இந்தியாவுக்குக் கி.பி.1600இல் வெள்ளையர்கள் பல நாடுகளில் இருந்து வந்தார்கள்.

சிறு வணிகம் செய்யவும், சிறு தொழிற்சாலைகள் அமைக்கவும், வாடகைக்கு இடம்பெற்ற வெள்ளையர் கள், இந்து அரசர்களின் துணைகொண்டு இஸ்லாமிய அரசர்களை வடஇந்தியாவில் தோற்கடித்தார்கள். தென்னிந்தியாவில் இஸ்லாமிய நவாப்புகளையும், தெலுங்கு நாயக்கர்களையும், மராட்டிய சிற்றரசர்களை யும் 1800க்குள் தோற்கடித்தார்கள்.

கி.பி.1800 வரை இந்தியாவில் ஆட்சி செலுத்திய இந்து அரசர்களோ, இஸ்லாமிய அரசர்களோ, தெலுங்கு மற்றும் மராட்டிய அரசர்களோ எல்லா மக்களும் படிப்பதற்கான பொதுப் பள்ளிக்கூடங்களைத் தொடங்கவில்லை. ஆனால் மேலேகண்ட எல்லா அரசர்களும், கி.மு.2ஆம் நூற்றாண்டு முதல் எல்லா இடங்களிலும் பார்ப்பனர்கள் மட்டுமே படிப்ப தற்கான வேத பாடசாiலைகளை அமைத்தனர். பார்ப்பனர் அல்லாத மக்கள் 96 விழுக்காடு பேராக இருந்தும், தொடக்கக் கல்வி கூடப் பெறாத நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

மனுநீதியில் விதிக்கப்பட்டுள்ளபடி சூத்திரர்களுக் குக் கல்வி உரிமை மறுக்கப்பட்டது. சண்டாளர்கள் என்று அழைக்கப்பட்ட தீண்டப்படாத வகுப்பினர் ஊருக்கு வெளியே குடிவைக்கப்பட்டனர்; மனித அனுபவிப்புக் குரிய எந்த உடைமையையும் பெறுவதற்கான உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டது.

வெள்ளையர்கள் இந்தியா முழுவதிலும் 1835இல் பொதுப்பள்ளிக்கூடங்களை அமைத்தார்கள். அந்தப் பள்ளிக் கூடங்களில் உள்ளே நுழையவும் சேர்க்கப் படவும் தீண்டப்படாத மக்களுக்கு 1920க்குப் பிறகு தான் அனுமதி அளிக்கப்பட்டது.

இவ்வளவு நீண்ட இடைக்காலத்தில் பார்ப்பனர் களும், சத்திரியர்களும், வைசியர்களும் மட்டுமே உயர் கல்வி பெறப் பெற்றிருந்தனர். அப்படிப்பட்ட நிலையில், பார்ப்பனர்களும் சிற்றரசர்களாக விளங்கிய சத்திரியர் களும் வைசியர்களும் படிப்பாளிகளாகவும், வணிகர் களாகவும் இருந்த பார்சிகளும் சேர்ந்தே, வெள்ளை அதிகாரிகளின் ஆதரவுடன், இந்தியத் தேசியக் காங் கிரஸ் என்பதை உருவாக்கினர்.

இந்தியத் தேசியக் காங்கிரசின் முதலாவது மாநாடு கி.பி.1885இல் பம்பாயில் நடைபெற்றது. அம்மாநாட் டில் நிறைவேற்றப்பட்ட நான்காவது தீர்மானப்படி இந்தியப் பொது ஊழியத் தேர்வு ஆணையம் (Public Service Commission) அமைக்கப்பட வேண்டுமென்றும், பொது ஊழியம் இந்தியர் மயமாக்கப்பட வேண்டும் (Indianaisation of Public Services) என்று கூறியது. அப்பொழுது உயர் நிர்வாகப் பதவிகளுக்கான தேர்வு இலண்டன் மாநகரில் நடைபெற்றது. 

இந்த ஏற்பாட்டைக் கண்டனம் செய்து, இங்கிலாந் தில் பகுத்தறிவு மேதையாக விளங்கிய சார்லஸ் பிராட்லா (Charles Bardlah M.P.) 1884இல், இலண்ட னில் பேசினார். மேலும் அவர் பேசினார் : “இந்தியா 14 லட்சம் சதுர மைல் பரப்புள்ளது. அங்கு 25 கோடியே 40 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இந்தியாவில் உள்ள பிரித்தானியரின் ஆண், பெண் மக்கள் தொகை 89 ஆயிரத்து 798 பேர்களாகும். இத்தொகையில் இராணுவ வீரர்கள் 55 ஆயிரத்து 808 பேர்களாகும். ஆளுகை செய்பவர்கள் 33 ஆயிரத்து 990 பேர்களாகும். இது என்ன மக்கள் நாயகம்?” என்று, வினா எழுப்பினார் (“தத்துவ விவேசினி”, 20.1.1884). கி.பி.1884க்கும் 2012க்கும் இடையே 128 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

நம்மை அடக்கியாண்ட வெள்ளையர்களில் ஒரு வரான பிராலாவுக்கு இருந்த மக்கள் நாயக உணர்வு - இந்தியாவிலோ, தமிழகத்திலோ இருக்கின்ற படித்த பார்ப்பனர்களில் எந்த ஒருவருக்காவது இன்றுவரை இருந்ததுண்டா?

உயர் அதிகாரப் பதிவிகளுக்கான ஐ.சி.எஸ். தேர்வு 1860க்குப்பின் இலண்டனில் நடைபெற்றது. அதில் தேர்வு பெற்ற இந்தியர்களில் 96 விழுக்காட்டினர் இந்துக்களாகவே இருந்தனர்; இந்துக்களில் அதிகம் பேர் பார்ப்பனர்களாகவே இருந்தனர். இந்தக் கொடு மையைத் தாங்கமாட்டாது முதலில் கிளர்ந்தெழுந்த வர்கள் இஸ்லாமியர்கள். அவர்கள் இந்திய உயர் நிர்வாகப் பதவிகளில் தங்களுக்கு விகிதாச்சார எண் ணிக்கைப்படி, 1933இல், இடப்பங்கீடு கேட்டார்கள். அன்றைய இந்திய மக்கள் தொகையில் இஸ்லாமியர் 25 விழுக்காடு இருந்தனர். வெள்ளையர் ஆட்சி 1934 இல் இந்திய மத்திய அரசு வேலைகளில் 25 விழுக் காடு இடஒதுக்கீடு இஸ்லாமியர்களுக்கு அளித்தது. அதே ஆணையில் மற்ற, சிறுபான்மை மதத்தினரான சீக்கியர்கள், கிறித்துவர்கள், பார்சிகள் ஆகியோருக்கு 8.3 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கினர்.

இந்தியத் துணைக் கண்டத்தில், சென்னை மாகா ணத்தில் மட்டுமே, மாகாண அரசு வேலைகளில் உள்ள 100 இடங்களையும் - பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாத இந்துக்கள், இஸ்லாமியர், கிறித்துவர், ஆதித்திரா விடர்கள் ஆகிய அய்ந்து வகுப்பினருக்கும் நீதிக்கட்சி அரசு பிரித்து அளித்தது. ஆனால், இந்திய மத்திய அரசு வேலைகளில் சென்னை மாகாணத்திலுள்ள பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார், ஆதித்திராவிடர் ஆகிய வகுப்பினருக்கு இடப்பங்கீடு தரப்படவில்லை. இந்த அநீதியைத் தாங்கிக் கொள்ள முடியாத சென்னை மாகாண அன்றைய முதலாவது அமைச்சர் பொப்பிலி அரசரும், ஈ.வெ. ராமசாமியும் - பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாத இந்துக்கள், ஆதித்திராவிடர் ஆகிய மூன்று வகுப்பினருக்கும் தனித்தனி இடப்பங்கீடு வேண்டு மென்று, ஏ. ராமசாமி முதலியார் மூலம் கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கையை ஏற்று பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார், ஆதித்திராவிடர் ஆகிய 3 வகுப் பாருக்கும், சென்னை மாகாண எல்லைக்குள் இயங்கு கிற எல்லா மத்திய அரசு அலுவலகங்களிலும் 1935 இல் வேலைகள் வழங்க வெள்ளையர் அரசு உத்தர விட்டது.

மேலேகண்ட இரண்டு ஆணைகளின் வாயிலாகப் பெரிய அளவு பயன்பெற்றவர்கள் பார்ப்பனரும், பார்ப் பனரல்லாதாரின் முற்பட்ட சாதியினருமே ஆவர். பிற் படுத்தப்பட்டோர் என்ற தனிப்பிரிவே அப்போது இல்லை.

அடுத்து, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இந்தியப் போர்க்கால அமைச்சரவையில் அமைச்சரானார். அவர், 1942இல் தீண்டப்படாத மக்களுக்கு மத்திய அரசுப் பணிகளில் 12.5 விழுக்காடு இடஒதுக்கீடு கோரினார். அக்கோரிக்கையை ஏற்று, 11.8.1943இல் மத்திய அரசு வேலைகளில் 8.3 விழுக்காடு ஒதுக்கீடு அளித்தது. அதையே 12.5 விழுக்காடாக உயர்த்தி 1947இல் அவரே பெற்றுத்தந்தார்.

வெள்ளையர் வெளியேறிய பிறகு, 1946 டிசம்பர் முதல் 1949 நவம்பர் முடிய எழுதி நிறைவேற்றப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தில் விதி 16 (4) படி இந்தியாவில் உள்ள “எந்தப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு குடிமக்களுக்கு அரசுப் பணிகளில் போதிய இடம் கிடைக்கவில்லையோ அவர்களுக்கு வேலையில் இடஒதுக்கீடு தரப்பட, அம்பேத்கர் வழியமைத்தார். இதில் உள்ள “பிற்படுத்தப்பட்ட வகுப்புக் குடிமக்கள்” என்ற சொற்கோவை - தீண்டப்படாத வகுப்பினர், பழங் குடியினர் மற்றும் இவர்களைப் போன்ற பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் ஆகிய மூன்று பிரிவினரையும் குறிக்குமென்று, விதி 338(3)இல் விளக்கமளித்தார்.

மேலேகண்ட சட்டவிதிகளின் அடிப்படையில் மத்திய, மாநில அரசு வேலைகளில் 1950 முதல் தீண்டப்படா தார் என்கின்ற பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் ஆகியோருக்கு விகிதாச்சார இடம் ஒதுக்கீடு அளிக்கப் பட்டு வருகின்றது.

1950 அரசமைப்புச் சட்டத்தில் கல்வியில் எந்த வகுப்பினருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. பெரியார் ஈ.வெ.ரா. போராடி, அதன் விளைவாக விதி 15(4) என்பது அரசமைப்புச் சட்டத்தில் 2.6.1951இல் சேர்க்கப்பட்டது.

இவ்வளவு சட்ட ஏற்பாடுகள் இருந்தும், 1955இல் காகா கலேல்கர் குழு பரிந்துரை இருந்தும் - இவற்றை எல்லாம் புறம் தள்ளிவிட்டு, பிரதமர் பண்டித நேரு 1961 மே மாதம் மத்திய மந்திரி சபையைக் கூட்டி, ‘மத்திய அரசு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை ஏற்க முடியாதென்றும், பிற்படுத்தப்பட்டோருக்குச் சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு தர முடியாதென்றும்’ தீர் மானித்தார். அதே முடிவை, மாகாண அரசுகளும் ஏற்க வேண்டுமென்று 1961 ஆகசுட்டில் அறிவுறுத்தினார்.

இந்நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, ஏற்ற முயற்சிகளை 29.4.1978 முதல் இந்திய அளவில் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி முயற்சி எடுத்தது.

7.5.1978இல் உத்திரப்பிரதேச பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் வட இந்திய மாநிலங்களில், மாநில அரசு களில், கல்வியிலும் வேலையிலும் பிற்படுத்தப்பட்டோ ருக்குத் தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டுமென வே. ஆனைமுத்து வாதாடினார்.

8.5.1978இல், இந்தியக் குடியரசுத் தலைவரை நேரில் கண்டு, மத்திய அரசு வேலையிலும் கல்வி யிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு விகிதாச்சார இடஒதுக் கீடு வேண்டுமெனக் கோரிக்கை விண்ணப்பம் அளித்தார்.

1978 செப்டம்பரிலும், அக்டோபரிலும் வே. ஆனைமுத்து குழுவினரும் ராம் அவதேஷ் சிங் கட்சியினரும் பீகாரில் இடஒதுக்கீடு வழங்க வேண்டு மென்று கோரியும்; கலேல்கர் குழுப் பரிந்துரையை அமல்படுத்த வேண்டுமென்று கோரியும் வே.ஆனைமுத்து, இராம் அவதேஷ் சிங் தiலைமையில் 31 நாட்கள் பரப்புரையும், 10 நாட்கள் போராட்டமும் நடத்தினர். அதன் விளைவாகத்தான் மண்டல் குழு அமைக் கப்பட்டது.

மண்டல் குழு பரிந்துரையை அமல்படுத்துவதில் பிரதமர் இந்திராகாந்தி அக்கறை கொள்ளவில்லை. ஆனாலும், அன்றைய உள்துறை அமைச்சர் கியானி ஜெயில் சிங் தனி அக்கறை எடுத்துக் கொண்டு மண்டல் பரிந்துரையை நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். அடுத்து வந்த பிரதமர் ராஜீவ் காந்தி இதில் அக்கறை கொள்ளவில்லை. அவர் பதவி இழந்த பின்னர் பிரத மராக வந்த விஸ்வநாத் பிரதாப் சிங், மிக ஆர்வத்து டன் - 6.8.1990இல் மண்டல் பரிந்துரையின்படி, பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு வேலையிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டார்; 13.8.1990 இல் ஆணை பிறப்பித்தார். அந்த ஆணை 1994இல் அமலுக்கு வந்தது.

இந்த இடஒதுக்கீட்டுச் சிக்கலில் இன்றுள்ள உண்மையான நிலை என்ன?

1.            இன்று 17 விழுக்காடு பேராக உள்ள பட்டியல் வகுப் பாருக்கு, 11.8.1943 முதல் 8.3 விழுக்காடும்; 1947 முதல் 12.5 விழுக்காடும்; 1955 முதல் 15 விழுக் காடும் மத்திய அரசு வேலைகளில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டும் - அவர்கள் இன்று 2008 நவம்பர் 1 நிலவரப்படி, இந்தியாவில் உள்ள மத்திய அரசின் முதல் நிலைப் பதவிகளில் உள்ள மொத்த இடங்கள் 97 ஆயிரத்து 951இல், இவர்கள் பெற்றுள்ள இடங்கள் 12,281 மட்டுமேயாகும்.

2.            பட்டியல் பழங்குடியினருக்கு - 8.5 விழுக்காடு மக்கள் தொகை உள்ளவர்களுக்கு - மொத்தம் உள்ள 97951 முதல் நிலைப் பதவிகளில், இவர்கள் பெற்றுள்ள பங்கு வெறும் 4754 இடங்கள் மட்டுமேயாகும்.

3.            2008 நவம்பர் கணக்குப்படி, மொத்த மக்கள் தொகையில் 57 விழுக்காடு உள்ள இந்து, இஸ்லாம், கிறித்துவர், சீக்கியர் முதலான மதங்களைச் சார்ந்த எல்லாப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் - 97951 முதல் நிலைப் பதவிகளில் இவர்களுக்கு 1994 முதல் கிடைத்துள்ள மொத்தப் பதவிகள் வெறும் 5331 இடங்களே ஆகும்.

அதாவது இந்திய மத்திய அரசில், 2008 நவம்பர் 1 கணக்குப்படி, மொத்தம் உள்ள 97,951 முதல் நிலைப் பதவிகளில் - வெறும் 17.5 விழுக்காடு மக்களைக் கொண்ட பார்ப்பனர், சத்திரியர், வைசியர், காயஸ்தர், பூமிகார், வெள்ளாளர், கம்மா நாயுடு, ரெட்டி, நாயர், மேனன் ஆகிய மேல்சாதியினர் பெற்றுள்ள இடங்கள் 75,585.

அதேநேரத்தில் 82.5 விழுக்காடு பேராக உள்ள பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பட்டியல் பழங்குடியினர் ஆகியோர் பெற்றுள்ள இடங்கள் வெறும் 22,366 மட்டுமேயாகும்.

இந்தியப் பார்ப்பன ஆதிக்க ஆட்சியில், மேலே காணப்படுகின்ற ஈன நிலை இருப்பது சட்டப்படியும், நியாயப்படியும், நீதிப்படியும் சரிதானா?

இது அநீதி அல்லவா?

எத்தனைப் பத்தாண்டுகளுக்கு இந்த இடஒதுக்கீடு நீட்டிக்கப்படுவது என்று - ஒன்றும் தெரியாதவர்களைப் போலக் கேட்கும் படித்த பார்ப்பனத் திருடர்களே! உங்கள் சாதியினரின் ஆதிக்கம் உலகம் உள்ள அளவுக்கும் நீடிக்க வேண்டுமா? அதுதான் மக்கள் நாயகத்தின் அழகா?

மக்கள் தொகையில் அதிகம் பேராகவும், வாக்கா ளர்களில் அதிகம் பேராகவும் இருக்கிற - 122 கோடி இந்தியரும் உண்ணவும், வாழ்க்கை வசதிகளை அனுபவிக்கவும் ஏற்ற பொருள்களை உற்பத்தி செய் கின்ற 105 கோடி ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் மக்கள் நாயக உரிமையைக் காப்பாற்றுவது உங்களின் கடமையல்லவா? சிந்தியுங்கள்! திருந்துங்கள்!

மகாத்மா புலேவும், தந்தை பெரியாரும், மேதை அம்பேத்கரும், டாக்டர் லோகியாவும் பாடுபட்டுத் தேடித் தந்த வேலையில் பங்கீடு, கல்வியில் இடப்பங்கீடு என்று பெற்று அனுபவித்து உங்கள் உங்கள் பிள்ளை குட்டிகளைக் காப்பாற்றுகின்ற படித்த பார்ப்பனரல்லாத குருடர்களே, பிற்படுத்தப்பட்ட - பட்டியல் வகுப்பு - பழங்குடியினரே - இன்றுள்ள இந்த அவல நிலையைக் கண்டு உங்கள் ஒவ்வொருவருக்கும் ஆத்திரமும் காத்திரமும், சினமும் பொங்கியெழ வேண்டாமா? உங் களை ஒத்த உடன்பிறப்பாக உள்ள மற்ற 104 கோடி மக்களுக்கு இன்றும், நாளையும் உரிய உரிமைகள் வந்துசேர உங்கள் உங்களுடைய சொந்த மூளை உழைப்பு, சொந்த உடலுழைப்பு, சொந்த நேரம், சொந்தப் பணம் முதலியவற்றைச் செலவு செய்து போராடுவது உங்கள் கடமையல்லவா?

விழித்தெழுங்கள்!

வீறுகொண்டு போராடுங்கள்!!

Pin It