sinthanaiyalan logo 100

தொடர்பு முகவரி: 19, முருகப்பா தெரு, சேப்பாக்கம், சென்னை - 05.
தொலைபேசி: 044-28522862, 94448 04980
ஆண்டுக் கட்டணம்: ரூ.120, வாழ்நாள் கட்டணம்: ரூ.1000

இருபது ஆண்டுகளுக்கு முன்பு பொழுதுபோக்கிற்கும் வருமானத்திற்கும் கீரியும் சண்டை போடப் போகின்றது, வாங்க! வாங்க! என்று வித்தைக்காரன் கூப்பிட்டு, கடைசி வரைக்கும் வித்தை காட்டாமல், சிலரை மடக்கி உங்களுக்கு தோசம் உள்ளது; இந்தக் கயிறு கட்டினால் இதுபோகும்; இந்த நேரத்தில் இதைப் பயன்படுத்தாதீர்கள் என்று கூறி, மந்திரக் கயிறு வியாபாரம் செய்வான். பின்னர், பயந்த முகங்களைக் கண்டு அவர்களைக் குறிவைத்து, “உங்களுக்குக் குடும்பத்தில் பிரச்சனை; சடங்கு செய்தால் சரியாகி விடும்” என்றுகூறி, அதிகத் தொகை வாங்கிக் கொண்டு, சடங்கு செய்வார்கள். ஆனால், இதுபோன்ற வித்தைக் காரர்கள் செயலால் எந்தப் பயனும் இல்லை. எனினும் வித்தைக்காரன் பிழைப்பு நன்றாக இருக்கும்.

ஆனால், இன்று நம் நாட்டு மக்களை ஆளும்  மத்திய, மாநில அரசுகள் அனைத்தும் மக்கள் நலன் பற்றிக் கவலைப்பட்டதில்லை. நதிநீர் பிரச்சனை, நல்ல மருத்துவம், சமச்சீர் கல்வி, குடிநீர் மக்களுக்கு எளிதில் கிடைக்க வழிசெய்யவில்லை.

மருத்துவ வியாபாரம், கல்வி வியாபாரம், குடிநீர் வியாபாரம் தொடங்கிவிட்டனர். இவை நடுத்தட்டு மக்கள் வரை  உள்ளவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. வரு வாய்க்கு வழியில்லை என்று மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்துகின்றது. சிந்தித்தால் நல்லவர், கெட்டவர்; நல்லது, கெட்டது தெளிவாகிவிடும். சிந்திக்காமலிருக் கவே சமச்சீர் கல்வி தரப்படவில்லை. மது மட்டும் அரசே ஏற்று நடத்துகின்றது.

மத்திய அரசு ஆட்சிக்கு வருமுன் வெளிநாட்டில் கணக்கில் காட்டாத பணம் 20 ஆயிரம் கோடி உள்ளது. அதை இந்தியாவுக்குக் கொண்டு வருவோம். ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் அந்தப் பணத்தைப் பகிர்ந்து கொடுப் போம். அதனால், அனைவரும் வங்கிக் கணக்கை வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் பணம் போடப்படும் என்ற ஆசை காட்டினார்கள். வெளி நாட்டில் கணக்கில் வராத பணம் வந்திருந்தால், மக்கள் கணக்கில் பணம் வந்திருக்க வேண்டும். இது மக் களை ஏமாற்றிய ஒரு வித்தை.

உள்நாட்டில் கணக்கில் வராத பணத்தைக் கண்டு பிடிப்போம் என்று கூறி, அம்பானி உறவினரை ரிசர்வ் வங்கி ஆளுநராக்கிவிட்டார், மோடி இனி பணம் என்ற பரிமாற்றமில்லை. அம்பானி கொடுக்கும் பணப்பரி மாற்றும் கணினிமயமான இயந்திரத்தின் வழியாகப் பணம் மாற்றப்படும்.

வாக்குப் போட்ட உங்களை, ஒரு நாளைக்கு இவ் வளவு தான் பணம் எடுக்க வேண்டும்; அளவுக்கு அதிகமாக எடுக்க, செலவு செய்ய உரிமை இல்லை என்கிறது அரசு. உரிமை இல்லாத மக்கள் வாழும் நாடு எப்படி ஒரு சுதந்தர நாடாக இருக்கும்? சிந்திக்கவும்.

பணம் என்று அச்சிட்ட தாள் ஒரே நொடியில் வெற்றுத் தாளாக்கப்பட்டது. இப்படி விரைந்து முடிவெடுக்கும் அரசு, கல்வியில் ஏற்றத்தாழ்வை அகற்றவில்லை; நதிநீர் பிரச்சனைகளை தீர்க்கவில்லை; மதுவை ஒழிக்கவில்லை. இப்படி செயல்படுவதால் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதத்தன்மை வெளிப்படு கின்றது.

சபை நாகரிகம் தெரியாத-சட்ட திட்டங்களைப் படிக்காத, கண்டதைத் தின்னும் பன்றி போல் செயல் படுபவர்களை, இனியும் இம்மக்கள் தேர்ந்தெடுத்தால், தானே தன் தலையில் மண்ணைப் போட்டுக் கொண்ட தற்குச் சமமாகும்.

சிந்தனை வளத்தைத் தூண்டிச் செயல்படுங்கள்! செயல்படுங்கள்!

Pin It

கோயில்களில் பெண்களைப் பொட்டுக் கட்டு வதைத் தடுக்கச் சட்டம் செய்ய வேணுமாய் திருமதி. முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் சட்டசபைக்கு அனுப்பப்பட்டிருக்கும் சட்டத்தைச் சர்க்கார் நமக்கு அனுப்பி, அதன்மீது நமது அபிப்பிராயம் கேட்டிருக் கின்றார்கள்.

இதற்காகச் சர்க்கார் பொதுஜனங்களின் அபிப்பிராயம் கேட்பது என்பது கோமாளித்தனம் என்பதே நமது அபிப்பிராயம். ஏனெனில், கோவில்களில் கடவுள்கள் பேரால் பெண்களுக்குப் பொட்டுக்கட்டி அவர்களையே பொதுமகளிர்களாக்கி நாட்டில் விபசாரித்தனத்திற்குச் செல்வாக்கும் மதிப்பும், சமய சமூக முக்கிய தானங்களில் தாராளமாய் இடமும் அளித்துவரும் ஒரு கெட்டவழக்கம் நமது நாட்டில் வெகுகாலமாய் இருந்து வருகின்றது. அன்றியும், நாளாவட்டத்தில் இது ஒரு வகுப்புப்கே உரியது என்பதாகி, இயற்கையுடன் கலந்த ஒரு தள்ளமுடியாத கெடுதியாய் இந்தநாட்டில் நிலைபெற்றும்விட்டது.

ஒரு நாட்டில் நாகரிகமுள்ள அரசாங்கமாகவாவது அல்லது நாட்டின் சுயமரியாதை யையோ, பிரஜைகளுடைய ஒழுக்கத்தையோ, நலத் தையோ, கோரின அரசாங்கமாகவாவது ஒன்று இருந்தால் இந்த இழிவான கெட்ட பழக்கம் கடவுள் பேராலும், மதத்தின் பேராலும், சமூகத்தின் பேராலும், தேசிய வழக்கத்தின் பேராலும் இருந்துவர ஒருகண நேரமும் விட்டுக் கொண்டு வந்திருக்காதென்று சொல்லுவோம்.

ஆனால், நமது இந்தியாவில் வெள்ளைக்கார ஆட்சி குடிபுகவும் நிலைபெறவும், நம் நாட்டுச் சுயநலப் பார்ப்பனர்கள் உளவாளிகளாகவும், உதவியாகவும் இருந்து வந்ததால், அப்பார்ப்பனர்களுக்கு அனுகூல மாக வெள்ளைக்காரர்களும் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருந்ததால், அந்தப் பார்ப்பனர்கள் சொல்லுகின்றபடியே நடந்து (வெள்ளைக்காரர்கள்) தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தில் பட்டுவிட்டார்கள்.

இந்தக் காரணங்களால் அவர்கள் பார்ப்பனர் களுக்கு விரோமாய்ச் சீர்திருத்தத் துறையிலாவது, மனிதத்தன்மைத் துறையிலாவது இதுவரை ஒருவித முற்போக்கான காரியமும் செய்யாமலே இருக்க வேண்டியவர்களாகிவிட்டார்கள். ஆனால், இப்போது கொஞ்சகாலமாய் அப்பார்ப்பனர்களின் தந்திரத்தையும் சூழ்ச்சியையும் கண்டுபிடித்து அவர்களது யோக்கிய தைகளை அடியோடு வெளியாக்கி சீர்திருத்தங்களை உத்தேசித்து நாமும் வெள்ளைக்காரர்களை மிரட்டக் கூடிய சமயம் மிரட்டியும், ஆதரிக்கக்கூடிய சமயம் ஆதரித்தும் பார்ப்பனர்களின் செல்வாக்கை ஒழித்து நமது சக்தியையும் தீவிர ஆசையையும் காட்ட ஆரம் பித்துவிட்டதால், இப்போது ஏதோ சிறிது அளவுக்காவது சர்க்காரார் சீர்திருத்தத் துறையில் நமது இஷ்டத்திற்கும் இணங்கும்படியான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

இந்த நிலைமையின் பலனேதான் இப்போது நமது கொள்கைகள் சிலது நாட்டில் பிரச்சாரம் செய்ய வும் செல்வாக்குப் பெறவும் இடம் ஏற்பட்டதும், சட்ட சபையில் இதுசமயம் ஒரு முடிவைப் பெற்றுத் தீர வேண்டிய அவசியம் ஏற்பட்டுப் பொதுஜன அபிப் பிராயத்திற்கு வரநேர்ந்ததுமாகும்.

நிற்க. இப்போது திருமதி. டாக்டர் முத்துலட்சுமி அம் மாள் அவர்களால் சென்னை சட்டசபைக்கு அனுப்பப் பட்டிருக்கும், பொட்டுக்கட்டுவதை ஒழிக்கும் இந்த மசோதாவானது, வெகுகாலமாகவே, ஜனப்பிரதிநிதிகள் என்பவர்களால் பொதுக்கூட்டங்களிலும், பொது மகா நாடுகளிலும் கண்டித்துப் பேசப்பட்டிருப்பதுடன், இம் மாதிரி ஒரு சட்டம் செய்ய வேண்டுமென்று இந்திய சட்டசபைக் கூட்டங்களிலும் அடிக்கடி பிரதாபிக்கப்பட்டும் வந்திருக்கின்றது. இவ்வாறெல்லாமிருக்க, இச்சட்டத் திற்குப் பொதுஜன அபிப்பிராயத்தை அறிய விரும்பு வானேன்? என்பது விளங்கவில்லை. இந்த நாள்பட்ட-கொடிய சமூகக் கொடுமையை ஒழிக்க யாருக்கும் ஆட்சேபணையோ, எதிர் அபிப்பிராயமோ இருக்கவே முடியாது, இந்தியத் தலைவர்கள் கூறியிருப்பதுபோல், தேவதாசி என்று ஒரு வகுப்பு இருப்பது இந்து சமுதாயத்திற்கே இழிவானது மல்லாமல், இந்து மதத்திற்கே பெரும் பழியுமாகும்.

ஒரு தனிப்பட்ட பெண்ணுக்கு ஏற்படும் இழிவு, பெண்ணுலகிற்கே ஏற்பட்டதாகுமாகையால் இவ்வழக் கம் பெண்களின் அந்த ஸ்தையும், கவுரவத்தையும் பெரிதும் பாதிக்கக் கூடியதாயிருக்கிறது. அன்றியும் ஒரு குறிப்பிட்ட சாதியையோ, சமூகத்தையோ, விபச்சாரத்திற்கு அனுமதி கொடுப்பதும், பின்னர்  அவர்களை இழிந்த சமூகமாகக் கருதுவதும் பெரும் சமூகக் கொடு மையாகும். சிறு குழந்தைகளிலிருந்தே இத்தகைய துராசார வழிகளில் பயிற்றுவிப்பது ஜனசமூக விதிகளையே மீறியதாகும். எனவே இப்படிப்பட்ட நிலை மையில் இனி இதைப்பற்றி பொது ஜனங்களுடைய அபிப்பிராயத்தைத் தெரிய வேண்டிய அவசியமே இல்லை.

பொதுஜனங்கள் எந்தவிதத்திலாவது இந்தச் சட்டத்தை ஆட்சேபிப்பார்களா என்று எண்ணுவதும் ஒன்று முட்டாள்தனமாகவோ அல்லது யோக்கியப் பொறுப்பற்றத் தன்மையாகவோதான் இருக்க வேண்டும். ஏனெனில் இந்து சமூகத்தில் கடவுள் பேரால், மதத்தின் பேரால் விபச்சாரிகளை எற்படுத்த வேண்டும் என்று எந்த சமூகத்தாரோ, தேசத்தாரோ கருதுவார்ளானால், அவர்களைப் போல் காட்டுமிராண்டிகளோ கெட்டவர் களோ இருக்கவே முடியாது.

மற்றபடி எந்த சமூகமாவது இம்மாதிரியான தொழில் தங்கள் வகுப்புக்கு இருக்க வேண்டுமென்று கேட்பார்களேயானால் அவர்களைப்போல் சுயமரியாதையற்றவர்களும் இழிகுலமக்களும் வேறு யாரும் இருக்க முடியாது.

- “குடிஅரசு”, 23.03.1930

Pin It

இந்தியத் துணைக்கண்டத்தில், 1947 முதலே மிகப்பெரிய மாநிலமாக விளங்குவது, உத்தரப் பிரதேசம்.

ஏற்கெனவே உத்தரகாண்ட் பகுதியின் காங்கிரசுப் பார்ப்பனத் தலைவர்கள் தான், 1967 வரை யில், உ.பி. மாநில முதல்வராகப் பொறுப்புக்கு வந்தனர். கடைசியாக உ.பி. முதல்வராக இருந்தவர் என்.டி. திவாரி.

உத்தரகாண்ட், உ.பி.யிலிருந்து, 1991 போராட் டத்துக்குப் பிறகு ஒரு தனி மாநிலமாகப் பிரிந்தது. அது மிகச்சிறிய மாநிலம். அங்கு பார்ப்பனர்கள் கணிசமான அளவில் உள்ளனர். மற்ற மேல்சாதிக் காரரும் அதிகம் பேர். பிற்படுத்தப்பட்டோரும் பட்டியல் வகுப்பினரும் மிகக் குறைவானவர்கள்.

ஆனால் உத்தரப்பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்டோர் அதிக எண்ணிக்கையி னர். பட்டியல் வகுப்பினர் 21% பேர்.

உ.பி. பிற்படுத்தப்பட்டோரில், 2000க்குப் பிறகு, மிகப் பிற்பட்டோர் என்கிற கஷ்யாப் போன்ற சாதியினர், உள்ளூர யாதவ், லோதி, கொய்ரி (அ) குஷ்வாகா, குர்மி முதலான - பணக்காரப் பிற்படுத்தப்பட்டோரை வெறுக்கத் தலைப்பட்டனர் என்பதை-அனைத்திந்திய ஒடுக்கப்பட்டோர் பேரவை, மற்றும் மா.பெ.பொ.க. வினர் 7 பேரும் இடஒதுக்கீடு பரப்புரையை 30 நாள்கள் மேற்கு உ.பி. 30 மாவட்டங்களில் மேற்கொண்டபோது, நேரில் கண்டுணர்ந்தோம்.

2000ஆம் ஆண்டு தேர்தலில் பாரதிய சனதாக் கட்சி வெற்றி பெற்றிட - பாபர் மசூதி இடிப்பும், பிற்பட்டோர் - மிகப் பிற்பட்டோரிடையே இருந்த பகையும்; பட்டியல் வகுப்பினர் - பிற்படுத்தப்பட்டோரிடையே அப்போதிருந்தே நிலவிய உள்பகையும், உ.பி. முஸ்லிம்கள் இரு அணிகளாகப் பிரிந்து நின்ற நிலைமையும் பாரதிய சனதாவின் வெற்றிக்கு உதவின.

கன்ஷிராம் தலைமையிலிருந்த பகுஜன் சமாஜ் கட்சி உ.பி.யில் - இந்துக் களில் பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்டோரையும், 21% உள்ள பட்டியல் வகுப்புகளில் பெரும்பான்மையாக உள்ள ஜாடவ் (அ) சமார் என்கிற சக்கிலிய ரையும், பட்டியல் பழங்குடியினரையும் இணைப்பதில் ஓரளவு வெற்றி பெற்றது.

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், 1948இல் விரும்பியபடி, ஒரு வலிமை வாய்ந்த “ஒடுக்கப்பட்டோர் கூட்டணி” அப்போது அமைந்தது. அதனால் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ் வாதக்கட்சி என்கிற லோகியா சோசலிசக் கட்சிகளின் ஆட்சி - மாறி மாறி, 2002 முதல் 2016 வரை உ.பி.யில் ஆட்சி அமைக்கிற வாய்ப்பைப் பெற்றன.

இந்த இரண்டு கட்சிகளும் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் உ.பி.யில் அடியோடு தோற்றன.

பாரதிய சனதாக் கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியது.

அத்துடன் 2014, 2015, 2016ஆம் ஆண்டுகளில் பாரதிய சனதாக் கட்சி, உ.பி.யில் திட்டமிட்டு இந்துத் துவா கொள்கைகளையும் முசுலீம்கள் பேரில் இந்துக் களை ஏவிவிடும் கொள்கைகளையும் சிற்றூர் தொடங்கி, மாவட்ட ஆட்சி வரை பா.ச.க. இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., மகளிர் அணி, மாணவர் அணி ஆகிய இவற்றின் இந்துமத வெறிப் பரப்புரை மூலம் வலிமை யாகக் கட்டி வளர்த்தன.

சமாஜ்வாதக் கட்சி தந்தை-மகன், பெரியப்பன்-சிற்றப்பன் அணிகளாகப் பிரிந்து, அதைச் சிற்றூர் முதல் மாநில மட்டம் வரை வளர்த்தெடுத்தனர்.

“பகுஜன்” சமாஜ், “சர்வஜன்” சமாஜ் கட்சி ஆகி, பார்ப்பனர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், யாதவ், லோதிக்கு எதிரான பிற்படுத்தப்பட்ட சாதிகளையும், முசுலீம்களையும் இணைத்துக் கொள்வதில் நாட்டம் செலுத்தியது. பார்ப்பன வேட்பாளர்களையும், முசுலீம் வேட்பாளர்களையும் சம எண்ணிக்கையில் முறையே 80 + 80 = 160 வேட்பாளர்களைக் களத்தில் இறக்கியது. பார்ப்பனர், சத்திரியர், வைசியர் வாக்குகளையும் அவ்வகுப்பினரின் பணத்தையும் பெரிதாக நம்பியது.

ஆனால், பார்ப்பனர், சத்திரியர் மற்றும் யாதவ் - லோதிக்கு எதிரான மிகப் பிற்பட்டோர் அணியினர் 2017 சட்டமன்றத் தேர்தலில் பாரதிய சனதாக் கட்சியின் பக்கம் சென்றுவிட்டனர். இது பாரதிய சனதாவுக்கு மிகப்பெரிய வலிமையாக அமைந்துவிட்டது.

இந்திய அரசியலில், காங்கிரசுக் கட்சியை இந்திரா காந்தி 1969 முதல் கையாண்டவிதம்-உள்கட்சி மக்கள் நாயக முறைக்கு எதிரானது.

அனைத்திந்திய காங்கிரசுத் தலைவர் மாநிலக் காங்கிரசுக் கமிட்டிகள், மாவட்டக் காங்கிரசுக் கமிட்டிகள் அனைத்துக்கும் நியமனம் மூலம் தலைவர், செய லாளர், பொருளாளர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மாறாக, எல்லாம் அமர்த்தப்பட்ட - (நியமனப் பதவிகளாக) பதவி களாக மாறின. எந்த மாவட்ட-வட்ட மட்டத்திலும் உள்கட்சி சனநாயகம் இல்லை. அதனால் காங்கிரசுக் கட்சி (அ) கட்சி உள்கிளைகள் வேர், சிற்றூர் அளவில் செத்துப் போயிற்று.

1969 ஆகத்தில் ஏற்பட்ட இந்திராகாந்தி-கருணாநிதி ஒப்பந்தம், தமிழகக் காங்கிரசைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டது. இனி தமிழகத்திலோ, இந்தியாவிலோ எந்த மட்டத்திலும் சோனியா காந்தி தலைமையில் உள்ள காங்கிரசால், வெற்றி பெற முடியாது.

1967 வரையில், எதிர்க்கட்சி எதுவும் தலையெடுக்க முடியாமல் ஆட்சிபுரிந்த காங்கிரசு, 1969 முதலே சிற்றூர் கிளை முதல் மாநிலக் கிளைகள் வரையில் மக்கள் நாயக முறையில் கட்சியை வளர்த்திருக்க வேண்டிய காங்கிரசு - 1984 வரையிலுமோ, 1991 மே வரையிலுமோ, 1991 மே மாதத்திற்குப் பிறகு நெடுங் காலமான 2016 வரையிலுமோ அப்படிக் கட்சி அமைப்பு களைக் கட்ட முடியாத காங்கிரசு, இனி வானுக்கும் மண்ணுக்கும் எகிறினாலும் கடைத்தேற முடியாது.

இன்றைய உ.பி. சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசு கற்க வேண்டிய பாடம் இது.

மேதை அம்பேத்கர் 1948 சொன்ன ஒரு அரசியல் கொள்கை என்ன?

“அரசதிகாரத்தைக் கைப்பற்றுவோம். உண்மையான ஒரே அரசு தில்லியிலுள்ள இந்திய அரசு. அரசதிகாரம் அதனிடம் தேங்கிக் கிடக்கிறது. இந்தியாவில் 85 விழுக் காடு மக்களாக உள்ள - 1) பிற்படுத்தப்பட்டோர், 2) பட்டியல் வகுப்பினர், 3) பழங்குடியினர், 4) மதச் சிறுபான்மையினர் இந்நான்கு வகுப்பினரும் ஒன்று சேர்ந்தால், அந்த அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும். இம்மக்களை இவர்களின் தலைவர்கள் ஒன்றுசேருங்கள்” என அறைகூவல் விடுத்தார். எனவே

இது, கன்ஷிராமின் குறிக்கோளாக இருந்தது; ஆனால் மாயாவதியின் குறிக்கோளாக இல்லை.

இது முலாயம்சிங்கின் குறிக்கோளாக இருக்க முடியாது.

இந்த இரு அணியினரும் இனி தலைதூக்குவது கடினம்.

பீகார் நிலையும் அப்படியே. அங்கு குடும்ப வாரிசு அரசியல் தலைதூக்கிவிட்டது.

தமிழக நிலையும் அப்படியே. தமிழகம் பற்றித் தனியே எழுதுவோம். நிற்க.

உ.பி. தேர்தலுக்குப் பின்னர் :

1. உண்மையான மக்கள் நாயக அமைப்புகள் (Democratic Organisations or Parties).

2. ஊரறிந்த பொதுவுடைமைக் கட்சிகள் (Known Communist Parties).

3. இந்தியாவில் அரசை நிறுவ விரும்பும் மார்க்சிய - புலேயிய - அம்பேத்கரிய - லோகியா சிந்தனையுள்ள அமைப்புகள்.

இவர்கள் எல்லோரும் தீவிரமாகச் சிந்தித்து முடி வெடுத்துச் செயல்பட்டாலொழிய இந்திய உழைக்கும் மக்களுக்கு விடுதலை ஒருநாளும் வராது.

இனி, பா.ச.க. பற்றி ஆர அமரச் சிந்திப்போம்.

1. 30.01.1948இல் காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அ) காந்தியார் பாக்கிஸ்தானுக்குத் தரவேண்டிய பங்குத் தொகையை இந்திய அரசு உடனே தரவேண்டும் என்றார்.

ஆ) சென்னை மாகாணப் பிரதமர் (Premier) ஓமாந் தூரார், முதன்முதலாகப் பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வியிலும் வேலையிலும் 1947 நவம்பரில் தனி ஒதுக்கீடு அளித்தார். பெரியார் கோரியதன் பேரில், ஓமந்தூரார் செய்தார்.

அதை காந்தியார் ஆதரித்தார். தமிழ்நாட்டுப் பார்ப் பனரை நேரில் அழைத்துக் கடிந்து கொண்டார்.

இனி காந்தியார் இருப்பது நமக்கு ஆபத்து என்று தமிழ்நாட்டுப் பார்ப்பனர் நினைத்தனர்.

தமிழ்நாட்டுப் பார்ப்பனர் நினைத்ததை கோட்சே செய்து முடித்தான்.

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், 1948 பிப்ரவரியில், பூனாவில் இரகசியமாகக் கூடிப் பேசி ஒரு முடிவெடுத்தார்கள்.

என்ன முடிவு அது?

“கி.பி.2000இல் இந்தியாவில் இராமராஜ்யம் அமைக்க வேண்டும். அதற்கு ஏற்ற ஒரே கருவி இந்திய அரசு. இந்த இந்திய அரசை 2000இல் ஆர்.எஸ்.எஸ். கைப் பற்ற வேண்டும்.

அதற்கு ஏற்ற வழி சமூகத்தின் எல்லாப் பிரிவுகளி லும் (all winggs) ஊடுருவ வேண்டும் என்று முடி வெடுத்தனர்.

2000இல் அரசு அமைந்தது - பாரதிய சனதா கூட்டணி அரசு.

2014இல் ஆர்.எஸ்.எஸ். அரசு அமைந்தது, சுதந்தர மாக.”

ஆர்.எஸ்.எஸ். எதற்காக 1925இல் அமைக்கப் பட்டதோ, அந்த இலக்கை 2014இல் அடைந்துவிட்டது.

அதற்கு நல்ல ஊன்றுகோலாக - கைத்தடியாக, 11.3.2017 உ.பி. சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்துவிட்டன.

அம்முடிவுகள் யாவை?

உ.பி. சட்டமன்ற மொத்த இடங்கள் 403.

கட்சிவாரி வெற்றி பெற்ற இடங்கள் :

1. பாரதிய சனதாக் கூட்டணி (312+13)   325

2. சமாஜ்வாதி + காங்கிரசு          54

3.  பகுஜன் சமாஜ் (எ) சர்வஜன் சமாஜ்   19

4.  மற்ற கட்சிகள்                                     5

 மொத்தம்         403

இவ்வளவு பெரிய அளவில் வாக்குகளை அள்ளிக் குவிக்க எப்படி முடிந்தது?

அமித் ஷா, பா.ச.க.வின் தேசியத் தலைவர்.

அவர் ஓராண்டுக்கு முன்னரே உ.பி.யில் ஒரு வாக்குச்சாவடிக்கு (Booth) 10 முதல் 21 பேர்கள் வீதம் வாக்குச் சேகரிப்போரை அமர்த்திவிட்டார்.

உ.பி.யில் மொத்த வாக்குச்சாவடிகள் 1,47,401 ஆகும். இவற்றில் வாக்குச் சேகரிக்க 13,50,000 ஆள்கள் அமர்த்தப்பட்டிருந்தனர்.

அதனால்தான் உ.பி.யில் பதிவான மொத்த வாக்கு களில், பாரதிய சனதா கூட்டணி 41.4 விழுக்காடு வாக்கு களை வாரிக்குவிக்க முடிந்தது.

இவ்வளவு பெரிய பட்டாளத்துக்கு எத்தனை ஆயிரம் கோடி ரூபா செலவாயிற்றோ!

மோடிக்கும், ஷாவுக்கும் தான் அது தெரியும்!

இதற்கு, மேலும் வலுச்சேர்த்தது, உத்தரகாண்ட் தேர்தல்.

உத்தரகாண்ட் சட்டமன்ற மொத்த இடங்கள் 70

கட்சிவாரி வெற்றி பெற்ற இடங்கள்

1.            பாரதிய சனதா            57

2.            காங்கிரசு         11

3.            சுயேச்சைகள்  2

                மொத்தம்         70

சென்னை மாகாணச் சட்டமன்றத் தேர்தலில் - 1952இல் மொத்த இடங்கள் 375.

1.            காங்கிரசு         150

2.            கம்யூனிஸ்டுக் கட்சி   69

3.            தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 19

4.            மற்ற கட்சிகள் 137

ஆனால் சி. இராசகோபாலாச்சாரியார், காங்கிரசு7 முதலமைச்சர் ஆனார்.

இது மாகாண முறைஅரசில் அன்று இருந்த நிலை.

I.          26.12.1925இல் தோற்றுவிக்கப்பட்ட இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் 2017ஆம் ஆண்டைய நிலை என்ன?

II.         26.12.1926இல் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம், இந்திய அரசில், 2017இல் - எந்த வடிவத் தில், என்ன நிலை பெற்றுள்ளது? ஏன் அந்நிலை?

எல்லோரும் இவற்றுக்கு விடை காணுவோம், வாருங்கள்!

Pin It

 

 

சிந்தனையாளன் மார்ச் 2017 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.

 

 

Pin It

என் முன்னுள்ள பணிகள் மூன்று ஆகும்.

என் உடல்நிலையில், எனக்கு 11.3.2017 சனி மாலையில் அய்யம் ஏற்பட்டது.

11-அன்று, கிருட்டிணகிரியில் தோழர் குயில்தாசன் அவர்கள் விருப்பப்படி, பிற்பகலில் 3 மணிநேரம் “வகுப்பு வாரி விகிதாசார இடப்பங்கீடு” பற்றி வகுப்பு நடத்தினேன். என்றுமே இல்லாத களைப்பை அன்று உணர்ந்தேன்.

நேரே அவருடைய மகள் வீட்டுக்குச் சென்று, குயில் தாசன் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு, இரவு 7 மணிக்குப் புறப்பட்டு, வாணியம்பாடி, மா.பெ.பொ.க. செயலாளர் நா. மதனகவி இல்லம் அடைந்தேன். உணவுக்குப்பின், நானும் அவரும் ஒரு விடுதியில் உறங்கினோம்.

12.3.2017 பகலில் அம்பத்தூர் அறக்கட்டளையை அடைந்தேன்.

உடல் சோர்வை நன்கு உணர்ந்தேன்.

வழக்கம்போல், தோழர் அ. மதிவாணன் அவர்கட்கும் அவருடைய துணைவியார் ராணி அம்மையார், அவர்கட்கும் தொலைப்பேசி செய்து, அடுத்த நாள் 13.3.2017 திங்கட்கிழமை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்துவிடும்படி வேண்டினேன். அவர்கள் மருத்துவ மனையில் நேரில் பேசிவிட்டு, 14.3.2017 செவ்வாய் காலை 8 மணிக்குச் சேர்த்துவிட ஏற்பாடு செய்தனர்.

எப்போதும்போல் வேண்டிய பொருள்களுடன் கலச. இராமலிங்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். தோழர் அ. மதிவாணன் உள்ளக மருத்துவரிடமும் (R.M.O) முதியோர் நலப்பிரிவு தலைமை மருத்துவரிடமும் எங்களை அழைத்துச் சென்று, எல்லா விவரங்களையும் என்னிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு, 14.3.2017 செவ்வாய் 1.00 மணிக்கு, பணம் செலுத்தும் படுக்கை உள்ள 246 - பிரிவில் (ward) அறை எண்.ஐ-இல் சேர்த்தனர்.

21.3.2017 வரை எட்டு நாள்கள் அவ்வறையில் தங்கிக் கொண்டு, எல்லா நோய்களுக்குமான ஆய்வுகளைச் செய்து கொள்ள அ. மதிவாணன், ராணி மதிவாணன், முத்துஇலட்சுமி, கலச. இராமலிங்கம், த. புகழேந்தி, முதுகலை மாணவர் அ. அழகன் ஆகியோர் துணைநின்றனர்.

1. செப்பமான ஆய்வுகளை 5 நாள்கள் மருத்து வர்கள் மேற்கொண்டனர். நீரிழிவு, மூத்திரக் கோளாறு தவிர எந்த நோயும் இல்லை என்று விவரமாகப் பதிவு செய்தனர்.

2. என் வாய்மொழியைக் கொண்டு 92 வயதுக்கு மீறி, நான் அலைவதும், படிப்பதும், எழுதுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்று தலைமை மருத்துவர் அறிவுறுத்தி னார். அது என்னால் தவிர்க்கப்பட வாய்ப்பு இல்லை என்று மருத்துவர்களிடமே தெரிவித்தேன். அதில் நான் உறுதியாக உள்ளேன். என் முன்னுள்ள பணிகள் அப்படிப்பட்டவை என நான் திடமாக நம்புகிறேன்.

3. மூக்குப்பொடி போடுவதைக் கைவிட, மருத்துவர்கள் அறிவுறுத்தினர். 64 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த பொடியை, 17.3.2017 பிற்பகல் நிறுத்தி விட்டேன். அதனால் என் உடலில் இன்றுவரை புற்றுநோய் அறிகுறி ஏதும் இல்லை என்பதையும் இப்போது உறுதிசெய்து கொண்டேன். இது, நான் பெற்ற பெரிய திருத்தப்பாடு ஆகும்.

என் முன்னுள்ள பணிகள் மூன்று ஆகும்.

1. முதலாவது, “சிந்தனையாளன்” இதழை நிலைப்படுத்திட எல்லாம் செய்தல்;

2. அறக்கட்டளை செப்பமாக நடத்தப்படவும், தத்துவப் பயிற்சி வகுப்பு தொடர்ந்து நடத்தப்படவும் எல்லாம் செய்தல்;

3. பெரியார் வரலாறு எழுதி முடிக்கப்பட எல்லாம் செய்தல்.

இவற்றுக்கே இன்னும் மூன்று ஆண்டுகள் நான் நலமாக இருக்க வேண்டும்; இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். இதற்கு இயக்கத்தார் ஆவன செய்யுங்கள். என் குடும்பத்தினர் என்றும்போல் துணைபுரிவர்.

Pin It

உட்பிரிவுகள்