சங்கத் தமிழை

எங்களைப் போல் பாமரர்க்கு

எளிதாகப் புரியவைத்த

தங்கத் தமிழனே!

தாலேலோ!

தமிழ்த்தாய் பெற்றெடுத்த

தவப்புதல்வனே தாலேலோ!

அவளை

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கவைத்த

பெம்மானே தாலேலோ!

குறுமுனியாம் வள்ளுவனை

குவலயத்தோர் நிமிர்ந்து பார்க்க

குமரியிலே வெகு உயரத்தில் வைத்திட்ட

கோமகனே தாலேலோ!

கண்ணகிக்கு சிலை வைத்த

காவலனே தாலேலோ!

செம்மொழிக்கு சீர் சேர்த்த

பாவலே தாலேலோ!

சாமானியனும்கூட

சரித்திரம் படைக்கலாம்

சரித்திரமாய் ஆகலாம் என

சாதித்துக் காட்டிய சான்றோனே தாலேலோ!

ஓயாமல் உழைத்திட்ட உதயசூரியனே

தாலேலோ!

மீளா உறக்கத்தில் ஆழ்ந்திட்டாய்

தாலேலோ!

வங்கக்கடலருகே அடங்கும் பொங்குதமிழே

தாலேலோ!

அண்ணனருகே அமைதி பெறப்போகும் தம்பியே

தாலேலோ!

போராடி இடம்பெற்ற பொன்மணியே

தாலேலோ!

சீராட்டி, உன்னை உறங்கவைப்பாள் கடலன்னை

தாலேலோ!

காலப்பெருவெள்ளம் கரைத்திட்ட உன்னை

மாளாத்துயருடன் தம்பிகள் மனதிலே வைத்திருப்பர்

அன்னை தமிழ் இருக்கும் வரை

அண்ணலே! நீ நிலைத்திருப்பாய்

உன்னிடம் உனக்குண்டு

கவலைப்படாமல் கடலலை தாலாட்ட

கண்ணுறங்கு தாலேலோ!

Pin It