உயிர்ப் பிறவிகளில் தாங்கள் வாழும்போது மட்டும் அல்லாமல் மாண்ட பிறகும் கூட மட்டில்லாப் பெருமை தருபவை ஓர் அறிவே உடையவையாகக் கணிக்கப் பெற்றுள்ள மரங்களே!

அவற்றுக்கு இணையான ஈகை வள்ளல்களாக - ஈகச் செம்மல்களாக ஆறு அறிவு அமைந்தவர்களாகப் பெருமிதம் கொள்ளும் மனிதப் பிறவிகளைக் கூடச் சொல்ல இயலாது. ஏனெனில் கண் போன்ற மிகச் சில உறுப்புகளைத் தவிர, மனித உடல் எந்த வகையிலும் பயன்படாமல் அழுகி அழியக் கூடியது தானே!

இந்நிலக்கோளத்தில் நீண்ட நெடுங்காலமாகத் தோன்றி மறைகின்ற பல்லாயிரம் - ஏன், பல இலட்சம் கோடி மனிதர்களுள் தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையால் மட்டுமன்றித் தங்களின் சாவினாலும், தாங்கள் ஏந்திய கொள்கைகளுக்குத் தனி மாட்சிமை தந்து, மிகச் சிலராவது உலக வரலாற்றில் அணையாத ஒளி விளக்குகளாக வழிகாட்டி நிற்கிறார்கள் என்பதும் உண்மையே!

இத்தகைய உயரிய கொள்கைக்காக உயிரையே விலையாகக் கொடுத்த மாமனிதர்களின் பட்டியலில், மதிப்புமிக்க இடத்தினில் இருக்கத்தக்கவரே, தமிழ் மண்ணில் தோன்றி, தந்தை பெரியார் அவர்களின் திராவிடர் கழகத்தில் தம்மை இணைத்துக் கொண்டு பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்புரை செய்தமைக் காகப் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட உடை யார்பாளையம் ஆசிரியர் வேலாயுதம் அவர்கள்.

ஆசிரியர் வேலாயுதம் அரியலூர் மாவட்டம், செயங்கொண்டம் அருகேயுள்ள கரடிக்குளம் என்னும் சிற்றூரில் சாமிநாதன் என்பவருக்கும் பொன்னாச்சி அம்மையாருக்கும் அய்ந்தாவது ஆண் குழந்தையாக 1910ஆம் ஆண்டு சூலைத் திங்கள் முதல் நாள் அன்று பிறந்தார். இன்று அவருடைய 104 ஆவது பிறந்தநாள்!

செயங்கொண்டத்தில் தொடக்கப் பள்ளியில் சேர்ந்து, உடையார்பாளையம் நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, திருச்சியில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் படித்தார். அத்துடன் நில்லாமல் சிதம்பரம் சென்று அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தில் உடற்பயிற்சி ஆசிரியருக்கு உரிய கல்வியும், சாரணர் பயிற்சியும் பெற்றார்.

வேலாயுதம் அவர்கள் ஆசிரியர் பணியை ஓர் அருமையான அறப்பணியாகவும், மக்களை மடமை இருளிலிருந்து மீட்கும் ஒரு படைக் கருவியாகவும் கருதியே தமது கல்விக் கடமையை ஆற்றினார். அறியாமை இருட்டுப் படர்ந்திருந்த அவல நிலையில் தாம் அலுவல் மேற்கொண்ட ஊர்களில் எல்லாம் பள்ளி மாணவர், மாணவிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு முழு மூச்சாகப் பாடுபட்டார், வேலாயுதம். ஆடு, மாடு களை மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர், சிறுமியர் பலரையும் தாமே நேரில் போய்ப் பள்ளிக்கு அழைத்து வந்திருக்கிறார். இரவில் பெற்றோர்களைத் திரட்டிக் கூட்டங்கள் கூட்டியும் நாடகங்கள் நடத்தியும் கல்வியின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

உலகின் முதல் பண்பட்ட மொழியான தமிழ் மற்ற மொழிகளிலிருந்து சொற்களைக் கடன் வாங்கா மலே தனித்தூய்மையுடன் தழைக்க வல்ல செம்மொழி என்று டாக்டர் கால்டுவெல் அவர்கள் முதன் முதலில் தமது மொழிகள் ஒப்பாய்வு முடிவை அறிவித்தார்.

தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கொள் கைகளைப் பரப்புரை செய்த அளவில் நின்றுவிடாமல் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் அவர்களின் தூய தமிழ் வளர்ப்பு இயக்கம் சுடர் வீசவும் எத்தனை ஆர்வத் துடிப்போடு அரும்பணிகள் ஆற்றினார், ஆசிரியர் வேலாயுதம்!

வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார் தோற்று வித்த ‘சன்மார்க்க சங்கம்’. பார்ப்பனரின் சாதி முறை யையும் இந்துமத உருவ வழிப்பாட்டையும் எதிர்த்து அவர் பாடியுள்ள திரு அருட்பா பாடல்கள் இவரைப் பெரிதும் கவர்ந்துள்ளன.

தந்தை பெரியார் அவர்களின் ‘குடிஅரசு’ மற்றும் விடுதலை இதழ்களைப் படிக்க நேர்ந்ததும் அவர் தோற்றுவித்த ‘சுயமரியாதை இயக்கம்’ என்பதன் - துணிச்சல் மிக்க வீரராகவே மாறிவிட்டார் வேலாயுதம். 1938-ஆம் ஆண்டு பகுத்தறிவுப் பகலவன் தலைமை யேற்ற முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம், இந்த 28 அகவை இளம் ஆசிரியரை, அந்த ஈரோட்டு அரிமாவின் அழுத்தமான உண்மைத் தொண்டராகவே-போராடும் புரட்சிப் பிறவியாகவே ஆக்கிவிட்டது.

பெண்ணுரிமைக்குப் போராடுவதிலும் தம் தலைவர் பெரியார் அடிச்சுவட்டிலேயே பீடுநடை போட்டார் வேலா யுதம். பொது இடங்களில் ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் பேச முடியாதபடி ஊமைகளாய் வீட்டுக்குள் ளேயே ஒடுக்கப்பட்டிருந்த அந்தக் காலத்தில், தம்முடைய மூத்த மகள் மங்கையர்க்கரசி சிறுமியாக இருந்த போதே அவரை மேடை ஏற்றிப் பேசச் செய்தார். அவரது தலைமுடிக்குக் கிராப் வெட்டி விட்டார். அவர் மிதிவண்டி ஓட்டக் கற்றுக்கொடுத்தார். கணவரை இழந்த கைம்பெண்களின் மறுமணத்தையும், வெவ் வேறு சாதியினரின் கலப்பு மணத்தையும் கடும் எதிர்ப்புக்களை மீறி இவர் நடத்தி வைத்தார்.

புரட்சிக் கொள்கைகளைப் பரப்பியதன் மூலம் தங்கள் இனத்தின் ஆதிக்க வேருக்கே வேட்டு வைக் கிறாரே என்று ஆரியர் நெஞ்சத்தில் வேலாயுதம் மீது வெறுப்புத் தீ கொழுந்துவிட்டது. தீண்டாமைக் கொடுமை கொண்ட ‘வருண பேத’ சாதி முறைக்கும், இந்து மதத்தின் கற்பனையான இதிகாசங்கள், புராணங்களுக்கும் - தமிழை அழித்துவரும் சமஸ்கிருத மொழிக்கும் தம் முடைய கடுமையான கண்டனங்கள் மூலம் இந்த ஆசிரியர் கொடுத்த சாட்டை அடிகளைப் பார்ப்பனச் சாதியினராலும், மற்ற மேல்சாதிச் சூத்திரராலும் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

எனவே வைத்தியநாத அய்யர், பூவராகவாச்சாரியார், முத்துசாமி அய்யர், பி.வெங்கடாசலம்பிள்ளை முத லான உச்சிச் சாதியினர், திராவிடர் இனத்தைச் சேர்ந்த பண முதலைகளையே பயன்படுத்தி, இந்தத் திராவிடர் கழகக் கருஞ்சட்டை மாவீரரை எப்படியும் தீர்த்துக் கட்டியே ஆகவேண்டும் என்று திட்டமிட்டனர்.

இந்த இருதரப்பினரும் இணைந்து வகுத்த வஞ்சகத்திட்டப்படியே உடையார்பாளையம் ஆசிரியர் வேலாயுதம் 13.11.1947 அன்று வியாழன் காலை படுகொலை செய்யப்பட்டார்.

பார்ப்பனியம், பண முதலாளித்துவம் ஆகிய இரண்டின் சூழ்ச்சியாலும் படுகொலை செய்யப்பட்ட உடையார் பாளையம் வீரராம் இந்தக் கொள்கைப் போராளி - வாழ்ந்த போது மட்டும் அல்லாமல் மாண்ட பிறகும் திராவிட இயக்கத்துக்கு வலிமை சேர்க்கும் வழிகாட்டிப் பேராசானாக விளங்குகிறார். ஆசிரியர் ந.கணபதிக்கு அவர் தோழர்; வே.ஆனைமுத்துவுக்கு அவர் முன்னோடி.

இந்த ஈகச் செம்மலைக் காலமெல்லாம் நினைவில் நிறுத்தித் தமிழ் - தமிழ்நாடு - தனியாட்சி உரிமை களுக்குப் போராட வேண்டியது திராவிட இனத் தமிழர் ஒவ்வொருவரின் தலையாய கடமை ஆகும்.

Pin It