எழுத்தாளர் அமலாவின் மடல்

விடுநர்

த.அமலா (எழுத்தாளர்)

43, முத்துமாலையம்மன் கோவில் 3வது தெரு,

திருச்செந்தூர் - 628 215. தூத்துக்குடி மாவட்டம்.

பெறுநர்

திருமிகு. பொது மேலாளர் அவர்கள்,

தெற்கு ரயில்வே, சென்னை.

பெருமதிப்பிற்குரிய அய்யா,

பொருள்          :               கேரளத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே மண்டலம் தொடங்க அனுமதிக்கக்கூடாது; மீறித் தொடங்கினால் மதுரை-சேலம் கோட்டங்களை அதனுடன் இணைக்கக் கூடாது எனக் கோருதல்.

வணக்கம்.

தெற்கு ரயில்வே கேரள மாநிலத்தைப் புறக்கணிக்கின்றது என்றும், அதனால் கண்ணூர், கோழிக்கோடு, பாலக்காடு, எல்லைக்குளம், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் எதுவேனும் ஒன்றைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே மண்டலத்தை உருவாக்க வேண்டும் என்றும் கேரள மாநில அரசியல் கட்சிகள் மத்திய அரசிடம் மனு கொடுத்திருக்கின்றன. அங்கேயுள்ள பத்திரிகைகளும் அதற்கு ஆதரவாக எழுதுகின்றன.

பாரம்பரியம் மிக்க தெற்கு ரயில்வே கேரள மாநிலத்தைப் புறக்கணிக்கின்றது என்பது உண்மையல்ல. கேரள மாநிலத்தில் அடங்கியுள்ள திருவனந்தபுரம் கோட்டத்தால் எனக்கு ஏற்பட்ட அனுபவமே அதற்குச் சான்றாகும். அந்தக் கோட்டம் இன்றுவரை ஆழ்ந்த தூக்கத்தில்தான் இருக்கின்றது; விழிக்கமாட்டேன் என்று அடம்பிடிக்கின்றது. அப்படியிருக்கும் பொழுது அந்தக் கோட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் எவ்வாறு நடைபெறும்? பத்திரிகைச் செய்திகளைப் பார்க்கும் பொழுது பாலக்காடு கோட்டமும் இப்படித்தான் தூங்கிக் கொண்டிருக் கின்றதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

இங்கே முக்கியமான செய்தி என்னவென்றால், கேரள மாநிலத்தில் புதிய ரயில்வே மண்டலம் அமையும் பொழுது, மதுரை-சேலம் கோட்டங்களை அதனுடன் இணைக்க வேண்டும் என்பது அந்த மாநிலத்தவரின் கோரிக்கை. இதை ‘மலையாள மனோரமா’ (ஜூலை 29, 2013) நாளிதழில் நான் பார்த்தேன்.

இங்கே நான் சுட்டிக்காட்டுவது என்னவென்றால், கேரள மாநிலத்தில் புதிய ரயில்வே மண்டலம் அமையத் தாங்கள் அனுமதிக்கக் கூடாது. அதையும் மீறி அரசியல் காரணங்களால் - வாக்குவங்கிக்காக புதிய ரயில்வே மண்டலம் உருவானால் மதுரை-சேலம் கோட்டங்களை புதிய ரயில்வே மண்டலத்துடன் இணைக்கக்கூடாது. தாங்கள் சேலத்துக்கு வருகை புரிந்தபொழுது, ‘கோயம்பத்தூர் கேரளத்துடன் இணைக்கப்படமாட்டாது” என்றும், கன்னியாகுமரிக்கு வந்தபொழுது, ‘திருவனந்தபுரத்துடன் இணைந்த தமிழ்நாட்டுப் பகுதிகள் தமிழ் நாட்டுடன் இணைக்கப்படும்’ என்றும் பேசியதை இங்கே நினைவூட்ட விரும்புகின்றேன். ஏனென்றால், தங்கள் உயர்ந்த சிந்தனைகள் - பணிகள் பாதிக்கப்படுவதை நாங்கள் அனுமதிக்கத் தயாராக இல்லை.

புதிய ரயில்வே மண்டலம் உருவாவதைத் தமிழ்நாட்டு மக்கள் கடுமையாக எதிர்க்கின்றார்கள். இங்கே தமிழ்நாட்டு மக்கள் சார்பாக நான் வலியுறுத்துவது என்னவென்றால், கேரள மாநிலத்தில் புதிய ரயில்வே கோட்டம் தேவையில்லை. ரயில்வே கோட்ட அதிகாரிகள் தூக்கத்திலிருந்து விழித்து சுறுசுறுப்பாக இயங்கி னாலே போதும். இதை ரயில்வே வாரியத்தின் - ரயில்வே அமைச்சகத்தின் கவனத்துக்குக் கொண்டு வாருங்கள்.

இதையும் மீறி வாக்குவங்கிக்காக கேரள மாநிலத்தில் புதிய ரயில்வே மண்டலம் உருவானால், மதுரை-சேலம் கோட்டங்களை அதனுடன் இணைக்க அனுமதிக்காதீர்கள் என்று வேண்டுகின்றேன்.

நன்றி,

அன்புடன்

த. அமலா

Pin It