மய்ய அரசின் பணியாளர்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) பெற்றுள்ள பங்கு 1980-2008க்கு இடைப்பட்ட 28 ஆண்டுகளில் கூடியுள்ளதா? குறைந்துள்ளதா?

மய்ய அரசில் பட்டியல் பழங்குடிகள், பட்டியல் வகுப்புகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் ஆகிய மூன்று பிரிவினர்க்குரிய இடஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துகின்ற, கண்காணிக்கின்ற துறை பணியாளர் மற்றும் பயிற்சித்துறை ((Department of Personnel and Training)). இந்தத் துறை 2014 ஆம் ஆண்டில் Brochure on Reservation For SCs, STs and OBCs in Services எனத் தலைப்பிட்டு A4 பக்க அளவில் 82 பக்கம் அடங்கிய ஒரு சிறு நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது.

இந்தச் சிறு நூலில் 9 ஆம் பக்கத்தில் பத்தி எண்.1.14 இல் Impact of Reservation அதாவது இடஒதுக்கீட்டின் தாக்கம் என்னும் சிறு தலைப்பின் கீழ் சிறு குறிப்புடன் ஒரு பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அந்தச் சிறு குறிப்புரையின் தமிழாக்கமும் பட்டியலும் இங்கே வெளியிடப்படுகிறது.

இட ஒதுக்கீட்டின் தாக்கம் ( Impact of Reservation)

reservation table“மய்யஅரசின் பணிகளில் பழங்குடிகளும் பட்டியல் வகுப்புகளும் A, B, C மற்றும் D பிரிவுகளில் பெற்றுள்ள பங்கு அதிகரித்துள்ளது. நாடு விடுதலை அடைந்தபோது, பட்டியல் வகுப்புகள் மற்றும் பழங்குடிகள் ஆகிய பிரிவுகள் பெற்றிருந்த பங்கு சொற்ப எண்ணிக்கையிலேயே இருந்தது. கிடைத்துள்ள தகவலின்படி பட்டியல் வகுப்புகளின் பங்கு 1.1.1965இல் A, B, C மற்றும் D மற்றும் பிரிவுகளில் முறையே 1.64%, 2.82%, 8.88% மற்றும் 17.75% ஆகும். இது 1.1.2008இல் முறையே 12.5%, 14.9%, 15.7% மற்றும் 19.6% ஆக அதிகரித்துள்ளது.

“அதே போன்று பழங்குடிகளின் பங்கு A, B, C மற்றும் D பிரிவுகளில் 1.1.1965இல் பெற்றிருந்த பங்கு முறையே 0.27%, 0.34%, 1.14% மற்றும் 3.39% ஆகும். இது 1.1.2008இல் முறையே 4.9%, 5.7%, 7.0% மற்றும் 6.9% ஆக அதிகரித்துள்ளது. 

பட்டியல் வகுப்புகள் மற்றும் பழங்குடியின வகுப்புகள் ஆகிய இரண்டு பிரிவினர் பெற்றிருந்த பங்கு 1.1.1965இல் முறையே 13.17% மற்றும் 2.25% ஆகும். இது 1.1.2008இல் முறையே 17.5% மற்றும் 6.82% ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு ஆண்டுகளில் பட்டியல் வகுப்புகளும் மற்றும் பழங்குடி களும் பணிநிலை வாரியாகப் பெற்றிருந்த பங்கு இங்கே விழுக்காட்டு அளவில் மேலே பட்டியலில் தரப்பட்டுள்ளது.”

பணியாளர் & பயிற்சித்துறை கொடுத்துள்ள (முன் பக்கத்தில் உள்ள) பட்டியலில் நாம் கவனிக்கப்பட வேண்டிய செய்தி என்னவென்றால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு 1990 இல் இடஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்டு அது 1994இல் நடப்புக்கு வந்தது. இக்கட்டுரையில் எடுத்தாளப்பட்டுள்ள சிறு நூல் 2014இல் வெளியிடப்பட்டுள்ளது. அந்நூலின் முகப்புப் பக்கம்தான் மேலே கட்டத்தில் படமாக வைக்கப்பட்டுள்ளது. இடையில் 20 ஆண்டுகள். சிறு நூலின் தலைப்பாக பட்டியல் வகுப்புகள், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் என்று கொடுத்துவிட்டு பட்டியல் வகுப்புகள் மற்றும் பழங்குடிகள் ஆகிய இரண்டு பிரிவுகளின் புள்ளி விவரங்களை மட்டும் வெளியிட்டு விட்டு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் பற்றிய புள்ளி விவரங்களை வெளியிடாதது ஏன்? இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது எதனால்? புள்ளி விவரம் பெறவும் தரவும் அமைச்சகத்துக்கு மனம் இல்லையா? இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்கள் அனாதைகள்! யார் கேள்வி எழுப்பப் போகிறார்கள் என்கின்ற அசட்டுத் தனமா?

மண்டல் குழு அறிக்கையில் மய்ய அரசின் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகள், பட்டியல் வகுப்புகள் மற்றும் பழங்குடிகள் ஆகிய மூன்று பிரிவினரும் பெற்றுள்ள பங்கு A, B, C, Dஆகிய பணிநிலை வாரியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதே தன்மையிலான புள்ளி விவரம் கேட்டு 2008 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் T.K.ரங்கராசன் கேள்வி எழுப்ப, நாடாளுமன்றப் பணிகளின் இணை அமைச்சர் நாராயணசாமி 18.11.2008இல் அந்தப் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளார். அந்தப் புள்ளி விவரம் Voice of OBCஎன்னும் மாத ஏட்டிலும் சிந்தனையாளன் மாத ஏட்டிலும் வெளியிடப்பட்டுள்ளன.

பணியாளர் மற்றும் பயிற்சித் துறையால் வெளி யிடப்பட்டுள்ள சிறு நூலில் வெளியிட்டிருக்க வேண்டிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் பற்றிய அந்தப் புள்ளி விவரம் விழுக்காடு அளவில் என்னால் இங்கே வெளியிடப்படுகிறது.

reservation table 1

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களின் பங்கு :

A பிரிவுப் பணிகளில் மட்டும் 0.7% கூடியுள்ளது.

B பிரிவுப் பணிகளில் 6.6% குறைந்துவிட்டது.

C, D மற்றும் E பிரிவுப்பணிகளில் 11.9% குறைந்து விட்டது.

A, B, C, D மற்றும் E ஆகிய பிரிவுப் பணிகளில் 5.6% குறைந்துவிட்டது.

நான் ஒரு சாதாரண எளிய குடிமகன். எனக்குக் கிடைத்துள்ள, நான் சரியானது என்று கருதுகின்ற புள்ளி விவரங்களின் அடிப்படையில் 1980க்கும் 2008க்கும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் பற்றிய பட்டியலை ஒப்பிட்டு வெளியிட்டிருக்கிறேன். இந்தப் பட்டியல் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும்.

முதலாவதாக SC, ST & OBC என நூலுக்குத் தலைப் பிட்டுவிட்டு உள்ளே OBC புள்ளி விவரம் வெளியிடப் படாதது ஏன்? என்ற கேள்வியை எழுப்ப வேண்டும்.

இரண்டாவதாக இங்கே வெளியிடப்பட்டுள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் பற்றிய 1980 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளின் புள்ளி விவரம் சரியானதுதானா என்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

மூன்றாவதாக 1980 மற்றும் 2008 ஆம் ஆண்டின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் பங்கு B, C, D, E ஆகிய பிரிவுகளில் குறைந்து போனதற்குக் காரணம் என்ன என்பது ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பது அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும்.

கலசம்

Pin It