பார். ஆனால் அப்பொழுது ஈழத்தில் தமிழினம் பெருமளவு அழிக்கப்பட்டிருக்கும்.

 

 

 

Pin It