அரிது அரிது

மானிடராய்ப் பிறத்தல் அரிது என்ற

அவ்வைப் பிராட்டியே

எனை மன்னியும்.

பெரிது பெரிது

தமிழனாய்ப் பிறவாமல்

இருத்தல் பெரிது!

கொடிது கொடிது

தமிழனாய்ப் பிறத்தல்

கொடிது.

சுயநிர்ணயமே

என் தாகம் தீர்க்குமென

என் தம்பி பகன்றதாலே

தன் உதிரம் தந்து

தனியீழம் காத்தாள்

என் அன்னை!

எனக்கும் உதிரம் பாய்ச்சி

என் தமிழுக்கும் உதிரம் பாய்ச்சி

எங்கள் தம்பிக்காக

உயிரும் துறந்து முள்ளியில்

முழுமையாய் எனையீன்று

முதல் மூச்சை நான் விடுகையில்

அவள் இறுதி மூச்சில்

அடங்கிப் போனாள்!

அங்கே

எரிந்த இரசாயனங்கள்

கக்கிய நஞ்சாலே

கூன், குருடு, செவிடு, அகதியென

இன்னபிற கொடுமைக்கும்

ஆளானேன்!

அவ்வை மூதாட்டியே

அதனால் தான் சொல்கிறேன்

பெரிது பெரிது

ஈழத் தமிழராய்

இனியிங்கு எவரும்

பிறவாமல் இருத்தல் பெரிது!

- ப.ம.அதியமான், திட்டக்குடி

Pin It