பேரறிவாளன், சாந்தன், முருகன் - இந்த மூவரும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாய்த் தூக்குமர நிழலில் உயிர் அச்சத்தோடு துயின்று வரும் தோழர் கள் ஆவர்.

1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி முன்னாள் இந்தியப் பிரதமர் இராசீவ் காந்தி சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரில் ஒரு தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த போது குண்டு வெடிப்பு ஒன்றில் கொல்லப்பட்டார். இதுதொடர்பான கொலை வழக்கில் 41 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் மனித வெடிகுண் டாக வந்ததாய்ச் சொல்லப்பட்ட தாணு, சிவராசன், சுபா, கோடியக்கரை சண்முகம் உள்ளிட்ட 12 பேர் விசார ணைக் காலத்திலேயே இறந்தனர்.

மீதம் இருந்த 26 பேர் மீது பூந்தமல்லி தனி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது பொதுவான விதி. ஆனால் கொலையுண்டவர் அகில இந்திய காங்கிரசுக் கட்சியின் தலைவர் மற்றும் பண்டித ஜவஹர்லால் நேருவின் பேரன், இந்திராகாந்தியின் மகன் என்பதற் காக கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட அனைவரும் மிகக் கொடிய முறையில் நடத்தப்பட்டார்கள். சட்டம் வழங்கும் நியாயமான உரிமைகள் கூட அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அலிபாபா திருடர் குகை போல, ஆள் அரவமற்ற இருட்டறையில் அடைத்து, மிகவும் கமுக்கமாகவும் கயமைத்தனமாகவும் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகள் இருந்தன. குற்றம் சாட்டப்பட்டோர் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வெகுதொலைவில் தள்ளித்தான் போக்கு வரத்தே பல ஆண்டுகள் நடப்பில் இருந்தது. இதனால் பூந்தமல்லியில் வாழ்ந்த மக்களும், சென்னைக்குச் செல்வோரும் அடைந்த துன்பங்கள் சொல்லி மாளாத வையாகும்.

1998 சனவரி 28ஆம் நாள் இவ்வழக்கில் தீர்ப்பு ரைத்த நீதிபதி நவநீதன், நீதித்துறை வரலாற்றில் என்றும் பேசப்படும் தன்மையில் குற்றம்சாட்டப்பட்ட 26 பேருக்கும் ‘தூக்கு’ என்கிற வன்கொடுமையான ஒரு தீர்ப்பை வழங்கினார். இதுகேட்டு நாடே அதிர்ந்தது.

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனின் பெருமுயற்சியாலும், தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் ஒத்துழைப்பாலும் 26 பேர் உயிர் காப்பு இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டு, விசாரணை பல கட்டங் களைத் தாண்டி உச்சநீதிமன்றம் வரை சென்றது.

இறுதியில் உச்சநீதிமன்றம் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வர்க்கும் மரணதண்டனை யும், இரவிச்சந்திரன், செயகுமார், இராபர்ட் பாலஸ் ஆகிய மூவர்க்கும் ஆயுள் தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்தது. மற்ற அனைவரும் இவ்வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். பின்னர் நளினி யின் மரணதண்டனை மட்டும் ஆயுள் சிறையாக மாற்றப்பட்டது.

உலகம் வளர்ச்சியடைந்த நாகரிகச் சமுதாயமாக நடைபோடுகிறது. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பனவெல்லம் காட்டுமிராண்டிக் காலத்தில் நிலவிய தண்டனைச் சட்டங்கள் ஆகும்.

‘உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை

அற்றே தவத்திற்கு உரு’

என்று சொன்ன வள்ளுவர் வாழ்ந்த நாடு இது.

“குற்றவாளிக்கு உரிய முறையில் சிகிச்சை தரும் மனநோய் மருத்துவமனை போன்றது சிறைக்கூடம். அது கொலைக்களமாக மாற்றப்படக்கூடாது. உயிர் இறைவனால் அளிக்கப்பட்டது. அதனைப் பறிக்க, அந்த இறைவனைத் தவிர வேறு யாருக்கும் அதி காரம் இல்லை” என்று கூறிய காந்தியடிகளைத் ‘தேசப்பிதா’வாகக் கொண்டாடும் நாடு இது.

இந்திய தண்டனைச் சட்டப்படி ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகள்கூட 14 ஆண்டுகளில் விடுதலை செய்யப்படுவது பொதுவான நடைமுறையாகும். தமிழ கத்தில் ஆயுள் தண்டனை பெற்ற சில கைதிகள் ஏழே ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்ட வரலாறும் உண்டு.

ஆனால் இராசீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனையும், ஆயுள் தண்டனையும் பெற்ற கைதி கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடுவ தற்கு என்ன காரணம்? கொல்லப்பட்டவர் ‘இராசீவ் காந்தி என்ற காங்கிரசின் மாமனிதர்’ என்பதுதான் ஒரே காரணம்.

1999ஆம் ஆண்டு, அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனுக்கு சோனியா காந்தி விடுத்த மடலில் என் கணவரின் கொடிய கொலைக்குக் காரணமான அந்த நால்வரும் தூக்கிலிடப்பட வேண்டும் என்று எங்கள் குடும்பத்தினர் யாரும் நினைக்கவில்லை. எனக்கோ, என் மகனுக்கோ, மகளுக்கோ இதில் விருப்பம் இல்லை. கொலையாளிகள் கருணை மனு விண்ணப் பிக்கும் போது அவர்களை மன்னித்துத் தூக்குத் தண் டனையை நிறுத்திவிட வேண்டும் என்று தங்களைப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட் டிருந்தார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைக் கொட்டிலில் வாடும் கைதிகளில் ஒருவராகிய பேரறி வாளன் தன்னுடைய 19ஆவது வயதில், 11.6.1991 அன்று விசாரணைக்காக இழுத்துச் செல்லப்பட்டார். பெரியாரின் கொள்கைகளை உயிராக ஏற்றுக்கொண்ட பெற்றோரின் பிள்ளை பேரறிவாளன். அந்த உணர் வோடு இளமை முதல் அவர் வளர்க்கப்பட்டதால் இயல் பாகவே ஈழ விடுதலைப் போரில் அவருக்கு நாட்டம் ஏற்பட்டது. ஈழப் போராட்டத்திற்கு ஆதரவு தராத கட்சி களோ, தலைவர்களோ அன்று தமிழ்நாட்டில் இல்லை. மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி. இராமச்சந்திரன் விடுதலைப்புலிகளுக்கு வெளிப்படையாகவே உதவி னார். தமிழ்நாட்டுத் தமிழர் எல்லோருமே ஈழ விடு தலைப் போரை ஆதரிப்பதில் எல்லையற்ற ஈடுபாடு காட்டினர். அந்த உணர்வோடு இளைஞராய் இருந்த பேரறிவாளனும் செயல்பட்டதில் தவறில்லை.

‘கச்சையில் பொருத்தப்படும் வெடிக்குண்டுக்கு (பெல்ட் பாம்) 9 வோல்டு பேட்டரி ஒன்று வாங்கித் தந் தார்’ என்பதுதான் காவல்துறை இவர் மீது வைத்த குற்றச்சாற்று. இதுபற்றிப் பேரறிவாளன் கூறும்போது, “உண்மையில் நான் 9 வோல்ட் பேட்டரியை வாங்க வும் இல்லை. யாருக்கும் அதனைத் தரவும் இல்லை. அவ்வாறு நான் வாங்கியதாகச் சொல்லப்பட்டதற்கு ஒரே சான்று ஒரு பெட்டிக்கடைக்காரர் அளித்த சாட்சியம் தான். இந்தச் சாட்சியத்தை ஏற்க இயலாது என்று முதலில் சொன்ன தடா நீதிமன்றம், என்ன காரணத்தாலோ பிறகு ஏற்றுக்கொண்டது. ஆனால் நான் வாங்கித் தந்ததாகச் சொல்லப்படும் 9 வி பேட்டரிதான் பெல்ட் பாம் வெடிக்கப் பயன்பட்டது” என்று விசாரணையில் எந்தக் கட்டத்திலும் மெய்ப்பிக்கப்படவில்லை. நான் செய்யாத குற்றத்திற்காகத் தூக்குமர நிழலில் நிற்கிறேன்” என்று நெஞ்சு பதைக்கப் பேசுகிறார்.

இராசீவ் காந்தி கொலை வழக்கு முழுவதும் தடா சட்டத்தின் கீழ் நடத்தப்பட்டது. ஆனால் இவ்வழக்குத் தடாச் சட்டப்படி நடத்தப்பட்டதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. “மக்களிடையே பேரச்சமும் பதற்றமும் உருவாக்குவதற்காகத் திட்டமிட்டுச் செய்யப் படும் பயங்கரவாத நடவடிக்கைகள் மட்டுந்தான் தடாச் சட்டத்தின்கீழ் வரும். இராசீவ் காந்தி கொலை அத்த கைய நோக்கம் கொண்டதல்ல”. என்று உச்சநீதிமன்றம் கருத்துச் சொன்னாலும், தடாச் சட்ட அதிகாரத்தின் கீழ் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களை வைத்தே தண்டனை வழங்கியது. இது நீதித்துறைக்கே ஏற்பட்ட தலைக்குனிவாகும்.

ஆனால் ‘தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பிறகு நீண்டகாலம் அதை நிறைவேற்றாமல் தள்ளிப்போடுவது கூடுதல் தண்டனை வழங்குவதாகும்’ எனப் பல வழக்குகளில் கருத்துச் சொன்ன உச்சநீதிமன்றம் அந்தத் தூக்குத் தண்டனையை இரத்துச் செய்துள்ளது. அதனை ஆயுள் தண்டனையாக மாற்றியுள்ளது என்பதற்குப் பல முன் எடுத்துக்காட்டுகள் உண்டு.

இன்று பல்வேறு நாடுகளின் சட்டப் புத்தகங்களில் இருந்து தூக்குத் தண்டனை விடைபெற்று வருகிறது. இப்போது உலகின் 139 நாடுகள் சாவுத் தண்ட னைக்குச் சமாதி கட்டியுள்ளன. இந்தியாவிலும் இந்த மரண தண்டனையை ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிற குரல் வலுத்து வருகிறது. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணன் (அய்யர்) இக்கோரிக் கையை நீண்டகாலமாக எழுப்பி வருகிறார். இராசீவ் கொலை வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளோரை விடுதலை செய்யக்கோரி தமிழக முதல்வருக்கு அண் மையில் அவர் வரைந்துள்ள மடலில் “இந்த மூன்று இளைஞர்களும் தூக்கிலிடப்பட உள்ளனர் என்கிற செய்தி என்னைக் கண்ணீரில் ஆழ்த்திவிட்டது. நாட் டின் உயர் அறமன்றம் இந்தத் தண்டனையை விதித் துள்ளது. கடும் இழப்புக்குள்ளாகியுள்ள சோனியா காந்தி இவர்களைக் காக்க முன்வரவேண்டும். எல்லா முறையீடுகளும் புறந்தள்ளப்பட்டுள்ள நிலையில் தமிழக முதல்வர் உள்ளார்ந்த கருணை உள்ளத்தோடு இந்த மூவரின் உயிரைக் காப்பாற்ற எல்லா வகையிலும் உதவிடல் வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத் துள்ளார்.

இவர் உச்சநீதிமன்ற நீதிபதியாவதற்கு முன் கேரள மாநில உள்துறை அமைச்சராய் இருந்துள்ளார். அப் போது குடியரசுத் தலைவர் தூக்குத் தண்டனைக்கான ஒரு கருணை மனுவைத் தள்ளுபடி செய்துவிட்ட நிலையிலும் சி.ஏ. பாலன் என்ற பொதுவுடைமைக் கட்சித் தலைவரின் உயிரைச் சட்டத்தின் துணை கொண்டே இவர் காப்பாற்றி இருக்கிறார்.

முன்னாள் நடுவண் சட்ட அமைச்சர் இராம்ஜெத் மலானி, இராசீவ் கொலை வழக்கில் குற்றஞ் சாட்டப் பட்டவர்களை விடுதலை செய்யப் பல்வேறு கார ணங்கள் வெளிப்படையாகவே விளங்குகின்றன என்று அவர் அந்தப் பதவியில் இருந்த போதே குறிப்பிட் டுள்ளார்.

தூக்குத் தண்டனையை நீக்குமாறு இந்த மூன்று பேருக்காக மட்டும் நாம் கோரவில்லை. நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை பெற்றுள்ள அப்சல் குரு உள்ளிட்ட அத்தனை பேருடைய உயிர் களும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே நம் வேண்டு கோள்.

குடியரசுத் தலைவரால் கருணை மனு புறந்தள்ளப்பட்ட நிலையிலும், மாநில ஆளுநர் மரண தண்டனையை நிறுத்தி வைக்க முடியும் என்று சட்ட வல்லுநர்கள் கருத்துரைக்கின்றனர். இருபதாண்டு கட்கும் மேலாக, இருட்டு சிறையில் வாடித் தம் இளமையின் பெரும் பகுதியைத் தண்டனைக் கைதி களாகவே கழித்துவிட்டஅந்த மூன்று தமிழ் இளை ஞர்களின் எதிர்கால வாழ்வைத் தழைக்கச் செய்ய வேண்டும் என 7 கோடித் தமிழ் மக்களின் சார்பாக வேண்டுவோம். இந்த ஒற்றைக்குரலை ஒட்டுமொத்த தமிழகத்தின் சார்பில் உரத்து முழங்குவோம். தமிழக முதல்வரும், தமிழக அரசும், பிரதமர் மன்மோகன் சிங்கும், நடுவண் அரசும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும் உடனடியாகத் தலையிட்டு இம் மூவரின் தூக்குத் தண்டனையை இரத்து செய்து, அவர்களை விடுதலை செய்ய ஆவன செய்யுமாறு வேண்டுகின்றோம். நீண்ட வாழ்நாள் அம்மூவரும் பெறுக! இந்த மண்ணை விட்டே, மரண தண்டனை என்பது மாண்டு ஒழிக!

***

 தமிழ்நாட்டு அரசினரே! இந்திய அரசினரே!

பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரின் தூக்குத் தண்டனையை வாழ்நாள் தண்டனையாக மாற்றுங்கள்! ஆய்வு செய்து அனைவரையும் விடுதலை செய்யுங்கள்!

*             சிறைக் கொட்டடியில் ஒரு குற்றவாளியை அடைத்து வைப்பது, அந்தக் குற்றவாளியைச் சீர்திருத்துவதற்காகவே!

*             சிறுவர், திருமணம் ஆகாதவர், திருமணம் ஆனவர்கள் ஆகியோரைச் சிறையில் வைப்பது, அவர்கள் பெற்றோரையும், நண்பர்களையும், மனைவி மக்களையும் பிரிந்து இருக்கும் காலத்தில்-இவர்களிடம் பாசமும் அன்பும் செலுத்த முடியாமல் இருப்பதை எண்ணி, மனம் திருந்தவே!

*             பேரளிவாளன், சாந்தன், முருகன், நளினி ஆகியோர் 20 ஆண்டுகளாக, வெளி உலகத்திலிருந்து பிரித்து வைக்கப்பட்ட கொடுமைக்கு ஆளாகி, மனம் திருத்தி உயர்ந்த படிப்புகளைப் பெற்றிருக்கிறார்கள்!

*             இவர்களை 14 ஆண்டுகளுக்குப் பிறகும்-இருபது ஆண்டுகளுக்குப் பிறகும் சிறையில் வைப்பது அநீதியாகும்! வஞ்சம் தீர்ப்பது ஆகும்! அரசுக்கு வஞ்சம் இருப்பது ஞாயம் ஆகாது.

*             பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரையும் தூக்கில் போடுவதைக் கைவிடுங்கள்! நளினி உட்பட எல்லோரையும், ஆய்வு செய்து, விடுதலை செய்யுங்கள்! நீதிக்குக் கண் இருக்கிறது என்பதை உலகுக்கு உணர்த்துங்கள்.

- மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி

Pin It