மிகச் சரியாக கடந்த ஜூன் 21ஆம் தேதி ‘அதிகாரப் பூர்வமாக' பூனை வெளியே எட்டிப் பார்த்து, ‘மியாவ்' என கண்ணைக் கசக்கியது. பூனையைப் பைக்குள் இருந்து வெளியே எடுத்தவர் வேறு யாருமல்ல. இப்போதைய பூனைக் கூட்டத்தின் தலைவர்தான். மைக்கேல் வி. ஹேடன். சி.ஐ.ஏ.வின் இன்றைய இயக்குநரான இவர், நிருபர்களை அழைத்து 1950 முதல் 1970 வரை சி.ஐ.ஏ.வில் நடந்த சட்டத்துக்குப் புறம்பான, அழுக்கான விஷயங்களை அடுத்த வாரம் வெளியிடப் போவதாகச் சொன்னார். சொன்னபடியே ஜூன் 26ஆம் தேதி, சி.ஐ.ஏ.வின் ‘தணிக்கை' செய்யப்பட்ட 702 பக்க ஆவணங்களை வெளியிட்டார்.

Castro எந்த ஒரு குடும்பத்திலும், அந்த குடும்பத்துக்கு சொந்தமான நகைகளை காலம் காலமாக பாதுகாப்பார்கள். அதுபோல சி.ஐ.ஏ. என்ற குடும்பம் இதுநாள் வரை ‘பாதுகாத்த' இந்த ‘குடும்ப நகைகள்' வெளிச்சத்துக்கு வந்தபோது மனித உரிமை ஆர்வலர்கள் அதிர்ந்து போனார்கள். ஆள் கடத்தல், சர்வதேச தலைவர்களை கொல்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், அமெரிக்கர்களையே உளவு பார்த்த சம்பவங்கள், சோவியத் யூனியனுக்கும், சீனாவுக்கும் நடந்த கடிதப் பரிமாற்றங்களை ரகசியமாக பிரித்துப் பார்த்த நிகழ்வுகள், இடதுசாரிகளைக் களையெடுக்க உலகம் முழுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என அனைத்தையுமே இந்தக் ‘குடும்ப நகைகள்' ஆதாரத்துடன் விவரித்தபோது வரலாற்று ஆய்வாளர்கள் திகைத்துப் போனார்கள். "இதில் பெரும்பாலானவை அசிங்கமானவைகள்தான். ஆனால், இதுதான் சி.ஐ.ஏ.வின் வரலாறு'' என்கிறார் ஹேடன்.

இந்த ஆவணங்களில் உள்ள விஷயங்கள் ஏற்கெனவே பத்திரிகைகளில் வெளியானவைதான். சர்வதேச தலைவர்களால் குற்றம் சாட்டப்பட்டவைதான். ஆனால், ‘அதிகாரப்பூர்வமாக' ஒப்புதல் வாக்குமூலம் வந்திருப்பது இப்போதுதான். பிறநாடுகளின் உள்நாட்டு விஷயங்களில் தலையிடுவதையும் களையெடுப்பு நிகழ்த்துவதையும் சி.ஐ.ஏ. வழக்கமாக கொண்டிருப்பதாக 1974ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ‘நியூயார்க் டைம்ஸ்' இதழில் செய்தி வெளியானது. அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹென்றி ஏ. கிஸ்ஸிங்கர், சி.ஐ.ஏ.வின் இந்தப் போக்கை கண்டித்ததுடன், ராபர்ட் கென்னடியின் மேற்பார்வையில் கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோவை அழிக்கும் திட்டம் தீட்டப்பட்டதாகத் தெரிவித்தார். இந்த சம்பவம் மட்டும் நிகழ்ந்திருந்தால், வாட்டர்கேட் ஊழலால் ஏற்பட்ட தலைகுனிவை விடப் பெரிய தலைகுனிவு அமெரிக்கர்களுக்கு ஏற்பட்டிருக்கும் என்பது கிஸ்ஸிங்கரின் கணிப்பு.

ஆப்பிரிக்க தலைவர் ஒருவரை விஷம் வைத்து கொல்லும் முயற்சி நடந்ததாகவும் கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்ய ஒன்னரை லட்சம் டாலர் வரை ஒரு மாஃபியா கூட்டத் தலைவருக்குத் தர சி.ஐ.ஏ. முன்வந்ததாகவும் இந்த ஆவணம் தெரிவிக்கிறது. காஸ்ட்ரோவைப் போலவே காங்கோ நாட்டின் தலைவர் லுமும்பாவையும், டொமினியன் குடியரசைச் சேர்ந்த ட்ரூஜிலோவையும் கொல்ல சி.ஐ.ஏ. திட்டமிட்டது. அதுபோலவே இருவருமே 1961ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்கள். ஆனால், லுமும்பா ‘இறந்ததில்' பங்கில்லை... ட்ரூஜிலோ கொல்லப்பட்டதில் சி.ஐ.ஏ.வுக்குத் ‘தெளிவற்ற' தொடர்பிருப்பதாக இந்த ‘குடும்ப நகைகள்' அம்பலப்படுத்துகிறது.

இந்த 702 பக்கங்கள் கொண்ட ஆவணத்திலிருந்து கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோ மீது நடந்த கொலை முயற்சி நிகழ்வுகளை விவரிக்கும் பக்கங்களை மட்டும் இங்கு சுருக்கமாக காண்போம்.

பல ஆண்டுகளாகவே தன்னை கொல்ல சி.ஐ.ஏ. சதி செய்வதாக பிடல் காஸ்ட்ரோ குற்றம்சாட்டி வருகிறார். இதுவரை அவரது குற்றச்சாட்டை மறுத்து வந்த சி.ஐ.ஏ. இந்தத் ‘தணிக்கை' செய்யப்பட்ட ஆவணத்தின் மூலம் காஸ்ட்ரோ சொல்வது உண்மைதான் என ஒப்புக் கொண்டுள்ளது.

கியூபா தொடர்பான உண்மைகள் இந்த ஆவணங்களில் மூன்று பெரும் பிரிவுகளாக விரிந்திருக்கின்றன. முதல் பகுதி காஸ்ட்ரோவைக் கொலை செய்ய நடந்த முயற்சிகளை விவரிக்கிறது. அதுவும் கேள்வி கேட்காமல் (அல்லது கேள்விக்கு உட்படுத்தாமல்?) சட்டத்தோடு இயைந்த அதிகாரத்துடன் இந்த முயற்சிகள் நடந்ததாக தெரிவிக்கிறது.

இரண்டாவது பகுதி, மத்திய உளவுப் பிரிவு இயக்குநர்களுக்கு இந்த கொலை முயற்சிகள் தெரியுமா, அவர்களது ஒப்புதலுடன்தான் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதா என்பதை விவரிக்கிறது. மூன்றாவது பகுதி, அந்தக் கால கட்ட அமெரிக்க அதிபர்களுக்கு இந்தக் கொலை முயற்சி தொடர்பான திட்டங்கள் தெரியுமா? அவர்களது ஒப்புதலுடன்தான் நடத்தப்பட்டதா? என்பதை ‘ஆதாரத்துடன்' விவரிக்கிறது.

1960 - 1965 ஆகிய ஐந்து ஆண்டுகளுக்குள் எட்டு முறை பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்ய சி.ஐ.ஏ. முயற்சி செய்ததற்கான திட்டவட்ட ஆதாரங்கள் முதல் பகுதியில் உள்ளன. ஆனால், 1975 ஆகஸ்ட் மாதம், ஜார்ஜ் மெக்கோவர்னிடம் ஒரு பட்டியலை காஸ்ட்ரோ கொடுத்தார். அதில் தன்னை இருபத்து நான்கு முறை கொலை செய்ய முயற்சி நடந்ததாக தேதிவாரியாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், சி.ஐ.ஏ. இருபத்து நான்கு முறை அல்ல, எட்டு முறை மட்டுமே ‘முயற்சிகள்' மேற்கொண்டதாக கூறுகிறது. இதிலும் பல திட்டங்கள் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளுடன் நின்று விட்டதாகச் சொல்கிறது. இதில், நிழலுலக மாஃபியா கும்பல் மூலம் இரண்டு முறை காஸ்ட்ரோவை அழிக்க திட்டம் வகுக்கப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், நவீன ஆயுதங்கள் முதல், விஷ மாத்திரை, விஷ பேனா, நச்சு பாக்டீரியா பவுடர்கள் வரை கற்பனை செய்ய முடியாத அளவு, சகல வழிகளிலும் காஸ்ட்ரோவைக் கொலை செய்ய சி.ஐ.ஏ. தந்திரங்களைக் கையாண்டுள்ளது அம்பலமாகி இருக்கிறது. குறிப்பாகச் சுருட்டுப் பிரியரான காஸ்ட்ரோவுக்கு விஷ சுருட்டு கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்ட விஷயம் உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

சரியாக அமெரிக்க அதிபர் கென்னடி கொலை செய்யப்பட்ட 1963ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி, காஸ்ட்ரோவை அழிக்க முயற்சி நடந்ததாக இந்த ஆவணம் தெரிவிக்கிறது. கென்னடியின் தூதுவர் அன்று காஸ்ட்ரோவைச் சந்திப்பதாக ஏற்பாடு. அப்போது காஸ்ட்ரோ பயன்படுத்துவதற்காக விஷ பேனா ஒன்றை சி.ஐ.ஏ. அதிகாரி ஒருவர் ஒரு கியூபக் கைக் கூலியிடம் கொடுத்துள்ளார்!

இந்த ஆவணங்களின்படி, காஸ்ட்ரோவைக் கொலை செய்ய வேண்டும் என்பது சி.ஐ.ஏ.வின் நோக்கமாக முதலில் இருக்கவில்லை. மக்களிடம் அவருக்குள்ள நற்பெயரைக் களங்கப்படுத்தும் முயற்சியே முதலில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. உதாரணமாக ‘தாடிக்காரர்', ‘விலங்குகளின் முடியைத் தாடியாகக் கொண்டவர்...' என்பது மாதிரியான கேலி வார்த்தைகளை அதிகமாகக் கசிய விட்டிருக்கிறார்கள். 1960ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் வரை குறிப்பாக அந்த ஆண்டின் பிற்பகுதியில் காஸ்ட்ரோவின் பேச்சுக்களைத் திரிக்கும் வேலையில் சி.ஐ.ஏ. இறங்கியிருக்கிறது. தனது திட்டங்களையும், செயலையும் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த அவ்வப்போது ரேடியோவில் காஸ்ட்ரோ உரையாற்றுவார். அப்போது அவர் பேசும் மைக்கில் ரசாயன பவுடரைத் தெளிக்கலாமா... என்று யோசித்ததாக உயரதிகாரிக்கு அனுப்பிய செய்திக் குறிப்பில் ஒரு சி.ஐ.ஏ. அதிகாரி குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அது யோசனையுடன் நின்றுவிட்டது.

அதேபோல் உரை நிகழ்த்துவதற்கு முன் சுருட்டுப் பிடிப்பது காஸ்ட்ரோவின் வழக்கம். அப்போது அவருக்கு விஷ சுருட்டு கொடுக்கலாமா என்றும் முயற்சி செய்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் உச்சமாக காஸ்ட்ரோ அணியும் சூவுக்குள் நச்சு ரசாயனத்தைத் தெளிக்கலாமா என ஒரு சி.ஐ.ஏ. ஏஜென்ட் யோசித்திருக்கிறார். குறிப்பாக வெளிநாடுகளுக்கு காஸ்ட்ரோ சுற்றுப்பயணம் செய்யும்போது, ஹோட்டல் சிப்பந்தி மூலம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முயற்சி நடந்துள்ளது. ஆனால், இதுவும் ‘சரியானபடி' நிறைவேறவில்லை.

இதன் தொடர்ச்சியாக ‘விபத்து' மூலமாக கியூபாவில் உள்ள முக்கியமான மூன்று தலைவர்களை ‘அழிக்க' முடியுமா என 1960களில் சி.ஐ.ஏ. முயற்சி செய்துள்ளது. ‘முன்னோட்டமாக' காஸ்ட்ரோவை கொல்ல திட்டம் வகுக்கப்பட்டது. ‘கடன்' தொல்லையால் அவதிப்பட்ட ஒரு கியூப குடிமகனை இந்தத் திட்டத்துக்கு தேர்ந்தெடுத்தார்கள். பல கட்ட மூளைச்சலவைக்குப் பின் ‘குடும்பச் சூழ்நிலைக்காக' கார் மூலம் விபத்து ஏற்படுத்த அந்த கியூபன் ஒப்புக் கொண்டான். ஆனால், இந்தத் திட்டம் செயல் வடிவம் பெறவில்லை.

இதே காலகட்டத்தில் சி.ஐ.ஏ.வின் ‘மருத்துவ பிரிவு' 1960 ஆம் வருடம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி, விஷ சுருட்டுகள் அடங்கிய பெட்டியை சி.ஐ.ஏ. ஏஜென்டிடம் கொடுத்துள்ளது. அதில் உள்ள எந்தச் சுருட்டை எடுத்து காஸ்ட்ரோ தன் உதடுகளில் வைத்தாலும் உடனே மரணம் நிகழும். அந்தளவு சக்தி வாய்ந்த அந்த ரசாயன சுருட்டுப் பெட்டி, காஸ்ட்ரோவிடம் போய்ச் சேர்ந்ததா என்பதற்கான குறிப்பு இந்தத் ‘தணிக்கை' செய்யப்பட்ட ஆவணங்களில் இல்லை.

சில்லறைத்தனமான யோசனைகளுக்குப் பின் நிழலுலக மாஃபியா கும்பலின் உதவியுடன் காஸ்ட்ரோவை ‘போட்டுத் உயரதிகாரிகளின் கூட்டத்தில் ‘பரிசீலிக்கப்பட்ட' இந்தத் திட்டம் ஒரே மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக ‘குடும்ப நகைகள்' தெரிவிக்கிறது. ஆனால், தங்களைச் சேர்ந்த யாரும் முன்னின்று இதை நடத்தக் கூடாது என்பதில் சி.ஐ.ஏ. தீர்மானமாக இருந்திருக்கிறது. சல்லடை கொண்டு சலித்ததில் எஃப்.பி.ஐ.யில் சில காலம் வேலை பார்த்த ஒரு ‘நபர்' நம்பிக்கைகுரியவராக தெரிந்திருக்கிறார்.

அவரிடம்' பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. நியூயார்க்கிலுள்ள பிளாசா ஹோட்டலில் 1960 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சி.ஐ.ஏ. உயரதிகாரியும், முன்னாள் எஃப்.பி.ஐ நபரும் சந்தித்திருக்கிறார்கள். ‘நம்பிக்கை' அளிக்கும் வகையில் நடந்த அந்த சந்திப்பில், முன்னாள் எஃப்.பி.ஐ. நபர் இந்தப் பணியை, தான் முடிப்பதாக உறுதியளித்துள்ளார். அதற்குத் தனக்கு ‘அரசாங்க அதிகாரிகளின்' உதவிகள் தேவைப்படும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். மறுப்பேதும் சொல்லாமல் சி.ஐ.ஏ. இதற்கு ஒப்புக் கொண்டுள்ளது.

அடுத்தடுத்த பேச்சு வார்த்தைகளில் ‘புரிந்து கொள்ளும் தன்மையுடன்' நல்ல முன்னேற்றம் ஏற்படவே, திட்டத்தின் இறுதி வடிவத்துக்கு சி.ஐ.ஏ. புன்னகையுடன் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி முன்னாள் எஃப்.பி.ஐ. ‘நபர்' தனது ‘நண்பர்' மூலமாக நிழலுலக மாஃபியா கும்பலை தொடர்பு கொண்டார். கடினமான தேர்வின் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களிடம் யாரை ‘கொல்ல' வேண்டும் என்று அந்த முன்னாள் எஃப்.பி.ஐ. நபர் குறிப்பிடவில்லை. திட்டம் முடிவானதும் ‘முன்னோட்டமாக' கொலை முயற்சி நிகழ்த்திப் பார்க்கப்பட்டபோது, தேர்வான ஒரு நபர் சந்தேகத்தின் பேரில் கைதானார். பிறகு அவரை பெயிலில் எடுத்தார்கள். அதன்பிறகு நடந்த இரண்டாவது கட்ட ‘திட்டத்தில்' அந்த முன்னாள் எஃப்.பி.ஐ. நபரை சி.ஐ.ஏ. சேர்த்துக் கொள்ளவில்லை.

இதுதவிர, காஸ்ட்ரோவுக்கு விஷ மாத்திரை கொடுக்கலாமா என்றும் கூட சி.ஐ.ஏ. பரிசீலித்திருக்கிறது. ஆனால், இந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. 1963 ஆம் ஆண்டு தொடக்கத்தில் டாஸ்க் போர்ஸ் மூலமாக காஸ்ட்ரோவை ‘அழிக்க முடியுமா' என சி.ஐ.ஏ. உயர்மட்ட குழு விவாதித்திருக்கிறது.

இப்படிப் பல வழிகளில் காஸ்ட்ரோவைக் கொலை செய்வது தவிர, அவரைப் பதவியில் இருந்து இறக்குவதற்கான முயற்சிகளும் சேர்ந்தாற்போல மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. காஸ்ட்ரோவின் நம்பிக்கைக்குரிய ‘விசுவாசி'யை சி.ஐ.ஏ. விலை கொடுத்து வாங்கியது. அந்த விசுவாசி மூலமாக காஸ்ட்ரோவின் நடமாட்டங்கள், திட்டங்கள் உடனுக்குடன் சி.ஐ.ஏ.வை வந்தடைந்தன. ‘உள்நாட்டு ஆயுதப் புரட்சி' மூலமாக அவரை பதவியிலிருந்து இறக்கத் திட்டங்கள் வகுக்கப்பட்டன. நவீன தொழில்நுட்ப ஆயுதங்களை இதற்காக சி.ஐ.ஏ. கியூபாவுக்குக் கொண்டு வந்தது. ஆனால், இந்த முயற்சிகள் எதுவுமே பலனளிக்கவில்லை...

இப்படி இந்த 702 பக்கங்கள் கொண்ட ‘தணிக்கை' செய்யப்பட்ட ஆவணம், அமெரிக்காவின் நிஜமான முகத்தை உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. தணிக்கை செய்யப்பட்ட விவரங்களே இப்படியென்றால், தணிக்கை செய்யப்படாத ஆவணத்தில் இன்னும் என்னென்ன உண்மைகள் புதைந்திருக்கிறதோ?

இந்த இடத்தில்தான் முக்கியமான கேள்வி எழுகிறது. இந்த ‘குடும்ப நகைகளை' ஏன் இப்போது சி.ஐ.ஏ. வெளியிட வேண்டும்? "இந்தத் தவறுகள் இனி நேரக் கூடாது என்பதற்காகத்தான் இதை வெளியிடுகிறோம்'' என சி.ஐ.ஏ. பதில் சொல்கிறது. இந்த பதிலை எந்தளவு நம்பலாம்? 1970களுக்குப் பின் உண்மையிலேயே சி.ஐ.ஏ. இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவில்லையா? அல்லது உலகில் யார் மனித உரிமைகள் பற்றி பேசினாலும் அவர்களை வீழ்த்த நாங்கள் எந்த மாதிரியான நடவடிக்கைகளிலும் ஈடுபடுவோம். எங்கள் வரலாறே அதுதான்... என்பதை உலகுக்கு உணர்த்த இந்த ஆவணங்களை வெளியிட்டிருக்கிறதா?
Pin It