காரல்மார்க்சும் பிரெடரிக் எங்கல்சும் இணைந்து எழுதி, 1848இல் வெளியிடப்பட்ட ‘கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையில்’, “முதலாளித்துவ வர்க்கத்தால் ஓயாது ஒழியாது உற்பத்திக் கருவிகளிலும், இதன்மூலம் உற்பத்தி உறவுகளிலும் இவற்றுடன் கூடவே சமூக உறவுகள் அனைத்திலுமே புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தாமல் வாழ முடியாது” என்று கூறியுள்ளனர்.

முதலாளிய உற்பத்தியின் அடிப்படை நோக்கம் அதிக இலாபத்தைப் பெறுவதும் அதன்மூலம் மேலும் மூலதனத்தைக் குவிப்பதும் ஆகும். இதற்காக முதலாளி யம் அறிவியலில் புதிய புதிய கண்டுபிடிப்புகளைப் படைக்கிறது. இவற்றை உற்பத்தியில் பயன்படுத்தி, உற்பத்தித் திறனைப் பெருக்குகிறது. இதனால் குறைந்த செலவில், அதிக அளவில் பொருள்களை உற்பத்தி செய்து, அதிக இலாபத்தைக் குவிக்கிறது.

1780களில் நீராவி ஆற்றலால் இயங்கக் கூடிய எந்திரங்கள் கொண்ட நூற்பாலைகளும் நெசவாலை களும் முதன்முதலாக இங்கிலாந்தில் நிறுவப்பட்டன. பிறகு மற்ற அய்ரோப்பிய நாடுகளிலும் இத்தொழிற் சாலைகள் ஏற்பட்டன. எனவே முதலாளிகளுக் கிடையே சந்தையில் கடும் போட்டி ஏற்பட்டது.

அதன்பின் நூறு ஆண்டுகள் கழித்து, 1880களில் இலண்டன், மிலான், நியூயார்க் ஆகிய நகரங்களில் முதன்முறையாக மின்உற்பத்தி நிலையங்கள் அமைக் கப்பட்டன. அதன்பின், நிலக்கரிக்கு மாற்றாக மின் சாரத்தைப் பயன்படுத்தத் தொடங்கிய தொழிற்சாலை களில் உற்பத்தித் திறன் வேகமாக அதிகரித்தது. காலப் போக்கில் நிலக்கரியைப் பயன்படுத்திய தொழிற் சாலைகள் முதலாளித்துவப் போட்டியில் தாக்குப்பிடிக்க முடியாமல் மூடப்பட்டுவிட்டன.

இதேபோன்று 1850 முதல் 1875க்குள் இரும்பைப் பயன்படுத்துவதில் உருவாக்கப்பட்ட புதிய தொழில் நுட்பங்கள், இரசாயனத் துறையில் மூலக்கூறுகளில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை, அவற்றின் அமைப்பு முறை பற்றிய கண்டுபிடிப்புகள், பெட்ரோலியம் கண்டுபிடிப்பு முதலானவை முதலாளிய உற்பத்தியில் மாபெரும் பாய்ச்சலான மாற்றங்களை ஏற்படுத்தின. அதிக மூலதனமிட்டு, அதிநவீனத் தொழில் நுட்பங் களை உற்பத்தியில் பயன்படுத்திய முதலாளிகளிடம் பெருத்த இலாபமும், மூலதனமும் குவிந்தன. அத னால் இந்த முதலாளிகள் உற்பத்தியிலும் சந்தை யிலும் ஏகபோக ஆதிக்கம் பெற்றனர். இதன்காரண மாக நாட்டின் அரசியலைத் தீர்மானிப்பதிலும் இப் பெருமுதலாளிகளின் ஆதிக்கம் வளர்ந்தது.

கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையில், “முதலாளித்துவ வர்க்கத்தின் உற்பத்திப் பொருள்களுக்குத் தொடர்ந்து மேலும் மேலும் விரிவடைந்து செல்லும் சந்தை தேவைப்படுகிறது. இந்த இன்றியமையாத் தேவை யானது, முதலாளித்துவ வர்க்கத்தைப் புவிப்பரப்பு முழுவதும் செல்லும்படி விரட்டுகிறது. அது எல்லா இடங்களுக்கும் சென்று ஒட்டிக்கொள்ள வேண்டிய தாகிறது; எல்லா இடங்களிலும் குடியேற வேண்டிய தாகிறது; எல்லா இடங்களிலும் தொடர்புகளை நிறுவிக் கொள்ள வேண்டியதாகிறது. அனைத்துலகச் சந்தை யைப் பயன்படுத்திச் செயல்படுவதன்மூலம், முதலா ளித்துவ வர்க்கம் ஒவ்வொரு நாட்டிலும் உற்பத்தியிலும் உற்பத்தியையும் நுகர்வையும் அனைத்துலகத் தன்மை பெறச் செய்திருக்கிறது” என்று மார்க்சும் எங்கெல்சும் முதலாளித்துவத்தின் அடிப்படையான செயல்பாட்டை விளக்கியுள்ளனர்.

எனவேதான், முதலாளிய உற்பத்தி முறை வளர்ச்சி பெற்றிருந்த மேற்கு அய்ரோப்பிய நாடுகள், பிற நாடுகளின் சந்தையிலும், மூலப் பொருள்கள் மீதும் ஆதிக்கம் செலுத்துவதற்காக அந்நாடுகளைக் கைப் பற்றித் தம் காலனி நாடுகளாக மாற்றிடக் கடுமையாகப் போட்டியிட்டன. 1800 வரையில், உலகப் பரப்பில் 35 விழுக்காடு காலனிப் பகுதியாக இருந்தது. இது 1878 இல் 67 விழுக்காடாக உயர்ந்தது. இதைத்தான் லெனின், ஏகாதிபத்திய நாடுகள் உலக நாடுகளைத் தமக்கிடையே பங்கீடு செய்துகொள்ளும் என்று கூறினார். அதன்படி 1914இல் முதல் உலகப் போர் மூண்டபோது, உலகப் பரப்பில் 84.4 விழுக்காடு காலனிப் பகுதியாக இருந்தது. ஏகாதிபத்தியப் போட்டியே இரண்டாம் உலகப் போருக்கும் காரணமாக அமைந் திருந்தது.

இரண்டாம் உலகப் போருக்குப்பின் படிப்படியாகக் காலனிய நாடுகள் விடுதலை பெற்றன. கதிரவன் மறையாத பேரரசாக விளங்கிய பிரிட்டன், அமெரிக் காவின் துணைக்கோள் என்ற நிலைக்குத் தாழ்ந்தது. உலகின் இருபெரும் வல்லரசுகளாக அமெரிக்காவும், சோவியத் நாடும் உருவெடுத்தன. உலக அரங்கில் உருவான புதிய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப முதலாளிய ஏகாதிபத்தியம் தன்னைத் தகவமைத்துக் கொள்ள முயன்றது.

ஒரு நாட்டை நேரடியாகக் கைப்பற்றி ஆதிக்கம் செய்து வந்ததற்கு மாற்றாக, அதுவரையில் கொள்ளை யடித்துக் குவித்து வைத்திருந்த மூலதனத்தைக் கொண் டும், உற்பத்தியிலும் நுகர்விலும் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கியும், அவற்றின் மூலம் தங்கள் பொருளாதார ஆதிக்கத்தை நிலைநாட்டிட ஏகாதிபத்திய நாடுகள் முடிவு செய்தன. இந்த நோக்கத் திற்காகத்தான் உலக வங்கியும், பன்னாட்டு நிதியமும் (IMF), காட் (GATT) அமைப்பும் உருவாக்கப்பட்டன.

எனவே 1950க்குப்பின் புதிய அறிவியல் கண்டு பிடிப்புகளும், அவற்றை முதலாளித்துவ உற்பத்தியில் பயன்படுத்துவதும் வேகமாக வளர்ந்தன. இவற்றுள் தகவல் தொழில்நுட்பம் முதன்மையானதாக விளங்குகிறது. இது உலகத்தையே தன் கைப்பிடிக்குள் கொண்டுவந்துவிட்டது. இதனால் இன்று இந்தியாவில் சிற்றூர்களில் முப்பது கோடிப்பேர் கைப்பேசியைப் பயன்படுத்துகின்றனர். சிற்றூர்களில் பாதிக்கும் மேற்பட்ட வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறது. நகரங்களில் கணினி எண்ணிக்கை வேக மாக வளர்ந்து வருகிறது. 15 கோடிப்பேர் இணையதள இணைப்பு வைத்துள்ளனர். இத்தகவல் தொழில்நுட் பத்தால் பெருமுதலாளியக் குழுமங்கள் கொள்ளை இலாபம் பெற்றுவருகின்றன.

தகவல் தொழில்நுட்பத்தைப் போலவே உயிரியல் தொழில்நுட்பமும் பொருளியல் ஆதிக்க ஆற்றலாக வளர்ந்து வருகிறது. உயிரியல் தொழில் நுட்பம் வேளாண்மை, மருத்துவம், இரசாயனத்துறை ஆகியவற்றில் முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக வேளாண்மையில் இதன் பயன்பாடு மனிதர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

பருத்திப் பயிரில் காய்ப்புழுவின் தாக்குதலால், பருத்தி விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. பூச்சிக்கொல்லி மருந்துகளை எத்தனை தடவைகள் தெளித்தாலும் காய்ப்புழுவின் தாக்குதலைத் தடுக்க முடியவில்லை. இச்சிக்கலைத் தீர்ப்பதற்காக அமெரிக் கப் பன்னாட்டு நிறுவனமான மான்சான்டோ, மரபீனி மாற்றப்பட்ட பருத்தியை உருவாக்கியது. வகைவகையான பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தயாரித்துக் கொள்ளை இலாபம் ஈட்டியதும் இந்தப் பன்னாட்டு நிறுவனங்களே!

இயற்கையில் மண்ணில், பேசிலஸ் துரிஞ்சியன்சிஸ் (Bacillus Thuringensis - B.T.) எனும் பாக்டீரியா உள்ளது. இந்தப் பாக்டீரியாவில் உள்ள Cry 1 Ac எனும் ஜீன், பயிர்களைத் தின்னும் புழுக்களுக்கு நஞ்சாக அமைகிறது. அதனால் இந்த ஜீனை மட்டும் பிரித்தெடுத்துப் பயிரினுள் செலுத்துகின்றனர். இவ்வாறு உருவாக்கப்பட்ட பயிரைத்தான் மரபீனி மாற்றப்பட்ட பயிர் என்று கூறுகின் றனர்.

அதிக விளைச்சல், தரமான பஞ்சு, பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்தத் தேவையில்லை என்பதால் மிச்சமாகும் பணம் என்கிற ஈர்ப்பான பரப்புரையை மான்சான்டோ நிறுவனத்தின் கிளையாக மகாராட்டிரத் தில் செயல்படும் மகிகோ (Mahyco)வும் அரசும் செய்தன. இதன் விளைவாகத் தற்போது பருத்தி பயிரிடப்படும் மொத்தப் பரப்பில் 93 விழுக்காடு பி.ட்டி. பருத்தி பயிரிடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பி.ட்டி. பருத்தி விதையை ஒவ்வொரு தடவையும் மான்சான்டோ நிறுவனத்திடம் தான் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும். ஏனெனில் உழவர்கள் பயிரிடும் பி.ட்டி. பருத்தியின் விதைகள் மலட்டுத்தன்மை கொண்டவை. பருத்தி விதை உற்பத்தி மான்சான்டோவின் முற்றுரி மையாகிவிட்டது. இதனால் எண்ணற்ற நாட்டு இரகப் பருத்தி வகைகள் அழிந்துவிட்டன.

இந்தியாவில் மரபீனி மாற்றப்பட்ட பயிரை உழவர் களின் வயல்களில் ஆய்வு செய்வதற்கும் வணிக முறையில் பயிரிடுவதற்கும் ஒப்புதல் அளிப் பதற்காக ‘மரபணுப் பொறியியல் ஏற்பளிப்புக் குழு’ (Genetic Engineering Approval Committee - GEAC) என்பது நடுவண் அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் அமைச்சகத்தின் கீழ் இருக்கிறது. இக்குழு பி.ட்டி. பருத்தியை வணிக நோக்கில் பயிரிட ஒப்புதல் அளித்தது முதலே சூழலிய ஆர்வலர்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும், அறிவியலாளர்களில் ஒரு பிரிவினரும் மரபீனி மாற்றப்பட்ட பயிர்களால் சுற்றுச் சூழலுக்கும், உயிர்ப்பன்மைக்கும், மனிதர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் மாற்றப்பட முடியாத தன்மை யிலான மாபெரும் கேடுகள் காலப்போக்கில் ஏற்படும் என்றுகூறி எதிர்த்து வருகின்றனர்.

2005ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மரபீனி மாற்றப்பட்ட பயிர்களைத் தடைசெய்யக் கோரி ஒரு பொதுநல வழக்குத் தொடுக்கப்பட்டது. இதுகுறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு அய்வர் அடங்கிய தொழில்நுட்ப வல்லுநர் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.

2009ஆம் ஆண்டு அக்டோபரில் மரபணுப் பொறி யியல் ஏற்பளிப்புக் குழு (GEAC) ஆறு பி.ட்டி கத்தரி வகைகளை வணிகநோக்கில் பயிரிடுவதற்கு ஒப்புதல் அளித்தது. இந்தியா முழுவதிலும் உழவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடமிருந்தும் பி.ட்டி. கத்தரிக்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்தியாவில் 2200 வகையான கத்தரி பயிரிடப்படும் நிலையில் பி.ட்டி கத்தரி ஏன்? என்று வினவினர்.

அப்போது சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஜெயராம் ரமேஷ் உழவர்களிடம் கருத்தறியும் கூட் டங்களை நடத்தினார். அக்கூட்டங்களில் வெளிப்பட்ட கடும் எதிர்ப்பின் காரணமாக, 2010 பிப்பிரவரியில் பி.ட்டி. கத்தரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். அதன்பின், நடுவண் அரசு, வேளாண்மைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவை மரபீனி மாற்றப்பட்ட பயிர்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை தருமாறு கேட்டுக் கொண்டது.

வாசுதேவ் ஆச்சாரியாவின் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழுவினர் இரண்டரை ஆண்டுகள் காலத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் உழவர்க ளையும், அறிவியல் வல்லுநர்களையும், மரபீனி மாற்றுப் பயிரின் ஆதரவாளர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினர். அதன் அடிப்படையில் காங்கிரசுக் கட்சியின் 9 பேர், பா.ச.க.வின் 6 பேர் உள்ளிட்ட 31 உறுப்பினர்களைக் கொண்ட நிலைக்குழுவினர் ஒரு மனதாக உருவாக்கிய 492 பக்கங்கள் கொண்ட அறிக்கையை நடுவண் அரசிடம் அளித்தனர். அந்த அறிக்கை 2012 ஆகத்து மாதம் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது.

அந்த அறிக்கையில், “50 உணவுப் பயிர்கள் உட்பட 71 பயிர்களுக்கான மரபீனி மாற்றப்பட்ட பயிர் களின் ஆய்வுகள் பல்வேறு கட்டங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த ஆய்வுகள் அனைத்தையும் உடனே நிறுத்த வேண்டும். மரபணுப் பொறியியல் ஏற்பளிப்புக்குழு (GEAC) உயிரித் தொழில்நுட்பத் துறைக்கும், தொழில் துறைக்கும் சார்பாகச் செயல் பட்டுள்ளமை அப்பட்டமாகத் தெரிகிறது. இதேபோன்று பி.ட்டி. பருத்திக்கு அனுமதி அளிக்கப்பட்டதில் பல குளறுபடிகள் நடந்துள்ளன. எனவே முறையான கண் காணிப்பும் கட்டுப்பாடுகளும் கொண்ட ஓர் ஏற்பாட்டை - சட்டத்தை இந்தியாவில் கொண்டுவரும் வரையில் மரபீனி மாற்றப்பட்ட பயிர் ஆய்வுகளுக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று நாடாளுமன்ற நிலைக்குழு தன் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றம் அமைத்த வல்லுநர் குழுவின் இடைக்கால அறிக்கை 2012 அக்டோபர் 7 அன்று அளிக்கப்பட்டது. அந்த அறிக்கையிலும் மரபீனி மாற்றப் பட்ட பயிர்கள் குறித்த முன்னெச்சரிக்கைக் கோட்பாடு களும், நடைமுறைகளும், கண்காணிப்பும் மிகவும் போதாதவைகளாக உள்ளன; இவற்றைச் செம்மைப் படுத்த வேண்டியுள்ளது; எனவே மரபீனி மாற்றப்பட்ட பயிர்கள் குறித்த ஆய்வுகளைத் தற்காலிகமாகப் பத்தாண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று கருத்துரைக்கப்பட்டுள்ளது.

மக்கள் பயன்படுத்தும் பொருள்களில் - குறிப்பாக உண்ணும் பண்டங்களில் குறைபாடுகள் கண்டறியப் பட்டால், உடனடியாக அவற்றைச் சந்தையிலிருந்து விலக்கிக் கொள்ள முடியும். இன்றுள்ள தகவல் தொடர்பு வளர்ச்சியின் மூலம், அப்பொருள்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று மக்களுக்கு ஒரே மணித்துளியில் அறிவித்திட முடியும். ஆனால் மரபீனி மாற்றப்பட்ட பயிர்களால் மனித இனம் உள்ளிட்ட உயிரினங்களில், மரபியல் சார்ந்த உடற்கூறுகளில் ஏற்படக் கூடிய தீய விளைவுகளைத் திரும்பப் பெறவே முடியாது. எனவே தான் அய்ரோப்பிய நாடுகளின் ஒன்றியம் மரபீனி மாற்றப்பட்ட பயிர்களை அனுமதிக்க முடியாது என்று கடந்த சூலை மாதம் திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. அதனால் மான்சான்டோ நிறுவனம் மூட்டைமுடிச்சு களுடன் வெளியேறுவதாக அறிவிக்க நேரிட்டது (தி இந்து, 9-8-13).

இந்த எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் நடுவண் அரசு 2013 ஏப்பிரல் 23 அன்று நாடாளுமன்றத்தில் ‘இந்திய உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையச் சட்ட வரைவை’ (Bio-technology Regulatory Authority of India - BRAI) முன்மொழிந்தது. ஆனால் இச்சட்ட வரைவு, நாடாளுமன்ற நிலைக்குழுவும், வல்லுநர் குழுவும் சுட்டிக்காட்டிய குறைபாடுகளைக் களைவதற்கு மாறாக, முன்பே நடைமுறையில், மரபணுப் பொறியியல் ஏற்பளிப்புக் குழு (GEAC) பின்பற்றும் கட்டுப்பாடுகளையும் நீர்த்துப் போகச் செய்வதாக அமைந்துள்ளது. 

இந்த ஒழுங்காற்றுச் சட்டம் குறித்து 25-8-2013 க்குள் மக்கள் தம் கருத்தைத் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் மக்கள் கருத்தைக் கட்டாயம் கேட்டறிய வேண்டும் என்றோ, அதற்கான நடை முறைகள் குறித்தோ இச்சட்டத்தில் எதுவும் குறிப்பிடப் படவில்லை. மாறாக, திரைமறைவுத் தில்லுமுல்லுகளை மறைப்பதற்காக இச்சட்டத்தின் விதி 8(1)இன்படி, தகவல் பெறும் உரிமைச் சட்டத்திலிருந்து இதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அறிவியலிலும் புதிய புதிய கண்டுபிடிப்புகளிலும் மிகவும் முன்னேறியுள்ள வடஅமெரிக்கா மற்றும் மேற்கு அய்ரோப்பிய நாடுகள் கூட மரபீனி மாற்றப் பட்ட பயிர்களால், சுற்றுச்சூழலுக்கும் உயிரினங்களுக்கும் கேடுகள் உண்டாவதைத் தடுப்பதற்கான திட்டவட்ட மான வழிமுறைகளை வகுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன. இந்நாடுகளில் இருப்பது போன்ற நவீன ஆய்வுக் கூடங்கள், ஆய்வு முறைகள் இந்தியா வில் இல்லாத நிலையில், ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்பது போல நடுவண் அரசு இச்சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

மேலும் இச்சட்டத்தின் விதிகளை மீறிச் செயல் பட்டால் என்ன தண்டனை என்பது பற்றியோ, மரபீனி மாற்றப்பட்ட பயிர்களால் உழவர்களுக்கும், நுகர் வோருக்கும் ஏற்படக் கூடிய இழப்புகளுக்கும் கேடு களுக்கும் இழப்பீடு வழங்குவது பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. “தற்போது நடப்பில் உள்ள பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இழப்புக்குள்ளாகும் பெரும்பான்மையான உழவர்களால் நன்மையடைய முடியவில்லை. தற்போது வேளாண்மை நலிவடைந் துள்ள நிலையில், மரபீனி மாற்றுப் பயிர்களால் ஏற் படும் இழப்புகளுக்கு ஈடுசெய்யச் சட்டத்தில் இடமில்லா திருப்பது உழவர்களை மேலும் வஞ்சிப்பதாகும்” என்று நாடாளுமன்ற நிலைக் குழுவின் தலைவராக இருந்த வாசுதேவ் ஆச்சாரியா கூறியுள்ளார். மேலும் உலகில் பயிரிடப்படும் பரப்பில் 93 விழுக்காடு வழக்க மான விதைகளைக் கொண்டே சாகுபடி செய்யப் படுகிறது. எனவே இந்தியச் சூழலைக் கருத்தில் கொண்டு, மரபீனி மாற்றப்பட்ட பயிர்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் வாசுதேவ் ஆச்சாரியா ஆணித்தர மாகக் கூறுகிறார்.

மரபீனி மாற்றப்பட்ட பயிர்களின் ஆதரவாளர்கள் தம்பட்டம் அடிப்பது போல், மரபீனி மாற்றப் பயிர்களில் பூச்சி மருந்து பயன்படுத்துவது குறைந்துள்ளதா? விளைச்சல் அதிகமாகியிருக்கிறதா? என்றால் இல்லை என்பதே விடையாக இருக்கிறது. இந்தியாவில் பருத்தி பயிரிடும் பரப்பில் 93 விழுக்காடு மரபீனி மாற்றப்பட்ட மான்சான்டோவின் விதைகள்தான் பயன்படுத்தப்படு கின்றன. இதனால் பருத்தி பயிரிடும் உழவர்கள் தற் கொலை செய்து கொள்வது மகாராட்டிரத்தில் குறைய வில்லை. பி.ட்டி. பருத்தியால் உழவர்கள் யாரும் பணக்காரர்களாகிவிடவில்லை. நாட்டில் மொத்தச் சாகுபடிப் பரப்பில், பருத்தி பயிரிடப்படும் பரப்பு 5 விழுக்காடாகும். ஆனால் மொத்தம் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளில் 50 விழுக்காடு பருத்திப் பயிரில் பயன்படுத்தப்படுகின்ற நிலை மாறவில்லை. எனவே பன்னாட்டு நிறுவனங்களில் முற்றுரிமைக்கும் கொள்ளைக்குமான ஒரு கருவிதான் மரபீனி மாற்றப் பட்ட பயிர் என்பதாகும்.

அமெரிக்காவில் கடந்த முப்பது ஆண்டுகளில் பூச்சிகளின் தாக்குதலை விரட்டக்கூடிய - வறட்சியைத் தாங்கி வளரக் கூடிய - வேர்களில் நைட்ரஜனை நிலைநிறுத்தி சேமிக்கக் கூடிய தன்மைகள் கொண்ட மரபீனி மாற்றப்பட்ட பயிர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றால் உழவர்களுக்குத் தொடர்ந்து கூடுதலான பயன் கிடைக்கிறது என்பது இன்னும் திட்டவட்டமாக ஆராய்ந்து உறுதி செய்யப்படவில்லை. மரபீனிப் பயிர்களால் மனிதர்களுக்கும் பிற உயிரி னங்களுக்கும் ஏற்படக் கூடிய கேடுகள் - அவற்றைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் முதலானவை இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே இருக்கின்றன. 2005ஆம் ஆண்டு முடிய, அமெரிக்காவில் வறட்சி யைத் தாங்கி வளரக் கூடிய திறன்கொண்டவை என்று கூறப்பட்ட ஆயிரம் பயிர் வகைகளுக்கு வயல்வெளி ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அவற்றில் ஒன்றுகூட முழுத் தகுதி உடையதாக இன்னும் தேர்ச்சி பெறவில்லை (தி இந்து, 7-9-2013, Jack A.Henemann, Director, Centre for Integrated Research in Biosafty, University of Canterburg, Newzealand). 

உலகில் பயிரிடப்படும் மரபீனி மாற்றப்பட்ட பயிர் களில் 95 விழுக்காடு அமெரிக்காவில் பயிரிடப்படு கின்றன. கடந்த இருபது ஆண்டுகளில் இப்பயிர்களின் விளைச்சல் புள்ளிவிவரம் பெறப்பட்டுள்ளது. மரபீனிப் பயிர்களின் விளைச்சல், மரபீனி அல்லாத பயிர்களின் விளைச்சலைவிடக் குறைந்து வருகிறது. மரபீனிப் பயிர்களை அனுமதிக்காத அய்ரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் மரபீனிப் பயிர்களுக்குச் சமமாகவும் அதைவிடக் கூடுதலாகவும் விளைச்சல் எடுக்கின்றன. அதேசமயம் மரபீனிப் பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு குறைவதற்கு மாறாக அதிக மாகி வருகிறது. மேலும் இதுவரையில் பின்பற்றப்பட்டு வந்த வீரிய ஒட்டுச்சேர்க்கை தொழில்நுட்பம் மூலம் ஒரு புதிய பயிர் இரகத்தை உருவாக்க 10 இலட்சம் டாலர் செலவானது. ஆனால் ஒரு மரபீனி மாற்றப்பட்ட பயிரை உருவாக்க 1500 இலட்சம் டாலர் செலவா கிறது (தி இந்து, 12-8-13).

அதிக மூலதனம், புதிய தொழில்நுட்பம், அறிவுசார் காப்புரிமை என்பவற்றின் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் தாராளமயம், தனியார் மயம், உலக மயம் என்ற பெயர்களில் மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்களையும் மனிதர்களின் உழைப்பையும் சூறையாடி வருகின்றன. இந்திய அரசும் மாநில அரசுகளும் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்துக் கொண்டிருக்கின்றன.

மரபீனி மாற்றப்பட்ட பயிர்கள் பன்னாட்டு நிறு வனங்களின் பகற்கொள்ளைக்கு வழிவகுக்கும் என்பது மட்டுமின்றி, நாட்டின் வேளாண்மை, சமூகம், பொருளி யல், கலாச்சாரம் ஆகியவற்றில் பெரும் சீர்குலைவை உண்டாக்கும். உழவர்கள் வெறும் உடலுழைப்பாளி களாக மட்டும் வாழவில்லை. தங்கள் அனுபவத்தை யும் கூர்த்த அறிவையும் கொண்டு புதிய கண்டுபிடிப்பு களை உருவாக்கும் அறிவியலாளர்களாகவும் இருந்து வந்துள்ளனர். இந்தியாவில் 7000 ஆண்டுகளாக வேளாண்மை செய்துவரும் உழவர்கள், இரண்டு இலட்சம் நெல் வகைகளை உருவாக்கியிருக்கிறார்கள். இதேபோன்று பல ஆயிரம் கோதுமை வகைகள், 2200 கத்தரி வகைகள், 1500க்கு மேற்பட்ட மாம்பழ வகை கள், நூற்றுக்கும் மேற்பட்ட வாழை வகைகள் எனப், பல பயிர்களில் பல வகைகளை உருவாக்கியுள்ளனர்.

அந்தந்தப் பகுதியின் மண்வளம், சுற்றுச்சூழல், தட்பவெப்பம் ஆகியவற்றுக்கு ஏற்ற வகையில் பயிரிடப் பட்ட பயிர் வகைகள், அப்பகுதி மக்களின் உணவுப் பழக்கம், சடங்கு முறைகள், கலாச்சாரம் ஆகியவற்றைத் தீர்மானித்தன. அதனால்தான் இந்தியாவில் உணவு, உடை, வாழ்க்கை முறை, சடங்குகள், நம்பிக்கைகள், மரபுகள், பழக்கவழக்கங்கள், பண்பாடு, கலைகள், மொழிகள் ஆகியவற்றில் முற்றிலும் வேறுபட்ட பல் வேறு தேசிய இனமக்கள் வாழ்கிறார்கள்.

ஏகாதிபத்தியங்களின் மொழியான ஆங்கிலம் இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய மொழிகளுக்கு மாபெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. அதுபோல் மரபீனி மாற்றப்பட்ட பயிர், வேளாண்மையில் மட்டு மின்றிப் பல்வேறு தேசிய இனங்களின் வாழ்வியல் பண்பாட்டுக்கும் பெரும் அச்சுறுத்தலாகிவிடும். பத்து ஆண்டுகளில் பருத்தியில் 93 விழுக்காடு பரப்பில் பி.ட்டி பருத்தி பயிரிடும் நிலை ஏற்பட்டுவிட்டது போல், மற்ற பயிர்களிலும் இதே நிலை ஏற்படாமல் தடுக்க மரபீனி மாற்றப்பட்ட பயிர்களின் படையெடுப்பை முழு மூச்சுடன் எதிர்த்துத் தகர்த்திட வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களின் அந்நிய முதலீடு, உயர் தொழில் நுட்பம் எனும் ஆக்டோபஸ் கைகளை வெட்டி வீழ்த்த வேண்டும்.

Pin It