sinthanaiyalan logo 100

தொடர்பு முகவரி: 19, முருகப்பா தெரு, சேப்பாக்கம், சென்னை - 05.
தொலைபேசி: 044-28522862, 94448 04980
ஆண்டுக் கட்டணம்: ரூ.120, வாழ்நாள் கட்டணம்: ரூ.1000

எரிமலை வெடிப்பில் இருந்து உருவான நாடு மாரிசியசு (Mauritius).

ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்கிழக்கில் 2000 கி.மீ. தொலைவில் இந்துமாக் கடற்பகுதியில் இருக்கும் தீவுக் கூட்டங்களில் ஒன்று மாரிசியசு. இதன் மொத்த நிலப்பரப்பு 2040 சதுர கி.மீ. 787 (சதுர மைல்).

மாரிசியசு தீவை முதலில் போர்த்துக்கீசியர் அடுத்து, டச்சுக்காரர்கள், பின்னர் பிரெஞ்சுக்காரர்களும் ஆண்டு வந்தனர். 1767-1810 காலஅளவில் பிரான்சு நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, காரைக்கால்-பாண்டிச்சேரியில் இருந்து தமிழர் கள் மாரிசியசுக்கு கூலித் தொழிலாளிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர்.

தமிழர்களோடு இந்தியாவின் பிற பகுதியிலிருந்து சுமார் 5 இலட்சம் கூலித்தொழிலாளர்கள் கொண்டு சென்றார்கள். மாரிசியசு - பிரிட்டனில் இருந்து 1968 சுதந்தரம் பெற்றது. 1992 குடியரசு ஆனது.

மாரிசியசு இன்றைய மக்கள் தொகை சுமார் 13 இலட்சம். இவர்களில் 1.15 இலட்சம் பேர் தமிழர்கள். இவர்களில் பெரும்பாலோர்க்குத் தமிழ் மொழியைப் படிக்கவும் எழுதவும் தெரியும்; ஆனால் பேசவராது. 7000 தமிழர்கள் மட்டுமே தமிழை இயல்பாகப் பேசுகின்றனர்.

தமிழர்கள் எண்ணிக்கையில் குறைந்து இருந்தாலும் தமிழுணர்வில் ஒப்பற்று விளங்குகிறார்கள். இதனால் மாரிசியசு மத்திய வங்கி வெளியிடும் நாணயத் தாள் களில் பண மதிப்பு தமிழிலும் - தமிழ் எண் களிலும் இடம் பெற்றுள்ளது. 25, 50, 100, 200, 500, 1000 என பணத் தாள்களும் 20, 10, 5, 2, 1 மற்றும் சில் லறைகள் நாணயங்களாகவும் வெளியிடப்படுகிறது.

மாரிசியசு வெளியிடும் இந்த பணத் தாள்களில் தமிழ்மொழிக்கும் தமிழ் எண்களுக்கும் சிறப்புச் சேர்க்கும் வகையில் இடம்பெற்று இருக்கின்றன.

25 ரூபாய் பணத் தாளில்                 உரு

50 ரூபாய் பணத் தாளில்                 ச0

100 ரூபாய் பணத் தாளில்               க00

1000 ரூபாய் பணத் தாளில்             க000

என ரூபாய் மதிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் எண்களைத் தமிழகத்திலேயே பலரும் முறையாக அறிந்து கொள்ளாத நிலையில், மாரிசியசு பணத் தாள்களில் தமிழ்மொழியும், தமிழ் எண்களும் இடம்பெற்று இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

மாரிசியசில் ஏறத்தாழ 100 ஆரம்பப் பள்ளிகளில் தமிழ் மொழி கற்பிக்கப்படுகிறது. முருகன், விநாயகர், அம்மன் என 125 கோவில்கள் தமிழர் வழிப்பாட்டிற்காக உள்ளன.

மாரிசியசு மக்களின் மொழிகளாக ஆங்கிலம், பிரெஞ்சு, கிரியோல், இந்துஸ்தானி, தமிழ் உள்ளன.

ஆசியக் கண்டத்திற்கு வெளியே ஆப்பிரிக்கக் கண்டத்தில் 70 விழுக்காடு இந்திய வம்சாவளி கொண்ட நாடாகவே மாரிசியசு உள்ளது.

இயற்கை வளம் கொண்ட நாடு. ஆண்டுக்கு 5 இலட்சத் திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சென்றுவரும் மாரிசியசு, சுயக் கட்டுப்பாடும், நேர்த்தியான கட்டமைப்பும், ஒழுக்கத் திற்கும், நாணயத்திற்கும் முன்னுரிமையும், போக்குவரத்துக் கான சாலைவிதிகளும், அன்பான மக்களும், அச்சமில்லா சுற்றுலாத் தளமாகவும் சிறந்து விளங்குகிறது.

கரும்பு விவசாயத்தால் ஆண்டுக்கு 625 இலட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது. தேயிலை, புகையிலை, உருளை பயிர்வளம் கொண்ட நாடு.

கம்பளப் பின்னலாடை, ரம் உற்பத்தி, தேயிலைத் தயாரிப்பு உள்ள மாரிசியசு பவளப் பாறைகள் அதிகம் கொண்ட கடலால் சூழப்பட்ட கடற்கரைகள் கொண்ட நாடு.

தமிழர்களின் உழைப்பிற்கும் - உயர்வுக்கும் மதிப்பும் - மகிழ்ச்சியும் அளிக்கும் நாடு, மாரிசியசு.

Pin It

இன்றைய நிலையில், 99 விழுக்காட்டு பேர் தேர்தலில் போட்டியிட விரும்புவது, நாம் கட்டும் வரிப்பணத்தைத் திட்ட மிட்டுத் திருடவே!

இவர்கள், ஏன் தேர்தலுக்குக் கோடிக்கணக்கில் செலவு செய்து சட்டமன்ற - பாராளுமன்ற உறுப்பினராக ஆக வேண்டும்? மனதைத் தொட்டுச் சொல்லட்டும் - எனக்கு இவ்வளவு சொத்து, பணம், கடன் உள்ளது; என்மீது எந்தக் குற்றமும் இல்லை; எனக்கு அரசியல் சட்டம் தெரியும்; நான் மக்களுக்கு நலத் திட்டங்களைச் செய்வேன்; சட்டமன்றத்தில் உறுதிமொழி எடுத்ததைக் கடைப்பிடிப்பேன்; எனக்கு எந்தப் பாதுகாப்பும் வேண்டாம் என்று கூறுவார்களா?

பச்சைத் தமிழன் மாண்புமிகு காமராசர் அவர்கள் கட்டிய சாத்தனூர் அணைக்குப் பிறகு எரையூர் ஏரிக்குப் பிறகு, தமிழகத்தை ஆண்ட கட்சிக்காரர்கள் எவரும் அணைகட்ட வில்லை. நீர் வழிகளில் சிறு, சிறு தடுப்புகளைக் கட்டி நீரைத் தேக்கியது தவிர, வேறு ஒன்றுமில்லை. காமராசர் காலத்தில் இருந்த ஏரிகள், குளங்கள், நீர்நிலைகள் பங்கு போடப்பட்டு, அவருக்குப் பின்னர் ஆண்டவர்கள் விற்றுக் கொள்ளையடித்துள்ளனர்.

நிலத்தடி நீரையும், விவசாயத்தையும் காப்பாற்றாத கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள்! ஆக்கிரமிப்புகளை அகற்றி மீண்டும் ஏரிகளைக் காப்பாற்றி மீட்டுத் தரும் கட்சிகளுக்கு வாக்களியுங்கள்!

என் சாதியை இழிவுபடுத்திவிட்டான்; என் சாதிக்காரனைக் கொன்றுவிட்டான் என்று கூறும் கட்சிகளையும் விரட்டுங்கள்! சாதிப் பாகுபாடு இன்றி, மக்கள் நலன் மட்டுமே செயல் படுத்துவேன் என்று கூறும் கட்சிகளை முன்னிலைப்படுத் துங்கள். சாராயம் கொடுத்துச் சிந்தனையைச் சிதைத்தவர் களையும், திரைப்படங்களில் நல்லவர்போல் நடித்த கூத்தாடி களையும் தேர்வு செய்யாதீர்கள்!

இப்பொழுது உள்ள அரசியல் கட்சிகள் வேலை தரவும், இடமாற்றம் செய்துதரவும் கையூட்டு இல்லாமல் செய்தார் களா? வாக்காளர்களே கையூட்டு இல்லாத அரசை அமைக்க அரசியல் சார்பற்ற அமைப்புகள் கூறும் கருத்தினைக் கேளுங்கள்.

வாக்குப் போடப்போகும் நீங்கள், வாக்கை விற்காமல், மது அருந்தாமல், அற்பப் பரிசுகளை (மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சிப் பெட்டி, மின்விசிறி, ஆடு, மாடு, பன்றி) இவற்றை வாங்காமல் சிந்தித்து வாக்களியுங்கள். சிந்திக்க வில்லையென்றால், உங்கள் தலையில் நீங்களே மண்ணைப் போட்டுக் கொண்டதற்கு ஒப்பாகும்.

Pin It

தமிழ்நாட்டுத் தலைவர்களே! மாணவ மணிகளே! தீரச் சிந்தியுங்கள்! உடனே செயல்படுங்கள்!

காற்றும் நீரும் வெப்பமும் இயற்கை தரும் பெருங்கொடைகள்.

காற்றை மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற அளவு, செயற்கையாக உண்டாக்க முடியாது.

அதேபோல் நீரையும் பயன்பாட்டுக்கு வேண்டிய அளவில், செயற்கையாக உண்டாக்க முடியாது.

நிலத்தில் விழும் ஒவ்வொரு துளி நீரும் மண்ணில் உறிஞ்சிப் போவது இல்லை; நிலத்தடியில் இறங்கிப் போவதும் இல்லை.

நிலத்தில் விழும் மழைத்துளி நீர் முதலில் பள்ளத்தை நோக்கிப் பாய்ந்து ஓடுகிறது. அப்படி ஓடும் நீரை அவ்வப்போது ஊர்மக்கள் தேக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதை மக்களே முன்வந்து செய்ய வேண்டும். அப்படித் தேக்கி வைக்கப்படுவது தான் ஊருணி; ஊர்க்குளம். குடிநீருக்கும், குளிக்கவும் அதை நாம் பயன்படுத்துகிறோம், அது ஊர்ப் பொதுப் பயன்பாட்டுக்கு.

அந்த எளிய பணியைத் தமிழ்மக்கள் செய்யவில்லை; இந்தியப் பொது மக்கள் எல்லோரும் செய்யவில்லை.

2017 பிப்பிரவரி முதலே தமிழகம் குடிநீரின்றித் தத்தளிக்கிறது.

1967 முதல் 2017 வரை இரண்டு திராவிடக் கட்சிகளும் மக்களை மக்க ளாகக் கருதி ஆளவில்லை.

ஊர்க்குளங்களைக் கூடக் காப்பாற்றத் துப்பில்லாத - மனமில்லாத - பொறுப் பில்லாத இந்த இரண்டு திராவிடக் கட்சிகளின் ஊழல் மன்னர்களும் - காவிரி காய்ந்தால் - கருநாடகத்தைக் குறிவைத்து, அதைச் சுற்றி நின்று இலாவணி பாடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்களும் அரசு செய்ய வேண்டியதைக் கோருவதில் - சிக்கலை அல்லது பிரச்சனையை மட்டும் சார்ந்து நிற்காமல், கட்சி வழிசார்ந்து - பிரிந்து, பிரிந்து நிற்கிறார்கள்.

கருநாடக மொழி மக்கள் காவிரிச் சிக்கலில் கட்சிகளின் வழி பிரிந்து நிற்பது இல்லை; காவிரி நீர்ப்பங்கீடு சிக்கலோடு அவர்கள் ஒன்றித்து விடுகிறார்கள்; தத்தம் கட்சியை இதில் ஒதுக்கி வைத்து விடுகிறார்கள்.

கருநாடகக் கட்சிகளின் தலைவர்களும் காவிரிச் சிக்கலில் கட்சி வழியில் தனித்தனியே நின்று பேசுவது இல்லை; ஒன்றிணைந்து உள்ளூரில் செயல் படுகிறார்கள்; பிரதமரையும் மற்ற அமைச்சர்களையும் ஒன்றிணைந்து சென்று பார்க்கிறார்கள்.

ஆனால் தமிழகத் தலைவர்கள் அப்படி இல்லையே! அது முறைதானா?

எடுத்துக்காட்டாக, காவிரிச் சிக்கலில், 1974 முதல், தமிழர்களுக்கு, இந்திய அரசு அநீதி செய்கிறது.

1977 முதல் 1987 வரை உள்ள காலத்தில் முதல மைச்சர் எம்.ஜி.ஆரும், எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர் கருணாநிதியும், 57 தமிழக நாடாளு மன்ற உறுப்பினர்களையும் உடனழைத்துக் கொண்டு போய் அவ்வப்போதைய பிரதமர்களைப் பார்த்து, காவிரி பற்றி அழுத்தம் தந்தார்களா? ஏன் அப்படிச் செய்யவில்லை?

1989 முதல் 2011 வரை மாறி, மாறி முதலமைச்ச ராக வந்த மூத்த தலைவர் கலைஞரும், செய லலிதாவும் ஒன்றிணைந்து, 57 தமிழக நாடாளு மன்ற உறுப்பினர்களுடன் தில்லிக்குப் போய்ப் பிரத மரைப் பார்த்தார்களா? அப்படி அவர்கள் பார்க் காதது - கடமை தவறுதல் அல்லவா?

இந்த இரண்டு ஊழல் கட்சிகளுக்கும் மாற்றாக இங்கு எந்தக் கட்சியும் தலைதூக்க முடியாமல் இருந்திட-தமிழக மக்களும், கட்சிகளின் தலைவர் களும், மாணவர்களும், இளைஞர்களும் தத்தம் கட்சி வழியில் பிரிந்து நின்று, சிக்கல் வழியில் ஒன்று சேராமல்-தமிழ்மக்கள் தலையில் மண்ணை வாரிப் போட்டதுதான் மிச்சம்!

நீர்ப் பஞ்சம் ஏன்? எதனால்?

தமிழ்நாட்டில் உள்ள சிறிய, பெரிய 41,000 ஏரிகளில் - ஒரு பத்தாயிரம் ஏரிகளையாவது, கடந்த 50 ஆண்டு களில் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாய்க்கால்களை விளம்பி, முழுக் கொள்ளளவுக்கும் தூர்வாரிச் செப்பனிடாதது ஏன்? ஏன்? நீர்ப்பிடிப்புக்கு வழிகோலாதது ஏன்? ஏன்? அதுவே உண்மையான காரணம்.

நீர்வளம் குறைவாக உள்ள தமிழ்நாட்டில் - இந்த ஆண்டில் கோடை வெப்பம் தாங்காமல் சுருண்டு விழுந்து 2017இல் சில தமிழர்களாவது சாவார்கள்.

குடிநீரும், போதிய உணவும் இன்றித் தமிழ் மக் களும்; தீனியும் நீரும் இன்றி ஆடு மாடுகளும் 2017இல் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் சாகப் போகிறார்கள். இது உறுதி.

அய்யகோ! தமிழ்ப் பெரியோர்களே!

சிக்கல் வழி நில்லுங்கள்!

பிரச்சனை வழியில் சிந்தியுங்கள்! நில்லுங்கள்!

கட்சி வழியில் சிக்கல்களை அணுகாதீர்கள்!

ஊழல் கட்சிகளை ஓட ஓட விரட்டுங்கள்!

இனியொரு விடுதலைப் போருக்கு ஆயத்தம் ஆகுங்கள்!

Pin It

 

 

சிந்தனையாளன் ஏப்ரல் 2017 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.

 

 

Pin It

vellore 350ஆர்.எஸ்.எஸ்.இன் தலைவராக முப்பது ஆண்டுகள் இருந்தவரும் அதன் தத்துவத் தந்தையாகக் கருதப்படுபவ ருமான எம்.எஸ்.கோல்வால்கர், “இசுலாமியர்கள் எந்த உரிமையும் கோராமல் இரண்டாந்தரக் குடிமக்களாக இருப்பதற்கு ஒப்புக்  கொண்டால் இந்தியாவில் வாழ்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்” என்று சொன்னார். வாழ்வின் பெரும்பகுதியை ஆர்.எஸ்.எஸ்.இல் பிரச்சாரகராகச் செலவிட்ட பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் மூன்று ஆண்டு களுக்குள் இசுலாமியர்கள் கிட்டத்தட்ட இரண்டாந்தர குடிமக்கள் நிலைக்குத் தள்ளப்பட்டு அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். அதனால்தான் உத்தரப் பிரதேசத்தில் இருபது விழுக்காட்டின ராக உள்ள முசுலீம்களில் சட்டப் பேரவைத் தேர்தலில் 403 இடங்களில் ஒரு இடத்தில் கூட முசுலீமை வேட்பாளராக பா.ச.க. நிறுத்தவில்லை.

இப்போது இந்திமொழி பேசாத-இந்தியாவின் பெரும்பான் மையினராக உள்ள பிறமொழி பேசும் மக்களை, “நீங்கள் இந்திமொழியை ஏற்கவேண்டும், இந்தியைக் கற்க வேண்டும்; இந்தி மொழியில்தான் பேசவும் எழுதவும் வேண்டும்; இல்லாவிட்டால் நீங்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத் தப்படுவீர்கள்” என்று நரேந்திர மோடி தலைமையிலான நடுவண் அரசு அறிவித்துள்ளது.

இந்தி ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு 2011ஆம் ஆண்டு அதன் அறிக்கையை மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது நடுவண் அரசிடம் அளித்தது. இந்தியைத் தீவிரமாகத் திணிக்கும் இந்தப் பரிந்துரைகளால் கடும் எதிர்ப்பு ஏற்படும் என்று எண்ணிய மன்மோகன் ஆட்சி அந்த அறிக்கையைக் கிடப்பில் போட்டது. “அஞ்சாநெஞ்சன்” நரேந்தரமோடி அந்த அறிக்கையை ஒரு புதையல் போல் கண்டெடுத்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, அதன்படிச் செயல்பட  வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு ஆணையிட்டுள்ளார். நாடாளுமன்ற நிலைக்குழுவில் இருந்த 30 பேர்களில் 28 பேர் இந்தி மொழி பேசும் மாநிலத்தவர் கள். அவர்கள் பரிந்துரைத்த 117இல் 110 பரிந்துரைகளுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார்.

இது குறித்து நடுவண் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் உள்ள விவரங்கள் : பள்ளிக் கல்வித் திட்டத்தில் இந்தி கட்டாயப் பாடமாகச் சேர்க்கப்பட வேண்டும். முதல் கட்டமாக சி.பி.எஸ்.இ. மற்றும் கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் 10ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயப் பாடமாக வைக்கப்படும்.

குடியரசுத்  தலைவர், நடுவண் அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள், குறிப்பாக யாருக்கெல்லாம் இந்தி தெரியுமோ, அவர்கள் இனி நாடாளுமன்றத்திலும் பொது விழாக்களிலும் இந்தியில் தான் பேசவேண்டும்.

இந்தி மொழி பேசாத மாநிலங்களில் அமைந்துள்ள பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்களில் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளில் இந்தியில் பதிலளிப்பதற்கான வாய்ப்பைக் கட்டாயம் ஏற்படுத்த வேண்டும்.

விமானங்களில் வழங்கப்படும் செய்தித்தாள்கள் மற்றும் பருவ இதழ்கள் 50 விழுக்காடு இந்திமொழியில் இருக்க வேண்டும். விமானப் பயணச் சீட்டுகள், தொடர் வண்டியின் பயணச் சீட்டுகளில் இந்தி கட்டாயம் இடம் பெற வேண்டும்.

அரசு தரும் விளம்பரங்களில் இந்திக்கே முதன்மையான இடம் அளிக்கவேண்டும்.

நடுவண் அரசின் தேர்வுகளை எழுதுவதற்கு இந்தியைக் கற்றிருக்க வேண்டும் என்கிற பரிந்துரைக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க  மறுத்துவிட்டார். ஆயினும் இனி நடுவண் அரசின் தேர்வுகளை எழுத கட்டாயம் இந்தியைக் கற்றிருக்க வேண்டும் என்கிற நடைமுறை இருக்கும் என்பது உறுதி. ஆட்சிமொழிச் சட்டத்தை நடைமுறைப்படுத்தாத அதிகாரிகளுக்குத் தண்டனை வழங்கப்படும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டத்தில் 17ஆம் பாகத்தில் விதி 343 முதல் 351 வரை இந்தி ஆட்சிமொழி அல்லது அலுவல் மொழி என்பது பற்றி மட்டுமே கூறப்பட்டுள்ளன. 1965 முதல் இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக இருக்கும் என்கிற அரசமைப்புச் சட்ட ஏற்பாட்டைத் தமிழர்கள் கடுமையாக எதிர்த்ததால் பிரதமராக இருந்த நேரு இந்தி பேசாத மக்கள் விரும்புகின்றவரையில் ஆங்கிலமும் இணை ஆட்சி மொழியாக நீடிக்கும் என்று வாக்குறுதி அளித்தார்.

இந்த அரசமைப்புச் சட்ட விதிகளுக்கு எதிராக நரேந்திர மோடியின் ஆட்சி இந்தி பேசாத மாநிலங்களில் எல்லாத் துறைகளிலும், நிலைகளிலும் இந்தி இருக்கவேண்டும் என்று அறிவித்திருப்பது, இந்தி பேசாத மாநிலங்களின் தேசிய மொழி களை, பண்பாட்டை, நாட்டின் பன்மைத்துவத்தை அழிப்ப தாகும். இந்தி பேசாத மக்கள் தங்கள் கனவுகளைக் கூட இந்தியில் காணவேண்டும் என்பது போன்ற இந்த இந்தித் திணிப்பை முறியடிப்போம். இல்லையேல் “இந்தி”ச் சிறை யின் பூட்டை உடைத்து நமக்கான தனிச்சுதந்தரத் தமிழ் நாட்டை அமைப்போம்.

Pin It

உட்பிரிவுகள்