“தென் திசையைப் பார்க்கின்றேன்;

என் சொல்வேன் - என்றன்

சிந்தையெல்லாம், தோள்களெல்லாம்

பூரிக்குது அடடா!”

புதைக்கப்பட்ட இராவணத் தமிழ் மாவீரத்தை, தமிழர்கள் இனம் கண்டு கொண்டால், தமிழர் ஏற்றம் பெறுவர் என்ற எண்ணத்திலேதான், தன்னுடைய சிந்தையெல்லாம் தோள்களெல்லாம் பூரிப்பதாகச் சொற் களிலே முறுக்கேற்றி முழக்கமிட்டார் புரட்சிக்கவிஞர்.

மாற்றானின் மனைவியை விரும்பியவன் எனப் பொய்க்கவிதை புனைந்து இராவணனுடைய உற்றார் உறவினர்களையே அவனுக்கு எதிராகப் போராடுபவர் களாக முன் நிறுத்தியது ஆரியப் பார்ப்பனியம்.

ஆரிய மாயைக்கு ஆட்பட்டு, நாட்டைக் கெடுக்கும் ஊற்றைச் சடலங்களுக்கு ஊக்கமளித்துவரும் தீய சக்தியாய், கோடாரிக் காம்பாய்த் தமிழினத்தை ஆரியத் துக்கு, ஆரியர்க்கு அடிமையாக்கத் தமது தமிழ் கவித் திறனைக் கருவியாகக் கொண்டார் கம்பர்.

தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தொடங் கப்படுவதற்கு முன்பே கம்ப இராமாயணம் குறித்துக் கருத்துப் போர் தொடங்கியது. 1908-ல் வெள்ளக்கால் ப. சுப்பிரமணிய முதலியார் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இக்கருத்துப் போர் பா.வே. மாணிக்க நாயக்கர், ஜே.எம். நல்லசாமி பிள்ளை, மறைமலை அடிகள், எம்.எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை அவர்களின் ஆய்வுகளால் தொடர்ந்து விரிவாக்கப்பட்டது.

சுயமரியாதை இயக்கத் தொடக்கக் காலத்தில் தந்தை பெரியார் அவர்கள் தம்பேச்சு, எழுத்து மூலமாக நடத்திய கருத்துப் போர், மக்கள் மனதில் நல்ல தெளிவை உண் டாக்கியது.

1944-ல் கம்பராமாயணம் குறித்து அறிஞர் அண்ணாவுக்கும், நாவலர் சோமசுந்தர பாரதியார், இரா.பி. சேதுப்பிள்ளை ஆகியோருக்கும் நடந்த சொற் போரும், அதனைத் தொடர்ந்து அப்பேச்சுகளின் தொகுப் பாக வெளிவந்த “தீ பரவட்டும்” எனும் நூலும் தமிழ் மக்களிடையே பரப்பரப்பை ஏற்படுத்தியது.

1946-ல் “செந்தமிழ்க் குழந்தை செப்பினான் அறிவுல கொப்பு மாறே” என்று புரட்சிக் கவிஞர் வழங்கிய சிறப்புப் பாயிரத்தோடு, இராவண காவியம் வெளி வந்தது.

கம்பனின் இராமாயணத்தை இராவண காவியமாக மாற்றியமைத்ததின் மூலம் செந்மிழ்ப் பெருமக்களின் சிந்தனைத் தீயை நெய்யூற்றி வளர்த்திட்டார் புலவர் குழந்தை அவர்கள்.

தமிழகத்தில், கம்பருக்குப்பின் எட்டு நூற்றாண்டு களுக்குப் பின், வெளிவந்த இராவண காவியம் தேனாற்று வெள்ளம் - கற்கண்டுக் கட்டி.

ஐந்து காண்டங்கள் - 57 பாடல்கள், 3100 பாடல் கள் உள்ளடக்கம் கொண்ட இராவண காவியம் ‘தமிழ்’ ‘தமிழ்’ என்றே முழங்குகின்றது.

இக்காவியம் இயற்றத் துணிவைத் தந்தது யார்?

கம்பர் திருநாளும், பெருநாளும் கம்பர் மாநாடும், கம்பராமாயணக் கருத்தரங்கும், பாராட்டரங்கும், பட்டி மன்றமும், விரிவுரையும், விளக்கவுரையும் நடத்தப் பெறும் அத்தகு சூழ்நிலையில், ‘இராவண காவியம்’ என்னும் பெயரில் ஒரு பெருங்காவியம் செய்யும் அத்தகு உணர்ச்சியினையும் உள்ளத் துணிவினை யும் உண்டாக்கியவர் தன்மான இயக்கத் தந்தை பெரியார்  அவர்களே!

1948-ல் காங்கிரசு ஆட்சியில் இப்பெருங்காவியத் திற்கு அளித்த பரிசு என்ன?

ஆம்! இராவண காவியம் எனும் இயல் நூலுக்கு விதிக்கப்பட்ட தடை தான்! கலைஞர் முதல்வராக இருந்த போது 17.5.1971-ல் இத் தடை நீக்கப் பட்டது.

புலவர் குழந்தை அவர்களின் சொந்த ஊர் கொங்கு நாட்டுக் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஓலவலசு என்னும் சிற்றூராகும். ஓலவலசுப் பண்ணையக்காரர் எனும் பழங்குடியில் முத்துசாமிக் கவுண்டருக்கும், சின்னம்மையாருக்கும் 1.7.1906 அன்று பிறந்தார். இவர் பள்ளியில் படித்தது எட்டு மாதங்களே! பத்து வயது சிறுவனாக இருக்கும் போதே ஒரு பாட்டைப் பிறர் பாடக் கேட்டால் உடனே இவர் அப்பாட்டின் ஓசை யில் புதுப்பாட்டினைப் பாடிடும் திறனை இயற்கையாகப் பெற்றிருந்தார்.

இவர் ஊரின் சுற்றுப்புறங்களில் தமிழ்ப் புலவர் எவருமில்லாத நிலையில், தாமாகவே முயன்று, கற்று தமிழில் புலமை பெற்றார். தாமாகவே படித்து 1934-ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்றார்.

1926-ல் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக் கத்தில் சேர்ந்து பெரியாரின் அணுக்கத் தொண்ட ரானார். பெரியார் சீடர், கருப்புச் சட்டைக்காரர் என்று கூறுமளவுக்கு கட்சிப் பற்றுள்ளவராக இருந்தார். 1930-ல் ஞான சூரியன் ஆசிரியரான சாமி சிவானந்த சரசுவதி என்பவருடன் கடவுள் இல்லை என நான்கு நாள்கள் சொற்போர் நடத்தி, வெற்றி வாகை சூடினார்.

1938-1948 ஆண்டுகளில் நடந்த இந்த எதிர்ப்புப் போர்களில் பெரும் பங்காற்றினார்.

1965-ல் கோவையில் காங்கிரசு மாநாடு நடந்தது. இந்தியால் தமிழர்க்கு ஏற்படும் கேடுகளை விளக்கி, ‘இந்தி ஆட்சி மொழி ஆனால்’ எனும் நூலை இயற்றி கோவை மாநாட்டில் வழங்கினார்.

1946 முதல் 1950 வரை “வேளாண்” எனும் மாத இதழை நடத்தினார். விதவை மணம், கலப்பு மணம், சீர்திருத்த மணம் செய்யுமளவுக்கு கொங்கு வேளாள இனத்தாரிடையே விழிப்புணர்ச்சியை ஏற் படுத்தினார்.

பெரியார் அவர்கள் 1949-ல் புலவர்கள் மத்தியிலிருந்த திருக்குறளை, மக்களிடையே பரப்பிட வேண்டி, பிராட்வே திரையரங்கு அருகில் திருக்குறள் மாநாட்டினை நடத்தினார். பகுத்தறிவுக்கேற்ப, தமிழ்மொழி பிறழாமல் - திருக்குறளுக்கு உரை எழுத பெரியார் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட குழுவில் நாவலர் சோமசுந்தர பாரதியார் முதலிய அய்வருள் புலவர் குழந்தையும் ஒருவர்.

புலவர் குழந்தை அவர்கள் தனித்து “திருக்குறள் குழந்தையுரை” என்னும் உரையை - இருபத்தைந்து நாள்களில் எழுதி முடித்து, பெரியார் இட்ட பணியை நிறைவு செய்தார்.

பவானி நாட்டாண்மைக்கழக உயர்நிலைப் பள்ளி யில் முப்பத்தெட்டு ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். புலவர் குழந்தையின் வாழ்க்கைத் துணைவி யார் முத்தம்மையார் ஆவார். இவர்கட்கு சமத்துவம், சமரசம் என்னும் இரு பெண்மக்கள் பிறந்தனர்.

பெரியார் நூலக வாசக வட்டத்தினர் - சிலம்பொலி சொல்லப்பனாரைக் கொண்டு “இராவண காவியத் தொடர் சொற்பொழிவை” நடத்தினர். தமிழ், தமிழினம், தமிழ்நாடு என்பனவற்றை முன்னோடியாகக் கொண்டு தமிழ்ப் பெருங்காவியமாம் “இராவண காவியத்”தை அளித்த புலவர் குழந்தை 22.9.1972-ல் மறைந்தார்.

வளர்க அவர் தொண்டு! வாழ்க அவர் புகழ்!

- தொ.எழில்நிலவன், களமருதூர்

Pin It