மூவர் மட்டும், இரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ வின் புறநகர் பகுதியில் உள்ள தம் வீடுகளிலிருந்து நகரின் நடுப்பகுதிக்கு 15 மணித்துளிகளில் செல்ல முடியும். முதலாமவர் இரஷ்யாவின் குடியரசுத் தலைவர் டிமிட்ரி மெத்வதேவ்; இரண்டாமவர் பிரதம மந்திரி விளாதிமிர் புதின்; மூன்றாமவர், இரஷ்ய நாட்டின் கிறித்தவ, பழைமை வாதத் திருச்சபையின் தலைவர் கிரில். ஆயுதந் தாங்கிய, மிக விலை உயர்ந்த சீருந்துகளில், பாதுகாப்பு ஊர்திகளுடன் 150 கி.மீ. வேகத்தில் இவர்கள் பயணம் செய்வதற்காக, மாஸ்கோ நகரின் சாலைகளில் போக்குவரத்து முற்றி லுமாக நிறுத்தப்படுகிறது. 

திருச்சபையின் தலைவர் கிரிலுக்கு, கிரம்ளின் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு இலவயமாக அரசால் வழங்கப்படுகிறது. இரஷ்யாவின் அரசமைப்புச் சட்டத் தில், மதம், அரசிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப் பட்டுள்ளது. ஆனால் சோசலிச ஆட்சி முறை வீழ்ந்த பின், அரசின் தூண்களாக இராணுவம், காவல்துறை, நீதித்துறை இருப்பது போல் பழைமைவாதத் திருச் சபையும் அரசின் ஒரு தூணாக விளங்குகிறது என்பது கண்கூடான உண்மையாகும்.

நாத்திக நாடாக இருந்த சோவியத் ஒன்றியம் சிதறுண்டபின், இரஷ்யாவில் மதத்தின் மீதான அரசின் கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்தன. 1997இல் ‘மதச் சுதந்திரச் சட்டம்’ இயற்றப்பட்டது. இரஷ்ய மக் களின் வரலாற்றுப் பெருமிதங்களோடும், மரபுக ளோடும் பிரிக்க முடியாதவாறு கிறித்துவம், இசுலாம், பவுத்தம், யூதமதம் ஆகியவை திகழ்கின்றன என்று அச்சட்டத்தில் குறிக்கப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத் தில் எல்லா மதங்களையும் சமமாக நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதற்கு இது எதிரானதாகும். மேலும் இரஷ்ய வரலாற்றில் கிறித்தவமதம் தனிச் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது என்றும் அதில் குறிக்கப்பட்டுள்ளது.

இரஷ்யாவில் மத நம்பிக்கை வேகமாகவும், வலி மையாகவும் வளர்ந்து வருகிறது என்று பழைமை வாதப் பாதிரிகள் பறைசாற்றுகின்றனர். இரஷ்யர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் மத நம்பிக்கை உடைய வர்களாக இருக்கின்றனர் என்று இவர்களின் ஆய்வு கள் தெரிவிக்கின்றன. 1990களின் நடுவில் 50 விழுக் காட்டினர் மத நம்பிக்கையாளர்களாக இருந்தனர். ஆனால் உண்மையில் 10-15 விழுக்காடு இரஷ்யர்கள் மட்டுமே தவறாமல் தேவாலயத்திற்குச் செல்கின்றனர். உண்மையான கிறித்தவ சமய நம்பிக்கையாளர் என்பதற்கு அடையாளமான, அப்பத்தையும் திராட்சை சாற்றையும் தமக்கிடையே பகிர்ந்து கொள்ளும் சடங் கை (Communion) 5 விழுக்காட்டினர் மட்டுமே ஏற்றுள்ளனர். பெரும்பாலான மக்கள் தங்கள் மரபு வழி அடையாளத்தை, மத நம்பிக்கை எனத் தவறாகக் கொள்கின்றனர் என்று சமூக ஆய்வாளர்கள் கூறுகின் றனர்.

உண்மையில் பெரும்பான்மை மக்கள் கிறித்தவ மதத்தில் அக்கறையற்றவர்களாக உள்ளனர். ஆயினும் இரஷ்ய திருச்சபையின் தலைமை, அரசின் ஆதர வுடன், கிறித்தவ மதத்தை அரசமதம் போல் ஆக்கி யுள்ளது. மத ஆதிக்கத்தின் பழைய சடங்குகள் மீண்டும் அரங்கேறியுள்ளன. புதியதாகத் தேர்ந்தெடுக்கப்படும் குடியரசுத் தலைவர்கள் திருச்சபையின் தலைமைப் போப்பிடம் ஆசி பெறகின்றனர். அந்த அளவுக்கு மத ஆதிக்கம் சிறப்புரிமை பெற்றதாக உள்ளது. புதினும், மெத்வதேவும் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றவுடன் தலைமைப் போப்பிடம் ஆசி பெற்றனர். 2008 மே மாதம் மெத்வதேவ் தலைமைப் போப்பிடம் ஒரு சிலையைப் பரிசாகப் பெற்றார். அப்போது, அரசும் திருச்சபையும் இணைந்து மேற்கொண்ட முயற்சியால் தான் இரஷ்யாவின் வளர்ச்சி புதிய சிகரங்களை எட்டி யுள்ளது என்று மெத்வதேவ் பிதற்றினார். கிரம்ளின் மாளிகையில் ஜார் மன்னர்களின் குடும்பத்தினர் வழி பாடு நடத்திய தேவாலயத்தில் குடியரசுத் தலைவர்கள் போப்பிடம் ஆசி பெறும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவை ஒரு முடிசூட்டு விழாவாகவே காட்சியளித்தன. பண்டைக் காலங்களில் மதகுரு, மன்னர் ஆட்சி செய் வதற்கு ஆண்டவனின் அருளாசியை வழங்குவது போல் இது இருந்தது. ஏனெனில் இரஷ்யாவில் தேர்தல் உண்மையான சனநாயக நெறிப்படி நடப்பதில்லை என்பதால் ஆசி வழங்கும் நாடகம் அரங்கேற்றப்படு கிறது.

அரசும் திருச்சபையும் கூட்டணி வைத்துக் கொண் டிருப்பது இருதரப்பினருக்கும் பயன் தருவதாக அமைந் துள்ளது. சோசலிச ஆட்சி முறை தகர்ந்ததால், பொது வுடைமைத் தத்துவத்தின் செல்வாக்கும் சரிந்தது. அந்த வெற்றிடத்தில், அரசின் துணையுடன் திருச்சபை தன்னை நிலைநாட்டிக் கொள்ள முயல்கிறது. உயர் அதிகார பீடத்திடம் பணிவாகவும் அடக்கமாகவும் நடக்க வேண்டும் என்பது போன்ற பழைய பிற்போக்குத் தனங்களை, ‘உயர்ந்த பண்புகள்’ என்று திருச்சபை போற்றி மக்களிடம் பரப்புகிறது. இரஷ்ய சமூகத்தில் தாராளமய-தனியார் மயச் சந்தையால் பெரும்பான்மை மக்களிடம் வறுமையும், சமூகத்தில் பணக்காரன் - ஏழை என்கிற ஏற்றத்தாழ்வும் பெருகியுள்ளன. எனவே மக்கள் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடாமல் தடுக்க, திருச்சபையின் பழைமைவாத போதனைகள் உதவுகின்றன. அதனால் கிரம்ளின் அரசியல் தலைமை, திருச்சபைக்குத் துணை நிற்கிறது.

சோவியத் நாட்டில் சோசலிச ஆட்சியின்போது, அலுவலகங்களாகவும், சேமிப்புக் கிடங்குகளாகவும் பயன்படுத்தப்பட்டுவந்த தேவாலயங்கள், தற்போது அரசின் முயற்சியால் மீண்டும் தேவாலயங்களாக உயிர்ப் பிக்கப்பட்டுள்ளன. மேலும் புதிய தேவாலயங்களைக் கட்டவும் அரசு உதவி செய்கிறது. கிரம்ளின் மாளி கைக்கு அருகில் கட்டப்பட்டிருந்த முதன்மையான - பெரிய தேவாலயம் 1931ஆம் ஆண்டு அரசால் இடித் துத் தரைமட்டமாக்கப்பட்டது. (பெரியார் ஈ.வெ.ரா. தன் னுடைய இரஷ்யப் பயணத்தின் போது, பெரிய புல்டோ சர்களைக் கொண்டு தேவாலயங்கள் இடிக்கப் படுவதை நேரில் பார்த்தார்).

1990களில் அதே இடத்தில், அரசால் தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. மார்க்சியம் - லெனினியம் வீற்றி ருந்த இடத்தில் மீண்டும் பழைமைவாதம் கோலோச்சு கிறது என்பதன் அடையாளம் இது. இப்போது கட்டப் பட்டுள்ள தேவாலயம், கால்பந்து விளையாட்டுத்திடல் அளவு பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதுவே உலகில் இப்போது மிகப் பெரிய தேவாலயமாகத் திகழ்கிறது. ஆடம்பரமாகவும், அலங்காரமாகவும் அமைந்துள்ள இத்தேவாலயத்தைக் கட்ட 500 மில்லியன் டாலர் (உருபா 2,250 கோடி) செலவாயிற்று. இத்தொ கையில் பெரும் பகுதியை அரசு அளித்தாக இதன் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

நோபல் பரிசு பெற்ற இருவர் உட்பட, இரஷ் யாவின் மிகச் சிறந்த விஞ்ஞானிகள் ஒரு குழுவாக, நான்கு ஆண்டுகளுக்குமுன், அப்போது குடியரசுத் தலைவராக இருந்த புதினுக்கு ஒரு திறந்த மடல் எழுதி னார்கள். அம்மடலில், “இரஷ்ய சமூகத்தில் மதவழிப் பட்ட சிந்தனைப் போக்கு மேலோங்கி வருகிறது. திருச்சபை, பொதுவாழ்வில் அனைத்துத் துறைகளி லும் ஊடுருவி ஆதிக்கம் செலுத்துகிறது. இந்நிலை மிகவும் கவலையும் அச்சமும் தருவதாகும்” என்று எழுதியிருந்தனர். இத்தகைய மத ஆதிக்கப் போக்கு, 2009 சனவரியில் இரஷ்ய நாட்டின் திருச்சபையின் தலைவராக கிரில் பொறுப்பேற்றது முதல் அதிகமாகி வருகிறது.

65 அகவையினரான தலைமை மதகுரு கிரில் சிறந்த நாவன்மை கொண்டவர். அதனால் தொலைக் காட்சி மூலம் நீண்ட சொற்பொழிவுகளையும், நிகழ்ச் சிகளையும் நடத்தி, பல இலட்சம் இரஷ்யர்களின் மனங்களைக் கவர்ந்துள்ளார். அதிபர் மெத்வதேவிடம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி திருச்சபை யின் அதிகாரத்தைப் பெருக்கியுள்ளார். மேலும் திருச் சபைக்கும் அரசுக்கும் இடையில் நெருக்கமான உறவை உருவாக்கியிருக்கிறார். புதினைவிட மெத்வதேவ் திருச் சபையின் தீவிர ஆதரவாளராக இருக்கிறார். இறையி யல் கல்லூரிகளுக்கு, மதச்சார்பற்ற பல்கலைக்கழ கங்களுக்கு இணையான தகுதிநிலையை அரசு அளித் ததற்கு அதிபர் மெத்வதேவே மூலகாரணமாவார். 10ஆம் நூற்றாண்டில் கிவ் இளவரசர் ஓலோடிமயர் தன் குடிமக்களுக்கு ஞானஸ்நானம் செய்து கிறித்தவ மதத்திற்கு மாற்றிய நாள் கடந்த ஆண்டு முதல் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, இரஷ்யாவில் கிறித்தவ மதம் சார்ந்த இரண்டு நாள்கள் மட்டும் அரசு விடுமுறையாக உள்ளன. வேறு மதங்களின் ‘திருநாள்களுக்கு’ விடுமுறை இல்லை. 2010 திசம்பரில் கடும் எதிர்ப்புக்கிடையே அரசு, திருச் சபையின் சொத்துரிமை தொடர்பான ஒரு சட்டத்தை இயற்றியது. இதன்படி, சோசலிச ஆட்சிக்காலத்தில் திருச்சபைகளிடமிருந்து கைப்பற்றிய நிலங்களையும் பிற உடைமைகளையும் திருப்பி அளிக்க வேண்டும். எனவே 1917 புரட்சிக்கு முன், இரஷ்யாவில் முதலாவது பெருநிலவுடையாளராகத் திருச்சபை இருந்தது போன்ற நிலை மீண்டும் ஏற்படவுள்ளது. பொதுவுடைமைத் தத்துவம் மீண்டும் தலைதூக்காமலிருக்க, மதப் பழைமை வாதத்தைப் பரப்புவதற்காகவும், மதத் தலைமை அளித்துவரும் அரசியல் ஆதரவுக்காகவும் திருச் சபைக்கு நன்றிக்கடனாக, சொத்துகளை மீட்டுத் தருவ தற்கான சட்டம் உருவாக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இச்சட்டம் அறிஞர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், முன்பு திருச்சபைகளாக இருந்த இடங்களில்தான் அருங்காட்சியகங்களும், ஆவணக் காப்பகங்களும் அமைந்துள்ளன. இச்சட்டத் தின்படி இவ்விடங்களைக் காலி செய்து திருச்சபை களிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் மதம் தொடர் பான கலைப் பொருள்களையும் அளிக்க வேண்டும். மத்திய காலத்திய, மதம் சார்ந்த அழகிய கலைப் பொருள்களையும், ஓவியங்களையம் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான சூழல் திருச்சபையில் இருக்காது; மேலும் அவற்றைப் பாதுகாப்பதற்கேற்ற தொழில் நுட்பப் பயிற்சி பெற்றவர்களும் திருச்சபையில் இல்லை என்று கலைப்பொருள் வல்லுநர்கள் தம் கவலை யைத் தெரிவித்துள்ளனர்.

பள்ளிகளில், பழைய மரபுகள் - பண்பாடுகள் குறித்த வகுப்புகள் நடத்தப்பட வேண்டுமென்ற திருச் சபையின் நீண்டநாள் கோரிக்கையை அதிபர் மெத்வ தேவ் ஆதரித்தார். இரஷ்யாவில் சில மாநிலங்களில் ‘நீதிபோதனை வகுப்புகள்’ விருப்பப் பாடமாக உள்ளன. அய்ந்து மாநிலங்களில் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிற மதங்களைச் சார்ந்த பெற்றோர்கள் இதை எதிர்க் கின்றனர்.

கடந்த சூலை முதல் கிழமையில் பாதுகாப்பு அமைச்சகம் ஓர் அறிவிக்கை வெளியிட்டது. அதில், குடியரசுத் தலைவரின் ஆணையின்பேரில், இவ் வாண்டு இறுதிக்குள் கிறித்தவ சமய குருக்கள் படைப் பிரிவில் சேர்க்கப்படுவார்கள்; இராணுவப் பயிற்சிப் பள்ளி ஒன்றில் இவர்களுக்கு படைப்பயிற்சி அளிக்கப் படும் என்று கூறப்பட்டுள்ளது. இவர்கள் இராணு வத்தில் மதகுருவாகப் பணியாற்றுவார்கள்.

1917 புரட்சிக்குமுன், கிறித்தவ மதம் அரச மதமாக இருந்தது. இப்போது இரஷ்யாவில் கிட்டத்தட்ட அதே நிலையில் தான் உள்ளது. ஆனால் ஒரு பெரிய வேறு பாடு இருக்கிறது. ஜார் ஆட்சிக்காலத்தில் மதத்தலை வராகவும் ஜார் மன்னரே இருந்தார். அதனால் திருச் சபை அரசனுக்குக் கட்டுப்பட்டு இருந்தது. ஆனால் இன்றோ திருச்சபை, அரசு அல்லாத மாபெரும் ஆற்றல் வாய்ந்த நிறுவனமாக விளங்குகிறது.

2011 பிப்பிரவரியில் நடைபெற்ற இரஷ்ய பிஷப் புகள் கூட்டத்தில் தலைமை மதகுரு கிரில், திருச்சபை பொது வாழ்வின் எல்லாத் துறைகளிலும் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் என்று கூறினார். உள்ளாட்சித் தேர்தல்களிலும், மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் பிஷப்புகள் வேட்பாளராகப் போட்டியிடலாம் என்று இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. குறிப்பாக, திருச் சபைக்கு எதிராக வாக்குரிமையைப் பயன்படுத்த வாய்ப் புள்ள இடங்களில் பிஷப்புகள் தேர்தலில் போட்டியிட வேண்டும்.

கிரில்லுக்கு முன் தலைமை மத குருவாக இருந்த இரண்டாம் அலக்சி, மதம் தொடர்பானவற்றில் மட்டு மே தன் கருத்தைச் செலுத்தி வந்தார். ஆனால் கிரில், ஓர் அரசியல் தலைவர்போல் நடந்து கொள்கிறார். ஊர்திகளுக்கான தொழில்நுட்ப ஆய்வுகள் குறித்த புதிய விதிகள் முதல் உலக அரசியல் வரை தன்னு டைய கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். இரஷ்ய சமூக வல்லுநர் குழுவின் ஆய்வின்படி, இரஷ்யாவில் மிகவும் செல்வாக்கான பத்து அரசியல்வாதிகளில் கிரில்லும் ஒருவராக இருக்கிறார். மெத்வதேவ், புதின் இருவரைக் கொண்டதாக உள்ள அதிகார மய்யம், கிரில்லையும் சேர்த்து, மூவரைக் கொண்ட அதிகார மய்யமாக படிப்படியாக மாறி வருகிறது என்று சில அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஸ்டானிஸ்லாவ் என்கிற அரசியல் ஆய்வாளர், “தலைமை மதகுரு கிரில், முழு சுதந்தரமான அரசியல் வாதியாக இருக்கிறார். நாட்டைத் தலைமை தாங்கி நடத்திச் செல்வதற்கான தகுதியும் திறமையும் அவருக்கு இருக்கிறது. அந்தப் பொறுப்பை ஏற்குமாறு எப்போது அழைக்கப்படுவார் என்பது மட்டுமே வினாக் குறியாக உள்ளது” என்று கூறியிருக்கிறார்.

இதை ஏற்கும் வகையில்தான், கிரில்லின் மகிழுந் தில் ஒளிவெள்ளம் பாய்ச்சும் விளக்குகளும், கிரிம்ளின் பாதுகாப்புப் படையும் உள்ளனவோ!

‘Rise of the Russian Orthodox Church’ எனும் தலைப்பில் விளாதிமிர் ரதியுயின் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.

நன்றி : ‘தி இந்து’, 9.7.011

தமிழாக்கம் : க. முகிலன்

Pin It