03.06.1924-இல் திருவாரூரை அடுத்த திருக்குவளை என்னும் சிற்றூரில் பிறந்த கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் 94 ஆண்டுகள் 65 நாள்கள் சிறந்த போராளியாக வாழ்ந்து, 7.8.2018 செவ்வாய் மாலை 6.10 மணிக்கு மறைவுற்றார்.

2018 சூலை 27 இரவு ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்தியக் குடிஅரசுத் தலைவர், ராகுல் காந்தி முதலானோர் கலைஞர் உயிரோடு இருக்கும் போதே நேரில் வந்து அவரைப் பார்த்தனர். காவேரி மருத்துவக் குழுவினர் எவ்வள வோ போராடியும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் 27.7.1969 இல் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 7.8.2018 முடிய 49 ஆண்டுகள் 10 நாள்கள் தி.மு.க.வின் தலைவராக மிக வெற்றி கரமாகச் செயல்பட்டார்; அக்கட்சியை மக்கள் நாயக நெறியில் கட்டிக்காத்தார்.

periyar karunadhini 450தாம் 1969ஆம் ஆண்டு பிப்ரவரியில் தமிழக முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார். அவர் பதவி வகித்த காலத்தில் தந்தை பெரியார் 1973 திசம்பர் வரை என்னென்ன கோரிக்கைகளை முன்வைத்தாரோ, அவற்றை முழு மனதோடு ஏற்று நிறைவேற்றினார்.

காட்டாக, இடஒதுக்கீடு கொள்கை. தமிழக முதலமைச்சராகத் திகழ்ந்த கு. காமராசர் எல்லா மதங்களையும் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோருக்கு 25 விழுக்காடும், பட்டியல் வகுப்பினருக்கு 16 விழுக்காடும் ஆக 41 விழுக்காடு மட்டுமே வழங்கினார்; மு. பக்தவத்சலம் காலத்திலும் 41 விழுக்காடு இடஒதுக்கீடே தொடர்ந்தது.

இடையில், உச்சநீதிமன்றம் கர்நாடக அரசு 50 விழுக்காட்டுக்குமேல் தந்த இடஒதுக்கீடு செல்லாது என்றும், இடஒதுக்கீடு பெறும் மூன்று வகுப்பாருக்கும் சேர்த்து, 50 விழுக்காட்டுக்குக் குறைவாகவே தரப்பட வேண்டும் என்றும் 1962இல் தீர்ப்பு அளித்தது.

தந்தை பெரியார் அதைச் சுட்டிக்காட்டி, தமிழகத் தில் பிற்படுத்தப்பட்டோருக்குத் தரப்படும் இடஒதுக்கீட்டில் 8 விழுக்காடு மேலும் கூட்டி, அதைப் பிற்பட்டோருக்கு வழங்கலாமே எனக் கோரினார்.

அதை அப்படியே ஏற்றுக்கொண்ட கலைஞர், 1969 நவம்பரிலேயே, ஏ.என். சட்டநாதன் தலைமையில் மூவர் கொண்ட குழுவை அமைத்தார். அக்குழுவும் 8 விழுக்காடு சேர்த்திடப் பரிந்துரைத்தது.

இடையில் தமிழகப் பட்டியல் வகுப்பினர் மக்கள் தொகையில் 16 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாக உயர்ந்துவிட்டது. எனவே, தமிழகப் பிற்படுத்தப்பட் டோருக்கு 25ரூ + 6ரூ = 31ரூ ம்; பட்டியல் வகுப்பி னருக்கு 16ரூ + 2ரூ = 18ரூ வழங்கி கலைஞர் ஆணை பிறப்பித்தார்.

அதேபோல், “அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்குச் சட்டம் இயற்ற வேண்டும் - இல்லாவிட்டால் போராட்டம் நடத்திச் சிறைக்குப் போவேன்” எனத் தந்தை பெரியார் 1969 அக்டோபரில் கோரிக்கை வைத்தார். அதை முன்வைத்து 1973 திசம்பர் 8, 9இல் சென்னையில் சமூக இழிவு ஒழிப்பு மாநாடு நடத்தினார். ஆயினும் 1971-லேயே அதற்கான சட்டத் தைக் கலைஞர் நிறைவேற்றினார். 1972இல் அச்சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

தமிழ்நாட்டில் தனியாரிடம் இருந்த பேருந்துகளை நாட்டுடைமையாக்கினார்.

தந்தை பெரியார் 24.12.1973இல் மறைவுற்றார். தந்தை பெரியாரின் உடலைத் தமிழக அரசு மரியா தையுடன் அடக்கம் செய்யவேண்டும் என்று கலைஞர் முடிவெடுத்தார்.

தலைமைச் செயலாளரும் மற்ற உயர் அதிகாரி களும் “பெரியார் எந்த அரசுப்பதவியிலும் இருக்கவில் லையே” என்றனர். “காந்தியார் எந்தத் பதவியிருந் தார்? அவர் உடலை அரசு மரியாதையுடன் இந்திய அரசு அடக்கம் செய்ததே”  என்று திருப்பிக் கேட்டார், கலைஞர். “மேலும் என் பதவி போனாலும் போகட்டும்; கவலை இல்லை; ஏற்பாடு செய்யுங்கள்” என ஆணை யிட்டு துணிவாளர் அவர்.

பெரியாரின் எழுத்து, பேச்சு எல்லாவற்றையும் 1971-1973இல் நான் தொகுத்தேன். திருச்சி சிந்தனை யாளர் கழகத்தார் 1.7.1974-இல் வெளியிட்டனர். முதல் தொகுதியை முதலமைச்சர் கலைஞர் வெளி யிட்டார். நிற்க.

1975, 1976-இல் பிரதமர் இந்திராகாந்தி அவசர கால ஆட்சியை அமுல்படுத்தினார். அதைக் கடுமை யாக எதிர்த்து, “முரசொலி”யில் நாள்தோறும், படிப் போரின் நாடி நரம்புகளைத் தூண்டிவிடும் தன்மை யில் கட்டுரைகளை எழுதினார்.

31.1.1976இல் தி.மு.க. ஆட்சியைக் கலைத்தார், இந்திராகாந்தி.

1977இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில், தி.மு.க. தோல்வி அடைந்தது. எம்.ஜி.ஆர். தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது.

இந்திய அளவில் இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரசு தோற்றது; மொரார்ஜி தேசாய் தலைமை யிலான சனதா கூட்டணி வெற்றி பெற்றது.

நானும் என்னை ஒத்தவர்களும் 1975 நவம்பரில் திராவிடர் கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டோம். 8.8.1976இல் தனி அமைப்பைத் தோற்றுவித்தோம்.

1977இல் பதவிக்கு வந்த அ.தி.மு.க. அரசு, 1979இல் இந்திய அரசால் கலைக்கப்பட்டது. 1979இல் மீண்டும் நடைபெற்ற பொது தேர்தலிலும், அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அப்படிப் பொறுப்பேற்ற எம்.ஜி.ஆர். 24.12.1987 வரை முதலமைச்சராக இருந்தார்.

எம்.ஜி.ஆர். 1979 சூனில், “பிற்படுத்தப்பட்டோரில் பொருளாதாரத்தில் வளர்ந்த பிரிவினர் இடஒதுக்கீடு பெற உரிமை அற்றவர்கள்” என ஆணையிட்டார். அதை எல்லாக் கட்சியினரும் எதிர்த்தனர்.

ஆனால் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடை மைக் கட்சியினரும் சில தோழமை அமைப்பினரும் “தமிழ் நாட்டு மக்கள் தொகையில் 67.5 விழுக்காடு பிற்படுத்தப்பட்டவர்கள். அவர்களுக்கு 60 விழுக்காடு இடஒதுக்கீடு வேண்டும்” எனக் கோரினோம். பண்ருட்டி ச.இராமச்சந்திரன் ஆலோசனைப்படி, 1.2.1980இல் தமிழகப் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காடு தனி ஒதுக்கீடு அளித்து எம்.ஜி.ஆர். ஆணையிட்டார்.

வன்னியர் சங்கத்தின் சார்பில் மருத்துவர் ச. இராமதாசு, அவர்களுக்குத் தனி இடஒதுக்கீடு கோரிப் போராடினார். எம்.ஜி.ஆர். அதுபற்றிக் கவலைப்பட வில்லை.

டாக்டர் கலைஞர் 1989 தேர்தலில் வெற்றி பெற்றார். உடனே தமிழகப் பிற்படுத்தப்பட்டோருக் கான ஒதுக்கீடு 50 விழுக்காட்டில் 30 விழுக்காடு பிற்பட்டோருக்கும், 20 விழுக்காடு மிகப் பிற்பட்டோ ருக்கும் எனப் பிரித்து அளித்தார். இது மிகப்பிற்பட் டோருக்கு மிகப் பெரிய உதவி. அடுத்து பட்டியல் வகுப்பினருக்கு உள்ள 18 விழுக்காடு அன்னியில், தமிழகப் பழங்குடிகளுக்கு 1 விழுக்காடு தனியே வழங் கினார். கிராமப்புற மாணவர்களுக்கு 15 விழுக்காடு ஒதுக்கீடு அளித்தார்.

இந்தியாவிலேயே எந்த மாநிலத்தாரும் செய்யத் துணியாததை - ஆணுக்கும் பெண்ணுக்கும் குடும்பச் சொத்தில் சமபங்கு அளித்துச் சட்டம் செய்தார்.

பெண்களுக்குக் கல்வியிலும், அரசு வேலையிலும் 30 விழுக்காடு தனி ஒதுக்கீடு வழங்கினார். உள் ளாட்சிப் பதவிகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு வழங்கினார்.

முசுலிம்களுக்கும், கிறித்துவர்களுக்கும், அருந்ததியர் களுக்கும் உள் ஒதுக்கீடு வழங்கினார்.

சாதி ஒழிப்புக்குத் தூண்டுதல் செய்யும் வகையில், 237 இடங்களில் “பெரியார் நினைவு சமத்துவபுரம்” அமைத்தார். அதில், 40 விழுக்காடு வீடுகளைத் தீண்டப்படாத வகுப்பினருக்கும் 25 விழுக்காடு வீடுகளைப் பிற்படுத்தப்பட்டோருக்கும் ஒதுக்கினார்.

பரிதிமாற் கலைஞரும், மறைமலை அடிகளும், பாவாணரும், தமிழ்மொழி அறிஞர்களும் விரும்பிய வண்ணம் “செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத் தைச்” சென்னையில் அமைத்தார்.

“குறளோவியம்” தீட்டினார். திரைப்படத் துறைக்குக் கதை-வசனம் எழுதிப் புகழ் பெற்றார். 1.1.2000இல் கன்னியாகுமரியில் வள்ளுவருக்கு 133 அடி உயரச் சிலையை நாட்டினார். சென்னையில் “வள்ளுவர் கோட்டம்” அமைத்தார்.

23.3.2010இல் சென்னையில் அண்ணா அறி வாலயத்தில் “பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் - விரிவாக்கம் செய்யப்பட்ட 20 தொகுதிகளை” வெளியிட்டார்.

கலைஞர் மு.கருணாநிதி, திராவிட இயக்கத்துக்குக் கெட்டியான அடித்தளத்தை நாட்டிச் சென்றுள்ளார்.

தி.மு.க.வினரும், அ.இ.அ.தி.மு.க.வினரும், பெரியார் கொள்கையினரும், தமிழக மக்களும், உலகெங்கும் வாழும் தமிழர்களும் என்றும் கலைஞர் மு. கருணாநிதி அவர்களை மறக்கமாட்டார்கள். வாழ்க! வளர்க! கலைஞர் மு. கருணாநிதியின் புகழ்!

Pin It