“ஒரு நீதிபதி என்பவர் தவறானவர் என்று சொல்லும்படியான தன்மையில் நடந்துகொண்டால் - தீர்ப்பு அளித்தால் - அதற்குப் பரிகாரம் தேட வேண்டுமானால், பொதுமக்களுக்கு என்ன வழி இருக்கிறது? அப் பீலுக்கே போய்த்தீர வேண்டுமானால் எல்லோர்க்கும் சாத்தியப்படும்படியான காரியமாகுமா? எல்லோர்க்கும் எல்லாக் காரியங்களிலும் அப்பீலில் இடமிருக்குமா? அரசாங்கத்தில் அரசர், ராஷ்ட்ரபதி, பிரதமர், முதலமைச்சர் முதலியவர்களுடைய போக்குகள் பற்றியும், உத்தரவுகளைப் பற்றியும் பொதுக் கண்டனங்களும், கிளர்ச்சிகளும் நடத்தத் தாரளமாக இடமும் சட்ட அனுமதியும் இருக்கும்போது - இந்த ஜட்ஜுகளைப் பொறுத்த மாத்திரம் அம்மாதிரியான இடமும் அனுமதியும் கிடையாது என்றால், மக்களுக்குச் சுதந்தரம் எங்கே இருக்கிறது? பரிகாரம் எப்படித்தேடுவது? பொதுமக்களின் உணர்ச்சிகளை எப்படிக் காட்டுவது?

(பெரியார் ஈ.வெ.ரா. ‘நீதிகெட்டது யாரால்’ நூலில்)

கற்றுத் தேர்ந்த புலவர்கள் எனப்படும் காலாட்டிகள் கற்பிற் சிறந்தவள் கண்ணகியா? மாதவியா? என்று பட்டிமன்றம் நடத்திக் காலத்தைப் பாழாக்குவார்கள். பாண்டிய மன்னனின் மனைவி கூந்தலுக்குள்ள மணம் இயற்கையா செயற்கையா என்கிற இடக்குமடக்கான வினாவிற்கு இறைவனே பாட்டோடு இறங்கி வந்ததாக இங்கு ஏராளமான கதைகள் உண்டு.

‘அன்பிற் சிறந்தவள் தாயா? தாரமா?’ என்கிற சாலமன் பாப்பய்யா பட்டிமன்றம் போல் இப்போது ‘அதிகாரத்தில் உயர்ந்தது நீதிமன்றமா? நாடாளுமன்றமா?’ என்கிற பரபரப்புப் பட்டிமன்றம் நடந்து கொண்டுள்ளது.

மக்கள் வரிப்பணத்தில் உயர்வான ஊதியம் பெற்று அரசு ஊழியர்களாய் அடிமை வேலை பார்க்கும் உச்ச நீதிமன்ற - உயர்நீதிமன்ற நீதிபதிகள் தம்மை வானுலகில் இருந்து வந்திறங்கிய தேவ தூதர்கள் போலக் கருதிக் கொள்கிறார்கள். தேவைக்கும் அதிகமான ஆடம்பரங்களோடு செல்வச் செழிப்பில் திளைக்கும் இவர்கள், தீர்ப்பெழுத எழுதுகோல் ஏந்தும் சில நேரங்களில் மட்டும் ஏழைப் பங்காளர்களாக இறங்கி வந்துவிடுவார்கள்.

‘பொதுமக்கள் உரிமைக்கான மக்கள் இயக்கம்’ என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று, அண்மையில் உச்சநீதி மன்றத்தில் ஒரு பொதுநல வழக்கைத் தொடுத்து. ‘நடுவண் அரசின் உணவுக் கிடங்குகளில் பல இலட்சம் டன் அரிசி கோதுமைப் பொருள்கள் அரசின் மெத்தனத்தினாலும், பாதுகாப்பற்ற சேமிப்பு முறைகளாலும் வீணாகின்றன. இவற்றை எழை மக்களுக்கு வழங்க ஆணையிட வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது. வழக்கை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் தானே எல்லாம் என்கிற தலைக்கனத்தோடு பின்வரும் வினாக்களை அடுக்கடுக்காக எழுப்பியது:

1.     வறுமையிலும் வறுமையான குடும்பங்களுக்கான ‘அந்தியோதனா அன்ன யோஜனா’ திட்டத்தின் கீழ் (வயிறு முட்டச் சாப்பிட்டால் தான் இந்தத் திட்டத்தின் பெயரையே வாசிக்க முடியும்(!)) நிலமற்ற வேளாண் கூலிகள், குறுநில உழவர், கிராமக் கைவினைஞர், குடிசைப் பகுதியில் வாழ்வோர் போன்றோரை உட்படுத்தி அவர்களுக்கு மூன்று ரூபாய்க்கு அரிசியும், இரண்டு ரூபாய்க்குக் கோதுமையும் வழங்குவது ஏன் உறுதிசெய்யப்படவில்லை.

2.     பின் தங்கியவை என அடையாளம் காட்டப்பட்டுள்ள 150 மாவட்டங்களுக்கு எப்போது முதல் அந்தியோதனா திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்?

3.     இலட்சம் ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருவாய் உள்ளவர்களுக்கு மட்டுமே பங்கீட்டுக் கடைப் பொருள்களை வழங்கினால் போதாதா?

4.     தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வெறும் பணமாக மட்டுமல்லாமல் பணமும் தானியமும் தருவது என்று ஏன் வரையறை செய்யக்கூடாது?

5.     இப்படித் தானியங்களை முறையான பாதுகாப்பு வசதி இல்லாமல் வீணாக்குவது சரியா?

இவ்வாறாக, தொடர் வினாக்களை எழுப்பிய உச்சநீதிமன்றம், வீணாகும் உணவுப் பொருள்களை இலவசமாய் வழங்க உடனடியாய் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென அரசுக்கு ஆணையிட்டது.

இதற்கு எதிர்வினையாகத் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங், தில்லியில் தமது இல்லத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது,” அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது. அரிசி, கோதுமை போன்ற பொருள்களை ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கச் சாத்தியமில்லை. மொத்த மக்கள் தொகையில் 37 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். அத்தனை பேர்க்கும் உணவு வழங்கச் சரிப்பட்டு வராது.

மேலும், எழைகளுக்கு மட்டும் இலவசமாக அரிசி, கோதுமை வழங்கினால் அது விவசாயிகளின் மனநிலையை வெகுவாகப் பாதிக்கும். இதனால் விளைச்சலைப் பெருக்க வேண்டும் என்கிற எண்ணத்தையே அவர்கள் கைவிட்டுவிடுவார்கள். உணவுப் பொருள்களின் கையிருப்பைக் காலி செய்துவிட்டால் பிறகு ஏதுமில்லாத சூழ்நிலை ஏற்பட்டு விடும்” என்று மக்களுக்கான பிரதமர் மார்தட்டுகிறார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள், நாடாளுமன்ற அரசியல்வாதிகள் என்கிற இரண்டு தரப்பாருமே அடிப்படையில் ஏழை மக்களின் வாழ்நிலை பற்றிக் கிஞ்சித்தும் அக்கறை இல்லாதவர்களே ஆவார்கள்.

ஏழைகள் நிலைபற்றி நீலக்கண்ணீர் வடிக்கும் இந்த நீதிமன்றங்கள் போபால் நச்சு வாயுவழக்கில் எத்தகைய மோசடியோடு நடந்து கொண்டன? யூனியன் கார்பைடு ஆலை விபத்தில் பல்லாயிரம் மக்கள் தம் இன்னுயிரை இழந்தனர். இன்றளவும் கூட இன்னும் பல்லாயிரவர் உடல் ஊனமுற்றவராய் நடைப்பிணங்களென உலவி வருகின்றனர். போபால் படுகொலைகளுக்கு இந்திய அரசியல் வாதிகளாகிய அப்போதைய பிரதமர் இராசிவ் காந்தி, உள்துறை அமைச்சர் நரசிம்மராவ், ம.பி.முதல்வர் அர்ஜுன் சிங், இராசிவ் காந்தி, உள்ளிட்டோர் எந்த அளவுக்குக் காரணமானவர்களோ, அதே அளவில் வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காமல் செய்ததில் உயர்நீதிமன்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளும் பெருங்காரணமாவர்.

பத்து ஆண்டுகள் வரை தண்டனை பெறும் வகையில் இந்தியக் குற்றவாளிகள் மீது போடப்பட்டிருந்த கொலைக்குற்ற வழக்கை இரண்டு ஆண்டுகள் மட்டுமே தண்டனை பெறக்கூடிய வழக்காகச் சாரமிழக்கச் செய்த சதிச் செயலுக்கு உச்சநீதி மன்றமே துணைநின்றது. “விபத்து நடந்த 1984 திசம்பர் 2 நள்ளிரவில் ஆலையை பக்கத்தில் இருந்து இயக்கியவர்கள் அதன் நிர்வாகிகள் அல்லவே! அன்றிரவு விபத்து நடக்கப்போவதை அவர்கள் அறிந்து வைத்திருந்தார்களா என்ன? பலபேரைக் காவு கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்திலா அங்கே நச்சு வாயுத்திரவம் சேமித்துவைக்கப்பட்டிருந்தது?” என அடுக்கடுக்கான வினாக்கள் எழுப்பி அமெரிக்க யூனியன் கார்பைடு நிறுவனப் பேரழிவிற்கு ஆலவட்டம் சுற்றியது உச்ச நீதிமன்றம். தேடப்படும் குற்றவாளியாய் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட வாரன் ஆண்டர்சனை இன்று வரை இந்தியாவுக்குக் கொண்டுவர முடியவில்லை. இந்தக் கையாளலாகாத் தனத்திற்கு நாடாளு மன்றத்துடன் நீதிமன்றமும் பொறுப்பேற்றுத்தானே தீர வேண்டும்?

இந்நாளைய நீதிபதிகள் குறித்து முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் கூறியுள்ள கருத்து மிகவும் சிந்திக்கத் தக்கதாகும்.

பெரும்பாலான நீதிபதிகள் அரசியலை நிராகரிக்கின்றனர். அவர்களுக்கு அரசியல் தேவையில்லை என்கின்றனர். சட்டங்களை ஆராய்ந்து அதன்படி அரசு நடக்குமாறு ஆணையிடுகின்றனர். ஆனால் நீதிக்குப்பின்னால் அரசியல் மறைந்துள்ளது என்ற கருத்தை இவர்கள் மறந்து விடுகின்றனர். தம்மைத் திறமையாளர்களாகப் புரிந்து கொண்டு தங்களுடைய அரசியலை நடத்துகின்றனர். அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ள சமுதாயத் தத்துவத்தை முறியடிக்கின்றனர். அதன்படி நடப்பேன் என்று அவர்கள் உறுதிமொழி எடுத்ததை மறந்து விடுகின்றனர். (தி இந்து 12.08.2010)

இந்தியாவில் செயல்பட்டுவரும் நீதிமன்றங்கள் குறித்தும் நீதிபதிகள் கைக்கொள்ள வேண்டிய நெறிமுறைகள் குறித்தும் வி.ஆர்.கிருஷ்ணய்யர் வெளிப்படுத்தியுள்ள கருத்துகளாவன:

n      உயர்நீதி மன்றத்தின் நீதிபதியொருவர் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவி உயர்வு பெறுகையில் அவரின் முந்தைய பணிக்காலத்தில் அவர் பணி பற்றிய ஆய்வு செய்யப்படுகிறதா? தேர்வு செய்யப்பெறும் நீதிபதியின் சமூகக் கொள்கைகள், நீதித்துறை செயற்பாடு, அவரின் சொத்துவிவரம், எந்தச் சூழலில் யாரால் தேர்வு செய்யப்பட்டார் என்று எப்போதாவது விசாரிக்கப் படுகிறதா? என ஆய்வு செய்ய வேண்டும்.

n      நீதிபதிகளின் செயற்பாட்டைக் கண்காணிக்கச் செயற்பாட்டு ஆணையம் ஒன்றை உருவாக்க வேண்டும்.

n      நாடாளுமன்றம், நீதிபதிகளைத் தேர்வு செய்வதற்கான சட்டம் மற்றும் நடத்தை விதிகளை உருவாக்க வேண்டும்.

n      வணிக நிலையான பார்வையுடைய நீதிபதிகள் சோசலிசக் குடியரசு நாட்டில் நீதிபதிகளாக இருக்கத் தகுதியற்றவர்கள். வகுப்புவாத மற்றும் வட்டார வாதக் கொள்கையுடையோர் நீதிபதிகளாக அமர்த்தப்படக் கூடாது.

n      நீதிமன்றங்களின் தன்மையும், சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் சுதந்தரம் மற்றும் தன்னாட்சி என்ற பெயரில் ஏதேச் சதிகாரம் தலை தூக்கலாகாது.

n      ஒரு சனநாயக நாட்டில் நீதிபதிகளின் சர்வாதிகாரத்திற்கு இடமில்லை. சோசலிசக் கோட் பாட்டிற்கு எதிரான ஊழல் நிறைந்த நீதிபதிகள் மிகவும் ஆபத்தானவர்கள்.

n      இந்திய நீதிமன்ற நீதிபதிகள் உயர்தரம்மிக்கோர் தாம். ஒருசிலரின் தவறான போக்குகளால் மக்கள் நீதித்துறையில் நம்பிக்கை இழந்து விடுகின்றனர்.

n      இந்திய நாடாளுமன்றமே மேலாண்மை மிக்கதாய்ச் செயற்பாட்டுத் தன்மையுடையதாய், இறையாண்மை மிக்கதாய், சனநாயகம், சோசலிசம், மதச்சார்பின்மை எனும் கோட்பாடு களைக் காப்பதாய்த் திகழ வேண்டும். நாடாளு மன்றம் இக்குணங்களைக் காப்பதில் தோற்றால், இந்தியா மரணமடையும். (‘மனித உரிமைக்கங்காணி’ செப்டம்பர் 2010)

உச்சநீதிமன்ற நீதிபதியாய்ப் பல்லாண்டுகள் பணியாற்றி, பல வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்புகளை வழங்கிய கிருஷ்ணய்யர் அவர்களே நாடாளுமன்றந்தான் உயர்நிலை அதிகாரம் வாய்ந்த அமைப்பாக இருக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளார். இவர் கேரள மாநில அமைச்சராயும் பணியாற்றி அனுபவம் மிக்கவர் ஆவார்.

ஊழலில் ஈடுபடும் உச்சநீதிமன்ற, உயர்நீதி மன்ற நீதிபதிகளைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் நாடாளுமன்றத்தில் பெயரளவுக்குத்தான் உள்ளது. அவையின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தால் மட்டுமே ஊழல் நீதிபதிகள் மேல் கை வைக்க முடியும். அதற்குங்கூட பல்வேறு முட்டுக்கட்டைகள் உள்ளன. ஊழல் நீதிபதியின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதலில் 100 மக்களவை உறுப்பினர்களும் 50 மாநிலங்களவை உறுப்பினர்களும் கையொப்பமிட்டு அவையில் தீர்மானங் கொண்டுவர வேண்டும். அதனை அடுத்து நாடாளுமன்றம், நீதிபதிகள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும். பின்னர் குற்றம் மெய்ப்பிக்கப்படுமனால் உடனே தண்டனை கொடுத்துவிட முடியாது. நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மீண்டும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இருந்தால் மட்டுமே தவறு செய்த நீதிபதியை நீக்க முடியும்.

திருடனைத் தப்பிக்க வைக்க இப்படி ஆயிரம் திருட்டுவழிகளைத் திறந்துவைத்தால் எந்தத் திருடன் மாட்டுவான்? காற்று புகமுடியாத கண்ணாடி அறைகளில் இருந்துகொண்டு நீதியைக் காப்பாற்றும் இந்தக் கருப்பு அங்கி ஒழுக்க சீலர்களின் உள் அழுக்குகள் வெளிப்பட்டால் ஊரே நாறிவிடும்.

இன்றுள்ள நாடாளுமன்ற தேர்தல் சனநாயகம் ஆயிரம் ஓட்டைகள் உடையது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனாலும் இங்குள்ள பிரதமரும், அமைச்சர்களும் மக்களால் நேரடியாகத் தெர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஐந்தாண்டுகளுக்குப்பின் மக்களே அவர்களைத் தூக்கி எறியவும் கூடும். ஆனால் நீதிபதிப்பதவியில் அமர்ந்தவர்களை அவர்களின் பணி நிறைவுக் காலம் வரை எதுவுமே செய்ய முடியாது. அது மட்டுமல்ல அவர்கள் மக்கள் வரிப்பணத்தில் ஆயிரக்கணக்கில் ஊதியம் பெறும் அரசாங்க அடிமைகள். இவர்களில் பலபேர் தப்பான வழிகளில் பணம் பண்ணும் ஊழல் பெருச்சாளிகள். முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பரூச்சா “நீதிபதிகளுள் 20 விழுக்காட்டினர் ஊழல் கறைப்படிந்தவர்களாய் உள்ளார்கள்” என்று வெளிப்படையாகவே மனம் வெதும்பிக் குறிப்பிட்டார்.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சிவப்பா ஆகிய இருவருமே தமது பிறப்புச் சான்றிதழில் பித்தலாட்டம் செய்துள்ளனர் என்ற உண்மை வெளிப்பட்டு நாடே நாறியது.

டான்சி வழக்கில் தான் விடுதலையாவோம் என்று செயலலிதாவே நம்பி இருக்கமாட்டார். ஆனால், பணம் நீதியை அல்ல, நீதிபதியையே விலைக்கு வாங்கிவிட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தங்கராசு, அம்மாவுக்குச் சார்பாகத் தீர்ப்பெழுதிய கையோடு சிங்கப்பூருக்குச் சிறகடித்து விட்டார். இப்படி எழுதிக் கொண்டே போனால் ஏடு தாங்காது.

மூன்றாண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வு. ‘ஜி’ தொலைக்காட்சியைச் சேர்ந்த விஜய்சேகர் என்ற செய்தியாளர், குஜராத் மாநிலம் அலகாபாத் குற்றவியல் நீதிபதி பிரம்பட் என்பவரிடம் வெறும் 40,000 ரூபாயை கையூட்டாகக் கொடுத்து அப்போதைய குடியரசுத் தலைவரான அப்துல்கலாம், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கரரே உள்ளிட்டவர்களுக்கு பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பெற்றுவிட்டார். நீதிபதி பிரம்பட் குற்றமற்றவர் என்று பின்னாளில் குஜராத் நீதிமன்றம் தீர்ப்புக் கூறியதோடு, ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த செய்தியாளர் விஜய் சேகரைப் பலமுறை நீதிமன்றப்படிகளை ஏற வைத்துத் துன்புறுத்தியது.

‘வீணாகும் அரசி, கோதுமையை, இல்லாத ஏழைகளுக்குக் கொடுங்கள்’ என்று ஏழைகளுக்கு இரங்குவது போலப் பாசாங்கு காட்டும் உச்சநீதிமன்றத்தின் உண்மை முகம் என்ன?

இந்தியத் துணைக்கண்டம் அடர்ந்த காடுகள் பலவற்றைச் கொண்ட, கனிம வளம் மிக்க செழிப்பான மண்ணாகும். ஒரிசா, சதீஸ்கர், ஜார்கண்ட், போன்ற பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள் இயற்கையோடு இரண்டறக் கலந்து வாழும் இம்மண்ணின் தொல் குடிமக்களாவர். இப்பகுதிகளில் உள்ள விலைமதிப்பற்ற கனிம வளங்களைப் பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் கொள்ளையிடத் துடிக்கின்றன. ‘போஸ்கோ’ என்கிற தென்கொரிய நிறுவனம் ஒன்று ரூ 55,000 கோடி மதிப்பில் இரும்பு ஆலை ஒன்றை நிறுவிக்கொள்ள உச்சநீதிமன்றத்தில் எளிதில் அனுமதி பெற்றுவிட்டது. இதேபோல இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வேதாந்தா என்கிற இன்னொரு நிறுவனத்திற்கும் இந்தியாவின் கனிம வளங்களை அள்ளிக்கொண்டு போக உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி காட்டிவிட்டது.

மரபான தமது வாழ்விடங்கள் பறிபோவதைக் கண்டு அப்பகுதிகளின் பழங்குடிமக்கள் போராடுகின்றனர். அவர்கள் மீது பச்சை வேட்டை என்ற பெயரில் படைகளை ஏவி நசுக்கி ஒடுக்குகிறது நடுவண் அரசு. ஏழைகளுக்காய்ப் பரிந்து பேசுவது போல் நடிக்கும் உச்சநீதி மன்றம், ஆட்சியாளர்கள் இயற்றும் அடக்குமுறைச் சட்டங்கள் அனைத்திற்கும் துணைபோகிறது.

நெஞ்சை நிமிர்த்தி நீதிக்குப் போராடும் இந்நாட்டு இளைஞர்களை தீவிரவாதிகள் என்றும் நக்சலைட்டுகள் என்றும் பெயர் சூட்டி அழித்தொழிப்பு செய்யும் இராணுவம் மற்றும் காவல் துறைக்கு ஒத்து ஊதும் செயலையும் உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் தட்டாமல் செய்கின்றன.

‘சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகள் மிகுதியாகி வருவதால், சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர, காவல்துறை மோதல் மரணங்கள் நிகழ்த்த வேண்டியது தவிர்க்க முடியாதது ஆகிறது” என்கிறார் முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன். இந்த வெட்கக்கேட்டில் ஓய்வுபெற்ற அடுத்த நொடியே இவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்டுகிறார். இந்தக் கொடுமையை யாரிடம் போய் நொந்துகொள்வது?

கோத்ரா இரயில் எரிப்புக் கலவரத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவிச் சிறுபான்மை மக்கள் உயிரோடு கொல்லப்பட்டார்கள். கொலையாளிகளில் ஒருவர் கூட இன்னும் கைது செய்யப்படவில்லை. ஆனால் ஒரு தவறும் செய்யாத சிறுபான்மையினர் சிலரைச் சிறையில் அடைத்துப் பல்லாண்டுகள் ஆகியும் விடுதலை செய்யாத நீதிமன்றத்தை எதிர்த்துக் கருத்துச் சொன்னார் என்ற காரணத்துக்காக தீஸ்தா செதல்வாத் என் சமூக அக்கறையுள்ள வழக்கறிஞர் ஒருவர் மேல் எரிந்து விழுந்து தன் வர்க்கப் பாசத்தைக் காட்டிக் கொண்டவர்தான் இந்தக் கே.ஜி.பாலகிருஷ்ணன்.

மதக்கலவரங்கள் என்றால் இசுலாத்துக்கு எதிராக இந்துத்துவா முகம் காட்டுகின்றன. இந்த நீதிமன்றங்கள் இடஓதுக்கீட்டுச் செய்தியில் உயர் சாதியாரின் ஊதுகுழல்களாகச் செயல்படுகின்றன. ஆலைமூடல், கதவடைப்பு போன்ற நேரங்களில் தொழிலாளர்களுக்கு இரண்டாம் செய்து முதலாளிகளுக்குத் துணை போகின்றன. தனியார்மயம் தாராளமயம் போன்றவை எல்லாம் அரசாங்கம் எடுக்கும் கொள்கை முடிவுகள். அவற்றில் நீதிமன்றங்கள் தலையிடமுடியாது என்று ஒதுங்கிக் கொள்கின்றன.

இப்படி எல்லா வகையிலும் முதலாளியத்தின் - ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகளாகச் செயல்படும் நீதிமன்றங்களை அம்பலப்படுத்த வேண்டியது உழைக்கும் மக்கள் விடுதலையை அவாவும் ஒவ்வொருவருடைய கடமையும் ஆகும்.

Pin It