எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது கல்விக்கு மரியாதை ஏற்பட்டிருக்கிறது. பெற்றவர்கள் தம் பிள்ளை களை உயர் கல்வியின் உச்சத்துக்கே கொண்டு போகத் துடிக்கிறார்கள். எந்த விலையைக் கொடுத்தேனும் அதைப் பெற்றுவிட ஆலாய்ப் பறக்கிறார்கள்.

பந்தயக் குதிரையின் பேரில் பணம் கட்டுவது போல எந்தக் கல்விக்கு இப்போது மதிப்பு என அறிந்து அதனைப் பெற எப்படிப்பட்ட குறுக்குவழியையும் பயன் படுத்தத் தயங்குவதில்லை. தங்கள் பிள்ளை ‘டாக்ட ராக வேண்டும், இஞ்சினியராக வேண்டும், பணம் பண்ண வேண்டும்’ என்பதே பெற்றவர்களின் கனவாக இருக்கிறது. இதற்காக அவர்கள் எதையும் கொடுக்கத் தயார்.

தவிர்க்க முடியாத போட்டி

ஒரு நர்சரியில் படிக்கும் குழந்தை கூறுகிறது : “நான் படிச்சு பெரியவனா போயி எங்க அப்பாவுக்கு ஒரு வீடு வாங்கிக் குடுப்பேன்... ஏன்னா எங்க வீட்டை வித்து தானே என்னை நர்சரியில் அப்பா சேத்தாரு...”

இந்தத் துணுக்கு, நகைச்சுவைக்காகக் கூறப் படிருக்கலாம். ஆனால் இதில் உண்மை இல்லாமல் இல்லை. கிராம மக்களைவிட நகர மக்கள் - சாதார ணக் குடிமக்களைவிட அரசுப் பணிகளை அனுபவித்த அலுவலர்கள், தாம் பெற்ற இன்பத்தைத் தமது அடுத்த தலைமுறையினரும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புவது இயற்கையே! அதனால்தான் இந்தப் போட்டி தவிர்க்க முடியாததாகப் போய்விட்டது.

கதவு திறந்தது

கல்வி கற்பது குறிப்பிட்ட ஒரு சில உயர்ந்த வகுப் பாருக்கே உரிமை என்ற காலம் ஒன்று இருந்தது; ஒருசில வகுப்பாருக்கு அந்த உரிமை தடுக்கப்பட்டது; இந்தச் சமுதாயத்தில் பெண் கல்வி மறுக்கப்பட்டது; ஏழை எளிய மக்கள் கல்விக்கூடத்தை நெருங்க முடி யாமல் மறைக்கப்பட்டது.

தந்தை பெரியார் போன்ற முற்போக்குவாதிகளால் சாதிகளும், சாதிகளால் உருவாக்கப்பட்ட தடைகளும் உடைத்து நொறுக்கப்பட்டன. ஆங்கிலேய ஆட்சியாள ரால் திறந்து வைக்கப்பட்ட கதவுகளின் வழியே கல்வி வெளிச்சம் பாய்ந்தது. அது அவர்களின் சுயநலத்துக் கான தயாரிப்பாக இருந்தாலும் இந்த நாட்டில் காலங் காலமாக இருந்துவந்த மனுதருமக் கோட்பாடுகளை விலக்கி வைத்தது.

அரசியல் சட்டம் இட்ட கட்டளை

1947இல் தேசம் விடுதலையடைந்தது. 1950இல் குடியரசாக அறிவிக்கப்பட்ட போது புதிய அரசியல் சட்டமும் நடைமுறைக்கு வந்தது. ‘குடியரசாக அறிவிக் கப்பட்ட 10 ஆண்டுகளுக்குள் 14 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்பட வேண்டும்’ என்று, இந்திய அரசியல் சட்டம் 45ஆம் விதி கட்டாயப்படுத்தியது. ஆனால் சுதந்தரமடைந்து பல பத்தாண்டுகள் ஓடிப்போய்விட்டன. இந்தச்சட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் கல்விக்கெனச் செய்யப்பட்ட மொத்த ஒதுக்கீட்டில், 56 விழுக்காடு தொடக்கக் கல்விக்கென அளித்துக் கல்வியைப் பரவ லாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னரும் அரசியல் சட்டம் நமக்கிட்ட கட்டளையை எந்த அரசும் நிறை வேற்றவில்லை. ஏனெனில் இந்திய அரசினால் போதிய நிதி கல்விக்கு ஒதுக்கப்படவில்லை.

குதிரை குப்புறத் தள்ளியதோடு குழியும் பறித்த கதை போல, ஆட்சிக்கு வரும் அரசுகள் கல்வியைத் தங்கள் கொள்கைகளுக்கு ஏற்றாற்போல மாற்றிய மைக்க முயல்கின்றனர். இது கல்வித் துறைக்கு மட்டுமுல்ல, வருங்காலத் தலைமுறைக்கே செய்யும் மாபெரும் கொடுமையாகும்.

இப்போது மத்திய மாநில அரசுகள் “அனைவர்க் கும் கல்வி” என்று பெயரளவில் பிரச்சாரம் செய் கின்றனவே தவிர, ‘இலவசக் கல்வி’ என்பதை வசதி யாக மறைக்கப் பார்க்கின்றன; மறுக்கவும் பார்க் கின்றன. மத்திய அரசின் ஆதரவுடன் இயங்கும் ‘சர்வ சிக்ஷா அபியான்’ திட்டமும் அப்படியே!

கல்லாமையும் இல்லாமையும்

காமராசர் தமது ஆட்சிக்காலத்தில் ‘எல்லோருக்கும் இலவசக் கல்வி’ என்ற நிலையை உருவாக்கினார். தந்தை பெரியாரும், நெ.து.சுந்தரவடிவேலு போன்ற கல்வியாளர்களும் அவருக்கு உறுதுணையாக இருந் தனர். ஏழை எளிய கிராம மக்களுக்கு எண்ணும் எழுத்துமாகிய இரண்டு கண்கள் இலவசமாக அளிக் கப்பட்டன. இன்று அரசியல் சமுதாய, ஆட்சித் துறை களில் பெரியார் பெயரைச் சொல்வோரே இப்போதும் அதிகாரம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

“அன்ன சத்திரம் ஆயிரம் கட்டல்

ஆல யம்பதி னாயிரம் நாட்டல்

பின்ன ருள்ள தருமங்கள் யாவும்

பெயர்வி ளங்கி ஒளிர நிறுத்தல்

அன்ன யாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறி வித்தல்”

என்றான் பாரதி. கல்வி அளிப்பதே மாபெரும் அறமாகக் கருதப்பட்டது. கல்லாமையும், இல்லாமையும் நீடிப்பது பாவமாகவும், பழியாகவும் பேசப்பட்டது.

சமுதாயக் குற்றம்

“ஏழ்மையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால்

இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்”

என்று பாடினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

எனவே, ஏழ்மையைக் காரணம் காட்டிப் படிக்க முடியவில்லையென்பது சமுதாயக் குற்றமாகும் என்று அவர்கள் அறிவுறுத்தினர்.

“கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே”

பிச்சை எடுத்தாகிலும் படிக்க வேண்டும் என்ற நிலை யிலிருந்து, பொருள் கொடுத்தாகிலும் படிக்க வேண்டும் என்ற நிலைமைக்குச் சமுதாயம் மாறிவிட்டது.

“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே”

என்று புறநானூறு பாடியது.

கல்வி என்னும் கட்டாய வணிகம்

இப்போது எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. கல்வி என்பது முழுமுதல் வணிகமாகிவிட்டது. நர்சரி யில் தொடங்கி உயர்கல்வி வரை அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையாகிவிட்டது. அரசாங்கம் தமது கடமை யிலிருந்து ஒதுங்கிக் கொள்ளுவதற்காக ‘சுயநிதி’க் கல்விக்கூடங்களுக்கு அனுமதியளித்தது. இப்போது அவற்றிற்குத் தன்னாட்சி அதிகாரங்களும், ஐந்து நட்சத்திர அந்தஸ்துகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இதனால் இன்றையக் கல்வி ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிட்டது. என்றாலும் இதனை எட்டிப் பறிக்காமல் விடப்போவதில்லை என்ற சூளு ரையுடன் எல்லாரும் போட்டியிடுகின்றனர். போட்டி மயமான இந்த உலகத்தில் கல்வியும் ஒரு பந்தயப் பொருளாகிவிட்டது.

சமவாய்ப்பு எங்கே?

“மக்களாட்சியில் மிக அதிக பலம் வாய்ந்தவருக்கு இருக்கும் அதே வாய்ப்பு, மிகவும் பலவீனமானவருக் கும் இருக்க வேண்டும். இதுவே மக்களாட்சியைப் பற்றி நான் கொள்ளும் கருத்து...” என்றார் மகாத்மா காந்தி.

தேசத் தந்தையின் பெயரைச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் அவரது மொழியையே மறந்துவிட்டனர். பொருளாதாரத்தில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகள் கல்வித் துறையிலும் தொடர்கின்றன. அனைவருக்கும் சம வாய்ப்பு எங்கே இருக்கிறது?

நாடு விடுதலையடைந்த பிறகு மிகச் சில பேர் உலகச் செல்வந்தர்களாக உயர்ந்துவிட்டதாகப் பெருமை பேசுகின்றனர். ஆனால் இந்திய மக்களில் 25 விழுக் காடு பேர் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர் என்று பிரதமர் மன்மோகன்சிங் ஒத்துக் கொள்ளுகிறார்.

பெற்றோரும், பிள்ளைகளும்

இந்த வேறுபாடுதான் இப்போது கல்வித் துறை யையும் பிடித்து ஆட்டுகிறது. பெற்றவர்களை வறுமை யிலே மிதக்க விட்டுவிட்டு, பிள்ளைகளுக்குக் கல்வி யைக் கட்டாயமாக்குவது வேடிக்கையான வேதனை. பெற்றோர்களுக்கு வாழ்க்கை மறுக்கப்படுகிறது; பிள்ளை களுக்குக் கல்வியும் மறுக்கப்படுகிறது. இதுதான் உண்மை.

அரசாங்கத்துக்கு ஏதும் கடமைகள் இல்லையா? மக்களுக்குத் தேவையான மருத்துவம், கல்வி, வேலை வாய்ப்பு இவற்றை அளிப்பது யார்? இவை இன்று தனியாரின் ஏகபோக வணிகமாக மாறுவதற்குக் கார ணம் என்ன? இந்தச் சமுதாய அமைப்பு இப்படியே இருக்க வேண்டும் என்பதுதானே?

மத்திய, மாநில அரசுகளே கல்வியை எட்டாத உயரத்தில் ஏணியை வைத்து ஏற்றி வைத்துவிட்டன. ஏழை மக்கள் என்ன செய்வது? வாழ்க்கைக்கான போராட்டத்தோடு கல்விக்கான போராட்டமும் தொடர் கிறது. எனவே மக்கள் விழிப்படைந்து போராட வேண்டும்.

Pin It