அன்று இராகவன் வீடு திரும்பும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். நீண்ட நாள் போராட்டமாக இல்லாவிட்டாலும் அது கடுமையான போராட்டமாகத் தான் இருந்தது. பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு போன்ற பல விலை உயர்வுகளைச் சமாளிக்க, ஊதிய உயர்வு வேண்டும் என்று அவன் சார்ந்திருந்த தொழிற்சங்கம் கடுமையாகப் போரா டியது. மற்ற தொழிற்சங்கங்களும் போராடிய போதி லும், இராகவன் சார்ந்திருந்த தொழிற்சங்கம் தான் முதலாளிகளின் மயக்குமொழிப் பேச்சுகளுக்கு, உட னுக்குடன் பதிலடி கொடுத்து ஊதிய உயர்வை மறுக்க முடியாதபடியான வாதங்களைச் செய்து வெற்றி பெற்றது. தொழிற்சங்கத்தின் செயற்குழு உறுப்பின ரான இராகவனின் திறமையான பேச்சுகளும், சமயோசித நடவடிக்கைகளும் ஊதிய உயர்வுக் கோரிக்கை முழுமையான வெற்றி பெற முக்கியமான காரணங்களாக இருந்தன. கோரிக்கையில் வெற்றி பெற்றது மட்டுமல்லாது, அதற்குத் தன்னுடைய வாக்கு வன்மை உறுதியான பங்கு வகித்தது பற்றியும் இராகவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இதனால் தொழிற்சங்கத்தின் மற்ற உறுப்பினர்கள் மட்டுமல் லாது, வேறு தொழிற்சங்க உறுப்பினர்களிடமும் அவனுடைய புகழ் பரவியது. தன் மகிழ்ச்சியை மனைவியிடம் அவன் பகிர்ந்து கொண்டான்.

சிறிது நேர மகிழ்ச்சிக் கலகலப்புக்குப் பிறகு விலைவாசி உயர்வினால் ஏற்பட்டு இருக்கும் அதிகமான பணத்தேவையையும், ஊதிய உயர்வால் கிடைக்கப் போகும் அதிகப் பணத்தையும் கணக்குப் போட்டுப் பார்த்த இராகவனின் மனைவி இரண் டுக்கும் இடையில் சிறிய இடைவெளி இருப்பதை உணர்ந்து அதை இராகவனிடம் காட்டினாள். மேலும் ஊதிய உயர்வுக்குப் பின் ஏற்படும் விலையேற்றத் தையும் சுட்டிக்காட்டி இடைவெளி இன்னும் அதிக மாகும் எனத் தொழிற்சங்கவாதியான இராகவனுக்குத் தெரியும். எனவே இவன் மனம் துணுக்குற்றது. இவ்வளவு சிரமப்பட்டுப் போராடி வெற்றி பெற்றும், பழைய வாழ்க்கைத் தரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது போல் இருக்கிறதே என்று அறிந்து வருத்தம் அடைந்தான். இனி வருங்காலத்தில் ஊதிய உயர்வுப் போராட்டத்தின் போது அதிகமான எச்சரிக் கையுடன் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். வரவு செலவுகளுக்கு இடையில் ஏற்படப் போகும் இடைவெளியை நிரப்ப என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட மனைவியின் குரல் கேட்டு, சிந்தனையில் இருந்து விழித்துக் கொண்ட இராகவன் ஏதாவது செய்கிறேன் என்று தாழ்ந்த குரலில் கூறினான்.

இராகவன் நீர் சுத்திகரிப்புக் கருவிகளை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றில் தொழில்நுட்ப நிபுணனாக வேலை பார்க்கிறான். நீர் சுத்திகரிப்புக் கருவி பழுதடைந்தால் அதை நிவர்த்தி செய்து கொடுப்பது தான் அவனுடைய வேலை. அவனுக்கு மாதச் சம்பளமும், பழுதடைந்த கருவியை நிவர்த்தி செய்து கொடுக்கும் எண்ணிக் கைக்கு ஏற்ப ஊக்க ஊதியமும் கிடைக்கும். இப் பணியில் மிகுந்த திறமைசாலி என்று பெயர் பெற்றவன். தன் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்றால் அவன் பழுது நீக்க வேண்டிய கருவிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். ஆகவே தனக்குத் தரப்பட்டுள்ள பகுதிகள் அல்லாமல் கூடுதல் பகுதிகளைத் தன் பொறுப்பில் தரும்படி கேட்டுப் பெற்றுக்கொண்டான். அதாவது தனது பழைய வாழ்க்கைத் தரத்தைத் தக்கவைத்துக் கொள்ள அவன் கூடுதல் உழைப்பை அளிக்க வேண்டி இருந்தது.

காலம் இப்படியாகச் சென்று கொண்டிருந்த போது, இராகவன் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிறுவனம் ஒரு புதிய நீர் சுத்திகரிப்புக் கருவியை வடிவமைத்து உருவாக்கி வெளியிட்டது. பழைய கருவியை விட இது அதிக சுத்தமான குடிநீரைத் தரும் என்று கூறப்பட்டது. விற்பனையாளர்கள் அனைவரும் புதிய கருவியைப் பற்றி விளக்கி விற்பனையை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர். விற்பனைப் பிரிவின் மேலாளராக இருந்த மோகன், இராகவனுக்கு நெருங்கிய நண்பர். அவர் விற்பனைப் பிரதிநிதிகளிடம் புதிய கருவியைப் பற்றியும் அதன் சிறப்பு அம்சங் களைப் பற்றியும் மக்களிடம் விளக்கிக் கூறி அதன் விற்பனையை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். விற்பனைப் பிரதிநிதிகளும் மேலாளர் மோகன் கூறியபடி எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொண்டு இருந்தனர். ஆனால் விற்பனை சூடுபிடிக் காமல் மெதுவாகவே போய்க் கொண்டு இருந்தது.

ஆனால் இரண்டு மாதங்களுக்குப்பின் தட்சிணா மூர்த்தி என்ற விற்பனையாளர் புதிய கருவியின் விற்பனையைப் பெருமளவில் உயர்த்திக் காட்டினார். மோகனுக்கு வியப்பாக இருந்தது. மற்றவர்களால் முடியாததை இவன் மட்டும் எப்படிச் செய்து முடிக் கிறான்? ஒரு நாள் அவனைத் தனியே அழைத்துப் பலபடப் பாராட்டி அந்த இரகசியத்தைக் கேட்டான். ஆனால் தட்சிணாமூர்த்தி அது தன்னுடைய பேச்சுத் திறமை என்று மட்டும் கூறி, வேறு எதுவும் சொல்ல மறுத்துவிட்டான். தட்சிணாமூர்த்தியின் வளர்ச்சியைப் பார்த்தால் எங்கே அவன் தன்னையும் மிஞ்சிப் போய்விடுவானோ என்று மோகன் அச்சப்பட்டான்.

மோகனின் அச்சம் உண்மையானது. தட்சிணா மூர்த்தியின் திறமை, நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வரை தெரிய ஆரம்பித்துவிட்டது. ஒருநாள் மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தியை அழைத்துப் பாராட்டினார். நிறுவனம் அவனுடைய திற மையை மேலும் விரிவாகப் பயன்படுத்த விரும்புவ தாகவும் அதற்காக அவன் என்ன எதிர்பார்க்கிறான் என்பதைத் தெரிவித்தால் முதலாளியிடம் கூறிப் பெற்றுத் தருவதாகவும் கூறினார். தட்சிணாமூர்த்தியும் தனக்கு விற்பனைப் பிரிவின் தலைமைப் பதவி வேண்டும் என்றும், சம்பளம் மட்டுமல்லாது, கருவி கள் விற்பனையில் கமிஷன் வேண்டும் என்றும், கருவிகளைப் பழுதுபார்க்கும் நிபுணர்கள் தனக்குக் கீழ் வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். உயர் பதவிக்கு வரும் பொழுது உயர்ந்த ஊதியம் வருவதால் விற்பனையில் வரும் கமிஷன் பற்றிப் பொருட்படுத்த வேண்டியதில்லை என்று கூறிய மேலாண்மை இயக்குநர், பழுது பார்க்கும் நிபுணர் களை விற்பனைப் பிரிவின் கீழ்க்கொண்டு வருவது எப்படிச் சரியானதாக இருக்கும் என்றும் கேட்டார்.

மேலாண்மை இயக்குநரின் வினாவிற்குத் தட்சிணாமூர்த்தி அளித்த விடையில் அவனுடைய திறமையின் இரகசியம் தெரிந்தது. தன்னுடைய விற் பனைப் பிரிவுப் பகுதியில் பணியாற்றும் பழுதுபார்க் கும் நிபுணர்கள் பழைய கருவிகளைப் பழுதுபார்க்கும் பொழுது கருவியில் ஏதாவது ஒரு குறையை வைத்து விடுவார்கள் என்றும், இது வாடிக்கையாளர்களுக்குப் பெரும் தலைவலியைக் கொடுக்காமல் சிறு, சிறு பிரச்சனைகள் ஏற்படும்படி பார்த்துக் கொள்ளப்படும் என்றும், நாளடைவில் இது பழைய கருவியை விட்டுவிட்டுப் புதிய கருவியை வாங்கலாம் என்ற மனநிலையை உருவாக்குவதற்கு வசதியாக இருக்கும் என்றும், தன்னுடன் ஒத்துழைக்கும் பழுதுபார்க்கும் நிபுணர்களுக்கு இதற்காக ஏதாவது பரிசைக் கொடுப் பதாகவும் தெரிவித்தான். விற்பனையில் கமிஷன் கிடைத்தால் தான் அதில் ஒரு பகுதியைப் பழுது பார்க்கும் நிபுணர்களுக்கு வழங்க முடியும் என்பதால் கமிஷன் கேட்டதாகவும், பழுதுபார்க்கும் நிபுணர்களில் யார் யாரை எந்தெந்தப் பகுதியில் வேலை அளிக்க வேண்டும் என்ற அதிகாரம் தன் கையில் இருந்தால் தான் ஒத்துழைக்கும் நிபுணர்களையும், ஒத்துழைக் கத் தெரியாத (!?) நிபுணர்களையும் வைக்க வேண் டிய இடத்தில் வைத்து விற்பனையைப் பெருக்க முடியும் என்றும் கூறினான்.

தட்சிணாமூர்த்தியின் விடையைக் கேட்ட மேலாண்மை இயக்குநர் மலைத்துப் போனார். இவ்வளவு நுணுக்கங்கள் (!?) தெரிந்த ஒருவன் உயர்நிலைக்கு வந்தால் தன்னையும் விழுங்கி விடுவானோ என்று அஞ்சினார். ஆனால் முதலாளி யின் உறவினர் என்பதால் தான் தனக்கு மேலாண் மை இயக்குநர் பதவி கொடுக்கப்பட்டு இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்ட அவர், அந்த உறவு முறை தன்னைக் காப்பாற்றும் என்று நம்பினார். முதலாளியிடம் பேசி நல்ல முடிவைக் கூறுவதாகக் கூறி அவனை அனுப்பி வைத்தார்.

இரு நாள்களில் மீண்டும் அழைத்து, அவன் கேட்ட விற்பனைப் பிரிவுத் தலைமைப் பதவியை அளிக்கவும், அவன் கேட்டபடியே கமிஷன் தொகை கொடுக்கவும் முதலாளி ஒப்புக்கொண்டதாகத் தெரிவித் தார். நிபுணர்களை விற்பனைப் பிரிவின் கீழ்க் கொண்டு வந்தால் தேவையற்ற குழப்பம் ஏற்படும் என்றும், இருப்பினும், நிபுணர்களில் யார், யாரை எந்தெந்தப் பகுதியில் போடுவது என்பது பற்றி அவனிடம் இரகசியமாகக் கேட்டுத் தெரிந்து கொண்டு அதன்படி தன்னை நடந்து கொள்ளும்படி முதலாளி கூறி இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த ஏற்பாட்டிற்கு ஒப்புக்கொண்டு தட்சிணாமூர்த்தி பதவி உயர்வைப் பெற்றான். அதிலும் தனக்கு மேலதிகாரியாக இருந்த மோகனை விட உயர்ந்த பதவி அவனுக்குக் கிட்டியது. மோகன் இதில் சோர்வுற்றான். ஆனால் நிர்வாகமோ, இது அரசுத் துறை அல்ல என்றும், தனியார் துறை என்பதால் திறமை உள்ளவர்கள் மதிக்கப்படுவார்கள் என்றும் மோகனும் தனது திறமையை வளர்த்துக் கொண்டால் உயர்பதவியைப் பெறலாம் என்றும் விளக்கம் கூறியது.

தட்சிணாமூர்த்தி பதவி உயர்வு பெற்றவுடன் அனைவருடனும் கலகலப்புடன் பழக ஆரம்பித்தான். அவ்வப்போது சிலருக்குத் தனிப்பட்ட முறையில் ஆடம்பர உணவு விடுதிகளில் விருந்தளித்தான். அவனுடைய சீரிய (!?) வழிகாட்டுதலில் புதிய கருவி யின் விற்பனை அமோகமாக வளர்ந்தது. முதலா ளிக்கு இலாபம் குவிந்து கொண்டு இருந்தது.

ஒரு நாள் தட்சிணாமூர்த்தி இராகவனை ஒரு ஆடம்பர உணவு விடுதிக்கு அழைத்துச் சென்று விருந்தளித்தான். இடையே பேசிக் கொண்டு இருக்கும் பொழுது அவன் மிகச் சிறந்த பழுதுபார்க்கும் நிபுண னாக இருப்பதைப் பெரிதும் பாராட்டினான். இருந்தும் அவனால் போதிய வருவாய் ஈட்ட முடியாததைப் பற்றியும் மற்ற நிபுணர்களின் வாழ்க்கைத் தரம் இராகவனுடையதைவிட உயர்ந்து இருப்பதைiயும் சுட்டிக்காட்டினான். பிறகு தன்கீழ்ப் பணிபுரியும் விற் பனைப் பிரதிநிதிகள், பழுதுபார்ப்பதில் பிரச்சினையை ஏற்படுத்தி அதன்மூலம் விற்பனையை அதிகரிக்க உதவும் நிபுணர்களுக்குக் கமிஷன் கொடுப்பது பற்றித் தெரியுமா என்று கேட்டான்.

இராகவன் அதிர்ந்து விட்டான். “என்ன அயோக்கி யத்தனம் இது?” என்று சற்று உரக்கவே கேட்டு விட்டான். அவனுடைய குரலில் இருந்த அழுத்தம் அவன் தன்னுடைய வலையில் விழமாட்டான் என்று தட்சிணாமூர்த்திக்கு உணர்த்தியது. அன்று அவனுக்கு அளித்த விருந்து வீண் என்று நினைத்துக் கொண் டான். பின் இராகவனை அமைதியாக வழி அனுப்பி வைத்தான்.

ஆனால் அதன்பிறகு இராகவனின் ஆளுகைக்கு உட்படும் பகுதியின் பரப்பளவு குறைய ஆரம்பித்தது. இராகவன் தன் மேலதிகாரியிடம் போய்க் கேட்டபோது, தான் மேலாண்மை இயக்குநரின் வழிகாட்டுதல்படி நடப்பதாகவும் அதற்குமேல் தனக்கு ஒன்றும் தெரி யாது என்றும் கூறிவிட்டார்.

ஒரு நாள் இராகவன் தன் நண்பன் மோகனிடம் இதைப் பற்றிப் பேசினான். மோகன் அவனிடம் திரைமறைவில் நடக்கும் விவரங்கள் அனைத்தையும் கூறி, அவனுடைய பிரச்சினைக்குத் தட்சிணாமூர்த்தி தான் காரணம் என்றும், அவன் தன்னையும் மிதித்து மேலே சென்ற விவரங்களையும் விவரித்தான். இராகவன் வியப்படைந்தான். அரசு அலுவலகங்களில் தான் கையூட்டு கொடுக்கப்படுகிறது / வாங்கப்படுகிறது என்றால் தனியார் நிறுவனங்களிலுமா இப்படி? அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதைப் பற்றி முதலாளியிடம் கூறலாம் என்றால் முதலாளியின் முழு ஒப்புதலுடன் தானே இதுபோன்ற கையூட்டுப் பேய் சுதந்திரமாக நடமாடிக் கொண்டு இருக்கிறது? அரசு அலுவலகங்களில் வாங்கப்படும் / கொடுக் கப்படும் கையூட்டுகளைப் பற்றிப் புகார் செய்ய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இருக்கிறது. ஆனால் தனியார் நிறுவனங்களில் நடக்கும் இது போன்ற கையூட்டுகளுக்கு எதிராக எப்படிச் செயல் படுவது? இராகவன் திணறினான்.

பிறகு யோசித்துப் பார்த்ததில் அவனுக்கு ஒரு பொறி தட்டியது. தொழிற்சங்கத்தில் இதைப்பற்றிப் பேசினால் என்ன? தொழிற்சங்கத் தலைவரையும் செயலாளரையும் சந்தித்துப் பேசினான். ஆனால் அவர்களோ இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட வில்லை என்றும், ஆகவே தொழிற்சங்கம் இப்பிரச்சி னையை எடுத்துக்கொள்ள முடியாது என்றும் கூறி விட்டனர். உடனே தான் நேரடியாக இதனால் பாதிக் கப்பட்டு இருப்பதாகக் கூற, இதைப்பற்றி நிர்வாகத் துடன் பேசித் தெரிவிப்பதாகக் கூறினார்கள். நிர்வாகத் துடன் பேசிய பொழுது இராகவனின் சம்பளத்தை எந்தவிதத்திலும் குறைக்கவில்லை என்றும், பழுத டைந்துவிட்டதாகப் புகார்கள் வராததால் தான் அவனு டைய ஆளுகைப் பரப்பு குறைந்து இருக்கிறது என்றும், இது அவனுடைய திறமைக்கு ஒரு சான்று என்றும் அதை நிர்வாகம் பாராட்டவே செய்கிறது என்றும் மற்றபடி வேறு எதுவும் இல்லை என நிர்வாகத்தினர் கூறிவிட்டார்கள். நிர்வாகம் கூறியதை அப்படியே தலைவரும், செயலாளரும் இராகவனிடம் மறுஒலிபரப்புச் செய்தார்கள்.

இராகவனால் பொறுக்க முடியவில்லை. தொழிற் சங்கத்தின் செயல்பாடுகளுக்குத் தானே எல்லை உள்ளது. தொழிற்சங்கம் சார்ந்துள்ள கட்சியின் செயல்பாடுகளுக்கு எல்லை இல்லையே? இராகவன் கட்சியின் மாநிலச் செயலரைச் சந்தித்தான். மாநிலச் செயலரோ சென்ற தேர்தலில் யாருடன் கூட்டு, வரும் தேர்தலில் யாருடன் கூட்டு சேர்வது, இடையில் யாருடன் சேர்ந்து போராடுவது என்பது பற்றித்தான் பேசினாரே ஒழிய, இராகவனின் பிரச்சனையைக் கண்டுகொள்ளவே இல்லை.

இராகவன் இப்பொழுது ஒரு இக்கட்டான நிலை யில் நிற்கிறான். நேர்மையாக வாழ்ந்தால் வருமானம் போதவில்லை. வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்றால் முதலாளிகளுக்கு இலாபம் அதிகரிக்கும் வகையில் மக்களை ஏமாற்ற வேண்டி உள்ளது. இதில் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது? இராகவன் குழம்பி நின்றான்.

Pin It